07 February 2010

இனி இலவசமாக சினிமா பார்க்கலாம்!

Posted by Gunalan Lavanyan 4:42 AM, under | No comments

உலகத் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்களை தமிழகமெங்கும் மக்களுக்கு இலவசமாக திரையிட்டு காட்டிவரும் அமைப்பு 'நிழல்கள்'. இதன் அமைப்பாளர் திரு ப.திருநாவுக்கரசு.

இந்த அமைப்பின் மூலமாக இதுவரைக்கும் தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் திரையிடல்கள் நடந்திருக்கின்றன. ஆனால், 'சென்னையில் அவ்வளவாக திரையிடல்கள் நடத்த முடியவில்லை. அதற்கு இடப்பற்றாக் குறைதான் காரணம்' என்று 'டிஸ்கவரி புக்பேலஸில்' சனி (5.2.2010) அன்று நடைபெற்ற திரையிடலின்போது திருநாவுக்கரசு குறிப்பிட்டார்.

சென்னை - கே.கே.நகரில் பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில் உள்ளது டிஸ்கவரி புக்பேலஸ். திரைப்பட உதவி இயக்குநனுரும், இலக்கிய வாசகரும், சிறுகதை எழுத்தாளருமான கயிலை மு.வேடியப்பன் இந்த புத்தகக் கடையை நடத்தி வருகிறார். சற்று பெரிய இடவசதியோடு அமைந்துள்ள இந்தப் புத்தகக் கடையில்... சினிமா திரையிடல்கள், புத்தக வெளியீடுகள், நூல் அறிமுகம் மற்றும் விமர்சனக் கூட்டங்களை இலவசமாக நடத்திக்கொள்ள அவர் அனுமதி வழங்குகிறார் வேடியப்பன்.

'அந்தவகையில், இனி ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை தோறும் நிழல்கள் அமைப்பு சார்பாக டிஸ்கவரி புக்பேலஸில் திரையிடல்கள் நடைபெறும்' என்று திருநாவுக்கரசு கூறியிருக்கிறார்.

ஒவ்வொரு படம் திரைடலுக்கு முன்பும், பின்பும் அந்த படம் குறித்த அறிமுகத்தையும் அனுபவத்தையும் பகிர்ந்துகொள்ள நிழல் அமைப்பு வாய்ப்பு ஏற்படுத்தித் தருகிறது. திரைத்துறை சார்ந்தவர்கள் மட்டுமின்றி சினிமா ஆர்வலர்களும் இந்தத் திரையிடலில் பங்கேற்று சினிமா மற்றும் அதன் தொழில்நுட்பங்கள், திரைப்பட உருவாக்கம் தொடர்பான சந்தேகங்களையும் கேள்விகளையும் எழுப்பி தங்களை தெளிவுபடுத்திக்கொள்ளலாம். இது வளர்ந்துவரும் இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு.

அடுத்தமாதம் மாதம் முதல் இந்தத் திரையிடலில் திரைப்பட முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்க இருக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல்.

முதல் சனிக்கிழமை

நேற்று நடைபெற்ற பிப்ரவரி மாதத்துக்கான திரையிடலின்போது... தேசிய விருது மற்றும் பல்வேறு மாநில அரசு விருதுகளைப் பெற்ற 'கர்ண மோட்சம்' குறும்படமும், எழுத்தாளர் அழகிய பெரியவன் எழுதிய 'குறடு' சிறுகதையை வைத்து எடுக்கப்பட்ட 'நடந்த கதை' குறும்படமும் திரையிடப்பட்டன. (நடந்த கதை இதுவரைக்கும் ஐந்து அமைப்புகளிலிருந்து விருது பெற்றுள்ளது.) மேலும் சில உலகப் படங்களும் திரையிடப்பட்டன. விழாவில் முதல் இரண்டு படங்களின் இயக்குநர்கள் முறையே முரளி மனோகர் மற்றும் பொன்.சுதா பங்கேற்று படம் எடுக்கும்போது ஏற்பட்ட தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

கர்ண மோட்சம்

அழிந்து வரும் தெருக்கூத்துக் கலையைப் பற்றிய படம். மிக மெல்லிய குரலில் அழுத்தமாக பதிவு செய்யப்பட்ட கதை. அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படம். விமர்சனுக்கு உட்படுத்தக் கூடாத படம். இயக்குநனை அப்ரிஷியேட் செய்ய வேண்டும். கமர்ஷியல் சினிமாவுக்கு போனாலும் இது போன்ற மக்கள் படங்களையே எடுக்கவேண்டும் என்று முரளி மனோகருக்கு கோரிக்கை வைக்கிறேன்.

நடந்த கதை

அழகிய பெரியவன் கதை. கதை சொல்லியாக பின்னணி குரல் கொடுத்திருக்கிறார் அறிவுமதி. எங்கள் ஊர் (பேரணாம்பட்டு) சுற்றி கதை பின்னலோடு எடுக்கப்பட்ட படம். மட்டுமின்றி தலித் மக்கள் படும் வேதனையை ஆதிக்க சாதியினர் செய்யும் கொடுமையை தோலுரித்து காட்டக்கூடிய படம். ஆதிக்க சாதியினர் பார்க்கவேண்டிய படம். தலித் நண்பர்கள் இந்தப் படத்தை பார்க்காமல் இருந்தால் பார்த்துவிடுங்கள். சமூகத்தில் உள்ள அவலங்களை எதிர்த்து போராட ஊக்கமளிக்கும் கதை.

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு