காணச்சகியாத தோற்றம், கண்கள் மட்டுமின்றி கேசம், தோலின் நிறம் எல்லாமே கறுப்பு. ஜெர்மானியர்கள் வெறுப்புடன் நோக்கும் யூத இனத்தைச் சேர்ந்தவர் காரல் மார்க்ஸ். ஜென்னியோ ரைன்லாந்தின் மிகச்சிறந்த அழகி. பிரபுக்கள் வம்சத்தைச் சேர்ந்த ஜெர்மானியப் பெண்.
ஷேக்ஸ்பியரின் ரசிகரான மார்க்ஸ், உறக்கத்தில் கேட்டாலும் உரக்கச் சொல்லும் அளவுக்கு ஷேக்ஸ்பியர் கவிதைகள் மீது தீராத காதல் கொண்டவர். ஜென்னியின் தந்தை லுட்விக்கும் மார்க்ஸும் ஷேக்ஸ்பியரின் கவிதைகளை உரக்கப்பாடி வியந்து போற்றுவார்கள்.
ஜென்னியின் வீடே கவிதைகளால் நிரம்பி வழியும். தன்னையும் மீறி மார்க்ஸினுள் இருந்த கவிதாவேசம் பீறிட்டுப் பொங்கும். இதுவே ஜென்னி, மார்க்ஸின் மீது காதல் வயப்பட்டதற்கு காரணமாக அமைந்தது.
அகங்காரமற்ற அறிவும் தன்னலமற்ற தியாகமும் பெண்களை மதிக்கும் சுபாவமே மார்க்ஸிடமிருந்து ஜென்னி ரசித்த ஆணின் அழகு! மார்க்ஸோ, 'உலகின் மிகச்சிறந்த பூ ஒன்று இருக்குமானால் அதுகூட தோற்றுப்போகும் அவளிடம்' என்று ஜென்னியை ரசித்தார்.
'ஜென்னி எனும் ஓர் அசாதாரணப் பெண் என் வாழ்வில் வரவேண்டும் என்றால், நானும் எனது வாழ்க்கையும் அசாதாரணமானதாக இருக்கவேண்டும்' என்று கூறினார். இந்தக் கூற்றே மார்க்ஸ் டாக்டர் பட்டம் பெறுவதற்கு அடிகோலியது.
ஆனால், “என் மகன் உனக்கு உகந்தவன் அல்லன். நீ அவனை மறந்து விடு” என்று மார்க்ஸின் பெற்றோர் ஜென்னியிடம் கூறினர். இது ஜென்னியை மிகவும் துன்பவயப்படுத்தியது. இந்த சூழ்நிலையில் ஜென்னிக்கு மார்க்ஸிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதை தன் விரல்கள் நடுங்க,கண்ணீர் ததும்ப எடுத்துப் படித்தாள்... கண்ணீரால் எழுத்துகள் மங்கலாகத் தெரிந்தன... அந்தக் கண்ணீருக்கு, “இனி வரும் நூற்றாண்டுகள் அனைத்தும் காதல் என்றால் ஜென்னி… ஜென்னி என்றால் காதல்….” என்ற மார்க்ஸின் உன்னதமான காதல் வார்த்தைகளே காரணம்.
0 comments:
Post a Comment