15 August 2011

இலங்கையின் முக்கியமான ஆவணங்கள்: ஆர்.ஆர்.சீனிவாசன்

Posted by Show Now 7:21 AM, under | No commentsமைல்கல்: 4

தெரு புகைப்படக் கலைஞர் ஆர்.ஆர்.சீனிவாசன்: 1"மனிதர்களின் உணர்ச்சிகளை
அப்படியே படப்பதிவு செய்ய வேண்டும்.
இதற்கு லைட்டிங் மற்றும்
போட்டோகிராஃபிக்கு உரிய
மற்ற விதிகள் தேவையற்றவை.'
                                                                     - பிரிசோன்


ஆர்.ஆர்.சீனிவாசன்... தெரு புகைப்படக் கலைஞர் (Street Photographer). இதுவரை 30 ஆயிரத்துக்கும் அதிகமான புகைப்படக் காட்சிகளை பதிவு செய்திருக்கிறார். 'காஞ்சனை திரைப்பட இயக்கம்' ஆரம்பித்து தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை திரைப்பட இயக்கத்தை வளர்க்கவே செலவழித்திருக்கிறார். இதுவரை 15 ஆவணப்படங்கள் இயக்கியிருக்கிறார். அதில், தாமிரபரணி நதியில் 17 அப்பாவி தலித்துகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்த ஆவணப்படம் கவனத்துக்குரியது. தமிழகத்தின் முக்கிய ஸ்ட்ரீட் போட்டோகிராஃபர்களில் ஒருவராக வலம் வரும் இவர், தனது பயணத்தை இங்கே பகிர்ந்துகொள்கிறார்...

படப் பிடிப்பில் சீனிவாசன்
"மனிதனுடைய வாழ்க்கையே ஒரு பெரும் புகைப்படம்; அல்லது காட்சிகள் அசைகின்ற மிகப்பெரும் ஆவணப்படம். என்னோட வாழ்க்கையும் அப்படித்தான். போட்டோகிராஃபியிலே நிறைய பிரிவுகள் இருக்கு. ஆனா, குறிப்பிட்ட வகையான காரியத்தைதான் நான் செய்யறேன். நான் எடுக்கிற புகைப்படங்கள், கேன்டிட் போட்டோகிராஃபி, ஸ்ட்ரீட் போட்டோகிராஃபின்னு சின்ன பகுதிதான்.

என்னோட இளம் பிராயத்துலே கிளிக் 3 வகை கேமராவை என் அத்தான் வெச்சிருந்தார். அப்போ அவர் கல்லூரி மாணவர். எனக்கு வயசு பன்னிரெண்டு. அவர் எடுக்கிற புகைப்படங்கள் மேலேயும் அந்த கேமரா மேலேயும் எனக்கு அதீத ஈர்ப்பு இருந்தது. எனக்கு புகைப்படங்கள் மீது இருந்த ஆர்வத்தைப் பார்த்து என் அப்பா அதேமாதிரியான ஒரு கேமரா வாங்கிக் கொடுத்தார். அந்தப் பன்னிரெண்டு வயசுலேயே ஃபோட்டோகிராஃபர் ஆகிட்டேன். அதான் உண்மை. அன்னையிலிருந்து இன்னை வரைக்கும் புகைப்படங்கள் எடுத்துட்டு இருக்கேன்.

அப்போ அந்த கிளிக் 3 கேமராவை எடுத்துகிட்டு எங்கெல்லாமோ பயணம் செய்வேன். சைக்கிளில் பயணிப்பேன். நடந்தும் போவேன். போகிற இடங்களையெல்லாம் என்னோட கேமராவில் கிளிக்கிவிடுவேன். அந்தப் பயணம்; அந்த கிளிக்குகள்... எனக்கு ஒரே பேரானந்தமாக இருக்கும். 17 வயசு வரைக்கும் தொடர்ந்து இதையே செஞ்சிட்டு இருந்தேன். 12-ம் வகுப்பு முடிச்சதும், பி.ஏ. ஆங்கில இலக்கியம் சேர்ந்தேன். அந்தக் காலகட்டத்துல இலக்கியத்து மேலேயும் எனக்கு நிறைய ஆர்வம் வந்தது. அந்த நாட்களில் பாட்டி வீட்டில் வளர்ந்தேன். ரொம்பப் பிரியமா என்னை பாட்டி நடத்துவாங்க. பாட்டிக்கு இருபது, இருபத்தஞ்சு பேரன் பேத்திகள் இருந்தும், என் மேலதான் அதிகப் பிரியம்; பாசம்... திடீர்னு ஒருநாள் பாட்டி இறந்துட்டாங்க. ரொம்ப வயசாகித்தான் இறந்தாங்க. ஆனாலும், அந்த மரணம் பாலை நிலத்தில் இருக்கிற மாதிரியான வெறுமையை எனக்கு கொடுத்துச்சு. பெரிய இழப்பாவும் அது இருந்தது.

பாட்டியின் இறுதிச் சடங்குகள் எல்லாம் முடிஞ்சபிறகு, என் வயசு பையன்களோடு சுத்த ஆரம்பிச்சுட்டேன். இருந்தாலும் அந்தத் துயரத்தை என் மனசு தாங்கலை. என்னை சரிபடுத்திக்கணுங்கிற முயற்சியிலே வேறவேற விஷயங்களைத் தேட ஆரம்பிச்சேன். அந்த நேரத்துலதான், எஸ்.வி.ராஜதுரை நடத்தின 'இனி'ங்கிற பத்திரிகை வந்தது. அந்தப் பத்திரிகையின் அட்டையில் புகைப்படங்கள் வரும். அட்டகாசமான படங்கள். அந்தப் படங்களை எடுத்தவர் 'ஜான் கர்ணாகரன் ஐசக்'ங்கிற யுனைடெட் நேஷன்ஸ் போட்டோகிராஃபர். அந்தப் படங்கள் என்னை ரொம்ப பாதிச்சது. 'இப்படியெல்லாம்கூட போட்டோ எடுக்க முடியுமா..? அவ்வளவு பிரமாதமான கேமராவுல எப்படி ரிசல்ட் வரும்?' - இப்படி கணக்கற்ற கேள்விகள். அதுக்கப்புறம் போட்டோகிராஃபியிலேயே அதிக நேரத்தை செலவழிக்க ஆரம்பிச்சேன்.


'இனி'யிலே இலக்கியம், சினிமா, அரசியல், புகைப்படக் கலை இப்படி எல்லா விஷயங்களும் இருந்தது. அது என்னிடம் பல மாற்றங்களை உருவாக்குச்சு. இலக்கிய ஆர்வத்தை ஏற்படுத்துச்சு. தீவிர இலக்கிய வாசிப்பில் இறங்கினேன். சம்பத்தோட 'இடைவெளி', நாகராஜோட 'நாளை மற்றும் ஒருநாளை' மாதிரியான புத்தகங்களைப் படிக்க ஆரம்பிச்சதும் டோட்டலா என் லைஃப் மாறிடுச்சு. பிறகு, வேறமாதிரியான புகைப்படங்களை எடுக்கத் தொடங்கினேன். வெறுமனே பதிவு பண்றது புகைப்படக்கலை இல்லைன்னு உணர்ந்தேன். நாவல், கவிதை மாதிரி புகைப்படக்கலையும் ஆழமான விஷயம்னு தெரிஞ்சுக்கிட்டேன்.

இதுக்குப் பிறகுதான், எம்.ஏ. (நாட்டார் வழக்காற்றியல்) படிக்க ஆரம்பிச்சேன். அது வேறமாதிரியான புரிதலைத் தந்துச்சு. இந்தக் காலகட்டத்துலே நாட்டார் வழக்காற்றியல், சினிமா, புகைப்படக்கலைன்னு நிறைய விஷயங்களை விவாதிச்சேன்; நண்பர்களோடு பேசினேன். இதுலே என்ன ஒரு பிரச்னைன்னா... கல்லூரிக்குப் போறது, உப்பு சப்பு இல்லாம வாத்தியார் நடத்துற பாடங்களை கவனிக்கிறது. இப்படி அகாடமியான எதுவுமே எனக்கு திருப்தியா இல்லை. சலிப்புதான் அதிகமாச்சு.

படத்தில் நகுலன்
பி.ஏ. படிக்கும்போது 'ஜேம்ஸ் ஜாய்ஸ்'ன்னு ஒர் எழுத்தாளரின் எழுத்துகள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதேமாதிரி கவிஞர் எமிலி டிக்கின்ஸன். இவங்களுடைய கவிதைகள் எல்லாம் என் பாடத்திட்டத்திலேயே இருக்கும். ஆனா, நான் சொன்னமாதிரி வாத்தியார்களுக்கும் அந்தக் கவிதைகளுக்கும் எந்த சம்பந்தமுமே இருக்காது. என்னோட வாழ்க்கையிலே நடக்கிற எல்லா விஷயங்களும் எமிலி டிக்கின்ஸன் கவிதைகளில் இருந்தது. அதேமாதிரி ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதின 'Portrait of the artist as a young man' நாவல்லேயும் என்னுடைய வாழ்க்கை பிரதிபலிச்சது. அதைப் படிக்கும்போது, சம்பந்தமே இல்லாம வாத்தியார் எப்படி இதையெல்லாம் நடந்துறாங்க... அதுலே இருக்கிற விஷயங்களைக்கூட அவங்களாலே உணர முடியலையேன்னு எரிச்சலடைஞ்சேன். இந்த அஜீரணக்கோளாறோடதான் எம்.ஏ. முடிச்சேன்.

படிப்பு முடிஞ்சதும், எந்த வேலைக்கும் போகக்கூடாதுன்னு முடிவு பண்ணேன். அப்படி முடிவு பண்ணதுக்கு முக்கியமான காரணம், 'ஜான் ஐசக்' பேட்டிதான். அந்தப் பேட்டியிலே ஐசக், ரெண்டு மூணு கேமராவை கழுத்திலே மாட்டிக்கிட்டு, கால் மேலே கால் போட்டு போஸ் கொடுத்திருந்தார். 'ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு நாட்டுக்குப் பயணம் பண்ணிட்டே இருப்பேன்'னு சொல்லியிருந்தார். அந்தப் பிம்பம் என் மனசிலேயும் விழுந்தது. இனிமே நாமும் நிறைய நாடுகளுக்கும் ஊர்களுக்கும் டிராவல் பண்ணணும். போட்டோகிராஃபி தவிர, எந்த வேலையும் செய்யக்கூடாதுன்னு முடிவு பண்ணேன். தீவிரமா புகைப்படங்கள் எடுத்தேன்.

அந்த சமயத்துலே பாண்டிச்சேரியில் திரைப்படப் பயிற்சி ஒண்ணு நடந்தது. கேரளாவில் இருந்து வந்திருந்த 'ஒடேசா சினிமா இயக்கம்' அந்தப் பயிற்சிக்கு ஏற்பாடு செஞ்சிருந்தது. ரஷ்யாவில் 'BATTLESHIP PODEMKIN' என்கிற புரட்சி நடந்த ஊரோட பெயர்தான் ஒடேசா. அந்த புரட்சியின் நினைவாகத்தான் 'ஒடேசா'ங்கிற பேர்ல சினிமா இயக்கம் நடந்தது. அந்த இயக்கம் நடத்தின திரைப்படப் பயிற்சி வகுப்புக்காக திருநெல்வேலியில் இருந்து பாண்டிச்சேரி வந்தேன். அங்கே பார்த்த படங்கள், ஒடேசா இயக்க நண்பர்கள், அவர்கள் பழகிய விதம், இப்படி நிறைய விஷயங்கள்... மறுபடியும் என் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துச்சு. இனிமே சினிமாதான் வாழ்க்கைன்னு இன்னொரு முடிவு எடுத்தேன்.

படத்தில் தேவதேவன்
அந்தப் பட்டறையில் 'க்ளாஸ்' என்கிற 20 நிமிஷப் படம் பார்த்தேன். அது நெதர்லாந்து இயக்குனரான 'பெர்த் ஆன்ஸ்ட்ரா'வின் (Berth Aanstra) படம். அந்தப் படத்தோட ஒவ்வொரு ஃப்ரேமையும் நான் எடுத்த மாதிரியே ஃபீல் பண்ணேன். நான் எப்படியெல்லாம் எடுக்கணும்னு நினைச்சிட்டு இருந்தேனோ அப்படியெல்லாம் அந்தப் படத்தோட காம்போசிஷன்ஸ் இருந்தது. அந்தப் பட்டறை முடிஞ்சதும் திருநெல்வேலிக்கு திரும்பினேன். அப்போ, எம்.ஏ ஃபர்ஸ்ட் கிளாஸ்லேயும், லெக்ட்சரர் ஆகுறதுக்கு யுஜிசி எக்ஸாம்லேயும் பாஸாகியிருந்தேன்.

சினிமா கிறுக்கு, புகைப்படக் கிறுக்குன்னு ரெண்டு பெரிய கிறுக்குகளுக்கு மத்தியிலே இதெல்லாம் பெரிய விஷயமாவே எனக்குத் தெரியல. சினிமாவுக்காகவும் போட்டோகிராஃபிக்காகவும் எல்லாத்தையும் விட்டுத்தள்ளினேன். முழு வீச்சா செயல்படணும்னு 1990-ல் 'காஞ்சனை திரைப்பட இயக்கம்' தொடங்கினேன். தொடர்ந்து 10 வருஷம் ஆயிரக்கணக்கான படங்களை திருநெல்வேலியைச் சுற்றியுள்ள ஊர்களில் திரையிட்டேன். கடுமையான உழைப்பு. ஒரு பெரிய பார்ட்டியோட (கட்சி) ஃபுல் டைம் மெம்பர் மாதிரி 24 மணிநேரமும் 'சினிமா சினிமா'ன்னு இயங்கினேன். சாப்பிடாம, வெறும் டீ மட்டுமே குடிச்சிட்டு சினிமாப் பத்தி பேசறது, படம் போடுறதுன்னு இருந்ததிலே அல்சர் வந்துடுச்சு. இன்னைக்கும் அது சரியாகலை!

இப்படி சினிமாவே கதின்னு அலைஞ்சிட்டு இருந்த என்னை, 1997-ல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்துல அழைச்சாங்க. மாணவர்களுக்கு சினிமா, புகைப்படக்கலை பற்றி பாடம் எடுக்கணும்னு சொன்னாங்க. அதனால தொடர்ந்து 2 வருஷம் லெக்ட்சரராக இருந்தேன். நிறைய போட்டோகிராஃபர்ஸ் உருவானாங்க. நிறைய பேர் படம் பண்ணாங்க. ஒரு இயக்கம் மாதிரி இயங்கினேன்.


அந்தக் காலகட்டத்துலேதான் (1999-ல்) தாமிரபரணி சம்பவம் நடந்தது. 17 தலித்துகள் ஆத்துல அடிச்சு கொல்லப்பட்டாங்க. அது குறித்து 'நதியின் மரணம்'னு படம் பண்ணேன். அந்தப் படத்தை எடிட் பண்றதுக்கு சென்னைக்கு வந்தேன். சென்னையில் அந்தப் படத்தை எடிட் பண்ணி ஸ்கிரீன் பண்ணும்போது, போலீஸ் பிரச்னை ஆகிவிட்டது. படம் திரையிடக்கூடாதுன்னு மிரட்டினாங்க. ஒரு மாசம் ஸ்டேஷன்லே வந்து கையெழுத்து போடச் சொன்னாங்க. அதனாலே, சென்னையிலேயே தங்கவேண்டியதாப் போச்சு. அதன்பிறகு அந்தப் படத்தைப் பிரசாரம் பண்றது... அது விஷயமா பேசறதுன்னு நிறைய விஷயங்கள் பண்ணிட்டே இருந்தேன். இதுக்கு இடையிலே புகைப்படக்கலை, ஆவணப்படம், சினிமா எல்லா விஷயங்களையும் உள்ளடக்கி 'அகவிழி'ன்னு பத்திரிகை தொடங்கினேன். ஒரு இதழ் மட்டும் வந்தது. ஆனாலும், எல்லோராலும் பேசப்பட்ட இதழா அது இருந்தது.

இப்படி பத்திரிகைப் பணியும் எனக்கு ஆர்வமா இருந்தது. ஆனா, வெகுஜனப் பத்திரிகைகளில் வேலை செய்யறதில் விருப்பம் இல்லை. என் புகைப்படச் சுதந்திரத்துடன் சமரசம் செய்துகொள்ள விரும்பவில்லை. ஆனா, நான் வொர்க் பண்ற போட்டோகிராஃபியிலும் உண்மையிலேயே கமர்ஷியல் வேல்யூ அதிகம். கோயில், ஆர்க்கியாலஜி, எழுத்தாளர்கள்னு போட்டோ எடுக்கும்போது அது கல்சர் போட்டோகிராஃபியா மாறுது. நான் எடுக்கிற போட்டோஸ் தமிழ்நாட்டோட பண்பாட்டையும், கலாசாரத்தையும் பதிவு செய்யிற மாதிரிதான் இருக்கும். அதாவது, 'சின்னச் சின்ன திருவிழாக்கள், ஆர்க்கியாலஜி சம்பந்தமான விஷயங்கள், மிகச் சாதாரண மக்கள்'னு என்னுடைய கன்டென்ட் இருக்கும்.

டீ விக்கிறவங்க... ரோட்லே நடக்கிறவங்க இவங்கதான் என் புகைப்படங்களோட கதாநாயகர்கள். இந்தக் காரியங்கள் ரொம்ப சிறப்பான காரியங்கள்... இதில் கமர்ஷியல் வேல்யூ ஜாஸ்தியா இருக்குன்னு புரியுது. ஆனா, இங்கிருக்கிற போட்டோகிராஃபர்ஸுக்கோ, மீடியாக்களுக்கோ இந்த முக்கியத்துவம் தெரியலை. அவங்க அறியாமையில் இருக்காங்க.

சுனாமிக்கு முன்னாடி இலங்கையில் இருந்தேன். நிறைய முஸ்லிம் தெருக்களை பதிவு பண்ணேன். இந்தியா வந்ததும் 15-வது நாள்லேயே சுனாமி வந்துடுச்சு. நான் எடுத்த புகைப்படங்களிலே இருக்கிற இடங்கள், மனிதர்கள் யாரும் இன்னைக்கு இல்லை. அதேமாதிரி மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பகுதிகள் எல்லாத்தையும் பதிவு பண்ணியிருக்கேன். இன்னைக்கு எப்பேர்ப்பட்ட இனப்படுகொலை நடந்து முடிஞ்சிருக்கு. அதுக்கான ஒரிஜினல் டாக்குமென்ட்ஸ் என்கிட்ட இருக்கு. 2004-லேயும் அதுக்கு முன்னாடியும் இலங்கைத் தமிழர்கள் எப்படி இருந்தாங்க; அந்தச் சூழல் எப்படி இருந்ததுன்னு தெரிஞ்சுக்கணும்னா, ஆவணங்கள் வேணும். அந்த ஆவணங்கள் என்னிடம் இருக்கு. எல்லாம் மிக முக்கியமான ஆவணங்கள்.

இந்தமாதிரி நிறைய நபர்கள் வேலை செய்யணும். துரதிர்ஷ்ட வசமா தமிழ்நாட்டில் ரெண்டு, மூணு பேர்தான் இருக்கோம். தமிழ்நாட்டோட கல்சரை பதிவு பண்றதுலே நிறைய அக்கறை தேவையிருக்கு. நூற்றுக்கணக்கானவங்க இதில் ஈடுபட்டாதான் நம்ம கலாசாரத்தை உணர முடியும்; பாதுகாக்க முடியும். அது மிகப்பெரிய பதிவு. வெளிநாட்டுலே இருக்கிற நியூஸ் ஏஜென்ஸி, மியூசியம்களுக்கு சாதாரண அரசியல்வாதி, சினிமாக்காரங்க எல்லாம் தேவையில்லை. இந்த மாதிரி லோக்கல்லே நடக்கிற ஃபெஸ்டிவெல்ஸ். அதை நல்ல கம்போஸ் பண்ண போட்டோகிராபிதான் தேவை.

அதேமாதிரி பெரிய ஓவியர்கள், சிற்பிகள், சமூகத்தில் உள்ள மிக முக்கியமான விவசாயிகள், சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த சிந்திக்கக் கூடிய எழுத்தாளர்கள்னு சமூக ஆர்வலர்களை, அவங்களுடைய வாழ்க்கை முறைகளை எல்லாம் பதிவு பண்ணணும்னு நினைக்கிறேன். நகுலன், தேவதேவனை எல்லாம் அந்தக் கண்ணோட்டத்தில்தான் படம் எடுத்தேன். அந்தக் காலத்துல பிரிசோன் மாதிரி மிகப்பெரிய போட்டோகிராஃபர்ஸ்லாம் இப்படிப்பட்ட போட்டோவைதான் எடுத்தாங்க. இப்போ அவங்கதான் போட்டோகிராஃபியின் ஜாம்பவான்கள்!

இப்படி இருக்கும்போது எனக்கு பணம் பெருசா தெரியலை. பணம் சம்பாதிக்கலையேங்கிற கவலையும் இல்லை. பணத்தை குறியா பார்க்காமே இதுவரைக்கும் 30 ஆயிரம் புகைப்படங்கள் எடுத்திருக்கேன். எல்லாம் தமிழர்களுடைய ஆவணங்கள்; தமிழ்நாட்டின் கலாசார - பண்பாட்டுப் பதிவுகள்.

கமர்ஷியலா இயங்குற போட்டோகிராஃபர்கிட்ட இருந்து ஒரு போட்டோ வாங்கிட முடியுமா? ஆனா, யார் கேட்டாலும் என் படங்களை இலவசமா கொடுக்கிறேன். யாரும் அதுக்கு பணம் தர்றதும் இல்லை, நான் கேக்குறதும் இல்லை.

போட்டோகிராஃபி ஒரு கவிதை மாதிரி, ஒரு நாவல் மாதிரின்னு ஏற்கெனவே சொன்னேன். ஒரு குறிப்பிட்ட போட்டோகிராஃபி அவார்ட் வாங்குதுன்னா அதை எடுத்தவர் பெரிய போட்டோகிராஃபர் இல்லை. அன்றாட வாழ்க்கை முறை மாதிரிதான் போட்டோ எடுக்கிறதும். குளிக்கிறது, பல் துலக்குறது மாதிரிதான் போட்டோ எடுக்குறதும். அதை எடுக்கும்போதும் சந்தோஷமா இருக்கும். எடுத்துப் பார்க்கும்போதும் சந்தோஷமா இருக்கும். அதுக்குமேல அது மிகப்பெரிய காரியமெல்லாம் இல்லை.

என்னுடைய புகைப்படங்கள் அரசு சார்ந்த, நிறுவனங்கள் சார்ந்த எந்த அவார்டும் வாங்கினது இல்லை. நிறைய கல்லூரிகள் எனக்கு விருது வழங்கியிருக்கு. குறிப்பா என்னோட புகைப்படங்களில் பரிசுக்கான சுவாரஸ்ய விஷயங்கள் எதுவும் இருக்காது. பிரஸ் போட்டோகிராஃபி, பேஷன் போட்டோகிராஃபி எடுக்குறவங்களுக்கு அந்த மாதிரியான அவார்டு வாங்குற வாய்ப்பு இருக்கலாம். ஏன்னா, பிரஸ் போட்டோகிராஃபருக்கு தினமும் ஏதாவது சம்பவத்தைப் பார்க்கிற, கம்போஸ் பண்ற வாய்ப்பு கிடைச்சுட்டே இருக்கும். அதேமாதிரிதான் பேஷன் போட்டோகிராஃபர்ஸுக்கும். அதனால, அவார்ட், ரிவார்ட் எல்லாம் அவங்களுக்கு சாத்தியம்.

காலண்டரில் சீனிவாசன் படம்
இன்னைக்கு விதவிதமான கேமரா வந்துடுச்சு. யார் வேணும்னாலும் போட்டோ எடுக்கலாம். அதுக்கு பெரிய தொழில்நுட்ப அறிவெல்லாம் தேவையில்லை. அதையும்தாண்டி யார் மிகுந்த ஈகை குணத்தோடேயும், அற்புதமான நபராகவும் இருக்காங்களோ அவங்க எடுக்கிற படங்கள்தான் சிறப்பானதா இருக்கும். இதை, கவிஞர் தேவதேவன் வார்த்தைகளில் சொல்லணும்னா, 'பெரிய கவிஞனாகணும்னா, நீங்க பெரிய கவிதையா இருக்கணும்'. அந்த மாதிரிதான் ஒரு சிறந்த போட்டோகிராஃபர் ஆகுறதும். 'போட்டோகிராஃபி'ங்கிறது வாழ்க்கையில சின்ன பகுதி. அதனால போட்டோ எடுக்கிறதுக்காகவே வாழ முடியாது. போட்டோ எடுப்பதும் ஒரு பயணம்தான்.
நல்ல போட்டோகிராஃபரா வரணும்னா, நல்ல இலக்கியங்களை தெரிஞ்சிருக்கணும், நல்ல சினிமாவைப் பத்தி தெரிஞ்சிக்கணும். இந்தியாவில் இருக்கிற மிகப்பெரிய ஜாம்பவான்களைப் பத்தி தெரிஞ்சிக்கணும், ஆர்க்கிடெக்டைப் பத்தி நல்ல அறிவு வேணும்... மியூசிக்லே நல்ல ஞானம் வேணும். மியூசிக்குக்கும் போட்டோகிராஃபிக்கும் ஆழமான தொடர்பு இருக்கு. போட்டோகிராஃபியும் மியூசிக்கும் ஆழமான ரிதம் அடிப்படையில அமைஞ்சது. ஒரு சிறந்த போட்டோவைப் பார்க்கும்போது பின்னாடியே ஒரு இசை மனசுல ஒலிக்கும். தொடர்ந்து நிறைய படங்களைப் பார்க்கும்போது அந்த அனுபவம் எல்லோராலேயும் உணரமுடியும்.

பிரஸ், பேஷன் போட்டோகிராஃபர்ஸுக்கு கிடைக்கும் வெகுமதிகள் எல்லாம் ஸ்ட்ரீட் போட்டோகிராஃபர்ஸுக்கு ரொம்பவும் அரிதுதான். விருதுகளை எதிர்பார்த்து நான் இயங்கல. என் படங்களில் பரபரப்பு இருக்காது; பெரிய அளவிலும் அவை பேசப்படாது. ஆனா, என்னோட கம்போஸிஷன்லே இன்ஸ்பயர் ஆகி நிறைய பேர் இந்த மாதிரி போட்டோ எடுக்கிறதுலே ஈடுபட்டு இருக்காங்க. லைஃப்லே சில பர்ஸ்னலான இடங்களுக்குப் போகும்போது அதை நீங்களும் உணரலாம்; போட்டோ எடுக்கலாம்!

- சா.இலாகுபாரதி
அடுத்த மைல்கல் கீற்று டாட் காம் ரமேஷ்

0 comments:

Post a Comment