09 March 2010

வன்கொடுமைக்கு எதிராக ஓர் அறிக்கை!

Posted by Gunalan Lavanyan 10:59 PM, under | No comments

சென்னை கவின் கலைக் கல்லூரியின் முதல்வராக ஓவியர் சந்ரு இருந்தவரைக்கும் மாணவர்கள் கல்லூரி முதல்வரை எளிதாக அனுக முடிந்தது. மாணவர்களி்ன் தேவைகள் சரியாக உணரப்பட்டன; புரிந்துகொள்ளப்பட்டன. அவர்களின் வேண்டுகோள்கள் அங்கீகரிக்கப்பட்டன; நிறைவேற்றப்பட்டு வந்தன.  ஆனால், தற்போது புதிதாக தற்காலிக முதல்வராகப் பதவியேற்று இருப்பவரால் மாணவர்கள் மத்தியில் சர்ச்சைகளும், அமைதியின்மையும், சாதிய துவேஷமும் நிகழ்ந்து வருவதாகத் தெரிகிறது. அதற்குத் தூண்டுகோலாகவும், அடிகோலாகவும் கல்லூரியின் முதல்வரே இருந்து வருகிறார் என்றும் தெரிகிறது. இதுகுறித்து கவின்கலைக் கல்லூரியின் இந்நாள் – முன்னாள் மாணவர்கள் வெளியிட்டுள்ள துண்டு அறிக்கை: (ஓர் பார்வையாளனாகவும், மாணவச் சமுதாயம் சாதிப்படிநிலைகளில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்ற அக்கறைக் கொண்ட ஒரு சமூகவாதியாகவும் மட்டுமே இருந்து இந்த அறிக்கையை முழுமையாக  உங்களுக்கு அளிக்கிறேன். உங்கள் கருத்துகளை பின்னூட்டம் இட்டு, மாணவர் சமுதாயத்துக்கு துணை நில்லுங்கள்… சாதிய அடக்குமுறையை எதிர்த்து குரல் கொடுங்கள்…)

சென்னை அரசு கவின்கலைக் கல்லூரியில் மாணவர் மீது
நிகழ்ந்துள்ள மனித உரிமை மீறல், வன்கொடுமை குறித்து
உங்கள் கவனத்திற்கு...

தமிழக கலைப்பாரம்பரியத்தில் தனக்கென ஒரு தனித்த அடையாளம் கொண்டது சென்னை அரசு கவின்கலைக்கல்லூரி. இக்கல்லூரியில் மாசு மருவற்ற பல கலை ஆளுமைகள் முதல்வர்களாகவும் முதல்வர் பொறுப்பில் இருந்தும் ஓய்வு பெற்றிருக்கிறார்கள்.

தற்சமயம் தற்காலிக முதல்வராகப் பொறுப்பில் இருக்கும் ‘அடியாள்’ என்றும் ஜாதி வெறி செயல்பாடுகளுக்குப் பலசமயம் துறை ரீதியான தண்டனை அனுபவித்தவர் என்று பெயரெடுத்தவர் திரு.மனோகரன். ஓவியக் கல்லூரியில் பயிலும் சசிக்குமார் என்கின்ற முதுகலை முதல் ஆண்டு மாணவர் சுய ஆர்வத்தால் தமிழின் பெருமை மிகு அய்யன் திருவள்ளுவரின் 1330 திருக்குறளையும் சுடுமண் சிற்பமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு முடித்துள்ளார். மேலும், இத்திருக்குறள் சுடுமண் சிற்பங்களை செம்மொழி மாநாட்டு நேரத்தில் காட்சிப்படுத்தவும் திட்டமிட்டு இருந்தார். எழுதி முடிக்கப்பட்ட அனைத்து சிற்ப குறள் பலகைகளையும் சுடும் முயற்சிக்கு கல்லூரியில் ‘சூளை’ அமைத்துத்தர கல்லூரி முதல்வரை அணுகி இருக்கிறார். மாணவர்களுக்கு அவசியமான ‘சுடுமண் சூளை’ கல்லூரியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தி ரு.மனோகரன் அவர்கள் ‘சூளை’ அமைத்துத் தருவதாகவும் சிற்பம் செய்ய களிமண் வாங்கித் தருகிறேன் என்று கூறி ஏமாற்றியதால் மன உளைச்சலுக்கு ஆளான சசிக்குமார் என்ற மாணவர் 26.2.2010 மாலை மனோகர் அவர்களின் வாகனத்தை சேதப்படுத்தியதாகத் தெரிகிறது.

இச்சூழலில் மாணவர்களின் உரிமையை கேட்கும் கமல்ஹாசன், எஸ்வேந்திரன் என்ற இரண்டு மாணவர்களை (சம்பவம் நடந்த அன்று கல்லூரிக்கு எஸ்வேந்திரன் வரவில்லை, கமலஹாசன் அந்த இடத்திலேயே இல்லை) இச்சம்பவத்தை காரணமாக வைத்து இந்த சம்பவத்தில் எந்த வகையிலும் தொடர்பில்லாத அம்மாணவர்களின் மீது புகார் கொடுத்த கல்லூரி முதல்வர், தன்னுடைய சமுதாயம் சார்ந்து இயங்கும் காவல்துறை அதிகாரிகளின் துணைகொண்டு தன் அதிகாரத்தை பயன்படுத்தி அம்மாணவர்கள் மீது பிணையில் வெளிவரமுடியாத வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளார்.

பொய் வழக்கில் பாதிக்கப்பட்ட எஸ்வந்திரன் தமிழக கலைச்சூழலில் கடந்த பத்து வருடங்காலமாக இயங்கிவரும் ஓவியரும் சிற்பியுமாவார். இவரது கைது அப்பட்டமாக பழிவாங்கும் நோக்கத்துடன் நடந்துள்ளது. இவர் உடன் பிறந்த தம்பி ஆனந்தகுமார் சிற்பக்கலை இறுதியாண்டு படித்து வருகிறார். சம்பவம் நடந்த இரவு சுமார் 11 மணி அளவில் சிற்பப்பணியில் ஈடுபட்டிருந்த மாணவர் ஆனந்தகுமாரை பெரியமேடு காவல்துறை ஆய்வாளர் ‘முருகேசன்’ தலைமையில் வந்த காவல் துறையினர் கல்லூரியிலிருந்து வலுக்கட்டாயமாக அடித்து இழுத்துச் சென்றுள்ளனர். இது சக மாணவர்களின் முன்னிலையில் நடந்துள்ளது.
இழுத்துச் செல்லப்பட்ட மாணவர் ஆனந்தகுமாரை பெரியமேடு காவல் நிலையத்தில் வைத்து அடித்து துன்புறுத்தி தன்னுடைய அண்ணன் எஸ்வந்திரன்தான் வாகனத்தை சேதப்படுத்த உடந்தையாக இருந்தார் என்று எழுதி வாங்கிக்கொண்ட காவல்துறை இரவு முழுவதும் காவல்நிலையத்தில் சங்கிலியால் கட்டி வைத்திருந்தனர். வெள்ளிக்கிழமை இரவு சுமார் 1 மணியளவில் தன்னுடைய அறையிலிருந்து இழுத்துச் செல்லப்பட்ட எஸ்வந்திரன், பெரியமேடு காவல் நிலையத்தில் வைத்து, கொலை மிரட்டல் விடுத்து, சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்தார். மறுநாள் சனிக்கிழமை காலை அங்குவந்த மனோகரன், ஆசிரியர் செந்தமிழ்ச்செல்வன், காவல் நிலைய ஆய்வாளர் முருகேசன், துணை ஆய்வாளர் நடராஜன் ஆகியோருடன் கலந்து ஆலோசித்து பொய் புகார் எழுதிக்கொடுத்தனர். அச்சமயம் அங்கிருந்த மாணவர் ஆனந்தகுமாரை மனோகரன் மேற்படி காவலர்களின் முன்னிலையில் கடுமையாக கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார். தற்காலிக முதல்வர் மனோகரன், சாதி ரீதியாகவே எப்போதும் செயல்படுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் பணிபுரிந்த குடந்தை அரசு ஓவியக் கல்லூரி, சென்னை அரசு ஓவியக்கல்லூரி ஆகிய இரண்டு இடங்களிலும் மாணவர்களை சாதி ரீதியாக மிரட்டி, அச்சுறுத்தியதன் காரணமாக துறை ரீதியாக விசாரிக்கப்பட்டு பணியிடமாற்றம் செய்து தண்டிக்கப்பட்டவர் என்பது யாவரும் அறிந்தது.

பாதிப்பிற்குள்ளான மாணவர் எஸ்வந்திரன், ஆனந்தகுமார், கமலஹாசன் மூவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். கல்லூரி தற்காலிக முதல்வர் மனோகரனும் காவல்துறையினரும் கைகோர்த்து நிகழ்த்திய வன்கொடுமையான மனித உரிமை மீறலுக்கும் வன்முறைக்கும் பின்புலமாய் இருப்பது மனோகரனின் சமூகத்தைச் சார்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி (செயலர், சுற்றுலா மற்றும் கலைப் பண்பாட்டுத் துறை) என்பது தெரிய வருகிறது. தனக்கு மூத்த ஆசிரியர்கள் பலர் முதல்வராக வருவதை மீறி, தன் இனம் சார்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி துணையுடன் முதல்வர் பொறுப்புக்கு வந்ததும் தன்னை இனி எவரும் கேள்வி கேட்க முடியாது என மாணவர்களை பலசமயம் மிரட்டும்போது குறிப்பிட்டுள்ளார். அந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சாதிப்பற்றாளர் என்பதற்கு சான்றாக சென்னை மற்றும் கும்பகோணம் ஓவியக் கல்லூரிகளில் முதல்வர் பொறுப்புகளில் உள்ள அவரின் இனத்தைச் சார்ந்த மனோகரன் (சென்னை), சந்திரசேகரன் (கும்பகோணம்) ஆகியோர் சாதி ரீதியான வன்முறைகளை நிகழ்த்தி இருப்பது கலைக்கல்லூரி வரலாற்றில் அதிர்ச்சியளிக்கு இருண்ட காலமாகும். இச்சூழல் தொடர்ந்தால் வளரும் மாணவர் சமுதாயம், இதுவரை சாதி பாகுபாடு பார்க்காமல் இருந்த ஓவியக்கல்லூரிகளின் நிலைமாறி சாதியக் குழுக்களாக, பிரிந்து வன்முறை சூழலுக்குத் தள்ளப்படும் அவலம் நிகழும். இவ்வன்முறைச் சம்பவங்களுக்குப் பின்புலமாக இருந்து காவலர்களை ஏவிய ஐ.ஏ.எஸ். அதிகாரி மீதும் அவரின் அடி வருடிகளாக செயல்படும் மனோகரன், சந்திரசேகரன் ஆகியோரின் சாதிய செயல்பாடுகளை தடுத்து நிறுத்திடவும் மாணவர்களின் பல்லாண்டுகால நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவாக கைகோர்க்க அழைக்கிறோம்.
மேலும், இந்திய கலைச்சூழலில் மிக முக்கிய ஆளுமையான ஓவியர் சந்ரு அவர்களையும் இச்சம்பவத்தில் உள்நோக்கத்துடன் காவல்துறையினரால் அவமானப்படுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளார். இது சம்பந்தமாக படைப்பாளிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் தங்களின் கருத்துகளை பதிவுசெய்ய தோழமையுடன் அழைக்கிறோம்.
இவண்
அரசினர் கவின்கலைக் கல்லூரிகளின்
இந்நாள் மற்றும் முன்னாள் மாணவர்கள்

0 comments:

Post a Comment