07 March 2011

தலைவர் ஜீவா மருமகளின் சேவை

Posted by Gunalan Lavanyan 11:18 PM, under | No comments


மாமா மாணவர்களுக்காக ஆசிரமம் நடத்தினார். மருமகள் முதியோர் களுக்காக ஆசிரமம் நடத்திவருகிறார். சென்னை, தாம்பரத்திலிருந்து முடிச்சூர் ரோடு வழியாகப் போனால் வருகிறது மண்ணிவாக்கம். இந்த ஊரில்தான், அமரர் ஜீவா நினைவு அறக்கட்டளையின் சரணாலயம் செயல்படுகிறது. நிர்க்கதியாக வருகிற முதியோர்களுக்கு ஆதரவு அளித்து, இந்த ஆசிரமத்தில் பாதுகாத்து வருகிறார், சுதந்திரப் போராட்ட வீரரும் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான ஜீவாவின் மருமகள் விஜயலட்சுமி மணிக்குமார்.



இவர் நடத்திவரும் அந்தச் சரணாலயத்துக்குச் சென்றபோது, அங்கு இருக்கும் முதியோர் தங்கள் வேலைகளைத் தாங்களே செய்துகொண்டு இருந்தனர். நம்மைப் பார்த்ததும் மரியாதையோடு கையெடுத்துக் கும்பிட்டார்கள். ‘‘இவங்க எல்லாரையும் எங்க குடும்ப உறுப்பினர்கள் மாதிரிதான் கவனிச்சிக்கிறோம்’’ என்று சாந்தமான குரலில் சொன்னார் விஜயலட்சுமி.

ஆசிரமம் நடத்தவேண்டும் என்பது இவர் திட்டம் போட்டுச் செய்த காரியம் அல்ல. ஜீவா காங்கிரஸ் தொண்டனாக இருந்தபோது நாகர்கோயில் அருகே சிராவயலில் காந்தி ஆசிரமம் அமைத்து ஏழை, எளிய மாணவர்களுக்குக் கல்வி கற்றுத்தந்தார். அந்த ஆசிரமத்துக்கு மகாத்மா காந்தி வந்தபோது ஜீவாவைப் பார்த்து, ‘நீ இந்தியாவின் சொத்து’ என்று பாராட்டினார். ஆனால் அந்த ஆசிரமத்தைத் தொடர்ந்து நடத்த அவரால் முடியவில்லை.

‘‘ஆசிரமம் நடத்த வேண்டும் என்பது மாமாவுடைய கனவு. ஆனால் சிராவயல் ஆசிரமத்தை தொடர்ந்து நடத்த முடியலேங்கிற வருத்தம் அவருக்கு இருந்ததுன்னு கேள்விப்பட்டோம். அதனாலே, எங்க திருமண நாள், குழந்தைகளோட பிறந்த நாள்களில் ஆசிரமங்களுக்கு போய் அங்கே இருக்குற வங்களோடு இனிப்பு பலகாரங்களை பகிர்ந்துகிட்டு, மகிழ்ச்சியை வெளிப் படுத்திட்டு வருவோம். இதைப் பார்த்துட்டு அந்த ஆசிரமத்தை நடத்துறவங்க ளே, ‘உங்க மாமா ஜீவாவே ஆசிரமம் நடத்தின-வர்தானே, நீங்களே ஏன் ஆசிரமம் ஆரம்பிக்கக் கூடாது?’ன்னு கேட்டாங்க. ஆனா, நிதி ஆதாரம் இல்லாம எப்படி ஆரம்பிக்கிறதுங்கற கவலை எனக்கும் என் கணவருக்கும் வந்தது. இதை நண்பர்களிடம் சொன்னபோது, ‘அதுக்காகவா தயங்கறீங்க... நல்லது செய்ற துக்கு நீங்க இருக்கீங்க... உதவி செய்றதுக்கு நாங்க இருக்கோம்’னு சொன் னாங்க... மனசுக்கு நிறைவா இருந்தது.

2005இல் மாமா பெயர்லயே அறக்கட்டளையை ஆரம்பிச்சு ஆசிரமத்தை தொடங்கினோம். இடையிலே மேல்மருவத்தூர் பக்கத்-துலே இருக்கிற சோத்துப் பாக்கம் கிராமத்துலே அறக்கட்டளைக்காக ஒரு நிலம் வாங்கினோம். அந்த நிலத்-துலே விளையிற அரிசி, பயிர்களை ஆசிரமத்துக்காகப் பயன் படுத்திக்கறோம்.

அதேநேரத்துல, ஸ்டேட் பாங்க் பென்ஷனர்ஸ் அசோஸி யேஷன், கனரா பாங்க் எம்ப்ளாயீஸ் அசோஸியேஷன் எல்லா உதவியும் செய்றாங்க. இந்து மிஷன் ஹாஸ்பிடல் நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன் கருணை உள்ளத்தோடு முதியோர்களுக்காக இலவச சிகிச்சை அளிக்கிறதுக்கு, தன்னோட ஹாஸ் பிடல்லே ஏற்பாடு செய்திருக்கிறார். அதனாலே, எந்த பிரச்னைன்னாலும் இந்து மிஷன் ஹாஸ்பிடல்லே முதியோர்களை அட்மிட் பண்ணுவோம்.

ஆனா, மருந்து மாத்திரை வாங்குறதுக்கு மட்டும் கொஞ்சம் சிரமமா இருக்கு. அப்படி நிதி பற்றாக்குறை வர்ற நேரத்துலே நானும், என் கணவரும் எங்க சம்பள பணத்திலேருந்து எடுத்து செலவு செய்யறதுக்கு தயங்குனது இல்லை. ஆனா, எங்க ரிடயர்ட்மென்ட்டுக்குப் பிறகு இந்தமாதிரி செலவுகளை எப்படி சமாளிக்கப் போறோம்னு தெரியலை.

விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்துட்டே போறதாலே, நிதி பற்றாக்குறையை சமாளிக்க கஷ்டமா இருக்கு. சிலர் பெட்ஷீட், முதியோர்களுக்கான துணி மணின்னு உதவி செய்றாங்க. சிலர் தானே முன்வந்து அரிசி, பருப்புன்னு வாங்கி கொடுப்பாங்க. பரிபூர்ண சந்தோஷத்தோட அவங்க உதவுறதை பார்க்கும்போது ஆசிரமத்தை நடத்துறதுலே இருக்குற சிரமங்கள் பனி போல விலகிடும்.

சிரமங்கள் வரும்போது ஆதரவற்ற முதியோர்களோட வாழ்க்கையை நினைச்சு பார்ப்போம். அதோட ஒப்பிட்டா எங்க சிரமம் ஒண்ணுமே இல்லன்னு தோணுது. சிலர் பெத்தவங்களை பாத்துக்கக்கூட மனசு இல்லாமே இங்க வந்து விட்டுட்டு போயிடுவாங்க. காரணம் கேட்டா... ‘‘அப்பாவுக்கும் என் பொண்டாட்டிக்கும் ஆகமாட்டேங்குதுமா... எனக்கு அப்பாவை என்னோட வெச்சுக்கணும்னுதான் ஆசை. ஆனா, என் பொண்டாட்டியை நினைச்சா மனசு பதறுது. அவளை சமாதானப்படுத்தி அப்பாவை பாத்துக்கச் சொன்னா... ‘உன் அப்பன் சம்பாதிக் கும்போது பொண்ணுக்கு கொடுத்தான், இப்ப நிலைதப்பி போனபிறகு நான் கஞ்சி ஊத்தணுமா’’னு கேக்குறா... என்ன பண்றதுன்னே தெரியாத நேரத்துலே தான் இந்த அட்ரஸ் கிடைச்சது. அதுவும் எனக்கு சம்பளம் வேற குறைச்சலா இருக்கிறதாலே பணம் கட்டி அவரை முதியோர் இல்லத்துலே விடமுடியலே... அதனாலேதான் ஜீவா சரணாலயத்துலே இலவசமா விட்டுட்டு போறேன். அவரை பார்த்துக்கோங்கம்மா... பணம் கிடைக்கும்போது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து பார்த்துட்டு போறேம்மா’’ன்னு சொல்வாங்க.

மனசு துடிக்கிற மாதிரியான இந்தக் கதைகளை கேட்கும்போது, எங்களுக்கு ஒரே கேள்விதான் தோணும். ‘எங்களால பார்த்துக்க முடியலேன்னு பிள்ளை களை பெத்தவங்க கைவிட்டிருந்தா பிள்ளைகளோட கதி என்ன ஆகுறது..?’ மாமா இருந்திருந்தா, இப்படிப்பட்ட பிள்ளைகளை நினைச்சு என்ன பாடு பட்டிருப்பார்..? இந்த முதியோர் இல்லத்தை நடத்துறதுலே எங்களுக்கு பணத்துலேதான் சிரமமா இருக்கே தவிர, மனசுலே சிரமம் இல்லை. பிள்ளைகளும் இதை உணர்ந்தாங்கன்னா பெத்தவங்களை கைவிடுவாங் களா..?’’ விஜயலட்சுமியின் கேள்வி மனதைக் கனக்கச் செய்கிறது. இளைய தலைமுறை இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது?

- சா.இலாகுபாரதி,

படங்கள்: கமல்

நம் தோழி, பிப்ரவரி, 2011

0 comments:

Post a Comment