11 August 2011

கொட்டிக்கொடுக்கும் அழகுக் கலை

Posted by Gunalan Lavanyan 10:13 PM, under | No comments


மைல்கல்: 3

அழகுக் கலை நிபுணர் வசுந்தரா: 2

தொடர்ச்சி...


மீண்டும் அழகு சம்பந்தமா படிக்கத் தொடங்கினேன். நிறைய சர்டிஃபிகேட் கோர்ஸ் படிச்சேன். ஒவ்வொரு இடத்தில் படிக்கும்போதும் நிறைய ஐடியா வந்தது. லண்டனுக்குப் போய் 'அட்வான்ஸ்ட் சி அண்ட் ஜி பியூட்டி தெரபி - ஹேர் டிரஸ்சிங்' பி.ஜி. டிப்ளமா படித்தேன். சென்னையில் இருந்து ஐந்து பேர் போயிருந்தோம். பிராக்டிக்கல், தியரி எல்லாம் முடிந்தது. பரீட்சை எழுதினேன். சர்டிஃபிகேட் வாங்கினேன். லண்டன் போய் வந்ததில் இன்னும் கிளாரிட்டி கிடைத்தது. இப்போ அதே கோர்ஸ் எங்க அகாடமியில் பாடமாக இருக்கிறது. நான் என்ன படித்தேனோ, அதையே என் மாணவர்களும் படிக்கிறார்கள். இங்கிலாந்து பயணத்துக்குப் பிறகு சிங்கப்பூர், தாய்லாந்து, பிரேசில் என என் பயணங்கள் தொடர்ந்தவண்ணம் இருக்கின்றன.

இப்படி உலகெங்கும் அழகுக் கலை சம்பந்தமாகவும் அழகுபடுத்துவது சம்பந்தமாகவும் என்னவெல்லாம் படிப்பு இருக்கிறது; என்னவெல்லாம் பயிற்சிகள் அளிக்கப்படுக்கின்றன என்று தாகமெடுத்து தேடினேன்; தேடிக்கொண்டே இருக்கிறேன்.

கத்தரிக்கோலும் சீப்பும் இருந்தால் யார் வேண்டுமானாலும் 'ஹேர் கட்டிங்' செய்யமுடியும் என்று இங்கு நினைக்கிறார்கள். அதிலும் தொழில்நுட்பம் இருக்கிறது; அறிவியல் இருக்கிறது; புதிய உத்திகள் தேவை இருக்கிறது. அதையெல்லாம் படிக்க வேண்டும்; பயிற்சி எடுக்க வேண்டும் என்ற தாகம் தனியாமல் இருக்க வேண்டும். அந்த தாகம் இப்போதுகூட என்னிடம் அப்படியே இருக்கிறது.

நான் என்ன கற்றுக்கொள்கிறேனோ, அதையெல்லாம் என் மாணவர்களுக்கும் கற்பிக்கிறேன். இப்படி மலேசியா, சிங்கப்பூர், இலங்கை என்று நிறைய செமினார் வகுப்புகள் நடத்தியதில் நல்ல வரவேற்பு. இலங்கையில் சற்று அதிகம். அங்குதான் ஒரே நேரத்தில் 600 பேர் செமினார் பயிற்சி வகுப்பில் பங்கு எடுத்துக்கொண்டார்கள். அதேவேளையில் வெளிநாட்டுக்காரர்கள் இந்தியா வந்து கற்றுக்கொள்வதில் நிறைய ஆர்வம் காட்டுவதை அந்த செமினார் வகுப்புகளில் என்னால் பார்க்க முடிந்தது.

அழகுக் கலைக்கு வெளிநாடுகளில் இல்லாத பாடத்திட்டங்கள், பயிற்சி முறைகள் அப்படி என்ன இந்தியாவில் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். ஆமாம், இருக்கிறது. இந்தியாவில் மூலிகை இருக்கிறது. வெளிநாடுகளில் கெமிக்கல்களில் இருந்துதான் அழகு சாதனப் பொருட்கள் தயாராகின்றன. ஆனால், மூலிகையிலிருந்து நிறைய அழகு சாதனப் பொருட்கள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தி அழகு படுத்துவதால், அழகுபடுத்திக்கொள்வதால் உடலுக்கும் உடல் உறுப்புகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை. மேலும், நிறைய நன்மைகள்தான் கிடைக்கின்றன.


அழகுக்கான ஆரோக்கியமான பாதை இந்தியாவில் இருப்பதால், நிறைய வெளிநாட்டினர் இங்கு வந்து அழகுக் கலையைப் படிக்கிறார்கள். இப்படி அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா என்று எல்லா கண்டங்களில் இருந்தும் மாணவர்கள் வருகிறார்கள்.

இந்தத் துறையில் ஆர்வத்துடன் சேர்ந்து கற்கும் மாணவர்கள் பொருளாதார சுதந்திரத்தோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு தங்கள் வேலையில் முழு திருப்தியும் இருக்கிறது. குறிப்பாக, நிறைய பெண்களுடைய வாழ்க்கையை சாதகமான சூழலுக்கு மாற்றக்கூடிய வல்லமை இந்தத் துறைக்கு உண்டு. இதில், எனக்கு நேரடி அனுபவம் நிறைய இருக்கிறது.

அட்வான்ஸ்டான 'மேக்கப்' எல்லாம் இப்பதான் வந்தது. அந்தக் காலத்தில் மருதாணியைத்தான் லிப்ஸ்டிக்காக உபயோகித்தார்கள். அதேமாதிரி அவுரி விதையை அரைத்து அதிலிருந்து வருகிற கலரை ஹேர் கலராக பூசினார்கள். குங்குமப் பூவை அரைத்து உடல் முழுக்கத் தடவினார்கள். அதிலிருந்து வெளிப்படும் நிறங்கள் உடலுக்குத் தீங்கு விளைவிக்காதவை. ஆனால், நீண்ட நாளைக்கு நீடிக்காது. குளிக்கக் குளிக்க காணாமல் போய்விடும்.

எந்த மேக்கப் போட்டாலும் அதற்கான தேவை முடிந்ததும் அதைக் கலைத்துவிடணும். குறைந்தபட்சம் தூங்கப்போகிற நேரத்திலாவது முகத்தை கழுவிட்டுவிட்டு படுக்கணும். இல்லாமல்போனால் பக்கவிளைவுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். நாளாக நாளாக மேக்கப் ரத்தத்தில் கலக்கும்.

மேக்கப் போடும்போது நல்ல பிராண்ட்டட் அயிட்டமா யூஸ் பண்ணி மேக்கப் போடணும். விலை கம்மியாக கிடைக்கிறது; ரொம்ப சீப்பா பிளாட்பாரத்தில் வாங்கிடலாம் என்று நினைத்து தப்பு கணக்குப் போடக்கூடாது. அப்புறம் இன்னும் அதிக பணத்தை செலவழிக்க வேண்டிய நிலை ஆகிடும். இதெல்லாம், அழகுக் கலையில் அடிப்படையில் விஷயங்களுள்.

மத்திய தொழில் துறை அமைச்சகத்துக்காக அழகு சம்பந்தப்பட்ட 9 புத்தகங்களை தயாரித்து இருக்கிறேன். ஒவ்வொரு புத்தகத்திலேயும் அழகு தொடர்பான ஒவ்வொரு சிகிச்சை முறைகளைப் பற்றி சொல்லியிருக்கோம். ஹேர் கலரிங், ஹேர் கட்டிங், ஸ்பா, அரோமா இப்படி எல்லாமே இருக்கு. நல்லாவும் இருக்கு. அரசு இதை அங்கீகரித்து இருப்பதில் மகிழ்ச்சி.

அழகுக் கலைப் பயிற்சியில் ஆர்வமுள்ளவர்கள் இதற்குரிய பாடங்களைப் படிப்பதோடு, வாடிக்கையாளர்களிடம் எப்படி பேசவேண்டும்; எப்படி பழக வேண்டும் என்பது பற்றியெல்லாம் கற்றுக்கொள்வது மிகவும் அவசியம். எல்லா மொழி வாடிக்கையாளர்களிடமும் சுலபமாகத் தொடர்புகொள்ள வேண்டும். அதற்கு, ஆங்கில மொழி அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். நான் படிக்கும்போதெல்லாம் இந்த அளவுக்கு ஆலோசனை கொடுப்பதற்கு ஆட்கள் இல்லை. இப்போது நிறைய வசதி - வாய்ப்புகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இந்த வகை பாடத்திட்டங்களில் ஒரு பிரிவாக, 'கலர் காமினி' என்று ஒரு கோர்ஸ். அதில் உயரம் குறைந்தவர்களுக்கு எந்தக் கலர், உயரமானவர்களுக்கு எந்தக் கலர் செட்டாகும்; கல்யாணப் பெண்ணுக்கு எந்த மாதிரி மேக்கப் போடணும், எந்த டிரஸ் போட்டா மேட்சாகும். வெயில் காலம், மழைக் காலம், குளிர்காலம்... இப்படி எந்தெந்தக் காலங்களில் எந்த மாதிரியான கலர் டிரஸ் போடணும். கூல் கலர்ஸ்னா என்ன..? வார்ம் கலர்ஸ்னா என்ன..? என்பதையெல்லாம் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.

அதேமாதிரி மேக்கப்பில் நிறைய வெரைட்டி இருக்கு. டே மேக்கப், ஈவினிங் மேக்கப், சினிமா மேக்கப், போட்டோகிராஃபி மேக்கப். இந்த மேக்கப்பிலே எல்லா ஷேப்பும் இருக்கு. ஆனால், ஓவல் ஷேப்தான் பெஸ்ட். டைமண்ட் ஷேப்பைக்கூட ஓவலா மாற்றமுடியும். இப்படி மேக்கப்லேயே நிறைய டைப்ஸ். ஆயில் மேக்கப் எப்படி பண்ணணும்; மேட் பினிஷிங், ஹை டெஃபினிஷியன் மேக்கப், கேமரா மேக்கப், லைட் மேக்கப் (வெயிட்டே இல்லாம எப்படி மேக்கப் பண்றது) எப்படி பண்ணணும்... இப்படி எல்லா வகையான மேக்கப்பையும் கற்றுகொள்ளும் வாய்ப்பு சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் அதிகமாகவே இருக்கின்றன.

அதேபோல், வேலை உத்தரவாதமும் உண்டு. எளிதில் தனியாக தொழில் தொடங்கி வெற்றி பெறவும் முடியும். இந்தத் துறையில் இவ்வளவுதான் படிப்புன்னு சொல்லவே முடியாது. அந்த அளவுக்கு நாளுக்கு நாள் நிறைய விஷயங்கள் வந்துகிட்டே இருக்கு. நம்மை நாமே அப்டேட் பண்ணிக்கிட்டே இருக்கணும்.

இந்தக்காலத்தில் ஸ்கின் அண்ட் ஹேர் பிராப்ளம் அதிகமாக இருக்கிறது. வெயிலில் போகிறவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். இரு சக்கர வாகனங்களில் பயணிக்கிறவர்கள் அதிகமாகிவிட்டார்கள். அதனால், எல்லாவற்றையும் அறிவியல்பூர்வமாக அணுகவேண்டிய தேவை அதிகமாகிவிட்டது. அதேநேரத்தில் பொருட்களும் இயந்திரங்களும் முன்னேற்றம் அடைந்துகொண்டே இருக்கு. அதனால், பியூட்டிஷியன் எப்போதும் அப்டேட்டடாக இருக்க வேண்டும்.

இந்தத் துறைக்கு வருகிறவர்கள், சும்மா யாரிடமாவது கற்றுக்கொண்டோமா கடையை விரித்தோமா என்று இல்லாமல், அரசு சான்றிதழ் பெற்ற அகாடெமியில் சேர்ந்து, கோர்ஸை நன்கு படித்துவிட்டு ஆரம்பிப்பதுதான் நல்லது. அப்போதுதான் இந்தத் துறையில் அப்கிரேட் ஆகமுடியும். இதில் ஆர்வமும் அர்ப்பணிப்பும் இருந்தால் நீங்களும் அழகுக் கலை நிபுணராக வலம் வரலாம்."

கொட்டிக்கொடுக்கும் அழகுக் கலை என்பதில் சந்தேகம் இல்லை!

வசுந்தராவின் வலைதளம்

- சா.இலாகுபாரதி

அடுத்த மைல்கல் புகைப்படக் கலைஞர் ஆர்.ஆர்.சீனிவாசன்

0 comments:

Post a Comment