24 January 2010

சாவுக்கு அஞ்சுபவர்கள் சத்தியமாக படிக்க வேண்டாமே!

Posted by Gunalan Lavanyan 12:58 AM, under | No comments

மரணக் குறிப்புகள்...

நேற்று காலை முழுக்க
என் வீட்டு
தோட்டத்தையே
சுற்றிச்சுற்றி வந்த
பட்டாம்பூச்சி
இன்று அந்த
அடர்ந்த முட்புதரில் சிக்கி
உயிர் நீத்துக் கிடந்தது.

சாலையின்
குறுக்கும் நெடுக்குமாய்
போய் வந்துகொண்டிருந்த
நாய்க் குட்டி
ஏதோ வாகனத்தின்
டயர் பதிந்த
அடையாளத்தோடு
நசுங்கிக் கிடந்தது.

சிலந்தி பின்னிய
வலையின் இடையே
ஈயின் மரணம்.
பிறிதொரு நாளில்
வீட்டை ஒட்டடை அடித்ததில்
நசிங்கிப்போனது
ஈயும் வலையும்.

சாலையோர மரத்தை
வெட்டிச் சாய்ந்ததில்
கூடு உடைந்து
சிதறிப்போனதிலிருந்து
செத்துக் கிடந்தது
காக்கைக்குஞ்சு.

மகுடியின் நாதத்திற்கு
படமெடுத்து ஆடும் பாம்பு
ஒரு நாளில்
மரக்கிளையில் தொங்கியபடி
நாதமில்லாது ஆடிக்கொண்டிருந்தது
காற்றோடு.

இப்படி
எல்லா நேரங்களிலும்
எல்லா இடங்களிலும்
ஏதோவொரு வகையில்
நிகழ்ந்துவிடுகிறது
மரணம்
யாருக்காகவும் எதற்காகவும்
காத்திருப்பது இல்லை.
நாம் எல்லோரும்
காத்திருக்கிறோம்
மரணத்திற்காக.

- சா.இலாகுபாரதி

2005-ல் 'கூட்டாஞ்சோறு' சிறுபத்திரிகை நடத்திய பரிசுப் போட்டியில் தேர்வு பெற்ற கவிதை.

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு