01 May 2011

ஃபோட்டோகிராஃபர்களும் அன்னா ஹசாரேவும்

Posted by Gunalan Lavanyan 9:15 AM, under | No comments

புகைப்படக் கலையில் ஆர்வமும் தாகமும் உள்ள நண்பர்கள் ஒன்றிணைந்து ஒரு அமைப்பாக இயங்கி வருகிறார்கள். இப்படியொரு அமைப்பை முதன் முதலில் தென்னிந்தியாவிலேயே பெங்களூருவில்தான் தொடங்கி யிருக்கிறார்கள். பெங்களூருவில் உள்ள BWS (Bangalore Weekend Shoot) நண்பர்களின் இயக்கத்தை ஃபிளிக்கர், ஃபேஸ்புக் போன்ற தளங்களில் பார்த்த சென்னை நண்பர்கள் சிலரும் CWC (Chennai Weekend Clickers) என்று ஆரம்பித்து இயங்கிவருகிறார்கள். இதனால் ஒரேநேரத்தில் ஒரே இடத்தில் ஏராளமான புகைப்படக் கலைஞர்கள் சந்தித்து ஒரே காட்சிகளைப் பல்வேறு கோணங்களில் சுட்டுத்தள்ளுகிறார்கள். அவர்களுடைய சங்கமத்தையும் பங்களிப்பையும் பார்க்கும்போது புகைப்படக்கலையில் ஆர்வமும் ஆசையும் உள்ள யாருக்கும் அந்த இயக்கத்தில் தன்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றத்தான் செய்யும்.

அப்படி, இந்த ஞாயிறு CWC நண்பர்களை சந்தித்தேன். பெங்களூருவில் உள்ள BWSலிருந்து முரளிதரன் அழகர் வந்திருந்தார். தமிழர்தான். மென்பொருள் துறையில் உயர்பதவியில் இருக்கும் முரளிதரனுக்கு புகைப்படக் கலையில் வேட்கை அதிகம். அவரோடு பேசிக் கொண்டிருந்தபோது, இப்படியொரு அமைப்பு இயங்கிவருவதாகத் தெரிவித்தார். உடனே அந்த நண்பர்களை சந்திக்க வேண்டும் என்று கூறினேன். சென்னை வரும்போது நிச்சயம் அறிமுகப்படுத்துவதாகக் கூறினார்.


அப்படித்தான் இந்த மே தினத்தில் ஜனத்திரளில் மெரினா கடற்கரையில் CWC சங்கமத்தை அறிமுகப்படுத்தினார். பல்வேறு துறைகளில் இயங்கிக்கொண்டு புகைப்படக் கலையில் ஆர்வம் உள்ள பலரை அப்போது சந்திக்க முடிந்தது. எல்லாரும் சின்ன குழந்தைகளாக மாறி கேமாராவை தூக்கிக்கொண்டு ஓடிக்கொண்டு இருந்தார்கள்.

இன்னொருபக்கம் காந்தி சிலைக்கு அருகில் மனிதச் சங்கிலி அமைத்து இருந்தார்கள். எல்லாருடைய கைகளிலும் தேசிய கொடி. அவர்களைப் பார்த்ததும் இன்னைக்கு என்ன நாள் என்றே சற்று குழப்பமாக இருந்தது. கண்ணை ஸூம் பண்ணி பார்த்தால் இந்திவாலாக்கள், சிங், தமிழர், தெலுங்கர், மலையாளி, மார்வாடிகள் என்று எல்லா தரப்பு மக்களும் கைகோர்த்து நின்று கொண்டு, பாரத் மாதாக்கி ஜெய்! அன்னா ஹசாரேக்கி ஜெய்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்! வந்தே மாதரம்... என்று கோஷம் எழுப்பிக்கொண்டு இருந்தார்கள். அதைக் கேட்கும்போது இன்னொரு சுதந்திரவேள்வி ஆரம்பித்துவிட்டதா என்று தோன்றியது; மெய்சிலிர்த்தது! ஊழலுக்கு எதிரான இயக்கத்தினர் லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி மனிதச் சங்கிலி நடத்தினார்கள்.

I am in CWC group


அன்னா ஹசாரே பற்றி ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு கொள்கை வைத்திருக்கின்றன. நான் இடதுசாரிகளின் நிலைப்பாட்டை ஆதரிப்பதால், அன்னா ஹசாரே பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை. ஆனால், இன்று அம்பலப்பட்டு நிற்கும் பல ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டுவந்ததில் கம்யூனிஸ்டுகளுக்கு முக்கியப் பங்கு உண்டு.

0 comments:

Post a Comment