17 October 2013

தீராத தலைவலி தீராதா?

”தலையோடு பிறந்தால் தலைவலி வந்தே தீரும் என்று சொல்வார்கள். அதற்காக வாழ்நாள் முழுக்க அதை சகித்துக்கொண்டு வாழப் பழக வேண்டும் என்பது இல்லை. தலைவலியை எப்படி எதிர்கொள்வது; வராமல் எப்படித் தடுப்பது என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும் ” என்கிறார் சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் நரம்பியல் துறை முதன்மைப் பேராசிரியர் டாக்டர் தெய்வீகன். தலைவலி மட்டுமின்றி இன்னும் நரம்பு சார்ந்த வரக்கூடிய பல பிரச்சினைகள் பற்றியும் அலசுகிறார் அவர்.

1 நரம்பு பிரச்னைகளால்தான் தலைவலி வருகிறதா...?
தலைவலிக்கு நரம்பு பிரச்னையும் ஒரு காரணம்.

2. பொதுவாக என்ன காரணங்களால் தலைவலி வருகிறது...
ரத்தக் கொதிப்பு, டென்ஷன் காரணமாகத்தான் பெரும்பாலும் தலைவலி வருகிறது. 30 முதல் 60 சதவீதம் பேருக்கு கண்டுபிடிக்கப்படாத ரத்தக் கொதிப்பு இருக்கிறது. அதைக் கண்டுபிடித்து சரியான உணவு, வாழ்க்கை முறைகளைக் கடைப்பிடித்தாலே தலைவலி வராது. அதேபோலத்தான் டென்ஷனும். அதிகமான வேலைப்பளு, ஒரே நேரத்தில் பல விஷயங்களில் கவனம் செலுத்துதல், மன அமைதியின்மை போன்றவற்றைத் தவிர்த்தாலே டென்ஷன் தலைவலியை விரட்ட முடியும்.

3. ரத்தக் கொதிப்பு, டென்ஷன் தலைவலிகளின் அறிகுறிகள் என்ன?
ரத்தக் கொதிப்பு தலைவலி வருகிறவர்களுக்கு தலை பாரமாக இருக்கும்; மயக்கமாக இருக்கும். டென்ஷனால் வருகிற தலைவலி என்றால், தலையின் பின்புறம் வலி இருக்கும், கழுத்துப் புறத்திலும் வலி இருக்கும். டென்ஷனால் தலைவலி ஏற்படும்போது டீ, காபி அருந்துவதால் அவற்றில் இருக்கும் வேதிப்பொருள் வலியை மறக்கடித்து காணாமல் போகச் செய்யும்.

4. பார்வைக் குறைபாடு இருந்தால்கூட தலைவலி வருமா?
நிச்சயமாக! கண்ணாடி அணியாமல் இருப்பதாலோ, தலைவலி வரும்போது மட்டும் கண்ணாடி அணிவதாலோகூட இந்தத் தலைவலி அதிகமாகும். இப்படிப்பட்டவர்களுக்கு கண்ணைச் சுற்றிலும் வலி இருக்கும். தலையின் பின்பகுதியிலும் வலி ஏற்படும். பார்வைக் குறைபாடு காரணமாக ஏற்படும் தலைவலிக்கு கண்ணாடிதான் சரியான தீர்வு. தூங்குகிற நேரம் தவிர, மற்ற எல்லா நேரங்களிலும் கண்ணாடி அணிந்தே இருக்க வேண்டும்.

5. சைனஸ் பிரச்னை இருப்பவர்களுக்கும் தலைவலி வருமா?
முகத்தில் இருக்கிற நுண் துளைகளில் சளி அடைத்துக்கொள்ளும்போதுதான் சைனஸ் ஏற்படுகிறது. இதனால், முகத்தில் அதிகமாக வலி இருக்கும். கீழே குனிந்தால் வலி அதிகமாகும். இதை பலர் தலைவலி என்று புரிந்துகொள்கிறார்கள். ஆனால், சைனஸ் இருந்தால் தலையும் வலிக்கும்.

6. ஒற்றைத் தலைவலியால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?
இந்த ஒற்றைத் தலைவலி என்கிற மைக்ரேன் ரொம்ப தொந்தரவு கொடுக்கக்கூடியது. பலரும் இதனால்தான் அவதிப்படுகிறார்கள். விடியற்காலை தூங்கிக்கொண்டு இருக்கும்போதே தலை வலிக்க ஆரம்பிக்கும்; தூங்கவிடாது. நெற்றிப்பொட்டு, முன் மண்டையில் அதிக வலி இருக்கும். வலி அதிகமாக இருக்கும்போது கண் பார்வை மங்கிப்போகும். குமட்டல் இல்லாமல் வாந்தி வரும். வாந்தி எடுத்தவுடன் தலைவலி படிப்படியாகக் குறையும். இயல்பான வாழ்க்கைமுறையில் மாற்றம் இல்லாமல் பார்த்துக்கொண்டாலே இந்தத் தலைவலி வராது. உணவு விஷயத்திலோ, வாழ்க்கை முறையிலோ மாற்றம் ஏற்பட்டால் தலைவலி தாக்கும்.

7. இதற்கு சிகிச்சை என்ன?
மைக்ரேன் தலைவலிக்கு சிகிச்சையே கிடையாது! சாக்லெட், க்ரீம், பர்க்கர், பீட்ஸா போன்ற சில உணவுகள் சாப்பிட்டால் உடனே தலைவலி வரும். அதனால், இவற்றைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல, மைக்ரேன் இருக்கக்கூடியவர்களுக்கு தலைவலி வரப்போவது முன்கூட்டியே தெரிந்துவிடும். அறிகுறிகள் தெரியும்போது மாத்திரை சாப்பிட வேண்டும். தவறினால், நாள் முழுக்க வலி பாடாய்ப் படுத்தும். 45 வயதுக்குப் பிறகு தானாகவே மைக்ரேன் காணாமல் போய்விடும்.

8. சிலருக்கு தொடர்ந்து நாள்கணக்காக தலை வலிக்கிறதே?
இதற்குப் பெயர் க்ளஸ்டர் (Cluster) தலைவலி. இது ஒருவாரம், பத்துநாள் என்று நாள் கணக்காக தொடர்ந்து இருக்கும். இந்தத் தலைவலி வருபவர்களுடைய கண் சிவப்பாகும். சளி பிடித்த மாதிரி மூக்கடைப்பு ஏற்படும். அதனால் சிலர் ‘சைனஸ் தலைவலி` என்று தவறாகப் புரிந்துகொள்வார்கள். எந்தத் தலைவலியையும் தாமாகவே தீர்மானித்துக்கொள்ளக் கூடாது மருத்துவர் ஆலோசனைப்படியே சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.

9. மூளையில் ஏற்படும் பாதிப்புகளால்கூட தலை வலிக்குமா?
இப்படி மூளையில் ஏற்படும் பாதிப்புகளால் வரக்கூடிய தலைவலியை ‘Thunderclap headche` என்பார்கள். மூளையின் ரத்தக் குழாயில் கட்டி இருப்பதால் இந்தத் தலைவலி ஏற்படும்.

10. இதன் அறிகுறிகள் என்ன?
இப்பை இருப்பவர்களுக்கு இடி இடிப்பது மாதிரி வலி இருக்கும். புறமண்டையில் அடிப்பதுபோல் வலிக்கும். பிறகு தலையே வெடித்துவிடும்போல் ஆகிவிடும். அப்புறம் சிறிது நேரத்தில் நினைவு இழந்துபோகவும் செய்யலாம். இந்தமாதிரி அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக நரம்பியல் மருத்துவரை அணுகியே தீரவேண்டும். ஆனால், இதைவிட இன்னொரு பெரிய தலைவலியும் இருக்கிறது.


11. அது என்ன?
இந்தத் தலைவலியை கிளாக்கோமா (Glaucoma) என்பார்கள். இதைக் கண்டுபிடிக்காமல் விட்டுவிட்டால், பார்வைக் குறைபாடு ஏற்படும். இந்த வலி கண்ணுக்குள்ளேயே இருக்கும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் அலட்சியம் செய்யும்போது பார்வையின் தன்மை குறைந்துகொண்டே போகும். கடைசியில் பார்வை ரொம்ப குறுகலாகப் போய்விடும்.

12. சாதாரணமாக வரக்கூடிய தலைவலியின் தன்மை எப்படி இருக்கும்?
எந்தத் தலைவலியையும் சாதாரணமானது என்று கவனிக்காமல் இருந்துவிடக் கூடாது. ஒவ்வொரு தலைவலிக்கும் தனித்தனியான அறிகுறிகள் இருக்கின்றன. தலைவலிக்கு எதற்கு டாக்டரைப் பார்ப்பது என்று சிலர் சுயமருத்துவம் செய்துகொள்வார்கள். நிச்சயமாக அது கூடவே கூடாது.

13. வலிப்பு நோய் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்தானா?
அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. 15 வகையான வலிப்பு நோய்கள் இருக்கின்றன. அவை அத்தனைக்கும் நரம்பியல் சிறப்பு மருத்துவர்கள் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும்.

14. வலிப்பு வந்தவர்களிடம் இரும்பு கொடுத்தால் சரியாகிவிடுமா?
வலிப்பு வரும்போது இரும்பு கொடுப்பார்கள். வலிப்பும் நின்றுபோகும். இரும்பு கொடுத்த காரணத்தால்தான் நின்றுபோனது என்று நினைத்துக்கொள்வார்கள். ஆனால், இரும்பே கொடுக்காமல் இருந்தாலும் வலிப்பு நின்றுதான் போகும். சாதாரணமாக வலிப்பு 3 நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. அதனால், இரும்பு கொடுப்பதால் நிச்சயமாக வலிப்பு சரியாகாது.

15. அப்படியென்றால், வலிப்பு வந்தவர்களுகு செய்யவேண்டிய முதலுதவி என்ன?
நல்ல காற்றோட்டம் இருப்பது மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டும். தலையை ஒருபக்கமாக பிடித்துக்கொள்ள வேண்டும். வலிப்பு இருக்கும்போது இரும்பு மட்டுமல்ல... கூர்மையான எந்தப் பொருளையும் கையில் கொடுக்கக் கூடாது. அது அவருக்கு மட்டுமல்ல... அருகில் உள்ளவருக்கும் காயம் போன்ற ஆபத்தை ஏற்படுத்தும். ஆடைகள் இறுக்கமாக இருந்தால் தளர்த்திவிட வேண்டும். வலிப்பு நின்றவுடன் அவருக்கு உணவோ, தண்ணீரோ கொடுக்கக் கூடாது. நினைவு திரும்ப 10 முதல் 60 நிமிடங்கள் வரைகூட ஆகலாம்.

16. எதனால், வலிப்பு வருகிறது?
70 சதவீதம் வலிப்புகளுக்கு காரணமே கிடையாது. அதனால், ஸ்கேன் பரிசோதனை செய்தாலும் நார்மலாக இருக்கும். EEG பரிசோதனை செய்தாலும் நார்மலாக இருக்கும். பெரும்பாலும் மூளையில் உள்ள செல்களில் வேதிப் பொருட்கள் பற்றாக்குறை காரணமாகவே வலிப்பு ஏற்படுகிறது. 10 சதவீதம் பேருக்கு பிறவியிலேயே மூளையில் ஏற்படும் தழும்பு மூளைக்கு போய்வரும் ரத்தப் போக்குவரத்தை குறைப்பதாலும், இன்னும் 10 சதவீதம் பேருக்கு மரபுரீதியாகவும் ஏற்படுகிறது.

17. தலையில் அடிபட்டால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்?
சாதாரணமாக தலையில் அடிபட்டால் வலி இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு தலையில் வலியைத் தவிர வேறு அறிகுறிகள் தெரியாது.

18. தலையில் எப்படிப்பட்ட காயம் ஆபத்தானது?
அடிபட்ட பிறகு சிலர் நினைவு  இழப்பார்கள். சிலருக்கு வாந்தி வரும். சிலருக்கு வலிப்பு ஏற்படும். இன்னும் சிலருக்கு காது, மூக்கு, தொண்டையிலிருந்து வாய் வழியாக ரத்தம் வரும். இல்லையென்றால் கை, கால்களிலோ, முகத்திலோ நரம்புகள் செயலிழந்துபோகும். கடுமையான தலைவலி இருக்கும். இப்படிப்பட்ட அறிகுறி இருப்பவர்கள் உடனடியாக சி.டி. ஸ்கேன் எடுத்து சிகிச்சை பெற வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கும் மூளை சுருக்கம் இருப்பதால் தலையில் உள்ள எலும்புக்கும் மூளைக்கும் இடைவெளி அதிகமாக இருக்கும். அதனால் 3 நட்களுக்குப் பிறகு நினைவிழக்க ஆரம்பிப்பார்கள்.

19. மூளைக் காய்ச்சல் வராமல் தடுக்க முடியுமா?
தடுப்பூசி போடுவதால் தடுக்கலாம். ஆனால், குழந்தையாக இருக்கும்போது போடுகிற தடுப்பூசி வாழ்நாள் முழுக்க போதுமானது அல்ல. மூளைக்காய்ச்சல் பரவும்போதெல்லாம் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும். பெரும்பாலும் வைரஸ், பாக்டீரியாவால்தான் மூளைக்காய்ச்சல் ஏற்படுகிறது. அதனால், சுகாதாரமாக இருந்தாலே இது வராது. அதேபோல காசநோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அவர்களுக்கு எளிதாக மூளைக்காய்ச்சல் வரலாம்.

20. மறதி எதனால் ஏற்படுகிறது... அதை தடுப்பது எப்படி?
மன அழுத்தம் ஏற்படுவதாலும், வயதாக ஆக மூளைக்குப் போகும் ரத்த ஓட்டம் குறைவதாலும், மூளை சுருக்கம் ஏற்படுவதாலும் மறதி ஏற்படுகிறது. அதிகமாக வாசிப்புப் பழக்கம் கொள்வதன்மூலமும், வாசித்ததை மற்றவர்களோடு பேசி உரையாடுவது மற்றும் கற்றுக்கொடுப்பதன் மூலமும் மறதி ஏற்படுவதைத் தடுக்கலாம், குறைக்கலாம். ஆனால், Dementia, Multi Infarct Dementia (மூளையில் உள்ள ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதால் வரும் மறதி) போன்றவற்றுக்கு சிகிச்சை கிடையாது.
- நம் தோழி, 2012 ஜனவரி

15 October 2013

பேச்சிலர்களுக்கான சமையல் குறிப்பு - 1

Posted by lavanyan gunalan 6:23 PM, under | No comments

வேலை (வெட்டி)க்கு போய் ரூமுக்கு வந்தால் கொலை பசி எடுக்கிறதா...
அவசரத்துக்கு சோறு மட்டும் வடித்துக்கொண்டு, கை பச்சைப்புளி கரைத்து குழைத்து அடித்தால் அமிர்தமாக இருக்கும்.
ஆனால், இதையே இதனமும் உட்கொண்டால் புளி ரத்தத்தை சுண்டச் செய்துவிடும்.
ஆடிக்கு ஒருக்கா... அம்மாவாசைக்கு ஒருக்கா உட்கொள்ளலாம்...

கை பச்சைப்புளியா பேரே வித்தியாசமா இருக்கு என்றுதானே யோசிக்கிறீர்கள்...
வேலூர் மாவட்டத்தில் கைப்பச்சைப்புளி ரொம்ப பேமஸ்...

கை பச்சைப்புளி செய்வது எப்படி?


தேவையான பொருட்கள்
(ஒரு வேளைக்கான அளவு)

புளி - நெல்லிக்காய் அளவு
பச்சை மிளகாய் - 3
பெரிய தக்காளி - 1
பெரிய வெங்கயம் - 1
உப்பு, கரிவேப்பிலை, கொத்துமல்லி, தண்ணீர் தேவையான அளவு. நல்லெண்ணெய் ஒரு மேஜை கரண்டி.

செய்முறை

புளியை சிறிது நேரம் தண்ணீரில் ஊரவிடவும், பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும். பிறகு ஊறவைத்துள்ள புளியை நன்றாக கரைத்துக்கொண்டு, புளி தண்ணீரை வடிகட்டி, சக்கையை நீக்கிவிடவும்.
பின்னர், கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரில், நறுக்கி வைத்துள்ளவற்றை கொட்டி ஒரு கலக்கு கலக்கவும். அதில் உப்பு, கொத்தமல்லி, கரிவேப்பிலையை கிள்ளி போட்டால் கை பச்சைப்புளி தயார்.
நல்லண்ணெயை என்ன செய்வது என்றுதானே கேட்கிறீர்கள்? சோற்றில் கை பச்சைப்புளியை ஊற்றி கலக்கும்போது நல்லெண்ணையையும் ஊற்றி கலந்து உட்கொண்டால், பச்சை மிளகாவின் காரமும் தெரியாது. நல்லெண்ணையும் உடலுக்கும் நல்லது.
அவசரத்தில் செய்து பார்த்து சாப்பிட்டு அசத்துங்கள்....