18 February 2010

வாரிகொடுத்த வள்ளல்!

Posted by Gunalan Lavanyan 11:09 PM, under | No comments

டி.கே.எஸ்.சகோதரர்களின் நாடகக் கம்பெனியில் சேர்ந்தபோது அந்த இளைஞனுக்கு பதினாறு வயது. அப்போது, அவனுக்கு சங்கீதத்தில் ஞானம் அதிகம். நாடகப் பாடல்களைப் பாடும்போது தாளம் தப்பாமல் பாடுவது, கடினமான வரிகளையும் பிழையில்லாமல் பாடுவதெல்லாம் அவனுக்கு ‘வாய் வந்த கலை’. மிருதங்கம், தபேலா போன்ற வாத்தியங்களை அலட்டிக்கொள்ளாமல் வாசிப்பது ‘கை வந்த கலை’.

டி.கே.எஸ். நாடகக் குழு காரைக்குடியில் நாடகங்களை நடத்திவந்த சமயத்தில், குழுவிலிருந்த பிரதான நடிகரான எம்.ஆர்.சாமிநாதன் ஒருநாள் காணாமல் போய்விட்டார். அப்போது நடந்துவந்த ‘மனோகரா’ என்ற நாடகத்தின் பிரதான பாத்திரமான வசந்தன் வேடத்தில் அதுவரை சாமிநாதன்தான் நடித்து வந்தார். திடீரென்று அவர் காணாமல்போகவே என்ன செய்வதென்று தெரியாமல் டி.கே.சங்கரன் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். அருகில் இருந்த டி.கே.சண்முகம், “சாமிநாதனுக்கு பதிலாக வசந்தன் வேடத்தில் நடிக்க நம்மிடம் ஒரு இளைஞன் இருக்கிறான். அதனால் நீங்கள் கவலைகொள்ளத் தேவையில்லை” என்று சொல்ல சங்கரன் ஆறுதல் அடைந்தார்.

அதுவரை சிறிய வேடங்களிலேயே நடித்து வந்த அந்த இளைஞனுக்கு பிரதான நகைச்சுவை வேடத்தில் தான் நடிக்கப் போவதை நினைத்து அளவற்ற மகிழ்ச்சி. ஆனால், அதை வெளிக்காட்டிக்கொள்ள வில்லை. அதற்குப் பதிலாக தன் திறமையைக் காட்டினான். அதனால், இனி வசந்தன் வேடத்தில் அந்த இளைஞனையே நடிக்கவைப்பது என்று டி.கே.எஸ்.குழுவினர் முடிவு செய்தனர்.

அந்த இளைஞன்தான், பிற்காலத்தில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நகைச்சுவை சாம்ராஜ்யத்தை நிறுவி அதில் வெற்றிக்கொடி நாட்டிய… தமிழ்நாட்டு மக்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்த ‘கலைவாணர்’ என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணன். 1926-க்குப் பிறகு டி.கே.எஸ். நாடகக் கம்பெனி ஏற்றத்தைக் கண்டது. புராண நாடகங்களுக்குப் பதிலாக சமூக நாடகங்களை நடத்தத் தொடங்கியது. எம்.கந்தசாமி முதலியார் என்ற நாடக ஆசிரியர் வந்து சேர்ந்ததுதான் இந்த மாற்றத்துக்குக் காரணம். அப்படி ‘மேனகா’ என்ற புரட்சிகரமான நாடகத்தை கம்பெனி நடத்தியது. அதில் சாமா அய்யர் வேடத்தில் நடித்து கிருஷ்ணன் தூள் பரத்தினார். மக்களின் வரவேற்பு அதிகமானது. கிருஷ்ணனின் புகழ் பரவத் தொடங்கியது.

இந்தச் சமயத்தில் டி.கே.எஸ். கம்பெனியிலிருந்து கிருஷ்ணன் விலக நேர, செய்தி அறிந்ததும் ‘கோல்டன் கம்பெனி’யார் கிருஷ்ணனை தன் கம்பெனிக்கு அழைத்துக் கொண்டனர். ஒருமுறை ஆலப்புழையில் கோல்டன் கம்பெனி முகாமிட்டு இருந்தது. அப்போது, ‘சம்பூர்ண ராமாயணம்’ என்ற நாடகம் நடந்து வந்தது. அதில் என்.எஸ்.கிருஷ்ணனும் என்.எஸ்.நாராயண பிள்ளையும் நகைச்சுவை வேடத்தில் நடித்து வந்தனர்.

ஒருநாள் நாடகத்தில் சூர்ப்பனகை பங்கத்துக்குப் பிறகு கர-தூஷண வதம் செய்கிற காட்சி. கரனாக வேடம் போட்டிருந்த நாராயணப் பிள்ளை ‘வதம்’ செய்யப்படுவதற்கு முன் வேடிக்கையான வசனங்களைப் பேசி மக்களின் ஆரவாரத்தை தூண்டுவது வழக்கம். அன்று அப்படி நாராயணப் பிள்ளை வசனம் பேசத் தொடங்கினார்…
“ஏ! தங்காய்… சூர்ப்பனங்காய்!” என்று காயில் முடிகிற வசனங்களாகப் பேசி கரவொலி பெற்றார். அவருக்குப் பிறகு தூஷணன் வேடம். தூஷணனாக கலைவாணர் வந்தார். நாராயணப் பிள்ளையைவிட அதிகமாக மக்களின் கைத்தட்டலைப் பெறுவது என முடிவு செய்து, பேசத் தொடங்கினார்…
“நீலமேக சியாமள ரூபா! அணா! பைசா!” என்று பேசினார். கலைவாணர் இப்படிப் பேசியதும் மக்கள் வெகுவாக ஆரவாரம் செய்தனர். நாராயணனுக்கு வந்ததைவிட கைத்தட்டல்கள் அதிகம் கிடைத்தது. இப்படித் தொடங்கியதுதான் கலைவாணரின் நகைச்சுவை சாம்ராஜ்யம்.

நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. கிருஷ்ணன், ‘சதிலீலாவதி’ என்ற படத்தில் நடிக்கத் தொடங்கினார். இந்தப் படம் ஜெமினி பிக்சர்ஸ் கம்பெனியால் தயாரிக்கப்பட்டது. எஸ்.எஸ்.வாசன்தான் கிருஷ்ணனுக்கு திரைப்படத்தில் முதல் வாய்ப்பு வழங்கினார். ஆனால், டி.கே.எஸ். குழுவால் நாடகமாக நடிக்கப்பட்ட ‘மேனகா’ என்ற கதை படமாக எடுக்கப்பட்டபோது அதில் கிருஷ்ணன் நடித்தார். எதிர்பாராதவிதமாக இந்தப் படம் முதலில் வெளியாகிவிட்டது. ஆகவே, மக்களுக்கு கிருஷ்ணன் திரையில் அறிமுகமான முதல் படம் ‘மேனகா’.

ஒருபடத்தில் நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடியும் வரை அதைப் பற்றியே யோசிப்பது, தனக்கு வழங்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை மேலும் எவ்வாறு மெருகூட்டுவது என்று சிந்தித்துக்கொண்டு இருப்பது என்று வழக்கமாகக் கொண்டிருந்தார் கலைவாணர். அப்படி ஒருநாள் மாடர்ன் தியேட்டர்ஸின் ‘மாணிக்கவாசகர்’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது படத்தின் இயக்குநர் டி.ஆர்.சுந்தரம் தன்னுடைய வாய்ஜாலத்தை கிருஷ்ணன் காதுபடவே காட்டியிருக்கிறார். ஆனால், சுந்தரம் அமைத்திருந்த காட்சியமைப்பில் கிருஷ்ணனுக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை. எனவே, “காட்சியை மாற்றியமைக்க வேண்டும். அதை என்னுடைய பொறுப்பில் விட்டுவிடுங்கள். காட்சி எடுத்து முடித்தபிறகு எப்படி வந்திருக்கிறது என்று பாருங்கள். அப்போது உங்களுக்கு அந்தக் காட்சியில் திருப்தி இல்லையென்றால் அதை வெட்டி எறிந்துவிடுங்கள். அதற்கான செலவை நான் தந்துவிடுகிறேன்” என்று யாரும் நேருக்கு நேர் நின்று பேசத் தயங்கும் டி.ஆர்.சுந்தரத்தைப் பார்த்து கிருஷ்ணன் உரத்துச் சொல்லிவிட்டார். இதைக் கேட்ட படப்பிடிப்புக் குழுவினர் மத்தியில் ஒரே ஆச்சர்யம், அதிர்ச்சி. ஆனால், சுந்தரம் எதுவும் சொல்லவில்லை. கிருஷ்ணனின் நிபந்தனைக்கு தலை அசைத்துவிட்டார். படப்பிடிப்பு தொடங்கியது. கிருஷ்ணனும் மதுரமும் இணைந்து நடித்த அந்தக் காட்சி எடுத்தாகிவிட்டது. காட்சியைத் திரையிட்டு பார்த்தபோது சுந்தரத்துக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அப்படியே கலைவாணரை ஆரத்தழுவிக் கொண்டார். அதன்பிறகு கலைவாணர் மதுரம் நடிக்கும் மாடர்ன் தியேட்டர்ஸின் எந்தப் படமானாலும் படப்பிடிப்பு தளத்தில் டைரக்டர் நுழைவதே இல்லை.

அதேபோல, படப்பிடிப்புக்கு போகும்போது நேரம் தவறாமல் குறித்த நேரத்துக்கு சில மணி முன்பே போய்விடுவதை கிருஷ்ணன் கடைப்பிடித்து வந்தார்.

ஜெமினி பிக்சர்ஸ் ‘மங்கம்மா சபதம்’ படத்தை எடுத்து வந்த சமயம். கலைவாணரும் அவரது குழுவினரும் நிர்ணயிக்கப்பட்டிருந்த படப்பிடிப்பு நேரமான காலை 7 மணிக்கு முன்பே வந்துவிட்டனர். ஆனால், குழு நடிகர்களில் ஒருவரான ‘புளிமூட்டை’ ராமசாமி மட்டும் 6.45 ஆகியும் வரவில்லை. விஷயத்தை கேள்விப்பட்ட ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன், “இன்னும், அந்த நடிகர் ஏன் வரவில்லை?” என்று கேட்டுக்கொண்டே கைக் கடிகாரத்தைப் பார்த்தபடி தமது அறைக்கு வெளியே இருந்த தாழ்வாரத்தில் நடந்து கொண்டிருந்தார். புளிமூட்டை வந்து சேராததைப் பற்றி வாசன் விசாரித்த செய்தி கலைவாணருக்கு எட்டியது. மேக்கப் அறையிலிருந்து அப்படியே வெளியே வந்தவர், வாசன் நடைபோட்டுக் கொண்டிருந்த தாழ்வாரத்தை நோக்கி மெல்ல கணைத்துக்கொண்டே வந்தார். வாசன் அவரை நிமிர்ந்து பார்த்தார், கலைவாணர் “வணக்கம்” என்று கைகுவித்துச் சொன்னார். “புளிமூட்டை ராமசாமி இன்னும் வரவில்லை என்று தாங்கள் கவலைப்பட்டதாகக் கேள்விப்பட்டேன், அவன் எப்படியும் 7 மணிக்குள் வந்துவிடுவான். எங்கள் குழுவில் நேரம் தவறாமல் படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டும் என்பதைக் கடைப்பிடித்து வருகிறோம். நீங்கள் கவலைப்பட வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது மணி 6.59. அதேநேரத்தில், புளிமூட்டை வேர்க்க விறுவிறுக்க அவர்கள் முன் வந்து நின்றார். வாசன் முகம் மலர்ந்தது. கலைவாணரின் பேரில் அவர் கொண்டிருந்த மதிப்பு உயர்ந்தது.

புளிமூட்டை ராமசாமிக்கு ‘புளிமூட்டை’ என்று பட்டப்பெயர் வந்ததும் கலைவாணரின் திருவாயால்தான். கலைவாணர் தனது ‘அசோகா ஃபிலிம்ஸ்’ தயாரித்த ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ (எம்.ஜி.ஆர். நடித்த படம் அல்ல) என்ற படத்தில் ராமசாமிக்கு ஒரு திருடன் வேடம். படப்பிடிப்பின்போது ராமசாமி மேக்-அப்போடு நடித்துக்கொண்டிருந்தார். கதையின்படி கள்வர் கூட்டத்தில் சிக்கிய கலைவாணர், ராமசாமியைத் தேடினார். அவரைக் காணவில்லை. உடனே அருகில் இருந்தவரிடம் “எங்கே அந்தப் புளிமூட்டை” என்று வேடிக்கையாகக் கேட்டார். அன்று முதல் ராமசாமியின் பெயருக்கு முன்னால் புளிமூட்டை சேர்ந்துகொண்டது. இதேபோல் ‘யதார்த்தம்’ பொன்னுசாமி பிள்ளைக்கும் ‘யதார்த்தம்’ என்ற பட்டப்பெயர் மற்றொரு படப்பிடிப்பில் கலைவாணரால் வழங்கப்பட்டதுதான்.

மாம்பலம் வெங்கட்டராம ஐயர் தெருவிலிருந்த கலைவாணரின் இல்லம் எப்போதும் கலகலப்போடு இருக்கும். தன்னுடைய வீட்டில் ஏதாவது நிகழ்ச்சிக்கு ஒத்திகை நடத்த ஏற்பாடு செய்திருந்தால் முதலில் கலைவாணர் மாடியிலிருந்து இறங்கி வருவார். நிகழ்ச்சி நடக்க இருக்கும் இடத்தை ஒருமுறை உற்றுப் பார்ப்பார். “ஏம்ப்பா! ஜமக்காளத்தை இன்னும் விரிக்கவில்லையா…” என்று கேட்டுக்கொண்டே தாமே ஜமக்காளத்தை எடுத்து விரித்துவிடுவார். தாம் ஒரு பெரிய திரைப்படக் கம்பெனி நடத்தி வந்த போதிலும் தம்மை யாரும் ‘முதலாளி’ என்று கூப்பிடுவதை அனுமதிக்கமாட்டார். எல்லாருக்கும் அவர் ‘அண்ணன்’தான். அவரது கம்பெனியில் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்த பையன் அவரை அப்படி ‘முதலாளி’ என்று அழைத்துவிட்டான். உடனே அவர், “ஏண்டா தம்பி, இப்படியெல்லாம் என்னை உயர்த்தித் திட்டுறே? சும்மா ‘அண்ணே’ன்னு கூப்பிடு போதும்” என்றார். அப்படித் தொழிலாளர் மத்தியிலும் அவர் ஏற்றத்தாழ்வை பார்த்ததில்லை.

தான் ஒரு பெரும் நடிகன் என்ற கர்வம் அவருக்கு எப்போதும் இருந்தது இல்லை. தன்னைவிட புகழில் குறைந்த நடிகர்களாக இருந்தவர்களிடத்திலும் அவர் ஏற்றத் தாழ்வின்றி பழகுவார். ஒருநாள் திடீரென்று ஃபிரெண்ட் ராமசாமியின் வீட்டுக்கு என்.எஸ்.கே. சென்றார். தரையில் மலையாளப் பாயை விரித்துப் படுத்திருந்த ராமசாமிக்கு கலைவாணரைக் கண்டதும் ஒரே ஆச்சர்யம். அதோடு வணக்கத்தையும் வைத்தார்.

“எவ்வளவு தூரத்திலிருந்து வரேன் தெரியுமா உனக்கு?” என்று கேட்டுக்கொண்டே கிருஷ்ணன் கட்டிலில் அமர்ந்தார். “அண்ணே டீ சாப்பிடுங்கள்” என்று ராமசாமி பணிவாக உபசரித்தார். “நான் டீயை சாப்பிடுவதில்லை. குடிப்பதுதான் வழக்கம்” என்று தனது பாணியிலேயே சொன்னார். தொடர்ந்து, “டேய் ராமசாமி இப்போதான் நீ நடித்த ‘மனம்போல் மாங்கல்யம்’ படம் பார்த்தேன். மிக நன்றாக வந்திருக்கிறது. நீயும் நன்றாக நடித்திருக்கிறாய். நீ முன்னுக்கு வருவாய். இதைச் சொல்லிவிட்டுப் போகத்தான் வந்தேன்” என்றார். இதைக் கேட்ட ராமசாமிக்கு அளவுகடந்த மகிழ்ச்சி.

கலைவாணர் தாம் வாழ்ந்த காலத்தில் அரசியல் சார்பற்றவராக திகழ்ந்தார். தி.மு.க-வுக்கு எதிராகப் பிரசாரம் செய்யும் ப.ஜீவானந்தத்தோடும் பழகுவார். தி.மு.க. தலைவரான அண்ணாவோடும் பழகுவார். ஜீவா மீது எவ்வளவு பற்று கொண்டிருந்தாரோ அதேபோல அறிஞர் அண்ணா மீதும் அளவில்லா அன்பு கொண்டிருந்தார்.

1957-ம் ஆண்டு தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. காஞ்சிபுரம் தொகுதியில் அண்ணா போட்டியிட்டார். அவருக்கு எதிராக காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் சீனிவாசன் நிறுத்தப்பட்டிருந்தார். கலைவாணர் அண்ணாவுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டார். காங்கிரஸ் வேட்பாளர் மருத்துவத் துறையில் கைராசிக்காரர். மிகவும் புகழ் பெற்றவர். எனவே, என்.எஸ்.கே. பிரசாரத்தை இப்படித் தொடங்கினார்… “இந்தக் கைராசிக்காரருக்கு உங்க வாக்குகளை அளித்து சட்டசபைக்கு அனுப்பிவச்சுட்டா, உங்க குழந்தை குட்டிகளுக்கு ஒடம்புக்கு ஏதாவது வந்துட்டா என்ன செய்வீங்க? நல்லா யோசிச்சு உங்க ஓட்டை யாருக்குப் போடணுமோ அவங்களுக்குப் போடுங்க!” என்று மக்களை சிரிக்க வைத்தார். அண்ணாவை ஜெயிக்க வைத்தார்.

கலைவாணர் தன் வாழ்வின் இறுதி நாள் வரை தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ளவில்லை. இருப்பதை எல்லாம் ஏழை எளியவர்களுக்கு இரண்டு கைகளாலும் வாரி வழங்கினார். வீட்டு வாசலில் ‘அண்ணே’ என்று குரல் கேட்டால் அதற்குப் பதில் குரல் ‘அன்புக்குரலாக’ ஒலிக்கும், இல்லை என்று வந்தவர்களுக்கு இல்லை என்று அனுப்பியது கலைவாணர் சரித்திரத்தில் இல்லை.

அப்படிப்பட்ட கலைஞன் துரதிர்ஷ்டவசமாக சிறை செல்ல நேரிட்டது. ‘இந்து நேசன்’ பத்திரிகை ஆசிரியர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 1944-ம் ஆண்டு கலைவாணர் கைதானார். அவரோடு அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரும் கைதானார். ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, பிரிவு கவுன்சில் அப்பீலுக்குப் பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து 1946 ஏப்ரல் 25-ம் தேதி கலைவாணரும் பாகவதரும் விடுதலை செய்யப்பட்டனர்.

சிறையிலிருந்து விடுதலையானபிறகு ஓய்வின்றி படங்களில் நடிக்கத் தொடங்கினார். பழைய உற்சாகத்தோடு நடித்தார். ஓய்வின்றி உழைத்தவரை பலர் ஓய்வெடுக்க வேண்டினர். சிலர் வற்புறுத்தி குற்றாலத்துக்கு அழைத்துச் சென்று அவரை ஓய்வெடுக்க வைத்தனர். குற்றாலத்தில் கலைவாணர் வயிற்றில் வீக்கம் ஏற்பட்டது. அப்போதும் உற்சாகத்தோடு வீங்கியிருந்த வயிற்றைப் பார்த்து நகைச்சுவை செய்தார். பிறகு சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துக்கொண்டார். தமிழ்நாட்டின் பெருந்தலைவர்களும் திரைப்படத்துறையின் பெரும் நடிகர்களும் அவரை வந்து பார்த்தனர். வந்தவர்களிடமெல்லாம் சிரித்துப் பேசினார். “உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றவர்களிடமெல்லாம் “அவ்வளவு சீக்கிரம் எமன் என்னைக் கொண்டுபோய்விட மாட்டான். நான் இன்னும் கலை உலகுக்குத் தொண்டு செய்ய வேண்டியிருக்கு” என்று சொன்னார்.

கலைவாணர் மருத்துவமனையில் இருந்தபோது ஒரு தனி ஆள் நியமித்து, தனக்கு வந்து குவிந்த பழங்களை சாறு பிழிந்து மருத்துவமனையில் இருந்த எல்லா நோயாளிகளுக்கும் கொடுக்கச் செய்தாராம்.

திடீரென்று ஒருநாள் அந்தச் செய்தி தமிழகம் முழுவதும் காட்டுத் தீயாகப் பரவியது. கோவை, சேலம் உள்ளிட்ட படப்பிடிப்புத் தளங்களில் உடனடியாக படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. சென்னையில் உள்ள ஸ்டூடியோக்களிலும் படப்பிடிப்புத் தளங்களிலும் படப்பிடிப்பு ரத்து. செய்தியைக் கேட்டதும் சினிமா கலைஞர்களும் தமிழ்த் திரைப்பட ரசிகர்களும் அந்தத் துயரத்தைக் காண சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு விஜயம் செய்யத் தொடங்கிவிட்டனர். நல்லவேளை, அவர்கள் எதிர்பார்த்து வந்த துயரம் அங்கு நடந்திருக்கவில்லை. இறந்துவிட்டதாகச் சொல்லப்பட்ட கலைவாணர் படுக்கையில் உட்கார்ந்து கொட்டக் கொட்ட விழித்தபடி குறையாத சிரிப்போடு வெற்றிலை போட்டுக்கொண்டிருந்தார். ஆனால், வந்தவர்கள் எதற்கு வந்தார்களோ அந்த வேலையை செய்யத் தொடங்கிவிட்டனர். கலைவாணரைப் பார்த்து விம்மத் தொடங்கிவிட்டனர். பிறகுதான் கலைவாணருக்கு காரணம் புரிந்தது. யாரோ புரளி செய்திருக்கிறார்கள் என்று!

எதிர்பார்த்து வந்தவர்களை இல்லை என்று அனுப்பியதில் மனம் உடைந்தாரோ என்னவோ, அவர்களை ஏமாற்றக்கூடாது என்றுகூட நினைத்து இருக்கலாம். 1957-ம் ஆண்டு ஆகஸ்ட் 30-ம் நாள் தமிழகம் நினைத்து முன்பு ஏமாந்த அந்தத் துயரம் நடந்தேவிட்டது. ஒரு சகாப்தம் முடிந்தேவிட்டது.

பயோ-டேட்டா…

பெயர்: என்.எஸ்.கிருஷ்ணன்
காலம்: 29.11.1908 – 29.08.1957
பிறந்த ஊர்: ஒழுகினசேரி – கன்னியாகுமரி மாவட்டம்
பெற்றோர்: சுடலையாண்டி பிள்ளை – இசக்கியம்மாள்
உடன் பிறந்தோர்: 6 சகோதரிகள் (வீட்டில் இவர் மூன்றாவது பிள்ளை)
மனைவிகள்: நாகம்மை (முதல் மனைவி)
                        டி.ஏ.மதுரம் (இரண்டாவது மனைவி)
                        வேம்பு (மூன்றாவது மனைவி, மதுரத்தின் தங்கை)
குழந்தைகள்: 8 பேர்
படிப்பு: 4-ம் வகுப்பு
தொழில்: நடிப்பு, இயக்கம், தயாரிப்பு (நாடகம் மற்றும் சினிமா)
சொந்த நிறுவனங்கள்: என்.எஸ்.கே. நாடகக் குழு மற்றும் அசோகா ஃபிலிம்ஸ்.
சந்தோஷம்: உதவி கேட்டு வந்தவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் உதவி செய்வது.
வருத்தம்: தன் இறுதி நாட்களில், பண வசதி, உடல் நலம் இல்லாமல் இருந்தபோது உதவி கேட்டு வந்தவர்களுக்கு உதவி செய்ய முடியாமல் போனது.
அரசியல்: மக்களுக்கு நல்லது செய்கிற கட்சிகளை ஆதரிக்கும் அளவுக்கு மட்டுமே அரசியலில் ஈடுபாடு.
அரசியல் நண்பர்கள்: பேரறிஞர் அண்ணா (தி.மு.க.)
                                    பா. ஜீவானந்தம் (இ.கம்யூ)
இயக்கிய படங்கள்: மங்களம் (1951), பீலி கூத்ரு (1951), பணம் (1952)
நடித்துப் புகழ்பெற்ற நாடகம்: மேனகா
புகழ்பெற்ற வில்லுப்பாட்டு கதை: கிந்தனார்.

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு