25 April 2011

கேள்விக்குறியாகும் தமிழ் வழிக் கல்வி!

Posted by Gunalan Lavanyan 10:09 AM, under | 3 comments


தமிழ் வழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு புத்தகம் கிடைப்பதில் சிரமம் இருந்துவருவதாகக் தமிழகம் முழுவதிலிருந்தும் தகவல்கள் வந்துகொண்டு இருந்தன. ஆனால், அரசே ஊக்கப்படுத்தும் தமிழ் வழிக் கல்விக்கு புத்தகம் எப்படி கிடைக்காமல் இருக்கும் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால், மேற்கண்ட புகாரை நிரூபிக்கும் வண்ணமாக தினமலர் புதுமலர் இணைப்பில் ஒரு கடிதம் வெளியாகியுள்ளது.

’அன்புள்ள முதல்வருக்கு ஆனந்தி எழுதுவது...’ திமுகவின் பராக்கிரமங்களைப் பட்டியலிடும் விளம்பரட்தின் ஸ்லோகனையே தலைப்பாக்கி அந்தக் கடிதம் வெளியிடப்பட்டு இருக்கிறது. அந்தக் கடிதத்தை அப்படியே அளிக்கிறேன்.... அதன்பிறகு பேசுவோம்.



25.04.2011

நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட்டின்போது, இந்தியா கோப்பை வென்றதை அனைவரும் பார்த்துக்கொண்டு இருந்தனர்; ஆந்திர முதல்வரும், முன்னாள் விளையாட்டு வீரருமான கிரண்குமார் ரெட்டியும் பார்த்துக்கொண்டு இருந்தார். மறுநாள், கோப்பையை வென்ற இந்தியாவுக்கு, ஆளாளுக்கு பரிசுகள் அறிவித்துக்கொண்டு இருக்க, ஆந்திர முதல்வரோ அமைதியாக இருந்தார்.

’நீங்க எதுவும் செய்யவில்லையா?' என்று நிருபர்கள் கேட்டபோது, ’கிரிக்கெட் வீரர்கள், மற்ற விளையாட்டு வீரர்கள் போல அல்ல; அவர்களுக்கு நிறையவே கிடைக்கிறது. ஆகவே, தேவையின்றி அரசு நிதியை எதற்கு வீணாக்க வேண்டும்?' என்று, சிம்பிளாக சொல்லிவிட்டார்.

ஆனால், தமிழக முதல்வரான தாங்களோ, ’மகா ஏழைகளான' கிரிக்கெட் வீரர்களுக்கு, உங்கள் பங்குக்கு, மன்னிக்கவும்... தமிழக மக்கள் வரிப் பணத்திலிருந்து ஏதாவது கொடுத்தாக வேண்டும் என்று, அணிக்கு மூன்று கோடி ரூபாயும், பெரும்பாலும், சக வீரர்களுக்கு, குளிர்பானம் கொடுத்துக் கொண்டு இருந்த தமிழக வீரர் அஷ்வினுக்கு, ஒரு கோடி ரூபாயும் அறிவித் தீர்கள்.

இதில் என்ன வேடிக்கை என்றால், அப்போது தேர்தல் நேரம், எதையும் தன்னிச்சையாக செய்யக்கூடாத நிலை இருந்தது. ஆனாலும், ’கஷ்டத்தில்' இருக்கும் வீரர்களுக்கு உதவியே ஆகவேண்டும் என்று உங்களது, ’கருணை' உள்ளம் சொல்ல, முனைப்புடன் தேர்தல் கமிஷனுக்கு, பிரசாரத்துக்கு நடுவிலும் கடிதம் எழுதி, அனுமதி வாங்கினீர்கள்.

அவர்களும் அனுமதி கொடுத்து, ’பணம் கொடுக்கலாம்; ஆனால், அதை போட்டோ எடுத்து, பப்ளிசிட்டி தேடக்கூடாது' என்று, ஒரு நிபந்தனை விதித்தனர். ’ஒரு போட்டோகூட எடுத்துக்கக்கூடாதாம்' என்று, இதையும் வேதனையுடன் தாங்கள், நிருபர்களிடம் மனம் நொந்து கொண்டீர்கள்.

இந்த அளவு ஏழை, எளிய கிரிக்கெட் வீரர்களுக்கு பாடுபடும் தங்கள் பொன்னான உள்ளத்துக்கு ஒரு வேண்டுகோள்... இதற்கு தேர்தல் கமிஷன் அனுமதி கேட்டு கூட கடிதம் எழுத வேண்டாம்; ஒரு வாய்மொழி உத்தரவு போதும்... செய் வீர்களா?

’தமிழர்களே... தமிழர்களே' என்று, தாங்கள் வாஞ்சையாய் அழைக்கும் தமிழர்கள் பெற்ற பிள்ளைகள் சிலர், விடாப்பிடியாக தமிழ் வழிக்கல்வி கற்று வருகின்றனர். இவர்களுக்கு தேவையான பாட புத்தகங்கள் எல்லாம், சென்னையில் மட்டுமே கிடைக்கின்றன. சென்னை என்பது, தமிழகத்தின் ஒரு பகுதி தானே தவிர, சென்னையே தமிழகம் அல்ல. ஆனால், கல்வி அதிகாரிகள், ’உனக்கு வேண்டுமானால், சென்னைக்கு வந்து வாங்கிக்கொள்' என்பதுபோல, விட்டேத்தியாக உள்ளனர்.

பொறுமை இழந்த ஈரோடு மக்கள், உரிமை பாதுகாப்பு தலைவர் சண்முகசுந்தரம் என்பவர், இந்த வருடமாவது இதற்கு தீர்வு காண வேண்டும் என்று, கோர்ட்டிற்கு போய்விட்டார். கோர்ட்டாரும், ’என்ன இது... படிக்கிற புள்ளைகளுக்கு, இருக்கிற இடத்துல புத்தகம் கிடைக்க ஏற்பாடு பண்ணாம...' என்று எரிச்சலுடன் விளக்கம் கேட்டுள்ளனர்.

சாதாரண விஷயம்... ’அந்தந்த ஊரில் உள்ள தனியார் புத்தகக்கடையில், அரசு நிர்ணயித்த விலைக்கு புத்தகம் கிடைக்கச் செய்ய வேண்டும்' என்று, தாங்கள் ஒரு வார்த்தை, சின்னதாய் ஒரு வாய்மொழி உத்தரவு போட்டால் போதும்... தமிழ் குழந்தைகள் படிச்சு பொழச்சுக்குவாங்கய்யா.

நன்றி,

இப்படிக்கு
ஆனந்தி

(நன்றி: தினமலர்)



- இப்படி ஒரு கடிதம் தினமலரில் வெளியானதுமே சற்று நொந்துத்தான் போனான். தமிழ் வழிக் கல்வி பயில்வோருக்கு அரசுப் பணியில் முன்னுரிமை, சிறப்புச் சலுகை என்றெல்லாம் அறிவிப்புகளை ’அள்ளி இறைக்கும்’ (நன்றி: நகைச்சுவை நடிகர் வடிவேலு) திமுக அரசு, மாணவர்களுக்கு எளிதாகப் புத்தகங்கள் கிடைப்பதில் உள்ள சிரமங்களை கண்டுகொள்ளாமல் இருப்பதை நினைத்தால் கோபமும் வேதனையும் ஒருசேர வருகிறது.

வாசலில் தமிழை வரவேற்றுவிட்டு புழக்கடைப்பக்கம் துரத்தி அடிப்பது மாதிரிதான் இருக்கிறது இந்த பாராமுகம். புத்தகங்கள் கிடைக்கவே வழி செய்யமுடியாத ஒரு அரசு, படித்துவிட்டு பட்டம் வாங்கிய பிறகு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்கு மட்டும் எப்படி முன்வரும் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

இதற்கிடையில், பள்ளிக் கல்வித் துறை செயலாளர் சபீதா தன்னிச்சையாகவே ப்ளஸ் 2 மற்றும் 10 வகுப்பு தேர்வு முடிவுகளுக்கான தேதியை அறிவித்து விட்டார் என்று அந்தத் துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசு கவலை தெரிவித்து இருக்கிறார். புத்தகங்கள் கிடைப்பதில் இருக்கிற பிரச்னைக்கு ஒரு முடிவுகட்டுவதற்கு இப்படி அவர் கவலைப்பட்டாரா என்று தெரியவில்லை. ஆனால், 58 வயது வரைக்கும் பதவியில் இருக்கப்போகிற ஒரு சாதாரண அதிகாரி தன் அதிகாரத்தை மீறி, தன்னை கண்டுகொள்ளாமல், தன்னிச்சையாக எப்படி அறிவிக்கலாம் என்று மட்டும் கவலையோடு பத்திரிகையாளர்களிடம் கூறுகிறார்.

ஆக, அரசியல்வாதிகளின் மனநிலை என்னவென்று தெளிவாகப் புரிகிறது. மக்கள் நலப்பணிகள் நடக்காமல் போனால்கூட அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். ஆனால், அதிகாரம் பறிபோனால் மட்டும் கூக்குரல் எழுப்பு வார்கள். இந்த நிலை தமிழ் வழிக் கல்வியில் மட்டுமல்ல. தமிழர் பாதுகாப் பிலும் கூடத்தான்.

3 comments:

ஐயா உங்களின் இடுக்கைக்கு தற்செயலாக வந்தேன் நீவீர் குறிப்பிடும் தமிழகத்தின் முன்னாள் ? பாவம் முதல்வர் அகவைமுதிர்ந்தவர் என்ன செய்வார் ? பாவம் இந்த தள்ளாத அகவையிலும் தான் மட்டுமே இல்லை இல்லை தன் குடும்பம் மட்டுமே கொள்ளை ?? இல்லை முறையாக தமிழ் நாட்டை தமிழர்களிடம் இருந்து வாங்கி கொள்ள எண்ணுகிறார் அதை இப்படி தினமலரின் கடிதங்களை எல்லாம் எடுத்து போட்டு வைகிறீர்கள் இதுமாதிரி எல்லாம் தமிழின வாழும் வள்ளுவரை தொல்காப்பியரை (இப்படி குறிப்பிடுவதற்கு தொண்டரடி பொடி கலுக்கும் ஏன் கருணாநிதிக்கும் கொஞ்சம் கூட வெட்கமாக இல்லை ) பேசக்கூடாது எச்சரிக்கை உங்கள் மீது மான நட்ட வழக்கு போடப்படலாம் ... பாவம் விட்டுவிடுங்கள் ....

மாணவர்களின் பிரதிநிதியாக இருந்துதான் இந்தக் கட்டுரையை பதிவேற்றியிருக்கிறேன். இதனால், மாணவர்களுக்கு ஒரு தீர்வு கிடைத்தால் நல்லது. அதை விட்டுவிட்டு நீங்கள் சொல்வது மாதிரியெல்லாம் நடந்தால் வேடிக்கையாக இருக்கும். நானும் தமிழகத்தில் பிரபலமாகிவிடுவேன். ஹி...ஹி...

ஒரு தமிழாசிரியர் தமிழ்வழிக் கல்வியை ஆதரிப்பவன் என்ற முறையில் இதனைப் படிக்கும் போது மிகவும் வேதனையாகத்தான் உள்ளது...

மட்டைப்பந்து விளையாடும் மடையர்களுக்கு கோடிகோடியாகக் கொடுக்கும் கேடிகள் ஏழைக் குழந்தைகளின் அடிப்படைக் கல்விக்குக்கூட ஏதும் செய்வதில்லை...

Post a Comment

கோப்பு

கோப்பு