05 March 2011

டாப் 10 பெண்கள் 2010

Posted by gunalancity 7:18 PM, under | No comments

1

ஆங் சான் சூ கி


1945-ல் மியான்மர் விடுதலைப் போராட்டத் தலைவரான ஜெனரல் ஆங் சான் கின் கி தம்பதியருக்குப் பிறந்தவர் ஆங் சான் சூ கி. படிக்க பிரிட்டன் சென்று அங்கேயே மிக்கேல் ஆரிஸ் என்பவரை மணம் முடித்துக் கொண்டார். மியான் மரில் 1962-லிருந்து ராணுவ ஆட்சி நடந்து வந்தது. 1988இ-ல் குடும்பச் சூழல் காரணமாக நாடு திரும்பிய சூகி, நாடு முழுவதும் இருந்த ராணுவ ஆட்சிக்கு எதிரான கொந்தளிப்பைக் கண்டு, ‘தேசிய ஜனநாயக லீக்’ கட்சியைத் துவங்கினார். ராணுவ ஆட்சிக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தினார். இதனால், மக்களிடம் சூகியின் செல்வாக்கு மளமளவென உயரத் தொடங்கியது.

இதை எதிர்பாராத ராணுவ அரசு, பாதுகாப்பு காரணம் எனச் சொல்லி, 1989ஆம் ஆண்டு சூகியை வீட்டுச் சிறையில் அடைத்தது. இது 1995ஆம் ஆண்டு வரை நீடித்தது. இடையில் சில காலம் விடுவிக்கப்பட்டு, மீண்டும் வீட்டுச் சிறையில் தள்ளப்பட்டார் சூ கி. பல நாடுகளின் வற்புறுத்தலாலும், ஐக்கிய நாடுகள் சபை போன்ற உலக அமைப்புகளாலும் கண்டனத்துக்கு உள்ளான மியான்மர் ராணுவ அரசு, 2010 நவம்பர் மாதம் சூ கியை விடுவித்தது. கடந்த 21 ஆண்டுகளில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டுச்சிறையிலேயே காலத்தைக் கழித்திருக்கும் சூ கி, 65 வயதிலும் போராட்ட குணம் மாறாமல் தனது அடுத்தகட்ட அரசியல் யுத்தத்தைத் தொடங்கியிருக்கிறார். ராணுவ ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து போர்க்குரல் எழுப்பிவரும் சூ கி, மியான்மர் நாட்டு மக்களின் நம்பிக்கைச் சூரியன்!


2

ஓப்ரா வின்ஃப்ரே

அமெரிக்க சேனல் ஒன்றில் ‘ஓப்ரா வின்ஃப்ரே ஷோ’ என்ற பெயரில் டாக் ஷோ நடத்தி வருகிறார் வின்ஃப்ரே. உலகம் முழுவதும் 140-க்கும் மேற்பட்ட நாடுகளில் வாழும் மக்கள் இந்த நிகழ்ச்சியின் ரசிகர்கள். இந்த ஆண்டு மே மாதத்துடன் நிறைவடைய இருக் கும் இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகிறது. டாக் ஷோ தவிர பத்திரிகை, இணைய தளம், நிகழ்ச்சி தயாரிப்பு, நடிப்பு என்று மீடியாவின் அத்தனை முகங்களையும் கொண்ட வின்ஃப்ரேவின் ஆண்டு வருமானம் எவ்வளவு தெரியுமா? 11 இலக்கம். அதாவது, ஆயிரத்து நானூறு கோடி. இதன்மூலம் உலகிலேயே அதிக வருமானம் ஈட்டும் பெண் என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கும் வின்ஃப்ரே, ஒரு ஆப்ரிக்க அமெரிக்கர். ஒரு காலத்தில் உலகின் ஒரே கறுப்பின பில்லியனர் என்ற அந்தஸ்தையும் இவர் பெற்றிருந்தார். இப்போது ‘ஒன்’ என்ற பெயரில் டி.வி. சானல் ஒன்றையும் தொடங்குகிறவர், ‘நாட்டின் செல்வாக்கு நிறைந்த பெண்மணி’ என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவால் பாராட்டப் பெற்றவர்.

இவ்வளவு செல்வாக்குப் பெற்றிருக்கும் வின்ஃப்ரேவின் இளமைக்காலம் கொடுமையானது. தன் ஒன்பதாவது வயதிலேயே பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி, ஒரு குழந்தை பிறந்து அதை மரணத்துக்கு பலிகொடுத்தவர். வறுமைமிக்க கறுப்பினக் குடும்பத்தில் பிறந்து, துயரம் நிறைந்த இளமைப் பருவத்தைக் கடந்து, உலகின் சக்திவாய்ந்த பெண்ணாக விஸ்வரூபம் எடுத்து நிற்கும் வின்ஃப்ரே, ‘வாழ்வில் வெற்றி பெறுவது பெரிய ரகசியம் ஒன்றும் இல்லை. அயராமல் உழைக்கத் தயார் என்றால் எந்த உயரத்தையும் எட்டலாம்’ என்று கூறுகிறார். தான் நடத்தும் பத்திரிகை, இணையதளம் மூலம் வரும் வருமானத்தின் ஒரு பகுதியை ஏழைகளுக்கு உதவி செய்வதற்காக ஒதுக்குவதில் வெளிப்படுகிறது ஓப்ராவின் மனிதநேயம்.


3


சாய்னா நெஹ்வால்


சாய்னா நெஹ்வாலைப் போல ஒரு பெண், இந்திய பேட்மிட்டன் உலகில் இனி பிறக்க வேண்டும். வந்த வேகத் தில் திரும்பிவிடாமல், நின்று அடித்துக் கொண்டு இருப்பவர். ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ விருது பெற்ற முதல் பெண் பேட்மிட்டன் பிளேயர் என்ற அந்தஸ்துக்குச் சொந்தக்காரர். சாய்னா ஒரு போட்டியில் பங்கேற்றால் வெண் கலத்தையாவது வாங்காமல் திரும்ப மாட்டார் என்கிற அளவுக்கு அவரு டைய ஹிட்-லிஸ்ட் இருக்கிறது. குறைந்த வயதில், விளையாட வந்த சிறிய கால இடைவெளிகளுக்குள் உலகத் தர வரிசையில் முன்னுக்கு வந்தவர்.

பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தபோது, யோசிக்காமல் மறுத்துவிட்டவர், விளம் பரத்துறையில் கால் பதித்துவிட்டார். விளம்பரத்தில் நடிப்பதற்கு கிரிக்கெட் ப்ளேயர்கள், சினிமா நடிகர்கள் வாங்கும் சம்பளத்தைக் காட்டிலும் சாய்னா கூடுதலாக வாங்குகிறார். இப்படி அதிகப்படியான சம்பளத்தோடு விளம்பரத்தில் நடித்தாலும், தன்னுடைய விளையாட்டில் கோட்டைவிட்டது இல்லை என்பது சாய்னாவின் மிகப் பெரிய ப்ளஸ்!


4


ஆயிஷா

ஆயிஷாவை யாரும் அத்தனை சீக்கிரம் மறந்திருக்கமுடியாது. அமெரிக்காவின் டைம் பத்திரிகையில் செய்தி வெளியானதும் உலகில் உள்ள பெண்கள் அமைப்புகள் அத்தனையும் ஒரு நிமிடம் வாயடைத்துதான் போயின. அந்த அளவுக்கு வன் கொடுமைக்கும், பாலியல் துன்புறுத் தலுக்கும் ஆளாகி, உலக அரங்கில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியவர் ஆயிஷா. காதுகளும் மூக்கும் துண்டிக் கப்பட்ட இந்த ஆயிஷா, பணத்தாசை பிடித்த ஒரு தந்தைக்கு ஆப்கானிஸ்தானில் பிறந்தவர். தன் அப்பாவின் பணவெறியால் தாலிபான் தீவிரவாதிக்கு கழுத்தை நீட்ட விற்கப்பட்டார். அதன்பிறகு நடந்ததெல்லாம் மீடியாவால் வெளிச்சத்துக்கு வந்துவிட்டது. குண்டுவைப்பது, ஊரை எரிப்பது எனக் கொடூரங்களை அரங்கேற்றும் தாலி பான்களின் இந்தத் தீவிரவாதம் இன்று ஒரு பெண்ணின் காது, மூக்குவரை நீண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

ஆயிஷாவின் இந்தச் சோகம் டைம் பத்திரிகையில் கவர் ஸ்டோரியாக வந்தபிறகு அவருக்கு உலகெங்கிலும் இருந்து ஆதரவு குரல்கள் ஒலித்தன. அமெரிக்கா சென்று மூக்கில் அறுவை சிகிச்சை செய்து திரும்பியிருக்கிறார் ஆயிஷா. ‘எனக்கு ஏற்பட்ட காயம் இன்று ஆறினாலும் அதன் வடுக்கள் மட்டும் வலிகளை நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கின்றன’ என்கிறார் ஆயிஷா. பாதுகாப்பு அரண்களாக இருக்க வேண்டியவர்களாலேயே வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட ஆயிஷாவின் வாழ்க்கையில் நடந்திருக்கிற இந்தக் கொடு மைகள் மிகப் பெரும் துயரச் சம்பவம்.


5


அருந்ததி ராய்


“மத்திய இந்தியாவின் தண்டகாரண்யா காடுகளில் உள்ள பாக்ஸைட் கனிம வளங்களைத் தனியாருக்கு தாரை வார்ப்பதற்காக, அங்கு வசிக்கும் பூர்வப் பழங்குடி மக்கள் வெளியேற வேண்டும் என உத்தரவிட்டது மத்திய அரசு. இதை எதிர்த்து போராட்டக் களத்தில் குதித்த மக்கள் மீது ‘சல்வா ஜூடும்’ என்ற கூலிப்படையை ஏவித் தொடர் தாக்கு தல் நடத்தி வருகிறது. இதனால், சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் நிலைக்கு தண்டகாரண்யா பழங்குடி மக்கள் தள்ளப்பட்டு இருக்கிறார்கள்” என்பது மத்திய அரசு மீதான அருந்ததி ராயின் குற்றச்சாட்டு. பழங்குடிகளுக்கு ஆதரவாக மாவோயிஸ்டுகளும் களத்தில் இறங்கி போராடி வருகிறார்கள். இந்நிலையில்தான் அந்தக் காடுகளில் நடக்கும் உண்மைச் சம்பவத்தை அறிந்து வந்திருக்கும் அருந்ததி ராயை, ‘மாவோயிஸ்ட்’ என்று ஒரு சாரார் முத்திரை குத்தியிருக்கிறார்கள். மத்திய அரசும், அரசுக்கு
எதிராகச் செயல்படுவதாகச் சொல்லி, சட்ட ரீதியான நடவடிக்கைகளை அவர் மீது ஏவி வருகிறது.

ஆனால், இவை எதற்கும் அசராமல் தொடர்ந்து பழங்குடிகளுக்கு ஆதரவாகவும், அவர்களுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு எதிராகவும் போராடிவரும் அருந்ததிராய், ‘நாட்டில் எமர்ஜென்சி நிலை பல வருடங்களுக்கு முன்புதான் இருந்தது என்று இல்லை. உண்மையில் இப்போதுதான் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி அமலில் இருக்கிறது’ என்கிறார். அரசுக்குப் பெரும் தலைவலியாக இருந்தாலும், பழங்குடி மக்களின் தலைவலிக்கு அருமருந்தாக இருப்பதும் அருந்ததி ராய்தான்.


6

ஏஞ்சலினா ஜூலி

உலக அளவில் மிகவும் அழகான பெண்கள் வரிசையில் தவறாமல் இடம் பிடித்துவிடுவார் ஏஞ்சலினா ஜூலி. ஜூலியின் ஆறு குழந்தைகளில் மூன்று தத்துப் பிள்ளைகள். ஜூலியின் ஒரே கவலை அவர்களோடு நேரத்தை செல விட முடியவில்லை என்பதுதான். அதனால் எதிர்காலத்தில் நடிப்புக்கு குட்பை சொல்லிவிட்டு, ஆப்பிரிக்கா வில் குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழவேண்டும் என்பதே இவரது கனவு. ‘மூன்று குழந்தை பெற்றபிறகும் ஸ்லிம் அண்ட் ட்ரிம்மாக இருக்கிறார்’ என்கிறார்கள் அவருடைய ரசிக மகா ஜனங்கள்.

அழகோடு அற்புதமான நடிப்பும் கைவரப்பெற்ற ஜூலி, அந்தத் திறமைக்குப் பரிசாக ஏகப்பட்ட விருதுகளை வென்றிருக்கிறார். ஆஸ்கர், கோல்டன் குளோப் அவார்ட் உள்ளிட்ட உலகின் முக்கியமான பல விருதுகளைப் பெற்றிருக்கும் ஜூலி, ‘தன் கண்களிலும், உதடுகளிலும்தான் ஒட்டுமொத்த அழகையும் ஒளித்து வைத்திருக்கிறார்’ என்பது பலரது கருத்து. அந்த அழகுக்கு சவால்விடும் வகையில், ஏற்கெனவே எலிசபெத் டெய்லர் நடித்த ‘கிளியோபாட்ரா’ படத்தின் ரீ-மேக்கில் இப்போது ஜொலிக்கப்போகிறார் ஜூலி. ஹாலிவுட்டின் அட்ராக்டிவ் நட்சத்திரமான ஜூலியின் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிக ரித்துக்கொண்டே போகிறதாம்.


7

நீரா ராடியா

டெல்லிவாலாக்கள் இப்போது நீரா ராடியாவின் பெயரைக் கேட்டாலே அதிர்ச்சி அடைகிறார்கள். ‘வைஷ்ணவி கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற நிறுவனத்தை நடத்திவரும் ராடியா, 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இடைத் தரகராக இருந்து காய்களை நகர்த்தி யவர். 2ஜி விவகாரம் தொடர் பாக டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா மற்றும் முன்னாள் அமைச்சர் ராசா உள்ளிட் டோருக்கு இடையே இவர் பாலமாக செயல்பட்டதற்கு வலுவான ஆதாரங் கள் சிக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், இவருக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான பலருடனும் தொடர்பு இருப்பதும் தெரியவந்ததுடன் இவரது தொலைபேசி ஆடியோ பதிவுகள் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்தப் பரபரப்புகள் அடங்குவதற்குள் அடுத் தடுத்து இரண்டு முறை இவருக்கு சொந்தமான நிறுவனம், வீடு, வங்கிக் கணக்குகள் என்று ஒவ்வொன்றையும் சல்லடையாக சலிக்கத் தொடங்கியது சி.பி.ஐ. இவருக்கு எதிராகக் கிடைத்திருக்கும் ஆதாரங்கள் அத்தனையும் நீதி மன்றத்தில் நிரூபிக்கப்பட்டால் இன்னும் எத்தனை தலைகள் உருளுமோ என்கிற பயத்தில் டெல்லி வட்டாரம் உறைந்துபோய் இருக்கிறது. (நம் தோழியில் டாப் 10 பெண்கள் பற்றி எழுதும்போது ஆ.ராசா கைது செய்யப்படவில்லை!)


8


சானியா மிர்ஸா

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் விளை யாட்டுப் போட்டியில் இந்தியாவில் இருந்து கலந்துகொண்ட முதல் பெண் சானியா. கவர்ச்சியும் அதிரடியும் கலந்த சானியாவின் சர்வீஸ்களுக்கு இந்தியாவில் இன்று ரசிகர் பட்டாளம் ஏராளம். ஒரு காலத்தில் ஆண்கள் மட் டுமே ஆதிக்கம் செலுத்திவந்த இந்திய டென்னிஸ் உலகில் சானியாவின் வரு கைக்குப் பிறகுதான் நிறைய மாற்றங் களும் முன்னேற்றங்களும் நடந்திருக் கின்றன. சானியா முதலடி எடுத்து வைத்த 2003ஆ-ம் ஆண்டில் டென்னிஸ் விளையாட்டைவிட அவர் உடுத்திய ஆடைகள் மீதுதான் பார்வையாளர்களின் கவனம் இருந்தது. இதுவே சானியா மீது பலரை வார்த்தை குண்டு வீசவைத்தது. ‘அவரை மதத்திலிருந்து விலக்கி வைக்க வேண்டும்’ என்று அவர் சார்ந்த மதத் தலைவர்கள் விமர்சனம் வைத்தார்கள். அதேபோல, கடந்த ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக்குடன் அவருக்கு நடந்த திருமணத்துக்கும் ஏகப்பட்ட நெருக்கடிகள், கெடுபிடிகள். உணர்ச்சிவசப்பட்டு சிலர் அவரை நாடுகடத்த வேண்டும் என்று போராட்டம் நடத்தினார்கள். சிலர் அவருடைய திருமணத்தை நடக்கவிட மாட்டோம் என்று எச்சரிக்கை செய்யும் தொனியில் பேசினார்கள். ஆனால், இப்படிப்பட்ட எந்த விமர்சனங்களுக்கும் மிரட்டல்களுக்கும் அவர் அஞ்ச வில்லை. எல்லா எதிர்ப்புகளையும் சமாளித்து தொடர்ந்து இந்தியாவுக்காக டென்னிஸ் விளையாடி வரும் சானியா, பாகிஸ்தான் மருமகளாக இருந்தாலும், தான் எப்போதும் இந்தியாவின் மகள் என்பதை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கிறார். இந்திய டென்னிஸ் வானில் சானியா மிர்ஸா சில்வர் ஸ்டார்.


9


லதிகா சரண்

தமிழ்நாடின் முதல் பெண் டிஜிபி லத்திகா சரண். இந்த அந்தஸ்தும் பதவி யும் இவரைத் தானாகத் தேடிவந்தது. ‘டிஜிபி பொறுப்புக்கு இவரைவிட சீனியர்கள் இருக்கும்போது இவரை ஏன் அந்தப் பொறுப்புக்கு நியமிக்கிறீர்கள்’ என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பிய போது, அதற்குத் தகுந்த பதில் அளித்து விட்டு, தன்னுடைய நிலைப்பாட்டில் தமிழக அரசு உறுதியாகவே இருந்தது. இவரது நியமனம் குறித்துப் பல விமர்சனங்கள், வழக்குகள், கேள்விகள் எழுந்தபோதும் லத்திகா வாய்திறக்கவில்லை. இதுதான் அவரது அணுகுமுறை. அரசும் இப்படிப்பட்டவரைத்தான் எதிர்பார்க்கிறது. குடைச்சல் இல்லாமல் சுமுகமாக அரசு இயந்திரத்தை இயக்க வேண்டும் என்றால், லத்திகா சரண்தான் சரியான சாய்ஸ் என்று தீர்மானித்துத்தான் அவரைப் பதவியில் அமரவைத்தி ருப்பார்கள். எப்படி இருப்பினும் நெளிவு சுளிவு கொண்ட நாசூக்கான ஓர் உயர் அதிகாரி தமிழகக் காவல் துறைக்கு நிச்சயம் தேவை. அந்த இடத்தை நிரப்புவதில் லத்திகா சரண் முன்னணி வகிக்கிறார்.
சல்யூட் மேடம்!10


இரோம் ஷர்மிளா

1958இல் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ‘ஆயுதப் படைச் சிறப்புச் சட்ட’த்தை திரும்பப் பெறவேண்டும் என்று தொடர் பட்டினிப் போராட்டம் நடத்திவருபவர் இரோம் ஷர்மிளா. இச்சட்டம் ராணுவ வீரர்களுக்கு கட்டுப் பாடற்ற அதிகாரத்தை வழங்குகிறது.

2000இல் ஆயுதப் படைக் குழுவினர் மீது தாக்குதல் நடத்துவதாகச் சொல்லி பேருந்து நிலையத்தில் நின்றுகொண்டு இருந்த அப்பாவி மக்கள் 10 பேரை சுட்டுக் கொன்றது ராணுவம். கண்மூடித் தனமான இந்தத் தாக்குதலுக்குக் காரணமான ஆயுதப்படைச் சிறப்புச் சட்டத்தை திரும்பப் பெறுவது ஒன்றே, மீண்டும் இதுபோல் நடக்காமல் தடுக்க ஒரேவழி என்று கூறி, தன் பட்டினிப் போராட்டத்தை அறிவித்தார் ஷர்மிளா. அந்தச் சட்டம் இன்றுவரை வாபஸ் பெறப்படவில்லை. ஷர்மிளாவின் போராட்டமும் ஓய வில்லை.

- சா.இலாகுபாரதி

நம்தோழி, ஜனவரி - 2011

0 comments:

Post a Comment