26 March 2010

பேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 5

Posted by Gunalan Lavanyan 7:12 PM, under | 1 comment

அண்ணாவுக்கு தோல்வி
1962-ம் ஆண்டு வந்தது. தமிழகத்துக்கு பொதுத் தேர்தல். அடுத்த யுத்தம் தொடங்கியது. இந்தமுறை தி.மு.க. 142 இடங்களில் போட்டியிட்டது. பெரியார் தி.மு.க-வுக்கு எதிராகப் பிரசாரம் செய்தார். ஆனால், பிரசார மேடைகளில் அண்ணா பெரியாரை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. தமிழக அரசியல் தலைவர்கள் புருவம் உயர்த்தினர். இந்தத் தேர்தலில், முன்பு தி.மு.க. வெற்றி பெற்றிருந்த இடங்களில் காங்கிரஸ் தீவிர பிரசாரம் செய்தது. விளைவு அந்த இடங்களில் தி.மு.க-வுக்கு தோல்வி. அண்ணாவும் தோல்வியைத் தழுவினார். ஆனால், வேறொரு வகையில் தி.மு.க. உற்சாகம் பெற்றது. புதிதாக, அதேநேரத்தில் முன்பைவிட அதிகமாக 50 இடங்களில் வெற்றி பெற்றது. இருந்தும் அண்ணாவின் தோல்வி தம்பிகளிடத்தில் சற்று அயர்ச்சியை உண்டாக்கித்தான் இருந்தது.

ஆனால், அண்ணா துவளவில்லை. ‘நான் தோற்றதால் தோல்வி என்னை அழுத்திவிடும் என்று நினைக்காதீர்கள். ஓர் அண்ணாதுரைக்கு பதிலாக ஐம்பது அண்ணாதுரைகளை அனுப்பிவைக்கிறேன்’ என்று தம்பிகளை உற்சாகப் படுத்தினார். இருந்தும் தொண்டர்கள் ஓயவில்லை, அண்ணாவை பாராளு மன்றத்துக்கு அனுப்பிவைத்தனர். அண்ணா எம்.பி. ஆனார். பாராளுமன்றத்தில் திராவிடநாடு கோரிக்கையை அவர் வலியுறுத்திப் பேசினார்.

இந்தச் சூழலில் இந்தியா ஒரு புதிய சோதனையை சந்தித்தது. 1962 - இந்தியாவின் எல்லைப் பகுதிகளை சீனா ஆக்கிரமிக்கத் தொடங்கியது. இந்தப் பிரச்னை ஓயும்வரை திராவிடநாடு கொள்கையை கைவிடுவதாக அண்ணா அறிவித்தார். அடுத்தடுத்த ஆண்டுகளில் தி.மு.க-வின் வளர்ச்சி அபாரம்! மாநகராட்சி மற்றும் நகராட்சித் தேர்தல்களில் பெரும் வெற்றி!


முதல்வரானார் அண்ணா
அடுத்த திட்டத்துக்கு அண்ணா கட்சியை தயார்படுத்தினார். 1967-ல் தமிழகத்துக்கு பொதுத் தேர்தல். அதற்கு ஓர் ஆண்டு முன்பாகவே தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார். புதிதாக வியூகம் அமைத்தார். தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட எதிர்கட்சிகள் இருந்தன. அனைத்து கட்சிகளையும் ஒன்று திரட்டினார். காங்கிரஸுக்கு எதிராக வலுவான கூட்டணி தயார்! தேர்தலுக்காக தமிழகத்தில் அமைக்கப்பட்ட முதல் கூட்டணி இதுவே. வெற்றிக்கு இதுமட்டும் போதும் என்று அவர் நினைக்கவில்லை. அதனால், மற்றுமொரு திட்டத்தையும் செயல்படுத்தினார். தமிழகம் முழுவதிலும் தி.மு.க. வேட்பாளர்களையே நிறுத்தாமல், தொகுதிப்பங்கீடு செய்தார். அனைத்து எதிர்க்கட்சிகளும் காங்கிரஸை எதிர்த்து களம் கண்டன. ஆனால், காங்கிரஸ் இந்தச் செயல்பாடுகளை மதிக்கவில்லை. அண்ணாவின் திட்டம் பலிக்காது என்று நினைத்தது.

ஆனால், காங்கிரஸ் நினைப்பில் விழுந்தது மண்! உணவுத் தட்டுப்பாடும், விலைவாசி ஏற்றமும் இருந்துவந்த நேரம் அது. தேர்தல் பிரசாரத்தில் அண்ணா மக்களுக்கு ஒரு வாக்குறுதியை அளித்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் ரூபாய்க்கு மூன்று படி அரிசி வழங்கப்படும் என்று அறிவித்தார். ஏற்கெனவே மக்களின் அமோக ஆதரவைக் குவித்துவந்த தி.மு.க-வுக்கு இந்த வாக்குறுதி கைகொடுத்தது. தேர்தலில் காங்கிரஸ் வெறும் 49 இடங்களை மட்டுமே பிடித்தது. தி.மு.க. மொத்தம் 138 இடங்களில் வெற்றி பெற்று வாகை சூடியது. அதன் கூட்டணிக் கட்சிகள் 40 இடங்களை வென்றன. பெரும்பான்மையுடன் தி.மு.க ஆட்சி அமைத்தது. அண்ணா தமிழக முதல்வரானார். கழக உடன் பிறப்புகளான அவரது தம்பிகள் இரா.நெடுஞ்செழியன், மு.கருணாநிதி, க.அன்பழகன் போன்றோர் முக்கிய அமைச்சர் பொறுப்புகளை ஏற்றனர். இந்த வெற்றில் எம்.ஜி.ஆரின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் அண்ணாவின் தளபதியாக இருந்த மு.கருணாநிதி தமிழகத்தின் அடுத்த முதல்வராகும் தகுதிகளோடு வளர்ந்து கொண்டிருந்தார்.

நாடகமும் சினிமாவும்
அண்ணாவின் வாழ்க்கையிலும், அவரது வளர்ச்சியிலும் நாடக - சினிமா உலகுக்கு முக்கியப் பங்குண்டு. அவரது சமூக நாடகங்களும், திரைப்படங்களுக்கு அவர் எழுதிய கதை-வசனங்களும் மக்கள் மத்தியில் ஓர் எழுச்சியை ஏற்படுத்தின; சமூகத்தில் அதிர்வை உண்டாக்கின. அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்டுவந்த அதேவேளையில் கலைத்துறையிலும் அண்ணாவின் பங்களிப்பு கோலோச்சிக்கொண்டு இருந்தது. ‘தணிக்கை ஏதும் செய்யாமல் இருந்தால், ஒரே திரைப்படத்தின் மூலம் ஆட்சியைப் பிடித்துவிடுவேன்’ என்று ஒருமுறை அண்ணா கூறினார். அதனால், ஒரே படத்தின் மூலமாக, அரசியலில் அவரால் திருப்பத்தை ஏற்படுத்த முடியவில்லை என்பதை உணரமுடியும். ஆனால், தி.மு.க.வின் வளர்ச்சிக்கும், தேர்தலில் தி.மு.க. மகத்தான வெற்றி பெற்று, அண்ணா முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கும் நாடகமும் சினிமாவும் திருப்புமுனையாக அமைந்தன.

அண்ணா, நாற்பதுக்கும் மேற்பட்ட ஓரங்க நாடகங்களை எழுதினார். ‘குடியரசு’ பத்திரிகையில் வெளிவந்த ‘காங்கிரஸ் வாலா’ என்ற நாடகம்தான் அண்ணா எழுதிய முதல் ஓரங்க நாடகம். இதைத் தவிர எட்டு பெருநாடகங்களை அவர் எழுதியிருக்கிறார். இவற்றில் சில திரைப்படங்களாகவும் பின்னர் எடுக்கப்பட்டன.
சந்திரோதயம், சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் அல்லது சந்திரமோகன், வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி, காதல் ஜோதி, சொர்க்கவாசல், பாவையின் பயணம் போன்றவை அண்ணாவின் எட்டு பெரிய நாடகங்கள். இதில் ‘ஓர் இரவு’ நாடகம் ஒரே இரவில் எழுதப்பட்டு மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற நாடகம். அதேபோல, நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமியால் அரங்கேற்றப்பட்ட ‘வேலைக்காரி’ நாடகம், நூற்றுக்கணக்கான நாட்கள் நடத்தப்பட்டு மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. ‘நல்லதம்பி’ - சிரிப்பூட்டி சிந்திக்கவைக்கும் நாடகம். பின்னர், இது திரைப்படமாக வந்தது. படத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் நல்லதம்பியாக நடித்து மக்களைச் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தார். ‘ரங்கோன் ராதா’ என்ற திரைப்படம் அண்ணாவின் நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். கலைஞர் கருணாநிதியின் திரைக்கதையும் வசனமும் அண்ணாவின் இந்தக் கதைக்கு மெருகூட்டின.

அண்ணா திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன்புவரை படங்கள் முழுக்க வடமொழிச் சொற்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதனால், சில படங்கள் மக்களுக்கு புரியாமல்கூட போனதுண்டு. இந்த நிலையை அண்ணாவின் தமிழும், வசனமும் மாற்றிக்காட்டியது என்று சொல்லலாம். அரசியல் தவிர, தமிழ் திரைப்படத்துக்கும் திருப்புமுனையைத் தந்தார் பேரறிஞர் அண்ணா.
(தொடரும்...)

1 comments:

நல்ல தொடர். தரமாகவும் சுருக்கமாகவும் நிறைவாகவும் உள்ளது.

Post a Comment