10 August 2011

அழகுக் கலை

Posted by lavanyan gunalan 11:05 PM, under | No comments
அழகுக் கலை நிபுணர் வசுந்தரா: 1முகம் மிருதுவாகவும் பொலிவுடனும் இருக்க, ரோஜாப் பூ இதழ்களை அரைத்து, அதோடு பால், பச்சைப் பயிறு மாவு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வர சருமம் பளபளப்பாகும்.
- அழகுக் குறிப்பு


வசுந்தரா. அழகுக் கலை நிபுணர். மூலிகைப் பொருட்களின் மூலம் அழகு சிகிச்சை அளிப்பதில் கைத்தேர்ந்தவர். சன் டி.வி.யின் 'மலரும் மொட்டும்', 'அழகுக் குறிப்புகள்' நிகழ்ச்சிகளின் மூலம் வெகுவாக அறியப்பட்டவர். அழகுக் கலையின் நுணுக்கங்களை பல்வேறு நாடுகளுக்கும் சென்று அறிந்து வருவதில் ஆர்வம் உடையவர். ஒருபுறம் பியூட்டி கிளினிக்கை நடத்திக் கொண்டு, மறுபுறம் தனது அகாடெமி மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்களை அழகுக் கலை நிபுணர்களாக உருவாக்கி வருவது அழகுக் கலைத் துறையில் ஒரு மைல்கல். இதோ தனது அனுபவங்கள் மூலமாக அழகுக் கலையில் ஆர்வமுள்ளவர்களுக்கு வழிகாட்டுகிறார் வசுந்தரா..."சூரிய உதயத்துக்கு முன்பே எழுந்து, என்னதான் 'லொங்குலொங்கு'னு வாக்கிங் போய் உடம்பை ஃபிட்டாக வைத்துக்கொண்டாலும், பார்லர் வந்து டச்சப் எடுக்காவிட்டால் பெரும்பாலான பெண்களுக்கு தன்னம்பிக்கையே போய்விடுகிறது. அந்த அளவுக்கு எல்லாப் பெண்களிடமும் அழகுதான் இன்றைக்கு நம்பிக்கை நட்சத்திரம். எந்த அளவுக்கு ஆரோக்கியமாக இருக்கிறோமோ, அதே அளவுக்கு அழகாகவும் இருக்கவேண்டும் என்பது நவநாகரிக உலகின் ஃபேஷனாகிவிட்டது. அதனால், பெண்களின் வாழ்க்கையில் பியூட்டி பார்லர்கள் தவிர்க்க முடியாத அங்கமாகிவிட்டன.

வசுந்தரா
எல்லோர் மத்தியிலும் தன்னை ஹைலைட்டாக காட்டிக்கொள்ள வேண்டும் என்ற சிந்தனையெல்லாம் 20 வருடத்துக்கு முன்பு வரை குறைவுதான். சினிமா நடிகைகள், மேல்தட்டுப் பெண்கள், மணப்பெண்கள் மட்டும்தான் அப்போதெல்லாம் பியூட்டி பார்லர் வருவார்கள். இந்த குறைந்த அளவு வாடிக்கையாளர்களை நம்பி அதிக அளவு அழகு நிலையங்களும் அன்றைக்கு இல்லை. ஆனால், எனக்கு நம்பிக்கை இருந்தது. தெருவுக்குத் தெரு எஸ்.டி.டி. பூத் இருப்பது மாதிரி பியூட்டி பார்லர்களும் எதிர்காலத்தில் முளைக்கத்தான் போகின்றன என்று.

இந்த நம்பிக்கையை மனதில் விதைத்தவர், என் மாமியார்தான். எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு, என்ன செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன். வீட்டில் காய்கறி நறுக்கிக்கொண்டு இருந்த என்னை, 'காய்களை நறுக்கும்போதே இவ்வளவு பதமாக, அதுவும் அழகாக நறுக்குகிறாயே... நீ ஏன் பியூட்டி கோர்ஸ் படிக்கக் கூடாது' என்று மாமியார் கேட்டார். காய்களை நறுக்கிக் கொண்டு இருந்தவளுக்கு சந்தோஷத்தில் என்ன சொல்வது என்றே தெரியவில்லை. 'சரி'யென்று சொல்வதற்குள், 'பியூட்டி தெரபி அண்ட் ஹேர் டிரஸ்ஸிங்' படிக்க என் கணவர் சீட் வாங்கிவிட்டார். பியூட்டி கல்ச்சர் அகாடமியில் ஆறு மாதம் டிப்ளமோ படித்தேன்.


இந்த ஆறு மாதத்தில் அழகு சம்பந்தமாக நிறைய தெரிந்துகொண்டேன். படித்து முடித்த சூடு ஆறுவதற்குள், நிறைய பேர் என்னிடம் ஸ்டூடன்ட்டாக சேர வந்துவிட்டார்கள். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை; தெரிந்ததெல்லாம் சொன்னேன். வீட்டிலேயே வகுப்பு எடுத்தேன். படித்து, முடித்ததும் பயிற்சி கொடுத்ததால் எனக்கு நானே நிறை தெளிவடைய முடிந்தது. அதற்கு ஏழு மாதம் ஆனது. என் மாமியார் பெங்களூரு போனார். திரும்பி வரும்போது பார்லர் வைக்கத் தேவையான எல்லாப் பொருட்களையும் கையோடு வாங்கி வந்துவிட்டார். இதையெல்லாம் வாங்கி வரப்போகிறார் என்பது அதுவரை எனக்குத் தெரியாது. பெற்றெடுத்த அம்மா மாதிரி மறுபடியும் சந்தோஷ அதிர்ச்சியைக் கொடுத்தார், என் மாமியார். சாரி, அம்மா.

பார்லர் தொடங்கி, நான்கைந்து வருடம் வாடிக்கையாளர் வருகை கம்மியிலும் கம்மி. "கவலைப்படாதே... வருவார்கள். அதுவரை பொழுதுபோக்காக செய்," என்று எனர்ஜி கொடுத்தார்கள் அம்மாவும் கணவரும். அதனால், நான் சளைக்கவில்லை.  அப்போதுதான் அழகுப்படுத்திக் கொள்வது பற்றி பெண்களிடம் நிறைய விழிப்பு உணர்வுகள் ஏற்படத் தொடங்கின; மீடியாவின் வளர்ச்சியும் இதற்கு ஒரு முக்கிய காரணம்.

திடீரென்று ஒருநாள் சன் டி.வி.யிலிருந்து அழைப்பு. 'மலரும் மொட்டும்' குழந்தைகள் நிகழ்ச்சி செய்யச் சொன்னார்கள். அதிர்ச்சி, ஆச்சர்யம். பியூட்டி பார்லர் நடத்திக் கொண்டு இருக்கிற நம்மை எதற்கு குழந்தைகள் நிகழ்ச்சிக்கு அழைக்கிறார்கள் என்று அதிர்ச்சி. எப்படி இந்த வாய்ப்பு நம்மைத் தேடி வந்தது என்று ஆச்சர்யம். ஆனால், இரண்டையும் ஓரம்கட்டிவிட்டு பரவாயில்லை செய்துதான் பார்ப்போமே என்று தைரியம் வந்தது. அந்த நிகழ்ச்சி சக்ஸஸ் ஆனது.

அதைத் தொடர்ந்து, 'அழகுக் குறிப்புகள்' நிகழ்ச்சி பண்ணமுடியுமா என்று கேட்டார்கள். 'முடியுமாவா... அதானே என் தொழில்!' என்று சம்மதித்தேன். ஒவ்வொரு நிகழ்ச்சி பண்ணும்போதும் ஏதாவது வித்தியாசமா செய்யணும்னு யோசிச்சு யோசிச்சு நிறைய கற்றுக்கொடுத்தேன்; நானும் கற்றுக்கொண்டேன்.
தினமும் ஏதாவது கத்துக்கிட்டே இருந்தாலும், எனக்கு இருந்த ஆர்வம், இந்தக் கலை மேல் இருந்த தாகம் தீரவேயில்லை.

தொடரும்...
- சா.இலாகுபாரதி

0 comments:

Post a Comment