07 December 2011

மதுர கீதமான கீதம் மதுரம்

Posted by Gunalan Lavanyan 3:10 PM, under | No comments


காற்றோடு கலந்துவரும் பனி மாதிரி இசையோடு கலந்துவிட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பாடல்களுக்காகவே ஒரு இசை உற்சவம் நடந்தால் எப்படி இருக்கும்?! ராக சஞ்சாரத்தில் அந்த அரங்கமே லயித்து பிரமித்துப்போய்விடும் இல்லையா?! அப்படியொரு இசை நிகழ்ச்சியை ‘கீதம் மதுரம்’ என்ற பெயரில் ‘உத்சவ் மியூஸிக்’ அமைப்பு சென்னை பாரதிய வித்யாபவனில் கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸோடு இணைந்து நடத்தியது. நவம்பர் 17 மாலை 6.30 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி ரெண்டு மணிநேரம் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்திருந்தது. மார்கழி இசைத் திருவிழா களைகட்டுவதற்கு முன்பாகவே முழுக்க முழக்க 5 பெண் பாடகிகள், 4 பெண் வாத்தியக்காரர்களே நடத்திய இந்தக் கச்சேரியில் அன்&ப்ளக்டு பாடல்களாக பல்லவி ஒரு சரணம் என்று ஒரு பாட்டுக்கும் இன்னொரு பாட்டும் பாலம் கட்டினார்கள். ஒவ்வொரு பாட்டுக்கும் அவ்வளவு அப்ளாஸ். இசை ஞானமே இல்லாதவர்களுக்குக்கூட எம்.எஸ்.ஸின் பாடல்களைக் கேட்டால் இசையார்வம் பிறந்துவிடும் என்பதற்கு இந்த நிகழ்ச்சி பெரிய உதாரணம்.


இந்தக் கச்சேரி நடத்திய பாடகிகள் ஐவரையும் அழைத்து டிசம்பர் சீஸனுக்கு ஒரு வெள்ளோட்டம் விட்டோம்:

சைந்தவிதான் கலகலப்பாக ஆரம்பித்தார்.... ‘‘ஏம்ப்பா இந்த சீஸன்லே யார் யார் என்னென்ன கச்சேரி பண்ணப்போறீங்க...’’

‘‘எதுக்குடீ கேக்குற...’’ - கிருத்திகா.

சைந்தவி, ‘‘இல்லை, எனக்கு புரோக்ராம் இல்லாத தேதியா இருந்தா அந்தக் கச்சேரிக்கெல்லாம் வரலாம்னு ஒரு உத்தேசம்... அதான்...’’

‘‘ஹோ... குட்! சைந்தவி உன்னோட பரந்த மனப்பான்மையை நினைச்சு நெக்குருகி போய்ட்டேன்... மத்தவங்களோட கச்சேரியையும் கேக்கணுங்கிற எண்ணா எல்லா ஆர்டிஸ்டுக்கும் வராதுப்பா.... அது உனக்கு இருக்குன்னா ஐ அப்ரிஷேட் யூ’’ மானசி பிரசாத்!

சைந்தவி முகத்தில் வெட்கப் புன்னகை, ‘‘ஐயோ அக்கா, ரொம்ப பாராட்டாதீங்க... சரி உங்க புரோக்ராம் எப்போன்னு சொல்லுங்கோ...’’

மானசி பிரசாத், ‘‘டிசம்பர் 13லே மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ்ல ஒரு கச்சேரி இருக்கு. 19 பம்மல் சபா, 20 உனக்கேத் தெரியும் கீதம் மதுரம் சென்னையில் திருவையாறுல பண்ணப்போறோம். 28 சென்னை ஃபைன் ஆர்ட்ஸ்ல ஒரு கச்சேரி இருக்கு. அவ்வளவுதான்... உன்னோடது...’’

‘‘கீதம் மதுரம் நிகழ்ச்சிக்கு முந்தைய நாள் அதே சென்னையில் திருவையாறுல ஒரு புரோக்ராம் இருக்கு. 21 ராஜா முத்தையா ஹால்லே தமிழிசைக் கச்சேரி, அப்புறம் விக்கு விநாயகம் சாரோட பிள்ளைங்க நடத்துற சாபாவுக்காக பார்த்தசாரதி கோயில்ல 27ம் தேதி ஒரு கச்சேரி, அதேபோல ஹரே ராமா ஹரே கிருஷ்ணா அமைப்பும் ஒரு கச்சேரி சொல்லியிருக்காங்க... அதனாலே உங்களோட கச்சேரிக்கும் என்னோட கச்சேரிக்கும் எங்கயும் கிளாஷ் ஆகல. முடிஞ்சா அவசியம் உங்க கச்சேரியை கேக்க வர்றேன்.’’

‘‘ஆமா சைந்தவி உன்னோட கச்சேரி தவிர மத்தவாளோட கச்சேரிக்கும் போய் கேக்குற பழக்கம் உனக்கு இருக்கே. அது கச்சேரியை கேட்க போறதோட சரியா, இல்லை சபா கேன்டீலயும் போய் ஒரு வெட்டு வெட்டுவியா...’’ என்று இடையில் புகுந்துவந்தார் ஸ்மிதா மாதவ்.

‘‘நானும் அதையேதான் கேட்க நினைச்சேன் நீயே கேட்டுட்டேடீ...’’ என்று ஆரம்பித்தார் சாஸ்வதி பிரபு.

‘‘ஐயோ இப்படி எல்லாரும் சேர்ந்து அவளை வாராதீங்க அக்கா’’ என்று சப்போர்ட்டுக்கு வந்த கிருத்திகாவிடம், ‘‘அவங்க என்னை வாரினா வாரிட்டு போட்டோம்டீ... முன்னாடியெல்லாம் சபாவுக்கு போனா மிஸ்பண்ணாமே கேன்டீனுக்கும் போய்ட்டுதான் வருவேன். இப்போல்லாம் அப்படியில்லை. ஆயில் அயிட்டம் உடம்புக்கு ஒத்துக்காதும்மா...’’ என்று கிருத்திகாவின் கன்னத்தை கிள்ளிவிட்ட சைந்தவி, ‘‘உன்னோட கச்சேரி, டான்ஸ் புரோக்ராம் பத்தி நீ சொல்லவே இல்லையே கிருத்தி’’ என்றார்.

‘‘உம்... உனக்கு சொல்லாமே யாருக்கு சொல்லப்போறேன். எங்க அம்மாவோட புரொடக்ஷன்லேயே ஒரு திரையிசை நிகழ்ச்சி இருக்கு அதுல பாட்டும் பரதமும் சேர்ந்து பண்ணப்போறேன்...’’

‘‘அப்படியா... அப்போ கலக்கப்போறேன்னு சொல்லு...’’ என்றார் ஸ்மிதா.

‘‘உன்னைவிடவா! இன்னும் இருக்கு கேளு... இந்த திரையிசை நிகழ்ச்சியே அந்தக் கால மியூஸிக் டைரக்டர் ஜி.ராமநாதன் தொடங்கி நம்ம ஆஸ்கர் வின்னர் ரஹ்மான் சார் வரைக்கும் எல்லாருக்கும் சமர்ப்பணம் பண்ணப்போறோம். இது பாரதகான சபாவுல டிசம்பர் 2ம் தேதி நடக்கப்போறது. அடுத்து டிசம்பர் 7லே பாரத் கலாச்சார்லே முத்தமிழ் மாலைன்னு பாப்புலரான தமிழ் பாடல்களைப் பாடப்போறேன்.’’

‘‘என்ன பாரதியார் பாடல்களா...’’ சாஸ்வதி பிரபு.

‘‘இல்லை. கர்நாடக சங்கீதத்துலேயே கொஞ்சம் லைட்டான பாடல்களை செலக்ட் பண்ணி பாடப்போறேன். இந்தப் பாடல்கள் எல்லாரையும் இம்ரஸ் பண்ணும்.’’

சாஸ்வதி, ‘‘கிருத்திகாவா கொக்கா’’

‘‘கொக்கோ நாரையோ... கிருத்திகாவோட புரோக்ராம் ரெண்டுமோ செம கலக்கலா இருக்கப் போகுது... அப்புறம் ஜெயா டிவியிலே அவ பண்ற தகதிமிதா புரோக்ராம் ரசிகர் பட்டாளமும் கிருத்தி புரோக்ராம் பார்க்க ஆஜராயிடுவாங்க... கலக்குற கிருத்தி!’’ என்று கிருத்திகாவை ஜாலி பண்ணிய சைந்தவி சாஸ்வதி பக்கம் திரும்பி, ‘‘அக்கா, உங்க கச்சேரியைப் பத்தி சொல்லவே இல்லையே...’’

சாஸ்வதி, ‘‘எனக்கும் ரெண்டே ரெண்டு புரோக்ராம்தான் டிசம்பர்ல இருக்கு. ஒண்ணு கிருஷ்ணகான சபாலே டிசம்பர் 26 அன்னைக்கு. இன்னொன்னு கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ்ல 29 பாடுறேன்.’’

‘‘அப்போ நல்ல பக்தி ரசம் சொட்டப் போகுதுன்னு சொல்லுங்க’’ என்றார் ஸ்மிதா.

சாஸ்வதி, ‘‘பக்தி பாடல்கள் இல்லாமே நான் கச்சேரி பண்ணமாட்டேனாக்கும்!’’

ஸ்மிதா, ‘வெரிகுட்... வெரிகுட்...’’

‘‘தேங்க்ஸ் டீ, அப்போ உன்னோட புரோக்ராம் என்ன?’’

‘‘இந்த அரட்டை முடிச்சிட்டு ஒரு நல்ல ஃபில்டர் காபி குடிக்கப்போறேன். அதான் என்னோட புரோக்ராம்’’

‘‘நான் அதை கேக்கலே டிசம்பர் புரோக்ராம்’’

‘‘அதுவா... பாரதிய வித்யாபவன்லே டிசம்பர் 13 பாட்டுக் கச்சேரி, 14 அன்னைக்கு ராணி சீதையிலே கலா ரசனா டான்ஸ், 15 நுங்கம்பாக்கம் கல்சுரல் அகாடமியிலே கச்சேரி, 16 மீனாட்சி காலேஜ்ல டான்ஸ் புரோக்ராம். 20 ஒண்ணு இருக்கு. 31 அன்னைக்கு இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் கச்சேரி ஜெர்மன் ஹால்லே நடக்கப்போகுது. அவசியம் வந்துடுங்க... மிஸ் பண்ணிடாதீங்க! எல்லாரையும்தான் சொல்றேன். சாஸ்வதி அக்காவை மட்டும் அழைக்கிறேன்னு நினைச்சு வராமே இருந்துடாதீங்க!’’

பாண்டியன்
‘‘சரிம்மா இப்போ உன் கச்சேரியை நிறுக்கோ... எல்லாரும் வீட்டுக்கு கிளம்பனோம்’’ என்று வெளியிலிருந்து வந்தார் சர்ச்சில் பாண்டியன்! இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த உத்சவ் அமைப்பின் நிறுவனரான சர்ச்சில் பாண்டியனோடு பேசினேன்:

‘உத்சவ் அமைப்பின் நோக்கமே கர்நாடக இசை பாமரர்களுக்கு போய்ச் சேரணுங்கிறதுதான். 12 வருஷத்துக்கு முன்னாடி தொடங்கிய இந்த அமைப்பு மூலமா இதுவரை கண்ணதாசன், எம்.எல்.வசந்தகுமாரி, எஸ்.ஜானகி, தனஞ்செயன், பாலமுரளி கிருஷ்ணா உட்பட பலருக்கும் இப்படி இசை நிகழ்ச்சி மூலமாவும் நாட்டியாஞ்சலி மூலமாவும் சமர்ப்பணம் பண்ணியிருக்கும். அந்த வகையிலேதான் எம்.எஸ். அம்மாவின் 95வது பிறந்தநாளுக்கு, வளர்ந்து வரும் இளம் தலைமுறை பாடகிகள், வாத்தியக்காரர்களை வைத்து எம்.எஸ்.ஸின் பாடல்களை அன் & ப்ளக்டு பாடல்களாக வழங்க முடிவுசெய்தேன். இந்த கான்செப்டை முடிவு செஞ்சதும் சாஸ்வதி பிரபு, ஸ்மிதா மாதவ், மானசி பிரசாத், சைந்தவி, கிருத்திகா சூரஜித்னு ஐந்து கண்மணிகளிடம் பேசினேன். ‘வாவ்’னு உடனே சம்மதம் சொன்னாங்க! இந்த நிகழ்ச்சி அரங்கேற்றத்துக்காக ஆறு மாசமா ப்ளான் பண்ணி, ராத்திரி பகலா பாடகிகள் உழைச்சிருக்காங்க. அவங்க உழைப்புக்குக் கிடைச்ச நல்ல மரியாதை அரங்கு நிறைந்த ரசிகர்களும் அவங்களோட கைத்தட்டகளும்தான்!’ என்று பாண்டியன் சொல்லிக்கொண்டே போக, மறைந்திருந்து மந்திரப் புன்னகை வீசினார்கள் பாடகிகள்.

பாடகிகள் பயோ-டேட்டா

சாஸ்வதி பிரபு

சாஸ்வதி
குரலில் பக்தி மணம் கமழப் பாடும் சாஸ்வதி லால்குடி ஜெயராமனுடைய மாணவி. 10 வருடங்களுக்கும் மேலாக லால்குடியின் இசைக் கடலில் மூழ்கியவர். அதுமட்டுமல்ல, 50 ஆண்டுகளுக்கும் மேலாக கிருஷ்ண கான சபாவின் செயலாளராக இருந்து மறைந்த யக்ஞனராமன்தான் சாஸ்வதியின் பாட்டனார். இவருடைய அப்பா பிரபு தற்போது கிருஷ்ண கான சபாவின் செயலாளராக இருக்கிறார். அப்பா, தாத்தாவுக்கு இருக்கிற செல்வாக்கைப் பயன்படுத்தாமலேயே சுயமாக முன்னுக்கு வந்துகொண்டிருக்கும் சாஸ்வதி, இந்தியா தவிர ஆசியாவில் உள்ள பல நாடுகளில் கச்சேரி செய்து வருக்கிறார். நிறைய பாடல்களுக்கு கர்நாடக இசை அமைத்து வருகிறார். இதுவரை 5 ஆல்பம் வெளியிட்டு இருக்கிறார். இசைக் குடும்பம், இசை அமைப்பாளர், பாடகி என்று இசையாகவே வாழ்ந்துகொண்டிருந்தாலும் சைக்காலஜி முடித்துவிட்டு பிராக்டிஷனராக இருக்கும் சாஸ்வதியின், இசை மூலம் பல நோய்களை குணப்படுத்த வேண்டும் என்பதுதான். அந்த முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

ஸ்மிதா மாதவ்

ஸ்மிதா
இசை விமர்சகர்கள் மத்தியில் இவருக்கு இன்னொரு பெயர் சின்ன சுதாரகுநாதன். அநாயசமாக உச்சஸ்தாயில் பாடக்கூடியவர். ஹைதராபாத் சகோதரிகள் லலிதா & ஹரிப்ரியாவிடம் இசை பயின்றுவரும் ஸ்மிதாவின் ஊர் வேறு என்னவாக இருக்கமுடியும், ஹைதராபாத்தான். பாடுவதில் மட்டுமல்ல அபியநயத்திலும் ஸ்மிதா கில்லாடி. பரதம் ஆடிக்கொண்டே பாடவும் செய்வார். இந்த இரட்டை சவாரிதான் கண்டம் விட்டு கண்டம் தாண்டியும் பல கச்சேரி வாய்ப்புகளை இவருக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறது. இவர் திறமைக்குப் பின்னணியில் இருப்பது இவருடைய குடும்பம்தான். ‘எங்கள் குடும்பத்திலிருந்து இசைத் துறைக்கு வந்த முதல் பெண் நான்தான்’ என்று பெருமைப்படுகிறார். அதேபோல சிறுவயதில் எம்.எஸ்.ஆனால், பாட்டும் பரதமும் இவரோடு ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் மாதிரி அவ்வளவு சுத்தமாக இருக்கிறது. இசையில் இவ்வளவு ஆச்சார அனுஷ்டானங்களோடு இருக்கும் ஸ்மிதா படித்திருப்பது வக்கீலுக்கு.

மானசி பிரசாத்

மானசி
பெங்களூருவில் பிறந்து வளர்ந்தவர். இவருடைய அம்மா தாராதான் முதல் குரு. பிறகு ஆர்.கே.பத்மாநாபனிடம் பயின்றிருக்கிறார். சென்னைக்கு ஜாகையை மாற்றிவிட்ட பிறகு ஸ்ரீராம் பரசுராம், வி.சுப்பிரமணியத்திடம் இசை கற்றுவருகிறார். சென்னையில் இருந்தாலும் அடிக்கடி பெங்களூருவுக்குப் போய், மிஸீபீவீணீஸீ னீusவீநீ மீஜ்ஜீமீக்ஷீவீமீஸீநீமீ நீமீஸீtக்ஷீமீ என்ற அமைப்புக்கான கட்டுமானப் பணிகளை கவனித்து வருகிறார். கன்னட ஈ டிவி, தூர்தர்ஷன் சேனல்களில் தொகுப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். பல்வேறு நாடுகளில் இவருடைய கச்சேரி களைகட்டியிருக்கிறது. சங்கீத நாடக அகாடமி இவருக்கு மிஸ்மில்லாகான் யுவபுரஸ்கார் விருது வழங்கி கவுரவித்து இருக்கிறது. புகழ்பெற்ற பெங்களூரு ஐஐஎம் இன்ஸ்டிடியூட்டில் எம்.பி.ஏ முடித்திருக்கிறார்.

சைந்தவி

சைந்தவி
தமிழ், தெலுகு, கன்னட மொழிகளில் 650க்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்கள் பாடியிருக்கிறார். தவிர 150க்கும் அதிகமான பக்தி ஆல்பங்களிலும் பாடியிருக்கிறார். 1500க்கும் மேலான மெல்லிசை மற்றும் கர்நாடக கச்சேரிகளில் இந்தியா உட்பட பல நாடுகளில் பாடியிருக்கிறார். கர்நாடக இசைக் கச்சேரிகளில் வளர்ந்து வரக்கூடிய நம்பிக்கை நட்சத்திரம். அதனால், பாரத் கலாச்சார் அமைப்பு இவருக்கு யுவ கலாபாரதி விருது வழங்கியிருக்கிறது. கர்நாடக இசை பயின்றுவருவது போலவே, பி.ராமமூர்த்தி மற்றும் மேக்னா தண்டேக்கரிடம் இந்துஸ்தானி இசை கற்றுவருகிறார். மேற்கத்திய இசைக்கு குரு அகஸ்தியன் பால். சைந்தவியின் ப்ளஸ் தேன் கலந்த குரல்தான்!

கிருத்திகா சூரஜித்

கிருத்திகா
ஜெயா டிவியில் தகதிமிதா நாட்டிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவரும் கிருத்திகாவுக்கு பாட்டு, பரதம் என்று இரண்டு முகங்கள். இவருடைய அம்மா பிரபல பரதநாட்டியக் கலைஞர் ராதிகா சூரஜித். திரைப்பட பின்னணி பாடகியாகவேண்டும் என்பது ஆசை. சைந்தவி இவருடைய பள்ளித் தோழி என்பதால்கூட இருக்கலாம். எஸ்.ஐ.டி.இ. மகளிர் கல்லூரியில் பிஎஸ்ஸி சைக்காலஜி படித்திருக்கும் கிருத்திகா, பரதநாட்டியத்தில் எம்.ஏ. படித்து வருகிறார். அதேபோல பூஷணி கல்யாணராமனிடம் கர்நாடக இசை கற்று வருகிறார். எதிர்காலத்தில் நல்ல பின்னணி பாடகியாக வருவதற்கான வாய்ப்புகள் இவர் குரலில் பிரகாசமாக இருக்கிறது. காரணம், மேடையில் பாடும்போது குரலில் அவ்வளவு தனித்தன்மை.

0 comments:

Post a Comment