24 April 2011

பாபாவுக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி - புகைப்படத் தொகுப்பு

Posted by Gunalan Lavanyan 11:28 PM, under | No comments


புட்டப்பர்த்தி சாய்பாபா ஞாயிறு அன்று (ஏப்ரல் 24) காலை 7.30 மணிக்கு மரணமடைந்தார். ஞாயிறு மாலை 6 மணி முதல் குல்வந்த் மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்துக்காக பாபாவின் உடல் வைக்கப்பட்டு இருக்கிறது. புதன் அன்று (ஏப்ரல் 27) இறுதிச் சடங்கு நடைபெறும் என்று ஆஸ்ரம வட்டாரம் தெரிவித்து இருக்கிறது.



பாபாவின் இறுதிச் சடங்கை பார்ப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து பாபாவின் பக்தர்கள் லட்சக்கணக்கானவர்கள் புட்டப்பர்த்தி ஆசிரமம் நோக்கி வந்தவண்ணம் இருக்கிறார்கள். பாபாவின் மறைவால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் கண்ணீர் வடித்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

ஆந்திரா அரசு 4 நாள் துக்கம் அனுஷ்டிப்பு

வரும் புதன்கிழமை பிரசாந்திநிலையத்தில் உள்ள குல்வந்த் ஹாலில் அடக்கம் செய்யப்படும். பாபா உடல் அடக்கம் செய்யப்படும்போது அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடக்கும். சாய்பாபா மறைவுக்கு ஆந்திரா அரசு மாநிலம் முழுவதும் 4 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நான்கு நாளும் அனந்தபூர் மாவட்டம் முழுவதும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆந்திர அரசு வெளியிட்டு்ள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தலைவர்கள் இரங்கல்

புட்டபர்த்தி சாய்பாபா மறைவுக்கு ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி, ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மத்திய - மாநில அமைச்சர்கள், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஆந்திர முன்னாள் முதல்வர் ரோசைய்யா, ஆந்திர அமைச்சர்கள் உள்ளிட்ட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

பாபாவின் மரணச் செய்தியை கேட்டுவிட்டு கருணாநிதி வெளியிட்ட இரங்கல் செய்தியில், ’சென்னை மக்களின் குடிநீர் பிரச்னையை தீர்க்க உதவியவர் பாபா. இதன்மூலம் தமிழக மக்களின் இதயத்தில் அவர் இடம் பிடித்துவிட்டார்’ என்று கூறியிருக்கிறார். ‌ஜெயலலிதா வெயிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘சாய் பாபாவின் இழப்பு மனித குலத்துக்கு பேரிழப்பு’ என்று தெரிவித்து இருக்கிறார்.

பிரதமர் மன்மோகன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ’தெய்வீகத் தன்மையும், போற்றுதலுக்குரியவருமான சாய்பாபா லட்சக்கணக்கான மக்களின் மனதில் வாழ்ந்தவர்’ என்று கூறியிருக்கிறார். பா.ஜ.க-வின் மூத்த தலைவர் அத்வானி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பாபா மறைவால் நாடே கவலையில் ஆழ்ந்துள்ளது. சாய்பாபாவை நான் பல முறை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளேன். அவரது அறிவுரைகள் எனக்கு பல நேரங்களில் வழிகாட்டுதலாக இருந்தது’ என்று கூறியிருக்கிறார்.

அஞ்சலி

தமிழ்க துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் பாபாவுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக சிறப்பு விமானம் மூலம் புட்டபர்த்தி சென்று அஞ்சலி செலுத்தினார். ஆந்திரமுதல்வர் கிரண்குமார்ரெட்டி, கவர்னர் நரசிம்மன், மகாராஷட்டிர முன்னாள் முதல்வர் அசோக்சவான், தெலுங்குதேச கட்சி தலைவர் சந்திரபாபுநாயுடு, பிரஜா ராஜ்யம் கட்சி தலைவர் சிரஞ்சீவி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள்.

பாபாவுக்கு பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி - புகைப்படத் தொகுப்பு


















0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு