09 March 2011

பெண்ணுரிமையைப் போற்றும் நாடு!

Posted by Gunalan Lavanyan 10:37 PM, under | No comments

படிப்பதற்காக நியூஸிலாந்துக்கு போனார் சென்னை தமிழ்ப் பொண்ணு புவனா. அங்கு போனபிறகு தன்னுடைய வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றங் களையும் நியூஸிலாந்துக்கும் இந்தியாவுக்கும் உள்ள ஒற்றுமை வேற் றுமைகளையும் பகிர்ந்துகொள்கிறார்.


''உலகின் அழகான தீவு நாடு என்று கருதப்படும் நியூசிலாந்து தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ‘பாடல் பெற்ற’ ஸ்தலம். நான் நியூசிலாந்து வந்து நான்கு ஆண்டுகளாகப் போகிறது. படிப்பதற்காக இங்கே வந்தபிறகு வீட்டில் திருமணம் நிச்சயம் செய்தார்கள். என் கணவரும் நியூசிலாந்திலேயே இருக்கிறார் என்னும் விஷயத்தைக் கேள்விப்பட்டதும் ரொம்ப சந்தோஷப் பட்டேன். அதுவும் அவர் தமிழ்நாட்டுக்கார என்பது தெரிந்ததும் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தேன். அந்த மகிழ்ச்சியோடு எங்கள் திருமணம் அவருடைய சொந்த ஊரான ஈரோட்டில் நடந்தது. நாங்கள் இருவருமே வெளிநாட்டில் இருந்தாலும் நம் சம்பிரதாயப்படிதான் திருமணம் நடந்தது. மண் மாறினாலும் மக்கள் மாறக்கூடாது இல்லையா...


நியூசிலாந்து மிகச் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நாடாக இருந்தாலும், பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைந்த நாடு. இதன் தட்பவெப்ப நிலையும், பெரும்பான்மையாக இருக்கும் ஆங்கிலேயர்களும்தான் இதன் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள். உலக வரைபடத்தில் இந்தியாவுக்கு வலது கோடியில் இருக்கும் இந்தத் தீவுக் கூட்டம், பசிபிக் பெருங்கடலுக்குத் தென்மேற்குப் பகுதியில் உள்ளது. நியூசிலாந்தின் மொத்த மக்கள் தொகை (2007ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி) சென்னை மாநகரின் மக்கள் தொகையைவிடக் குறைவு. கிட்டத்தட்ட 43 லட்சம். இயற்கை வளம் மிகுந்த நாடு. குறைந்த மக்கள் தொகை. இதுவும் இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

இங்கு வீட்டுக்கு வீடு கார் உண்டு. ஒவ்வொரு குடும்பத்துக்கும் சொந்த வீடு உண்டு. எனவே இந்தியாவில் இருப்பதுபோல அபார்ட்மென்ட் வீடுகளில் இங்கே குடும்பம் நடத்தமாட்டார்கள். அப்படி இருப்பதை அந்தஸ்து குறைவான விஷயமாகவே இங்குள்ள மக்கள் கருதுகிறார்கள். நியூசிலாந்தில் இரண்டு பிரிவு மக்கள் வசிக்கிறார்கள். ஒரு பிரிவினர், பூர்வ குடிமக்களாகிய மௌரிகள் (Maori). இன்னொரு பிரிவினர் இங்கு வந்து குடியேறிய ஆங்கிலேயர்கள். இவர்கள்தான் இப்போது இங்கே பெரும்பான்மையினராக (90 சதவீதம்) இருக்கிறார்கள். மௌரிகள் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே. பூர்வக்குடிகளான மௌரிகளின் கலாசாரத்துக்கும் நம்முடைய திராவிடக் கலாசாரத்துக்கும் பல ஒற்றுமைகள் இருப்பதுதான் ஆச்சரியம். அதேபோல, இந்தியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இரண்டு ஒற்றுமைகள் உண்டு. இரண்டுமே ஜனநாயக நாடுகள். இரண்டுமே பிரிட்டிஷாரால் ஆக்கிரமிக்கப்பட்டு, ஆட்சி செய்யப் பட்டவை.

இந்தியாவின் வடக்கே காஷ்மீரும் தெற்கே கன்னியாகுமரியும் இருப்பது மாதிரி நியூசியின் வட முனையில் கேப்பரிங்காவும் தென் முனையில் இன்வெர்கார்கிலும் இருக்கு. நியூசி மிகப்பெரிய சுற்றுலாத் தீவு. இங்குள்ள சவுத் ஐலாந்து சுற்றுலாப் பயணிகளிடம் ரொம்பப் பிரசித்தம். வெளிநாட்டில் ஷூட் பண்ண வேண்டும் என்று நினைக்கும் இந்திய சினிமாக்காரர்கள், ஒரு பாட்டுக்காவது இங்கு வந்து ஆட்டம் போடாமல் இருக்கமாட்டார்கள். இங்கு இருக்கும் வெள்ளைப் பனி மலைகளும், பச்சையும் நீலமும் கலந்து பாயும் நதியும் அவ்வளவு அழகு! ‘வெள்ளிப் பனிமலை மீதுலாவுவோம்’ என்றார் பாரதியார். நானும் என் கணவரும் அதை இங்கே அனுபவித்திருக்கிறோம்.

நியூசிலாந்தின் மௌரி மக்கள் கிழங்கு வகைகளையும், மாட்டு இறைச்சி யையும் விரும்பிச் சாப்பிடுகிறார்கள். ஆனால் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் அவர்களின் பாரம்பரிய உணவையும் சாப்பிடுகிறார்கள். இந்தியர்களும், சீனர்களும் மௌரிகளைவிட அதிகமாக இருப்பதால் சீன, இந்திய உணவு வகைகளும் இங்கே கிடைக்கின்றன. அதனால் உணவு விஷயத்தில் எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லே! தேசம் விட்டு தேசம் மாறினாலும் நம்ம பழக்கவழக்கம், கலாசாரம் ஆகியவை மாறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதனால் பூச்சி, பொட்டுகளை (ச்சீ... சீ...) நாங்க உண்பதில்லை.

‘அவன் தூணிலும் இருப்பான்; துரும்பிலும் இருப்பான்’ என்று பிரகலாதன் சொன்னது மாதிரி நம் கடவுள்கள் இந்தியாவிலும் இருக்கிறார்கள்; நியூசியிலும் இருக்கிறார்கள். ராமர், கிருஷ்ணர் தொடங்கி, தமிழ்க் கடவுள் முருகர் வரை இந்துக் கடவுள்களுக்கு நிறைய கோயில்கள் இருக்கின்றன. இந்தியாவில் கொண்டாடப்படும் எல்லாப் பண்டிகைகளையும் இங்கேயும் கொண்டாடு றோம். குறிப்பாக இந்தியர்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் தீபாவளி போன்ற பண்டிகைகளை நியூசிலந்து சிட்டி கவுன்சில் (Municipal) எடுத்து நடத்துகிறது. இங்கு இருக்கும் தமிழ் அமைப்புகளும் அதற்கு ஆதரவாக உள்ளன. இருந்தாலும், இந்தியத் தமிழர்கள், இலங்கைத் தமிழர்கள், மலேசியத் தமிழர்கள் என்று தமிழர்கள் சிதறிக் கிடக்கிறார்கள். இந்த விஷயத்தில் மட்டும் தமிழர்கள் எப்படி ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை!

‘மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்!’ என்று இங்கே கோஷம் போடவேண்டிய அவசியம் இல்லே. பெண்களை இழிவாக நடத்துவது என்ற பேச்சுக்கே இங்கே இடமில்லை. அதனால், நம்மூரில் உள்ளது போல் பெண்களின் உரிமைக்காகப் போராட வேண்டிய அவசியம் இங்கே இல்லை. இந்த வகையில் இங்கு வாழ்வதற்கு நான் பெருமைப்படுறேன். உலகிலேயே பெண்களுக்கு சம உரிமையும், ஓட்டுரிமையும் முதன்முதலாகக் கொடுத்த நாடும் நியூசிலாந்துதான். இங்கே ஆண், பெண் என்ற பாரபட்சம் கிடையாது. பெண்களுக்கே அதிகமாக முன்னுரிமை கொடுக்கப்படுகிறது என்றும் சொல்ல லாம்.

பெண்களுக்கு எவ்வளவு உரிமையும் மதிப்பும் தருகிறார்களோ அந்த அளவுக்குக் குழந்தைகளுக்கும் தருகிறார்கள். மிகச்சிறிய வயதிலேயே குழந்தைகளுக்கு நியூசிலாந்தில் சம உரிமை அளிக்கப்படுகிறது. இவை யெல்லாம் இருந்தாலும் நம்மூர் நிலாச்சோறு, அம்மா மடி தூக்கமெல்லாம் நியூசிலாந்து குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. இங்கே மூன்று வயதுக் குழந்தை தானாக உண்ணாமல், தனியாகப் படுத்து உறங்காமல் போனால் மனோதத்துவ நிபுணரிடம் குழந்தையைக் கூட்டிக்கொண்டு போவார்கள். எத்தனை வசதிகள் இருந்தால் என்ன, இந்தியாவோடு ஒப்பிட்டால் இங்கே வளரும் குழந்தைகளுக்குப் பெற்றோரின் அன்பும் அரவணைப்பும் மிகக் குறைவுதான்.

‘16 வயசுக்கு மேல் எந்தப் பிள்ளையும் பெற்றோருடன் வசிக்கக் கூடாது’ என்று நியூசிலாந்தின் முக்கியமான சட்டம் ஒன்று சொல்கிறது. இதனால், 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் காலேஜில் படித்துக்கொண்டே பார்ட் டைம் ஜாப் பார்க்கிறார்கள். அதே நேரத்தில், ‘16 வயசுக்குக் குறைவான எந்தக் குழந்தையையும் பணியில் அமர்த்தக்கூடாது’ என்பதும் நியூசிலாந்தின் சட்டமாக இருக்கிறது.

இந்த நாட்டுக்கு வர விருப்பப்படுற தோழிகளுக்கு என்னோட குட்டி ஆலோசனை: வெளிநாட்டுக்கு வந்தபிறகு நம் நாடு, நம் வீடு ஆகியவற்றை மறந்துவிடக் கூடாதுதான். ஆனால் அதேசமயம் இங்கே இருக்கும் பண் பாட்டுக்கும் கலாசாரத்துக்கும் மக்களுக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டி யதும் அவசியம். இந்த மக்களுக்கும் பண்பாடு, பாரம்பரியம் உண்டு என்பதை மறந்து விடக் கூடாது. இங்கே உள்ள சில இந்தியர்கள் சொந்த ஊர்ப் பெருமையையே பேசிக்கொண்டு இங்கே உள்ள விசேஷங்களை கவனிக்கத் தவறிவிடுவதை நான் பார்க்கிறேன். நாம் அவர்கள் கலாசாரத்தை மதித்து  அங்கீகரித்தால்தான் அவர்களும் நம்மையும் நம் தேசத்தையும் மதிப்பார்கள் என்பது என் தாழ்மையான கருத்து.

நியூஸிலாந்தில் ஒரு அற்புதமான விஷயம் என்னவென்றால் இந்த நாட்டு மக்கள் எல்லா நாட்டு மக்களிடமும் நட்பாகவும் சகஜமாவும் பழகும் சுபாவம் கொண்டவர்கள் என்பதுதான். இங்கே வந்து வசிக்க விரும்பும் இந்தியர்களுக்கு இது டானிக் நியூஸ்தானே!''

- சா.இலாகுபாரதி

நம் தோழி, டிசம்பர் 2010

0 comments:

Post a Comment