24 March 2011

ஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்பிய இந்தியா!

Posted by Gunalan Lavanyan 11:01 PM, under | 2 comments


வியாழன் அன்று நடந்த உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியை போட்டியிலிருந்தே இந்தியா வீட்டுக்கு அனுப்பியி ருக்கிறது.



கடந்த மூன்று உலகக் கோப்பைப் போட்டிகளில் அசைக்கமுடியாத அணியாக இருந்துவந்த ஆஸ்திரேலியா பல முன்னணி வீரர்களின் ஓய்வுக்குப் பிறகு காணப்பட்டது. அது இந்த 2011 உலகக் கோப்பையிலும் பிரதிபலித்தது.

தோனி தலைமையிலான இந்திய அணி மொஹாலியில் நடந்த காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் மோதி வெற்றி பெற்றதன் மூலம் உலகக் கோப்பை போட்டியிலிருந்தே ஆஸ்திரேலியாவை வெளியேற்றியிருக்கிறது. இந்த வெற்றி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு அரையிறுதிப் போட்டிக்குள் நுழையாமல், ஆஸ்திரேலியா வெளியேறியது இதுவே முதல் முறை.

இந்தப் போட்டியில் யுவராஜ் சிங் 57 ரன்னும், டெண்டுல்கர் 53 ரன்னும், கம்பீர் 50 ரன்னும், ரெய்னா 34 ரன்னும் எடுத்து அணியின் வெற்றிக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.

அதேபோல இந்தப் போட்டியில் ஜாக்கிர் கான், அஸ்வின், யுவராஜ் மூவரும் தலா 2 விக்கெட் கைப்பற்றி ஆஸ்திரேலியாவின் ரன் அதிகரிப்பை கட்டுப்படுத்தினர்.

போட்டியின் ஒருகட்டத்தில் தோனி பெவிலியன் திரும்பிய பிறகு இந்தியா வெற்றிபெறுமா என்ற சந்தேகம் எழுந்தது. அப்போது யுவாராஜுடன் ஜோடி சேர்ந்த ரெய்னா பிரட்லீயின் பந்துகளை பவுண்ட்ரிக்கு விரட்டியடித்தார். ஒருகட்டத்தில் யுவராஜ் பவுண்ட்ரிக்கு பந்தை விரட்டியபோது, ஃபீல்டிங்கில் இருந்த பிரட்லீ பந்தை தடுக்க முயன்றபோது வேகமாக வந்த பந்து, லீயின் புருவத்தை பதம் பார்த்துவிட்டது.

இதனால், பிரட்லீயின் புருவத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. பின்னர், முதல் உதவி செய்துகொண்டு ஆக்ரோஷமாக வந்து பந்து வீசிய பிரட்லீயின் பந்தை ரெய்னா விளாசித் தள்ளினார். இதனால் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி அரையிறுப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்தியா பாகிஸ்தானை எதிர்கொள்ள இருக்கும் அரையிறுதிப் போட்டி ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

2 comments:

அடுத்து வருவதுதான் இருதிப் போட்டி.... பார்ப்போம்.. இந்தியாவா? பாகிஸ்தானா?

Post a Comment