2004 டிசம்பர் 26 அன்று இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் கடல்பகுதியில் அதிகாலையில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 9.1 முதல் 9.3 வரை பதிவான நிலநடுக்கத்தால் சுமார் 100 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்தன. இந்த சுனாமியால் 14 நாடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டன. 2 லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு மேல் காயமடைந்தனர். 44 ஆயிரம் பேர் காணாமல் போயினர். 17 லட்சத்துக்கும் அதிகமானோர் வாழ்விடத்தை இழந்து புலம்பெயர்ந்தனர்.
அதிகம் பாதிக்கப்பட்ட நாடான இந்தோனேசியாவில் மட்டும் 1 லட்சத்து 67 ஆயிரம் பேர் உயிரிழந்தனர். 37 ஆயிரம் பேர் காணாமல் போயினர். தாய்லாந்து, சோமாலியா, மியான்மர் போன்ற நாடுகளில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இலங்கையில் 35 ஆயிரம் பேர் இறந்தனர்.
தமிழ்நாட்டில் சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்டது நாகப்பட்டினம், சென்னைதான். சென்னையில் அன்றைய ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடற்கரையில் நடைப்பயிற்சிக்குச் சென்றவர்கள், தூங்கிக் கொண்டிருந்த மீனவர்கள், கடற்கரையில் கடை வைத்திருந்தவர்கள் என்று நூற்றுக்கணக்கானோரை ஆழிப்பேரலை அள்ளிச்சென்றது.
கன்னியாகுமரி, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, கடலூர், பாண்டிச்சேரி என்று, சென்னை முதல் குமரி வரை கடலோரத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களையும் சூறையாடியது சுனாமி. இதன் தாக்கத்தால் தமிழ்நாட்டில் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். நாகப்பட்டினத்தில் மட்டும் 6 ஆயிரம் பேர் மாண்டனர்.
பல்வேறு மீனவர்கள் சுனாமியில் சிக்கி உயிரிழந்ததால் அவர்களையே நம்பியிருந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இன்றுவரை அந்தத் துயரத்திலிருந்து மீண்டுவரமுடியாமல் தவித்து வருகின்றன.
தமிழகத்தில் ஏற்பட்ட சுனாமி பாதிப்பின் நினைவாக கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சுனாமி நினைவுப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. வருடந்தோறும் சுனாமி நினைவு நாளில் கடலுக்குள் பாலை ஊற்றியும், பூக்களைத் தூவியும் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மீனவர்கள் இன்று ஒருநாள் கடலுக்கு செல்லாமல் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சுனாமிக்குப் பிறகு தமிழ்நாட்டில் உலக வங்கி மற்றும் ஆசிய வங்கி உதவியுடன் 4500 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 13 கடலோர மாவட்டங்களில் உட்கட்டமைப்பு வசதிகள், மறுசீரமைப்பு பணிகளை அரசு மேற்கொண்டது.
சுனாமி மறுவாழ்வுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகள் போதிய வசதியின்றி இருப்பதாகக் கூறி மீனவர்கள் அங்கு குடியேறாத நிலை இன்றும் தொடர்கிறது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ மக்களுக்கு வழங்கப்பட்ட குடியிருப்புகள், நிலங்கள் அவர்களின் பெயரில் இன்னும் பிரித்துக்கொடுக்கப்படவில்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது. சுனாமி குடியிருப்பில் இருந்து வெளியே வருவதற்கு பாலம், சாலை வசதிகள் போதிய வகையில் அமைத்து கொடுக்கப்படவில்லை என்பது வேதனையாக இருப்பதாக மீனவர்கள் தெரிவிக்கிறார்கள்.
இதுமட்டுமின்றி சுனாமியால் உயிரிழந்த, காணாமல்போன பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு இதுவரை முழுமையான நிவாரணம் அளிக்கப்படவில்லை என்பது புகாராக உள்ளது. பிள்ளைகளை இழந்த பெற்றோர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் போல் இருப்பதால் அவர்களுக்கு போதிய மருத்துவ உதவிகளை செய்து பாதுகாக்கவேண்டும் என்ற கோரிக்கையும் மீனவர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இதுதொடர்பாக மீனவர் சங்க பிரதிநிதி நாஞ்சில் ரவியை தொடர்புகொண்டு பேசினோம். சுனாமியால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் கல்விச் செலவை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக அரசு கூறியது என்ன ஆனது என்று நாஞ்சில் ரவி கேள்வி எழுப்புகிறார். சுனாமியால் காணாமல்போன, சிதிலமடைந்த மீன்பிடி படகுகளுக்கு பதிலாக, புதிய படகுகள் வழங்கப்படும் என்ற வாக்குறுதி காணாமல் போய்விட்டதாக குற்றச்சாட்டை அவர் முன்வைக்கிறார்.
மீண்டும் சுனாமி வந்தால், அதிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கும் பாதுகாத்துக் கொள்வதற்கும் மீனவர்களுக்கு என்ன தொடர் பயிற்சி வழங்கப்பட்டு இருக்கிறது என்ற கேள்வியையும் நாஞ்சில் ரவி எழுப்பியிருக்கிறார்.
கடற்கரை ஓரங்களில் அலையாத்திக் காடுகள் உருவாக்குவது, கடற்பகுதியில் செயற்கை பவளப்பாறைகள் அமைப்பது போன்ற நடவடிக்கைகள் என்ன ஆனது என்றும் தெரியவில்லை என்று வேதனையுடன் கூறுகிறார் மீனவர்களின் பிரதிநிதி நாஞ்சில் ரவி.
மறுசீரமைப்பு, மறுகட்டமைப்பு பணிகளுக்காக உலக வங்கி, ஆசிய வங்கிகள் வழங்கிய நிதி என்னென்ன பணிகளுக்காக செலவிடப்பட்டு இருக்கிறது என்று அரசு வெள்ளை அறிக்கைவெளியிட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
மீனவர்களுக்கான குடியிருப்புகள் 300 மீட்டருக்குள் கட்டிக் கொடுக்கப்படும் என்று கூறிவிட்டு பலகிலோ மீட்டருக்கு அப்பால் கட்டி கொடுக்கப்பட்டு இருப்பதாகவும், கட்டப்பட்ட வீடுகளும் சிதிலமடைந்து குடியிருக்கவே தகுதியற்ற வீடுகளாக மாறியிருப்பதாக நாஞ்சில் ரவி கூறுகிறார்.
சுனாமி வந்து 20 ஆண்டுகள் ஆகவுள்ள நிலையில் இன்னமும் மறுசீரமைப்பு, பாதுகாப்பு, தற்காப்புப்பயிற்சிகள் கூட போதிய அளவில் வழங்கப்படாமல் இருப்பது மீனவர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது. மீண்டும் ஒரு சுனாமி வந்தால் என்ன ஆகுமோ என்ற கேள்வியும் அவர்களை வாட்டி வதைக்கிறது.