25 February 2010

காதலும் மறக்கும்

Posted by Gunalan Lavanyan 9:01 PM, under | No comments

To: …………….sudha@gmail.com
subject: to my sweet darling
அன்பிற்கினியவளே!
இராத்திரி முழுதும் உறக்கம் இழந்து கட்டிலில் புறண்டுக்கொண்டிருந்தேன். நீண்ட நாழிகைக்குப் பிறகு, உறக்கம் தொலைத்த இரவை நடந்து கழிக்கலாம் என்று நடக்கத் தொடங்கினேன்... யாருமற்ற இரவில் தனிமை மிகக் கொடியது என்று சொல்வார்கள். ஆனால் எனக்கு அந்தத் தனிமை மிக இனிமையாகவே இருந்தது. வானத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். நிலா நகர்ந்துகொண்டிருந்தது. நட்சத்திரங்கள் ஒவ்வொன்றாக உதிர்ந்து என் சட்டைப் பையில் விழுந்து தெறித்ததுபோல் இருந்தது. ஒரு நொடி கண்களை இமைத்துப் பார்த்தேன். பிரமை! மாயை கலைந்ததும் மீண்டும் நடந்தேன். நேற்று உன்னோடு நான் இருந்த மணித்துளிகள்... குளத்தில் எறிந்த கல் எழுப்பும் அலையாய் நெஞ்சில் எழுந்துகொண்டிருந்தது.
ஃப்ளாஷ்பேக்!
விடிந்தும் விடியாததுமான காலைப் பொழுதில் உனக்கு முந்தியே வந்து பூங்காவில் அமர்ந்து புல்லின் நுனியை கடித்துக்கொண்டிருந்தேன். என்னைத் தவிர, வேறு யாருமற்றுக் கிடந்த பூங்காவை ஒவ்வொரு மனிதராக வந்து நிரப்பிக்கொண்டிருந்தார்கள். சூரியன் முழுமையாக தனது இமைகளைத் திறந்து பார்த்துக்கொண்டிருந்தான். மொட்டுகள் மலர துடித்துக்கொண்டிருந்தன. மூடியிருந்த பூக்கள் விரியத் தொடங்கியிருந்தன. பனித்துளிகள் காய்ந்துகொண்டிருந்தன. லேசான காற்று என் காதில் சில்லென்று வீசிவிட்டுப் போனது. செம்பருத்தி செடி என் தோளில் உரசிக்கொண்டிருந்தது. என் கை கடிகார முள் ‘டிக் டிக்’ என்று எழுப்பும் ஓசை நேரம் கடந்துகொண்டிருப்பதை அறிவித்தது.
செல் எடுத்து உனக்கு தொடர்புகொண்டேன். ஸ்விட்ச் ஆஃப். பதட்டமில்லாமல் உன் வீட்டுக்கு டையல் செய்தேன். நீண்ட ஒலிக்குப் பிறகு மணி அடிக்கும் ஓசை ஓய்ந்தது. எரிச்சலோடு பூங்காவை சுற்றிக்கொண்டிருந்தேன்.
‘‘மணி என்ன சார்’’ எங்கிருந்தோ ஒரு குரல் காதை அறைந்தது.
திரும்பிப் பார்த்தேன். ஒரு வயோதிக மனிதர் வாக்கிங் ஸ்டிக் பிடித்து நின்றுகொண்டிருந்தார்.
‘‘ஜஸ்ட் எய்ட் ஓ க்ளாக்’’ சொல்லிவிட்டு நடக்கும்போதுதான் மூளைக்குள் உறைத்தது. ‘மாலை 5.30 மணிக்கு நீ வரச்சொல்லியிருந்தது...’
மனதிற்குள்ளேயே சிரித்துக்கொண்டு பூங்காவைவிட்டு நகர்ந்தேன்.
மாலை 5.30 மணி.
அப்போதுதான் அலுவலகத்திலிருந்து வெளியே வந்து ஒரு தம் பற்ற வைத்து, தலையை வருடிக்கொண்டே சீரியஸாக ஏதோ யோசித்துக்கொண்டிருந்தேன்.
‘‘என்ன சார் அஞ்சரை மணி ஆயிடுச்சு கிளம்பலையா’’ என்று மறுபடியும் ஒரு குரல் எங்கிருந்தோ காற்றில் பறந்து வந்து காதில் ஊடுருவியது.
இப்போது மூளை அலறியது... ‘ஈவினிங் ஃபைவ் தர்டி... ஃபைவ் தர்டி... ஃபைவ் தர்டி’ என்று டவாலி கோர்ட்டில் கூப்பிடுவது போல் ஓர் அலறல்.
சற்றைக்கெல்லாம் என் பைக் உறுமியது. அடுத்த பத்து நிமிடத்தில் பார்க் வாசலில் வண்டியை பார்க் செய்தேன்.
உள்ளே நுழைந்ததும் உன்னுடைய வாசனை மூக்கை துளைத்து மனசை பிசைந்தது. என்னைப் பார்த்ததும் சிணுங்கினாய்.
‘‘ஏண்டா இவ்ளோ லேட்... நான் அஞ்சு மணிலேருந்து வெயிட் பண்றேன் தெரியுமா...’’ சொல்லிவிட்டு கோபமாகப் பார்த்தாய்.
நான் சிரித்துக்கொண்டே சொன்னேன்... ‘‘நான் காலம்பறயே உனக்காக இங்கே வந்துட்டேன். அது உனக்குத் தெரியுமா...’’
‘‘என்ன உளர்றே...’’
‘‘ஆமாம்’’ என்று நடந்ததையெல்லாம் சொன்னேன். நீ என் மடியில் குலுங்கிக் குலுங்கி சிரித்தாய்... நானும் சிரித்தேன்.
‘‘அசடு வழியுது தொடச்சிக்கோ...’’ என்றாய்.
வெட்கமாகப் போய்விட்டது எனக்கு.
‘‘வெட்கப்பட்டதெல்லாம் போதும்... போதும்...’’ என்று போதும் போதும் என்கிறவரை முத்தமிட்டாய்...
‘‘இப்படி
ஆயுள் முழுவதும்
உன் முத்தம்
எனக்குக் கிடைக்கும் என்றால்
நான் தினம் தினம்
மறக்கிறேன் என்னை’’ என்று கவிதை சொன்னேன்.
என்னை கட்டி அணைத்துக்கொண்டாய்.
‘‘இராத்திரி ரெண்டு மணி ஆகுது எங்க போறீங்க இந்நேரத்துல’’ ஒரு குரல் என் காதை வந்து உரசியது. நினைவு திரும்பினால் போலீஸ் இன்ஸ்பெக்டர்.
‘‘இல்லே சார் தூக்கம் வரலே அதான் ஒரு வாக் போலாம்னு...’’ வார்த்தைகளை மென்று விழுங்கினேன்.
வழக்கம் போல் போலீஸின் துருவல் நடந்தது.
‘‘எங்க ஒர்க் பண்றே... ஐ.டீ. காட்டு...’’ என்றதும், பர்ஸை எடுத்து நீட்டினேன்.
பார்த்துவிட்டு, ‘‘இந்த ஃபோட்டோல இருக்கிறது யாரு’’ என்று மறுபடியும் ஒரு கேள்வி. பழையபடி என் மறதி.
‘‘ஓ ஸாரி ஸார். ஷீ ஈஸ் மை கேர்ள் ஃபிரண்ட். திஸ் ஈஸ் மை ஐ.டீ.கார்ட்’’ என்று ஐ.டீ.யை நீட்டினேன்.
அதைப் பார்த்துவிட்டு, ‘‘அந்த சுரேஷ் நீங்கதானா... சுதா எல்லாம் சொல்லியிருக்கா... நேத்து நடந்ததைக்கூட வீட்ல வந்து சொன்னா... எல்லாரும் விழுந்து விழுந்து சிரிச்சோம்... சரி அது போகட்டும். ஐ ஹேம் ராகவன். சுதா ஈஸ் மை டாட்டர். சீக்கிரம் வந்து உங்க பேரண்ட்ஸை வீட்லே பேசச் சொல்லுங்க... கல்யாணம் முடிச்சா இந்த ஞாபக மறதியெல்லாம் இருக்காது... இப்போ போய் தூங்குங்க. மணி ரெண்டரை ஆகுது. நாளைக்கு ஆஃபீஸ் போக வேணாமா..?’’
‘‘ஆமா அங்கிள் போகணும். என் பேரன்ட்ஸோட சீக்கிரம் உங்களை சந்திக்கிறேன்... பை...’’ வீடு வந்து சேர்ந்து கட்டிலில் விழுந்தேன். படுத்ததே தெரியவில்லை. தூங்கிவிட்டேன்.
காலை எழுந்ததும் பல்கூட துலக்கவில்லை. உனக்கு மெயில் அனுப்பிக்கொண்டு இருக்கிறேன்... நிறைய விஷயங்கள் உன்னிடம் பேசவேண்டி இருக்கிறது. மாலை 5.30 மணிக்கு பார்க்கில் சந்திக்கலாம். மறக்காமல் நான் வந்துவிடுகிறேன். நீயும் வந்துவிடு.
ஆயிரம் முத்தங்களுடன்
சுரேஷ்
send
sending.....

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு