20 March 2010

பேரறிஞர் அண்ணா (1909 - 1969) - தொடர் - 3

Posted by Gunalan Lavanyan 2:27 AM, under | 2 comments

திராவிடர் கழகம் உதயம்
சேலத்தில் நீதிக்கட்சி மாநாடு கூடியது. மாநாட்டில் அண்ணா சில தீர்மானங்களைக் கொண்டுவந்தார்: பிரிட்டிஷ் ஆட்சியில் வழங்கப்பட்ட சர், ராவ்பகதூர், திவான் பகதூர், ராவ் சாகிப் போன்ற பட்டங்களைப் பெற்றவர்கள் அவற்றை ஒதுக்கித்தள்ள வேண்டும். இனி அத்தகைய பட்டங்களை யாரும் பெறக்கூடாது. ‘நீதிக் கட்சி’ என்ற பெயருக்கு பதிலாக ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் மாற்ற வேண்டும் - இப்படி பல தீர்மானங்களை அண்ணா முன்மொழிந்தார். இந்தத் தீர்மானங்களுக்கு ‘அண்ணா தீர்மானங்கள்’ என்று பெரியார் பெயர் வைத்தார்.

பட்டம் பதவிகளைத் துறக்க விரும்பாதவர்கள் அண்ணாவின் தீர்மானங்களுக்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்புகளையெல்லாம் மீறி பெரியாரின் ஆதரவோடு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நீதிக்கட்சி என்ற பெயர் மறைந்தது. திராவிடர் கழகம் மலர்ந்தது.

மாநாடு முடிந்தபிறகு, திராவிடர் கழகத்துக்கு மாவட்டங்கள் தோறும் கிளைகள் தொடங்கப்பட்டன. தி.க-வின் செயல்பாடுகளை மக்கள் கவனிக்கத் தொடங்கினர். திராவிடர் கழகம் செல்வாக்குப் பெற்ற இயக்கமாக வளர்ந்தது. இந்த வளர்ச்சிக்காக அண்ணா அயராது உழைத்தார்.

பெரியார் – அண்ணா அறிக்கைப் போர்
இந்த சந்தர்ப்பத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளடக்கிய திராவிடநாடு கோரிக்கையை திராவிடர் கழகத்தினர் முன்வைத்தனர். தி.க.வின் இந்தக் கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை. 1947, இந்தியாவுக்கு சுதந்திரம் தருவதென்று முடிவு செய்யப்பட்டிருந்த நேரம். 1947 ஆகஸ்ட் 6 ‘விடுதலை’ இதழில் பெரியார் ஓர் அதிர்ச்சிகரமான அறிக்கை விடுத்தார்: ‘திராவிட நாடு கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. அதனால், சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ம் தேதியை துக்க தினமாக கடைப்பிடிக்க வேண்டும்’ என்பதுதான் பெரியாரின் அந்த அறிக்கை. பெரியாரின் இந்த முடிவில் அண்ணாவுக்கு உடன்பாடு இல்லை. அதனால், பெரியார் அறிக்கைக்கு தன்னுடைய திராவிடநாடு பத்திரிகையில் அண்ணா எதிர் அறிக்கை விட்டார்: ‘ஆகஸ்ட் 15-ம் தேதி பிரிட்டிஷ் ஆட்சி ஒழியும் நாள். உலகமே பேசக்கூடிய நாள். வரலாற்றில் இடம்பெறும் நாள். ஆகவே, அந்தத் திருநாளைக் கொண்டாடவேண்டும்’ என்று அண்ணா அறிக்கையில் கூறினார்.

சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த அண்ணா எதிர்ப்பாளர்கள், அண்ணாவைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி பெரியாரை திசை திருப்பினர். கழகத்தில் அண்ணா எதிர்ப்புக் குரல்கள் அதிகரித்தன. இந்த எதிர்ப்பை அண்ணா எதிர்பார்த்தார். எதிர்ப்பு வரும் என்பதற்காக, அகில இந்தியாவே கொண்டாடக்கூடிய திருநாளை துக்க நாளாக ஏற்றுக்கொள்ளமுடியுமா? அண்ணாவின் அறிக்கை பெரியாரை கோபம் கொள்ளச் செய்தது. இதன்பிறகு அண்ணாவின் கழகப் பணிகள் சற்று ஓயத்தொடங்கின. அதனால், தி.க-வில் உற்சாகம் குறைந்தது.

இந்தநிலையில் அண்ணாவை சமாதானப்படுத்தும் விதமாக 1948 அக்டோபர் 23 அன்று ஈரோட்டில் சிறப்பு மாநாட்டை பெரியார் கூட்டினார். மாநாட்டில் பேசிய பெரியார், ‘நான் பொதுத்தொண்டில் ஈடுபட்டு நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. எனக்கோ வயது எழுபதுக்கும் மேல். எத்தனை நாட்களுக்குத்தான் என்னால் உழைக்க முடியும்? எனக்குப் பின் அண்ணாதுரையால்தான் கழகத்தை சரியான பாதையில் கொண்டு செல்ல முடியும். எனவே பெட்டிச் சாவியை அண்ணாவிடம் கொடுத்துவிடுகிறேன். இதன்மூலம் தந்தையாகிய யான் என் கடமையைச் செய்துவிட்டேன். இனி தனயனாகிய அண்ணா தன் கடமையைச் செய்ய வேண்டும்’ என்று பேசினார். பெரியார் - அண்ணா கருத்து வேறுபாடு தணிந்தது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால், திடீரென்று நடந்த ஒரு சம்பவம் பெரியார் - அண்ணாவுக்கு இடையில் விரிசலை அதிகப்படுத்தியது.

1949-ம் ஆண்டு பெரியார், மணியம்மையை இரண்டாவது திருமணம் செய்தார். ‘திராவிடர் கழகத்தின் இளம் தலைவர்கள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை; அதனால்தான், கழகத்தையும், கழகத்தின் சொத்துகளையும் பாதுகாக்க இந்த வயதில் இன்னொரு திருமணம் செய்துகொள்கிறேன்’ என்று குறிப்பிட்டார். முன்னதாக அண்ணாவால் மட்டும்தான் கழகத்தைச் சிறப்பாக வழிநடத்த முடியும் என்று கூறியிருந்த பெரியார், இப்போது இப்படிக் கூறுவது கழகத் தொண்டர்கள் மத்தியிலும், அண்ணா ஆதரவாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. பெரியார் எதிர்ப்புக் குரல்கள் ஒலித்தன. அவர்களை அண்ணா அமைதிப்படுத்தினார். ‘ஆவேசமும் ஆத்திரமும் கொண்டால், மக்கள் மத்தியில் கழகத்துக்குத்தான் அவப்பெயர். அதனால், பொறுத்திருங்கள் முடிவெடுப்போம்’ என்று ஆறுதல்படுத்தினார்.

2 comments:

தொடர் குறித்த உங்கள் கருத்துகளை பதிவு செய்யுங்கள்...

அண்ணா பற்றிய உங்கள் பதிவு நல்லாயிருக்குங்...

அப்படியே அண்ணா பாரளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் பேசிய முக்கிய பேச்சுக்களையும் பதியுங்கள்...

Post a Comment