03 July 2011

அழுமூஞ்சி கேரக்டர் வேண்டாம்: ரேணுகா

Posted by Show Now 12:47 PM, under | No comments


படபடவென்று பேசும் ரேணுகா படு அமைதியாக இருந்தார். “நான் இப்போ ரேணுகா இல்லை... ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை...’ பூங்கோதையின் அம்மா... அதனால், இப்படித்தான் இருக்கணும்...” என்றார். அதுதான் ரேணுகா.

படத்தின் கதாபாத்திரத்துக்குள் தன்னை நுழைத்துக்கொண்டு சுயத்தை மறந்து நடிக்கும் மிகச்சில நடிகைகளில் அவரும் ஒருவர்.

”நான் போட்ட கண்டிஷனே அதுதான். ஏன்னா பத்தோடு பதினொன்னா வந்து நடிச்சுட்டுப் போறதில் என்ன லாபம் இருக்கு சொல்லுங்க... நம்ம பேரு நிக்கற மாதிரி நடிக்கவேண்டாமா..?” என்றவர், நம் கேள்விகளை நிதானமாக உள்வாங்கிப் பேசுகிறார்.

கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்திலிருந்து...

அதனால்தான், அயன் படத்துக்குப் பிறகு இவ்வளவு பெரிய இடைவெளி விட்டீர்களா..?

உண்மையில் அயனுக்குப் பிறகு நல்ல ரோல் எனக்கு கிடைக்கலை. சும்மா வந்துட்டுப் போற கேரக்டர்களில் நடிப்பதில் எனக்கு சுத்தமா இஷ்டம் இல்லை. என் கதாபாத்திரத்தின் பங்கு கதைக்கு கொஞ்சமாவது உபயோகமா இருக்கணும்னு நினைப்பேன். கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தில் என் பேர் சொல்ற மாதிரி நல்ல ரோல் கிடைச்சது, சம்மதிச்சேன்.

அப்பா இல்லாத ரெண்டு பொண்ணுக்குத் தாய். கஷ்டப்பட்டு ரெண்டு பொண்ணையும் கரை சேர்க்க, ஒயர் கூடை பின்னி விக்கிற தாய் என்பதால் என் கதாபாத்திரம் அழுத்தமாக இருந்தது. அந்த சவால் எனக்குப் பிடிச்சிருந்தது.

டிவி தொடர்களில் இப்ப பார்க்கவே முடியறதில்லையே..?

அங்கேயும் இதுதான் பிரச்னை. நல்ல சீரியலுக்காக யாரும் என்னை அணுகலை. பாலச்சந்தர் சாரோட கையளவு மனசு மாதிரி, பிரேமி மாதிரி லைவ்வான சீரியல் என்றால் நிச்சயமாக நடிக்க சம்மதிப்பேன். ஆனால், இப்போ யாரும் அப்படி கதைத் திருப்பங்கள் நிறைந்த சீரியலை எடுக்கறதில்லை. எல்லா சீரியலிலும் கும்பலா நின்னு அழுது மூக்கை சிந்திட்டு எடுக்கற கூட்டம் அதிகமாக இருக்கு. இல்லைன்னா இன்னொரு பக்கம், குடும்பத்தைக் கெடுக்குற மாதிரி ரொம்ப நெகட்டிவ் எண்ணங்களோடு சதி வேலை செய்யும் பெண்கள் இருக்காங்க. எனக்கு இந்த ரெண்டு ஏரியாவுமே பிடிக்கலை. ஏதாவது யூஸ்ஃபுல்லா, மனசுக்கு திருப்தியான கதை வந்தா முயற்சி பண்ணலாம்.சீரியலில் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நடிக்கிற நடிகைகள் இன்னிக்கு பெரிய அளவில் ரீச் ஆகறாங்களே..?

இருக்கலாம்... ஆனா, எனக்கு அதிலே ஆர்வம் கிடையாது. என்னை ரசிப்பதற்கு என்று ரசிகர்கள் டிவி முன்னால் உட்காருவாங்க. அவங்க முன்னால் நான் சதி வேலை செய்யும் நெகட்டிவ் பெண்ணா நிக்கறது நல்லாயிருக்காது. எனக்கு அது பிடிக்கலை. அதனால், நடிக்கமாட்டேன். மற்றவர்களைப் பற்றி எனக்கு சொல்லத் தெரியலை.

டிவிக்கும் சினிமாவுக்கும் என்ன வித்தியாசம்... இது சின்னத்திரை, அது பெரியதிரைன்னு சொல்லிடாதீங்க..?

திரை மட்டும் வித்தியாசம் இல்லை. டிவியிலே நடிச்சா தினமும் மக்கள் பார்த்துட்டே இருப்பாங்க. சினிமாவுலே நடிச்சா அப்படி முடியாது. அதைவிட முக்கியம் சினிமாவைவிட டிவியிலே நடிக்கிறதுலே நிறைய ரசிகர்கள் கிடைக்கிறாங்க. உலகத்துலே எல்லா நாடுகளிலும் இப்ப டிவி தொடர்களை பார்க்க முடியுங்கிறது டிவி நடிகர்களுக்கு ப்ளஸ். வெளிநாடுகளுக்குப் போய் நிகழ்ச்சியிலே கலந்துக்கும்போது, நிறையபேர் நான் நடிச்ச நாடகங்களைப் பார்த்துட்டு என் கேரக்டர் பத்தி பேசும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கும்.

டிவி இன்னிக்கு பவர்ஃபுல் மீடியமா மாறியிருக்கு. அதனாலேயே டிவி.யில் நடிக்கும்போது கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டியிருக்கு.

சினிமா நிகழ்ச்சி, டிவி நிகழ்ச்சி போன்ற பொது நிகழ்ச்சி எதுக்கும் வரமாட்டேங்குறீங்களே..?

ரெண்டுத்துலே இருந்தும் நான் எப்பவும் தள்ளி இருக்கிறேன். வரக் கூடாதுங்கற எண்ணமெல்லாம் கிடையாது. ஆனால், நடிப்பைத் தாண்டி இன்னும் சில வேலைகளும் கடமைகளும் எனக்கு இருக்கறதால் அந்த விழாக்களுக்கு ஒதுக்கவேண்டிய நேரத்தை என் கடமைகளுக்கு ஒதுக்கிடறேன்.

அப்படி என்ன கடமைகள்..?

என் கணவர் குழந்தைகளுக்கான எளிதாக கணிதம் கற்பது, விளையாட்டுக் கல்வி முறையைக் கற்றுத் தரும் நிறுவனம் ஒன்றை நடத்துகிறார். அவர் நடத்துற எஜுகேஷன் இன்ஸ்டிடியூஷனை நானும் கவனிச்சுக்கிறேன்.

அதில் உங்களுடைய பங்களிப்பு என்ன..?

நானும் தினமும் அந்தப் பள்ளிக்கூடத்துக்குச் செல்கிறேன். என் கணவருக்கு நிர்வாகத்தில் உதவி செய்கிறேன். குழந்தைகளோடு பொழுதைக் கழிக்கும்போது வரும் சந்தோஷம் எல்லையில்லாதது. படங்களில் நடித்து விருது வாங்கும் சந்தோஷத்துக்கு நிகரானது. அதனால், அதை மிஸ்பண்ண மாட்டேன்.

கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்துக்குப் பிறகு மறுபடியும் பிரேக்தானா?

அதை நான் தீர்மானிக்கப் போவதில்லை. கதாநாயகியின் அம்மாவாக இந்தப் படத்தில் எனக்கு வலுவான கேரக்டர் கிடைத்தது. அதனால், என் வேலைகளைத் தாண்டி உடுமலைப்பேட்டையிலும் பழனியிலும் தங்கியிருந்து நடித்தேன். நடிப்புக்காக நான் என் வேலைகளை மாற்றியமைத்துக் கொள்ளக்கூடத் தயாராகத்தான் இருக்கிறேன். ஆனால், அதற்கு ஏற்ற கதாபாத்திரம் கிடைக்க வேண்டும்.

அம்மா வேடம்... கொஞ்சம் அழுமூஞ்சியாக இருந்தால் போதும் என்று சொன்னால் நான் ஒப்புக்கொள்ள மாட்டேன்.

ஆனால், இப்போது கதைகளின் பக்கம் திரும்பியிருக்கும் தமிழ் சினிமா நம்பிக்கை தரக்கூடியதாக இருக்கிறது. நிச்சயமாக எனக்கு வாய்ப்பு கிடைக்கக் கூடிய வகையில் நிறைய கதைகள் வரும் என்று நம்புகிறேன்... அதற்கு இந்த கிருஷ்ணவேணி பஞ்சாலை நல்ல ஆரம்பமாக இருக்கும் என்று நினைக்கிறேன்” என்ற ரேணுகா, ஷாட் ரெடி என்றதும் கிருஷ்ணவேணி பஞ்சாலை பட நாயகியின் அம்மாவாக மாறி தளத்துக்குள் சென்றார்!

- சா.இலாகுபாரதி

படங்கள்: ஸ்டில்ஸ் ராபர்ட்
நம் தோழி,  ஏப்ரல் 2011

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு