23 November 2013

பறவைகள் பறப்பதில்லை


பறவைகள் பறப்பதில்லை கொட்டுகின்றன
வானத்திலிருந்து சடசடவென கொட்டுகின்றன
பூமியைத் தொட்டுத் தொட்டு முத்தமிடுகின்றன
மரங்களையும் மலைகளையும் கட்டியணைக்கின்றன
ஆறுகளில் படுத்து, உருண்டுப் புறண்டு தவழ்கின்றன
ஏறிக் குளங்களில் தங்கி வாழ்கின்றன
பிற உயிர்கள் யாவையும் வாழவைக்கின்றன
நாக்கு வறண்டு துடித்துக்கொண்டிருக்கும் நிலங்களின் தாகம் தணிக்கின்றன
பறவைகள் என பறப்பவற்றை கூடுகளுக்குள் சிறைவைக்கின்றன
குழந்தைகளின் காகிதக் கப்பல்களை தோளில் சுமக்கின்றன
பறவைகள் கொட்டிமுடிந்தால் வானத்தில் ஏழு வண்ணக் கொடி பறக்கும்
பூமியில் மனிதக் கண்களில் மகிழ்ச்சி ஒளி பிறக்கும்
பறவைகள் பறப்பதில்லை கொட்டுகின்றன!

- சா.இலாகுபாரதி

04 November 2013

முடி உதிர்வை தடுக்க முடியாதா?

Dr MURUGU SUNDARAM
முடி பிரச்னை பலருக்கு முடியாத பிரச்னையாகவே இருக்கிறது. முடி உதிர்தல், இளமையில் வெளுக்கும் நரை, பொடுகு, பேன் என்று தலைமுடிக்குத்தான் எத்தனை எத்தனை சோதனைகள். அதேபோல தொட்டதெற்கெல்லாம் தோலில் அலர்ஜி ஏற்படுவதும் பலருக்கும் சகஜமாகிவிட்டது. ஆனால், ‘இந்த இரண்டுமே பெரிய பிரச்னைகள் இல்லை’ என்கிறார் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பிரபல சரும மற்றும் ரோம நோய் நிபுணர் டாக்டர் முருகுசுந்தரம். அவரிடம் T20 கேள்வி பதில்கள்.

1. முடி ஏன் உதிர்கிறது?
பொதுவாக பொடுகு, ஹார்மோன் குறைபாடு போன்ற காரணங்களால் முடி உதிரும். டைபாய்டு, மலேரியா போன்ற நீண்டநாள் வாட்டும் காய்ச்சல் வந்தால்கூட முடி உதிரும். அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்களுக்கும், பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கும் முடி உதிர்வு ஏற்படும். பலருக்கு மன உளைச்சல் காரணமாகத்தான் முடி உதிர்கிறது. மனப் பிரச்னைகள் இல்லாமல் இருந்தாலே, இதைத் தவிர்க்கலாம். அதேபோல புகைப் பிடிப்பது மற்றும் புகையிலைப் பொருட்கள் உபயோகிப்பதாலும், மது அருந்துவதாலும்கூட முடி உதிர்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.

2. மற்ற காரணங்களால் ஏற்படும் முடி உதிர்வைத் தவிர்ப்பது எப்படி?
இரும்புச் சத்து, கால்சியம், புரதச் சத்து நிறைந்த சமச்சீரான உணவை எடுத்துக்கொண்டால் முடி உதிர்வையும் தடுக்கலாம்; இளநரை ஏற்படாமலும் தடுக்கலாம்.

3. தலையில் பேன் வருவதைத் தடுக்க முடியுமா?
நிச்சயமாக முடியும். தினமும் தலைக்கு குளித்து சுத்தமாக இருந்தாலே பேன் உருவாகாது. குறைந்தபட்சம் ஒருநாள் விட்டு ஒருநாளாவது தலைக்குக் குளித்தால் தலையில் அழுக்கு சேராது. அழுக்கு சேர்வதைத் தடுத்தாலே பேன் வராது.

4. பொடுகு ஏன் உண்டாகிறது?
நம் தலையில் எண்ணெய் சுரப்பிகள் உண்டு. ஒவ்வொரு முடியின் வேரிலும் இது இருக்கும். இந்த எண்ணெய் அதிகமாக சுரக்கும்போது ஒருவித பூஞ்சை உருவாகி, எண்ணெயில் வேதி மாற்றம் ஏற்பட்டு, அரிப்பு வரும். பிறகு தோல் செதிலாக வந்து பொடுகு ஏற்படும். சாதாரண ஷாம்பு போட்டு தினமும் தலைக்கு குளித்தாலே பொடுகு காணாமல் போய்விடும்.

5. முடி உதிர, பொடுகு எப்படி காரணமாகிறது?
முடியின் வேர்க்கால்களில் பொடுகு அழற்சியை ஏற்படுத்துகிறது. இதனால், முடி பலவீனமடைந்து கொட்டுகிறது. இதை ஆரம்பத்தில் கவனிக்காமல் விட்டால், வழுக்கை விழும் அபாயம் உள்ளது.

6. வேறென்ன காரணங்களால் வழுக்கை விழுகிறது?
மரபணு காரணமாகவும், ஆன்ட்ரோஜன் ஹார்மோன் தாக்கத்தாலும் வழுக்கை விழும்.

7. வழுக்கையைத் தடுக்க முடியுமா?
சிகிச்சை மூலமாக நிச்சயமாக முடியும். அதையும் மீறி விழுந்தால், முடி மாற்று (Hair Transfer) சிகிச்சை செய்துகொள்ளலாம்.

8. முடியின் ஆரோக்கியத்துக்கு வெறும் தேங்காய் எண்ணெய் போதுமா?
தேங்காய் எண்ணெய் மட்டுமல்ல... எந்த ஷாம்பு, க்ரீமும் முடியின் ஆரோக்கியத்துக்கு உதவாது. அழுக்கு சேராமல் தலையை சுத்தமாக வைத்துக்கொள்வதுதான் தலைமுடியின் ஆரோக்கியத்துக்கு உகந்தது.

9. தேவையற்ற இடங்களில் முடிவளர்வதை எப்படித் தடுப்பது?
ஆன்ட்ரோஜன் ஹார்மோன் ஆதிக்கம் இருந்தால் அளவுக்கு மீறிய முடி வளர்ச்சி இருக்கும். லேசர் சிகிச்சை மூலம் தேவையற்ற முடியை நீக்கமுடியும். மரபுவழியாக வளரும் தேவையற்ற முடியை நீக்கமுடியுமே தவிர, வராமல் தடுக்கமுடியாது.

10. தோல் அலர்ஜி ஏன் ஏற்படுகிறது?
உடலிலேயே இருக்கிற அலர்ஜி, வெளியிலிருந்து வரக்கூடிய தொடுபொருள் அலர்ஜி என்று இரண்டு வகையாக இது ஏற்படுகிறது.11. உடலிலேயே இருக்கிற அலர்ஜி என்பது என்ன?
சிலருக்கு சொறிந்தாலே தோல் தடிப்பாகும், சிவந்துபோகும். பால் பொருட்கள், அசைவ உணவுகள், கொட்டை, கிழங்கு வகைகள் உட்கொண்டால் அலர்ஜி ஏற்படும். இது உடலிலேயே இருக்கிற அலர்ஜி.

12. தொடுபொருள் அலர்ஜி?
சிலருக்கு தோல் பொருட்கள், குங்குமம், மஞ்சள், நிக்கலால் செய்யப்பட்ட கவரிங் நகைகள், வாசனை திரவியங்கள் உபயோகிப்பதால்கூட அலர்ஜி ஏற்படும். இது வெளியிலிருந்து  வரக்கூடிய தொடுபொருள் அலர்ஜி.

13. இதைத் தடுப்பது எப்படி?
உடலுக்கு எது ஒப்புக்கொள்ள வில்லையோ, அதைத் தவிர்ப்பதுதான் அலர்ஜியைத் தடுக்க ஒரே வழி.

14. வெண்புள்ளி ஏன் ஏற்படுகிறது?
தோலுக்கு நிறத்தைக் கொடுக்கும் நிறமி செல் உடல் முழுக்க இருக்கிறது. எந்தப் பகுதியில் இந்த செல் செயலிழக்க ஆரம்பிக்கிறதோ, அந்தப் பகுதியே வெள்ளையாகிவிடும். இதற்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை அளித்துவிட்டால் பழைய நிறத்தைக் கொண்டுவரமுடியும். உடலின் மற்ற பகுதிகளும் வெள்ளையாகாமல் தடுக்கவும் முடியும்.

15. இதற்கு சூரிய ஒளி உதவுமா?
சூரிய ஒளியில் இருக்கக் கூடிய சில புற ஊதாக் கதிர்கள் இந்த செல்களுக்கு உயிர் கொடுக்கின்றன. அதனால், சூரிய ஒளி உடலில் படுவது மாதிரியான உடை அணிவது நல்லது. அதேநேரத்தில் உடலுக்குக் கேடு விளைவிக்கக்கூடிய கதிர்களும் சூரிய ஒளியில் இருப்பதால், மருத்துவரின் ஆலோசனையோடு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

16. வெண்புள்ளியை தடுக்கும் சிகிச்சை என்ன?
போட்டோ தெரபி என்கிற சிகிச்சை இருக்கிறது. இந்த சிகிச்சையை வாரம் மூன்றுமுறை எடுத்துக்கொள்வதன் மூலம் பழைய நிறத்தைக் கொண்டுவர முடியும்.

17. எதனால் நிறமி செல் செயலிழக்கிறது?
எந்தக் காரணத்தால் அது செயலிழக்கிறது என்பது இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

18. சிலருக்கு செதில் செதிலாக தோல் உதிர்கிறதே...
அதற்குப் பெயர் சோரியாசிஸ். ‘ஆட்டோ இம்யூன் ரெஸ்பான்ஸ்’ எனும் நமது உடல் செல்கள் தன்னைத்தானே அழித்துக்கொள்கிற நிலை ஏற்படும்போதுதான் தோல் செதில் செதிலாக உதிர்கிறது.

19. விளக்கமாகச் சொல்லுங்கள்...
தினமும் நம்முடைய தோல், நம் கண்ணுக்குத் தெரியாமலேயே உதிர்ந்து புதுத் தோல் உருவாகிறது. (பழைய தோல்தான் அழுக்காக வெளியேறுகிறது) இந்த சுழற்சி நின்றுபோகும்போதுதான் சோரியாஸிஸ் ஏற்படுகிறது.

20. இதைத் தடுப்பது எப்படி?
தோலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அளவுக்கு பிரஷ் உட்பட எந்த நாரையும் உபயோகித்துக் குளிக்கக் கூடாது. அமிலத் தன்மை நிறைந்த சோப்புகளை உபயோகிப்பதையும் தவிர்க்க வேண்டும். PH 5.5 இருக்கிற சோப்பு பாதுகாப்பானது. அதேபோல உடலை அறுக்கிற ஆடைகளை தவிர்த்து, பருத்தி ஆடைகளை அணிந்தால், சோரியாசிஸ் வருவதை ஓரளவு தடுக்க முடியும்.