14 February 2010

குண்டு வெடிக்கும் பாடலாசிரியர்.

Posted by Gunalan Lavanyan 6:17 AM, under | 1 comment

திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் அண்ணாமலையின் சமீபத்திய பல பாடல்கள் செம ஹிட். கடந்த ஆண்டு ‘டாப் 10’ பாடல்கள் வரிசையில் இவரது இரண்டு பாடல்கள் இடம் பிடித்தன. ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது’ன்னு இவர் எழுதிய ‘வேட்டைக்காரன்’ படப் பாடல் குழந்தைகள் மத்தியிலும் நல்ல பிரபலம். ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் இவர் எழுதிய ‘பண்ணாரஸ் பட்டு கட்டி’ பாட்டும் மெகா ஹிட். அதேபோல ‘என் பேரு முல்லா...’, ‘நண்பனை பார்த்த தேதி மட்டும்...’ பாடல்களும் ஹாட் டாக். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் எம்.ஃபில்., தமிழ் இலக்கியம் படித்துவிட்டுப் பாடல் துறையில் இறங்கியிருப்பவர். இவர் பாடலாசிரியராக பரிணாமம் அடைவதற்கு முன்பே ழ, விருட்சம், அரும்பு என பல சிறு பத்திரிகைகளில் 50 க்கும் அதிகமான கவிதைகளை எழுதியிருக்கிறார். தவிர ஆனந்தவிகடன் போன்ற வெகுஜன பத்திரிகைகளிலும் இவரது கவிதைகள் 50க்கும் அதிகமாக வெளிவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.அவரிடம் நமது doordo (செய் அல்லது செய்) ப்ளாகுக்காக எடுக்கப்பட்ட ஸ்பெஷல் பேட்டி. தற்போது ஓடிக்கொண்டு இருக்கும் 'ரசிக்கும் சீமானே' படத்தில் ரீமிக்ஸிய 'ரசிக்கும் சீமானே பாடலுக்கு இவர், வரிகள் எழுதும் போது குண்டுவெடிக்கும் நெஞ்சுவெடிக்கும் என்று எழுதி ரசிகர்கள் மனசை வெடிக்க வைத்திருக்கிறார்... அவரிடம் நிறைய பேசியதிலிருந்து தொகுக்கப்பட்ட நேர்காணல்.

அணுகுண்டு சோதனையில்
அத்தனை சேதமில்லை
பெண்கொண்ட பேரழகில்
பிழைத்தவன் யாருமில்லை!
- கவிஞர் அண்ணாமலை

‘‘நான் பிறந்த ஊர் திருவண்ணாமலை. என் தாய்வழித் தாத்தா வெச்ச பேரு அண்ணாமலை. எனக்கு சொந்த ஊர், தென்னாற்காடு மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகிலுள்ள கீழப்பட்டு கிராமம். கீழப்பட்டு கிராமத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தேன். திருவண்ணாமலையில் பத்தாவது வரைக்கும் படிப்பு. மேல்நிலை படிப்பை சங்கராபுரத்துல முடிச்சேன்.
பள்ளிக் காலத்திலேயே எனக்கு கவிஞர் வைரமுத்துன்னா உயிர். குறிப்பா, அவர் குங்குமத்துல எழுதுன ‘இதுவரை நான்’ தொடர் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அந்தத் தொடர் வரும்போது கீழப்பட்டு கிராமத்தில் இருந்தால், பத்து கிலோமீட்டர் வரை சைக்கிள் மிதித்துக்கொண்டு கள்ளக்குறிச்சிக்குப் போய், குங்குமம் வார இதழை வாங்கி முதல் ஆளா படிப்பேன். அத படிக்கலன்னா அன்னிக்கு சாப்பிடவே பிடிக்காது. அந்த அளவுக்கு வைரமுத்து என்னை பாதிச்சார். தவிரவும், நான் சினிமா பாட்டெல்லாம் ரசிச்சு கேட்க ஆரம்பிச்ச பன்னிரெண்டு வயசுல வைரமுத்து பாட்டுதான் எங்க பாத்தாலும் கேட்கும். ‘இளையநிலா பொழிகிறது...’, ‘பனிவிழும் மலர்வனம்...’ எல்லாம் என்னை எங்கோ அழைச்சுட்டுப் போகும்.
அந்த ஈர்ப்பால, பள்ளி முடிச்சதும் வைரமுத்து படிச்ச கல்லூரியிலேயே படிக்கணும்னு நினைச்சிதான் சென்னை பச்சையப்பன் கல்லூரியில சேர்ந்தேன். அப்புறம் இளங்கலை, முதுகலை, எம்.ஃபில். ஆய்வு படிப்புன்னு ஏழு வருஷம் பச்சையப்பன் கல்லூரியிலேயே போச்சு. கல்லூரி காலத்துல நிறைய கவிதை போட்டிகள், ஒவ்வொரு கல்லூரியிலும் நடக்கும். எல்லா கவிதை போட்டியிலும் கலந்துக்குவேன். பாடலாசிரியர் கபிலன் அப்போ என்னுடைய வகுப்புத் தோழர். நானும் கபிலனும்தான் கவிதைப் போட்டியில எங்க கல்லூரி சார்பா கலந்துக்குவோம். 
அப்படி கவிதை போட்டிகள்ல நிறைய முதல் பரிசு வாங்கியிருக்கேன். அநேகமா, போட்டியில கலந்துகிட்டா, பரிசு வாங்காம வந்த தருணங்கள் மிகவும் குறைச்சல்!
அப்போ இயக்குநர் செல்வா, எனக்கு சீனியர் மாணவரா பச்சையப்பன் கல்லூரியில படிச்சிட்டு இருந்தார். அந்த நேரத்துல அவர் ‘சித்திரப் பாவை’ன்னு ஒரு தொடர் எடுத்தார். பாலபாரதி இசை அமைச்சாரு. அந்தத் தொடருக்கு ஒரு டைட்டில் சாங் தேவை. அதுக்கு ‘பிரபலமான பாடலாசிரியர்களை வெச்சி பாடல் எழுத வேணாம். நம்ம கல்லூரியில் இருக்கிற திறமையான மாணவர் யாரையாவது வெச்சி எழுதிக்கலாம்’னு செல்வா முடிவு பண்ணியிருந்தார். நிறைய கவிதைப் போட்டிகள்ல நான் பரிசு வாங்கியிருந்ததால என்னை அழைத்து அதற்குப் பாடல் எழுதச் சொன்னார். அதுதான் என் முதல் பாடல் அனுபவம். அப்புறம் ‘நீலா மாலா’ன்னு ஒரு சீரியல் எடுத்தார். அதுலயும் நான் பாட்டு எழுதினேன். எனக்கு பாட்டு எழுதணுங்கிற ஆசை இல்லாத காலத்துலேயே, இயக்குனர் செல்வா எனக்கு வாய்ப்பு கொடுத்து எழுத வெச்சாரு. 
அதுக்கப்புறம் இசையமைப்பாளர் காந்திதாசன், எனக்கு ஜூனியர் மாணவரா பச்சையப்பன் கல்லூரியில படிச்சிட்டு இருந்தார். அவர் தினமும் ஏதாச்சும் டியூன் போட்டுட்டே இருப்பார். அந்த டியூனுக்கு நான் பாட்டு எழுதிக்கிட்டே இருப்பேன். இப்படி ஒரு ரெண்டு வருஷம். அதுல டியூனுக்கு எழுதறதுல எனக்கு நல்ல பயிற்சி கிடைச்சுது.
பச்சையப்பன் கல்லூரியில எம்.ஃபில் முடிச்சுட்டு, வெளியே வந்தப்ப, செல்வாகிட்ட உதவியாளரா இருந்த சுகி.மூர்த்திங்கறவர் ‘கும்மாளம்’ படத்தை இயக்கினாரு. அதுக்கு காந்திதாசன்தான் இசை. அதுல மூணு பாட்டு எழுதச் சொன்னாங்க. ‘திம்சுகட்ட அடடா திம்சுகட்ட...’ன்னு அதுல நான் எழுதினதுதான் என் முதல் சினிமா பாட்டு. ‘சின்ன சின்னதாய் சிறகுகள் முளைக்கிறதே’, ‘ஒவ்வொரு நாளும் உன்முகம் பார்த்து’ன்னு மீதி ரெண்டு பாட்டும் அதுல வரும்.
அதைத்தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளிகளில் ‘சேனா’, ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’, ‘மச்சி’ ‘ஜோர்’, ‘காற்றுள்ள வரை’, ‘ஜங்ஷன்’ போன்ற 10 படங்களுக்கு எழுதினேன். அப்படி நான் எழுதிய எல்லா பாட்டுமே எனக்கு பிடிக்கும். ‘திம்சு கட்டை’ பாட்டுல, 
‘செவப்பா செவப்பா ஒரு ஃபிகரு...
சிரிச்சா சிரிச்சா அட ஃபயரு!
அவ காம்ப்ளான் வாங்கிக் குடிச்சா 
ஹார்லிக்ஸ் மனசு நோகும்...
ஹெச்.எம்.டி. வாச்சு போட்டா, 
டைட்டான் ரொம்ப பாவம்...’
- இப்படி எழுதின எல்லா வரிகளும் நிறைய பேருக்கு பிடிச்சது. ‘சேனா’ படத்துல,  ‘பூச்செடிக்குகூட இந்த வீட்டில் 
காதல்தான் உண்டாச்சா... 
நீ போன பின்பு பூக்கவில்லை செடிகள் 
ஏன் என்று சொல்வாயா?
இதோ இந்த பூந்தொட்டி 
உன்னைக் கண்டால் பூப்பூக்கும்... 
அதோ அந்த நாய்க்குட்டி 
நீதான் வந்தால் வாலாட்டும்...’ என்பது போல எல்லா பாட்டிலும் நல்ல கற்பனை, புதுமை இருந்தாலும் எல்லாரையும் என் பாடல்கள் போய் சேரலை.
இப்படி போய்கிட்டிருந்த என் பாடல் பயணத்தில் முக்கியமான திருப்பம், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியை சந்தித்ததுதான். அவரை தொடர்புகொண்டதும், என் திறமையை பரிசோதிக்க பாடல் மற்றும் மெட்டு சார்ந்த ரெண்டுவிதமான டெஸ்ட் வைத்தார். அதுல அவர் திருப்தியானதும் எனக்கு, அடுத்தடுத்து வாய்ப்பளித்தார். 
ஏவி.எம்-;மின் ‘அ ஆ இ ஈ’ படத்துல ‘நட்டநடு ராத்திரியை பட்டப்பகல் ஆக்கிவிட்டாய்’னு வரும் பாட்டு, ஓரளவு ஹிட் ஆச்சு. விஜய் ஆண்டனியோட இசையில ‘ரசிக்கும் சீமானே’, ‘பந்தயம்’னு தொடர்ந்து எழுதினேன். ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்துல மூணு பாட்டு... ‘பண்ணாரஸ் பட்டு கட்டி’, ‘என் பேரு முல்லா’, ‘நண்பனை பார்த்த தேதி மட்டும்’னு மூணுமே ஹிட். ‘பண்ணாரஸ்’ மெகா ஹிட். அடுத்து, விஜய் ஹீரோவா நடிச்ச ‘வேட்டைக்காரன்’ படத்துலயும் விஜய் ஆண்டனிதான் என் பேரை இயக்குநர் பாபுசிவனிடம் முன்மொழிந்து, என்னை எழுத வெச்சார். அப்படி எழுதின ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது’ பாட்டும் மெகா ஹிட்! 
அந்த பாட்டை ரொம்ப திட்டமிட்டு எழுதினேன். ‘என் உச்சி மண்டையில சுர்ருங்குது உன்னை நான் பாக்கையில கிர்ருங்குது... கிட்ட நீ வந்தாலே விர்ருங்குது... டர்ருங்குது’ன்னு பல்லவி எழுதினேன். குழந்தைகளுக்கு பிடிக்கணுங் கிறதுனால சரணத்துல, ஆட்டுக்குட்டி, பூனை யானை, பேனா, இந்த மாதிரி வார்த்தைகள்லாம் பயன்படுத்தி இருப்பேன். அப்புறம் கிராமத்து வார்த்தைகளான ‘கம்மாங்கர காடு, சுட்ட கருவாடு’ன்னு வார்த்தைகள் வரும். இதுல விஜய்க்கு பொருத்தமா எழுதணும்னு ‘அப்பாவியா மூஞ்ச வெச்சி அங்க இங்க கைய வெச்சி, நீயும் என்னை பிச்சி தின்ன கேக்குறியேடா’ன்னு எழுதினேன். அனுஷ்காவுக்கு மூக்கு நீளம்ங்கறதால ‘துப்பாக்கியா மூக்க வெச்சி, தோட்டா போல மூச்ச விட்டு நீயும் என்னை சுட்டுத் தள்ள பாக்குறியேடி’ன்னு எழுதினேன். இப்படி எல்லாருக்கும் பொருத்தமா அமையணும்னு மெனக்கெட்டு எழுதுன பாட்டு, குழந்தைகளுக்கும் புடிக்கணும்னுதான் அதுல... காகிதம், பேனா, யான, பூன, ஆட்டுக்குட்டி போன்ற வார்த்தைகளையும் பயன்படுத்தினேன். இப்ப அந்த பாட்டுதான், சினிமா துறையினர் மத்தியிலும், மக்கள் மத்தியிலயும் ‘அண்ணாமலைன்னு ஒருத்தர் பாடல் எழுதிட்டு இருக்கார்’னு என்னை பிரபலப்படுத்தியிருக்கு!
அப்புறம் நடிகர் விஜய், வேட்டைக்காரன் பட ஆடியோ ரிலீஸ் சமயத்துல ‘பண்ணாரஸ் பட்டு கட்டி பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்’னு மேடையில சொன்னதிலும் எனக்குப் பெருமை. ‘என் உச்சி மண்டைல’ பாட்டும் அவருக்குப் ரொம்ப புடிச்சதுதான்!
‘வேட்டைக்கார’னுக்குப் பிறகு 17 பாட்டு எழுதிட்டேன். மேக்சிமம் குத்துதான். சினிமால அப்படித்தானே... ஒரு குத்து ஹிட்டானா, அப்புறம் குத்தோ குத்து, கும்மாங்குத்துதான்!
‘ரசிக்கும் சீமானே’ படத்துல ரெண்டு பாட்டு எழுதியிருக்கேன். ‘ஓ ரசிக்கும் சீமானே’ன்னு வர ரீமிக்ஸ் பாட்டுல ‘உன் கெண்டைக்கால் அழகுல என் கண்ணு வழுக்கும்... நீ குணியும்போது மனசுக்குள்ள குண்டு வெடிக்கும்’னு  ரெண்டு வரி வரும். இது கிளப்ல ஆடற மாதிரியான சூழல்ல வர்ற பாட்டு. கொஞ்சம் அசைவமாவும் யோசிக்கவேண்டியிருந்துச்சு. 
‘ரெட்டைச்சுழி’ படத்துல கார்த்திக் ராஜா இசையில, சுந்தர்.சி பாபு இசையில ‘அகராதி’, நடிகர் ஜீவா ரெட்டை வேடத்துல நடிக்கிற ‘சிங்கம் புலி’ங்கிற படத்துல, பிரசாந்த் ஹீரோவா நடிக்கிற ‘மம்முட்டியான்’ படத்துல, எஸ்.ஏ.சி-யோட ‘வெளுத்துக்கட்டு’ படத்துல, மணிஷர்மா இசையில ஒரு பாட்டுன்னு இந்தப் பட்டியல் இன்னும் நீளுது...
நான் எழுதுற ஒவ்வொரு பாடலும் ‘வெறும் வெற்று வார்த்தைக் கூட்டங்களாக இருக்கக்கூடாது. அதுல நம்ம வாழ்ந்த வாழ்கையின் அடையாளம் இருக்கணும்’னு நெனைக்கிறேன். சன் டி.வி.யில வர்ற ‘தங்கம்’ சீரியல்ல டைட்டில் சாங்லகூட ‘துன்பம் உன்னை செதுக்கும், நீ சிந்தும் வியர்வைத் துளிகள்... எல்லாம் வெற்றிப் படிகள்’னு எழுதியிருப்பேன். பாடல் துறையில் என் வியர்வைத் துளிகள் அத்தனையும் எதிர்காலத்தில் நிச்சயம் வைரக் கற்களாக மாறும் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை!’’
சந்திப்பு: சா.இலாகுபாரதி புகைப்படங்கள்: ஜான்

1 comments:

பேட்டிக் கட்டுரை கச்சிதம். மேற்கோள் காட்டப்பட்ட வரிகள் அருமை. பிசிறில்லாத தொகுப்பு. வாழ்த்துகள்.

Post a Comment

கோப்பு

கோப்பு