06 March 2010

பேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 1

Posted by Gunalan Lavanyan 5:34 PM, under | No comments



சென்னை மெரினா கடற்கரையில் அணையா விளக்கு எரிய தூங்கிக்கொண்டிருக்கும் அண்ணா, வரலாற்று சிறப்புகளுக்குரிய காஞ்சி மாநகரில் 1909 செப்டம்பர் 15 அன்று பிறந்தார். அவருக்கு பெற்றோர் வைத்த பெயர் அண்ணாதுரை. தந்தை நடராஜன் - தாய் பங்காரு அம்மாள். நடுத்தர நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அண்ணாவுக்கு ராஜாமணி என்கிற சித்தி இருந்தார். இவருக்கு அண்ணா என்றால் அளவுகடந்த பிரியம். இவர்தான் அண்ணாவை வளர்த்தார். அண்ணா இவரை அன்போடு ‘தொத்தா’தான் என்று அழைப்பார்.


கல்வி
காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆரம்பப்பள்ளியில் ஆறு வயதில் அண்ணா சேர்க்கப்பட்டார். அந்தக்காலத்தில் ஆண் பிள்ளைகளுக்கும் குடுமி வைத்து, காது குத்தி, கடுக்கன் போடுவார்கள். அண்ணா குடுமியுடன்தான் பள்ளிக்குச் செல்வார். மாணவர்கள் எல்லோரும் கிராப்பு வெட்டி வரும்போது, தான் மட்டும் குடுமி வைத்திருப்பது அவருக்குப் பிடிக்கவில்லை. இந்த விஷயத்தை எப்படியாவது தொத்தாவிடம் சொல்ல வேண்டும். தானும் கிராப்பு வெட்டிக்கொள்ள வேண்டும் என்று துடியாகத் துடித்தார். அவரின் ஆசை ஒருநாள் பலித்தது. தொத்தாவிடம் சொன்னார். தொத்தா தலையாட்டினார். மாணவன் அண்ணாதுரை கிராப்புத் தலையுடன் பள்ளிக்குச் செல்லத் தொடங்கினார்.

காஞ்சிபுரத்தில் பள்ளிப் படிப்பை முடித்த அண்ணா சென்னை வந்தார். 1928-ம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார். அப்போது பச்சையப்பன் கல்லூரி அமைந்தகரையில் இருந்தது. கல்லூரி படித்துக்கொண்டு இருக்கும்போதே 1930-ல் ராணி அம்மாவை திருமணம் செய்தார். இடைநிலை (இன்டர் மீடியட்) வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றார். அதிக மதிப்பெண் பெற்றும், மேல் படிப்பு படிக்க அண்ணாதுரைக்கு வசதி இல்லை. கல்லூரி முதல்வர் சின்னத்தம்பி அண்ணாவின் நிலையை அறிந்தார். அண்ணாவின் மேல்படிப்புக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் தான் செய்து தருவதாகக் கூறினார். அண்ணாதுரை பி.ஏ. ஹானர்ஸ் படிக்க வழிவகுத்துக் கொடுத்தார்.

பேச்சாளர்
1931-லிருந்து மூன்று ஆண்டுகள் அண்ணா மேற்படிப்பு படித்தார். அந்த நாட்களிலேயே சமூகச் சிந்தனைகள் அவருக்கு வரத்தொடங்கியிருந்தன. கல்லூரி நாட்களில் பாடப்புத்தகங்களோடு சமூகச் சிந்தனை அளிக்கும் புத்தகங்களையும் அண்ணா படித்தார். கன்னிமரா நூலகமே கதியென்றுக் கிடந்தார். கட்டுரைகள் எழுதினார். வாய்ப்பு வரும்போதெல்லாம் தமிழிலும், ஆங்கிலத்திலும் உரையாற்றினார். அன்றைய நாட்களில் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த சொற்பொழிவுக் கூட்டங்களில் அண்ணா பேசினார். அவர் பேச்சு மக்களை ஈர்த்தது. மாணவர்கள் அண்ணாவின் பேச்சை பற்றி பேசத்தொடங்கினர். அண்ணா பேசுகிறார் என்றால், கூட்டம் அலைமோதியது. இப்படி கல்லூரி நாட்களிலேயே எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் வளர்ந்த அண்ணா 1935-ம் ஆண்டு எம்.ஏ. பட்டம் பெற்றார்.

மொழிபெயர்ப்பாளர்
அந்தக்காலத்தில் நீதிக் கட்சியைச் சேர்ந்தவர்கள் மேடைகளில் ஏறிவிட்டால் ஆங்கிலத்திலேயே பேசுவார்கள். சர்.ஏ.ராமசாமி முதலியார், தொழிலாளர் தலைவர் பாசுதேவ் போன்றோர் சரளமாக ஆங்கிலத்தில் பேசும்போது அவர்களின் மொழி ஏழை மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் புரியாது. அதனால், ஒரு மொழிபெயர்ப்பாளர் தேவைப்பட்டார். அதுபோன்ற கூட்டங்களில் மொழிபெயர்ப்பாளராக இருக்கும் வாய்ப்பு அண்ணாவுக்கு வந்தது. காலப்போக்கில் பாசுதேவ் பேசுகிறார் என்றால், அங்கு அண்ணாதுரையும் இருப்பார் என்று மக்கள் புரிந்துகொண்டனர். கடல்மடை திறந்த அண்ணாவின் தமிழைக் கேட்க மக்கள் அலையலையாகக் கூடினர். நாளடைவில் நீதிக் கட்சியோடு அண்ணாவுக்கு நெருக்கம் அதிகமானது.

அந்தநேரத்தில் சென்னை நகரசபைக்கு தேர்தல் வந்தது. நீதிக் கட்சி அண்ணாவை வேட்பாளராக அறிவித்தது. பெத்து நாயக்கன் பேட்டையில் அண்ணா போட்டியிட்டார். காங்கிரஸ் தரப்பில் மா.சுப்பிரமணியம் நிறுத்தப்பட்டார். பலத்த போட்டி. காங்கிரஸ் சார்பாக சத்தியமூர்த்தி, திரு.வி.க., சீனிவாசராவ் என்று காங்கிரஸின் பிரசார பீரங்கிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் இறங்கினர். அவர்களுக்கு ஈடுகொடுத்து அண்ணா மக்களிடம் பிரசாரம் செய்தார். தான் வெற்றிபெற்றால் மக்களுக்கு என்னவெல்லாம் நன்மைகள் கிடைக்கும் என்று எடுத்துச் சொன்னார்.

ஒரு பிரசாரக் கூட்டத்தில், ‘சேரிகளில் மின்சார விளக்குகள் இல்லை. ஆனால், நகரசபைக் கோயில்களில் இரண்டு அலங்கார விளக்குகள் போடுவது ஏன்?’ என்று அண்ணா கேள்வி எழுப்பினார். ஏழை மக்களின் நலனுக்காக அண்ணா பேசிய இந்தப் பேச்சை காங்கிரஸ்காரர்கள், ‘அண்ணாதுரைக்கு ஓட்டுப் போட்டால், கோயில்களின் முன் இருக்கும் அலங்கார விளக்குகளை எடுத்துவிடுவதாக பேசியிருக்கிறார். அதனால், அவருக்கு வாக்களிக்காதீர்கள்’ என்று மக்களிடம் திரித்துப் பிரசாரம் செய்து, துண்டு பிரசுரங்கள் வெளியிட்டனர். காங்கிரஸ்காரர்களின் இத்தகைய சூழ்ச்சிகளில் மக்கள் சிக்கிவிட்டார்கள். அதனால், தேர்தலில் அண்ணா தோல்வி கண்டார். (தொடரும்...)

0 comments:

Post a Comment