05 March 2011

திமுக - காங்கிரஸ் பிளவு ஏன்? - வேகமான அலசல்

Posted by Show Now 10:52 PM, under | 2 comments


ஸ்பெக்ட்ரம் முறைகேடு அம்பலமானதில் இருந்தே திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே சரியான உறவு இல்லாமல்தான் இருந்தது. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கார்த்திக் சிதம்பரம், யுவராஜா என்று ஆளுக்கு ஒரு மூளையில் நின்று திமுகவை டேமேஜ் செய்துகொண்டு இருந்தார்கள். இந்த விவகாரம் ஏற்கெனவே திமுக புள்ளிகள் மத்தியில் பெரும் புகைச்சலை ஏற்படுத்தி இருந்தது. அதுவும் இல்லாமல் ராகுல் காந்தி தமிழகம் வரும்போதெல்லாம் கருணாநிதியை சந்திக்காமலே டெல்லி திரும்பியதும் திமுக.வினரிடம் புகைச்சலை ஏற்படுத்தி வந்தது.

ராகுல் ஒன்றும் குழந்தை இல்லையே! காங்கிரஸின் பொதுச் செயலாளர். இளைஞர் காங்கிரஸை பலப்படுத்திவரும் தலைவர். எதிர்கால காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர். அதற்கும் மேலாக நேர்மையான அரசியலை விரும்பும் இளைஞர் என்று எதிர்கட்சியினராலேயே பாராட்டப்படும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழும் ஒரு தலைவர்கள், கருணாநிதியை சந்திக்காமல் போவது ஒவ்வொரு முறையும் எதிர்பாராமலா நடந்திருக்கும். எல்லாமே திட்டமிட்ட காய் நகர்த்தல்கள்தான்.40 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்காமலே இருப்பது காங்கிரஸ் வளர்ச்சிக்கு சரியான அறிகுறி இல்லை என்பது ராகுலின் அபிப்ராயம். அதன் பின்னணியில்தான் யுவராஜா, ஈ.வி.கே.எஸ். கார்த்திக் போன்ற தலைவர்கள் செயல்பட்டார்கள்.

ஒருபக்கம் ப.சிதம்பரம், தங்கபாலு, வாசன் என்று உறவாடிக்கொண்டே மறுபக்கம் எதிர்ப்பலைகளை ஒரு கோஷ்டி உருவாக்கிக் கொண்டு இருந்தது. இவை அனைத்தும் திட்டமிட்டே நடத்தப்பட்ட நாடகங்கள் என்பது இப்போதாவது தி.மு.க.வுக்கு விளங்கியிருக்குமா என்று தெரியவில்லை? இந்த நாடக அரங்கேற்றங்கள் எல்லாம் சோனியாவின் அனுமதியில்லாமலா நடந்தேறியிருக்கும்? எல்லாமே ஸ்பெக்ட்ரமால் வந்த வினைதான் என்று பத்திரிகை வட்டாரங்களில் கசப்பு வார்த்தைகள் உதிர்க்கிறார்கள்.

அரசியல் சாணக்கியர் கருணாநிதி எப்படி இந்தத் தேர்தலில் கோட்டை விட்டார்..? இல்லை, காங்கிரஸ் இல்லாமல் நின்றுதான் பார்ப்போமே என்ற மன தைரியமா? இல்லை துணை முதல்வர் பதவி பறிபோய்விடுமோ என்ற கவலையா? அல்லது ஸ்டாலின் முதல்வராவதற்கு தடைகள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சமா? எல்லாம் கேள்விகளாகவே இருக்கின்றன.


காங்கிரஸும் வேறு ஏதோ சூசகமான திட்டத்தோடுதான் இப்படி பிடிகொடுக்காமல் திமுகவிடம் நடந்துகொண்டதோ என்ற சந்தேகத்தைக் கிளப்புகிறார்கள் பலர்... அது என்ன திட்டமாக இருக்கும்? அரசியல் தெரிந்த சில விவரப் புள்ளிகள் கூறுவது இதுதான்:

அதிமுகவுடன் கூட்டணி அமைக்கும் ஒரு முன்முயற்சியில்தான் திமுகவுடனான இடஒதுக்கீட்டுப் பேச்சுவார்த்தையில் அப்படி பிடிகொடுக்காமல் நடந்துகொண்டது. அதுவும் இல்லாமல், அடிக்கடி பொதுக்கூட்ட மேடைகளில் அதிமுக தலைவி ஜெயலலிதாவேறு காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தார். அதேநேரத்தில் ஸ்பெக்ட்ரம், இலங்கைப் பிரச்னைகள் வேறு விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றன. விலைவாசி ஏற்றம், பெட்டோல் விலை உயர்வு போன்ற அடிப்படை பிரச்னைகள் வேறு தலைவிரித்து ஆடுகின்றன. இவை எல்லாப் பிரச்னைகளுக்கும் தானும் ஒரு காரணம் என்பது காங்கிரஸுக்குத் தெரியும். அதனால், மக்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்திருப்பதும் அந்தக் கட்சிக்கு தெரியும். ஆனால், திமுகவோடு சேர்ந்து போட்டியிட்டால் ஒரு இடம் கூட கிடைக்காமல், தமிழக அரசியல் வாழ்க்கையே சூனியமாகிவிடுமோ என்ற பயம் சில நாட்களாகவே ராகுலுக்கும் அவர் தொண்டர்களுக்கும் இருந்து வந்தது. அதனால், எப்படியாவது திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸை பிரிக்கவேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்களே பல நாட்களாக போராடி வந்தார்கள். அது இப்போது நடந்தேவிட்டது.

இன்னொன்றையும் சிலர் பேசிக்கொள்கிறார்கள்... தேமுதிகவை தனியாக அழைத்துக்கொண்டு தேர்தலை சந்திக்க காங்கிரஸ் தயாராகிக்கொண்டு இருக்கிறது என்பதுதான் அது. ஆனால், அதற்கான மேகமூட்டம் எல்லாம் கலைந்து பல மணி நேரங்கள் ஆகிவிட்டன. ஆனாலும், அரசியல் வானில் எப்போது என்ன நடக்கும் என்று யாருக்குத் தெரியும்?

- சா.இலாகுபாரதி

2 comments:

மக்களை ஏமாற்ற எப்படி எல்லாம் பாடுபடுகிறார்கள் ! கூட்டணி முறையை தடை செய்ய வேண்டும் ...................

//அதற்கும் மேலாக நேர்மையான அரசியலை விரும்பும் இளைஞர் என்று எதிர்கட்சியினராலேயே பாராட்டப்படும் நம்பிக்கை நட்சத்திரமா // ????!!!!

Swiss வங்கியில் இருக்கும் பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை மறந்து விட்டீர்களா?
1991 - 10000 கோடி in (minor) Raahul's name and guardian as sonia!!!

Post a Comment

கோப்பு

கோப்பு