24 March 2011

தி.மு.கவை தோற்கடிக்கும் அ.தி.மு.க

Posted by Gunalan Lavanyan 10:34 PM, under | No comments

அதிமுக தேர்தல் அறிக்கை

தி.மு.க தேர்தல் அறிக்கையைத் தோற்கடிக்கும் அளவுக்கு அ.தி.மு.க., வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை இருக்கிறது என்று மக்கள் மத்தியில் பேச்சு எழுந்திருக்கிறது. அதை உறுதிபடுத்துவது மாதிரிதான் இந்தத் தேர்தலில் ஒவ்வொரு கட்டத்திலும் திமுகவின் நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டு இருக்கிறார் ஜெயலலிதா. காரணம் எந்த இடத்திலும் திமுகவுக்கு சளைத்தது அல்ல அதிமுக என்பதை நிரூபிப்பதற்குத்தான். அது தேர்தல் அறிக்கையிலும் பிரதிபலிக்கிறது.

குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் மாதம் தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார். அனைத்து உயர்நிலைப் பள்ளி (11, 12) மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.




மேலும் கலை, அறிவியல் அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்களுக்கும் இலவச லேப்டாப் வழங்கப்படும். சாதிச் சான்றிதழ், இதர சான்றிதழ் பள்ளியிலே வழங்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு 4 செட் சீருடை, காலணி. 10 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் அரசு, தனியார் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை. பள்ளி செல்லும் மாணவர்களுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களும் அதிமுகவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

கேபிள் டி.வி., அரசே ஏற்று நடத்தும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் அனைவருக்கும் கேபிள் துறையில் பணி வாய்ப்பு வழங்கப்படும். தவிர அது இல்லாவிட்டால் இது என்று இல்லாமல், இல்லத்தரிசிகளுக்கு பேன், மிக்சி, கிரைண்டர் என மூன்று பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு இருக்கிறது. 

அதேபோல, வீடு தேடி வந்து சிகிச்சை அளிக்கும் நடமாடும் மருத்துவமனை, ஏழை மக்கள் வீடுகட்ட ரூ.1.8 லட்சம் மானியம், மகளிருக்கு பேறுகால உதவித்தொகை‌யாக ரூ.12 ஆயிரமாக உயர்வு, அரசு ஊழியர்களுக்கு பேறுகால விடுப்பு 6 மாத காலமாக உயர்வு, திருமண உதவித் தொகை ரூ. 25 ஆயிரமாக உயர்வு, மேலும் 4 கிராம் தங்கம், 58 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச பஸ் பாஸ் என பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

கிராமம் மற்றும் நகர்புறங்களில் 4 ஆண்டு காலத்தில் மும்முனை மின்சார இணைப்பு தரப்படும். கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.2500 ஆக உயர்த்தப்படும். அரசு கரும்பு ஆலைகள் நவீனமயமாக்கப்படும். நிர்வாகம் சீரமைக்கப்படும். வீடு, தொழில், விவசாயத்துக்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்கப்படும். மின்சார திருட்டை ஒழிக்க முன்னாள் ராணுவத் தினர் அடங்கிய மின்சார பாதுகாப்பு படை அமைக்கப்படும். அரசு ஊழியர்கள் நலன்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும். அனைத்து குறைபாடுகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் அவ்வப்போது தீர்வு காணப்படும் எனவும் ஜெயலலிதா வெளியிட்ட அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டு இருக்கிறது.


திமுக தேர்தல் அறிக்கையில்...

ஏற்கெனவே திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டு இருந்த கவர்ச்சி திட்டங்கள்:


ஒரு கிலோ அரிசி 1 ரூபாய்க்கு வழங்கும் திட்டம் தொடர்ந்து செயல் படுத்தப்படும். வீடுதோறும் இலவச கிரைண்டர் அல்லது மிக்ஸி. பரம ஏழைகளுக்கு மாதந்தோறும் 35 கிலோ இலவச அரிசி. 58 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இலவச பஸ் பாஸ். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2 லட்சம் வரை மானியம். அரசு கல்லூரியில் பயிலும் பிற்படுத் தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட, ஆதி திராவிட மாணவர் களுக்கு இலவச லேப்டாப்.

கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம். மதுரை, திருச்சியில் புதிதாக மனநல மருத்துவமனைகள். ரேஷன் கார்டுகளுக்கு மானிய விலையில் அயோடின் கலந்து உப்பு. குடும்பத்தில் முதல் பட்டதாரி களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை. அரசு பெண் ஊழியர்களுக்கு பேறு கால விடுமுறை மூன்று மாதத்திலிருந்து 4 மாதமாக உயர்வு. கர்ப்பிணி பெண்களுக்கான உதவித் தொகை ரூ.10 ஆயிரமாக உயர்வு. சாலை விபத்தில் பாதிக்கப்பட்டால் கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் இலவச சிகிச்சை. அனைத்து வட்டார மருத்துவமனைகளிலும் எய்ட்ஸ் நோய் சிகிச்சை மையம். எல்லா மாவட்டங்களுக்கும் அரசு செவிலியர் மற்றும் அரசு பொறியியல் கல்லூரி.  60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு அரசு பேருந்துகளில் கட்டணம் இல்லாத பயணம். முதியோர் உதவித்தொகை ரூ 450 லிருந்து ரூ.750 ஆக உயர்வு. கோவை மதுரை நகரில் மெட்ரோ ரயில் திட்டம். விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக மாற்றி விற்கப்படுவது தடுக்கப்படும்.

சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியை அதிரிக்க நடவடிக்கை. அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி.  மீனவர்களுக்கு நிதி தர புது காப்பீடு திட்டம் செயல் படுத்தப்படும். உழவர் சந்தை போன்று நகர்ப்புறங்களில் நுகர்வோர் சந்தை அழைக்கப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தோறும் மூன்று சீருடை வழங்கப்படும். சென்னையில் தாம்பரம் போல் மதுரையில் காசநோய் மருத்துவமனை அமைக்கப்படும். மாதம் ஒரு நாள் அரசு மருத்துவர்கள் வீடு தேடி சென்று முதியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். தரமான கல்வி பெற 2006 முதல் 2009 வரை பெறப்பட்ட கல்விக்கடனை அரசு செலுத்தும். சாயக்கழிவுகளை இயற்கை முறையில் ஆவியாக்க நடவடிக்கை. பொங்கல் தோறும் கிராமங்களில் அரசு சார்பாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும். திருநங்கைகளுக்கு சுய உதவிக்குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் பல்கலைக்கழகங்கள் அமைக் கப்படும்.  சொட்டு நீர் பாசனம் செய்ய விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்கப்படும். மகளிர் சுய உதவிகளுக்கு தரப்படும் கடன் ரூ. 4 லட்சமாக உயர்த்தப்படும். நெல் கரும்பு உள்ளிட்டவற்றிற்கு நியாய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தரமான கல்வி வழங்க அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும். மாவட்ட மருத்துவமனைகளில் உயிர்காக்கும் உயிர் சிகிச்சை அமைக்க நடவடிக்கை. சென்னையிலிருந்து கோவைக்கு புல்லட் ரயில் அமைக்க நடவடிக்கை.

இந்த இரண்டு அறிக்கையில் எந்த அறிக்கை ஜெயிக்கப் போகிறது என்று மே 13 வரை காத்திருந்த பார்ப்போம்...

0 comments:

Post a Comment