30 July 2011

சிறுமிகள் விபச்சாரம்: ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்!

Posted by lavanyan gunalan 6:25 PM, under | 3 comments


சிறுமிகள் பாலியல் சித்திரவதைக்கு உள்ளாகப்படுவதும், விபசாரத்தில் தள்ளப்படுவதும், பொட்டு கட்டி ஊர் பொதுவில் விடுவதும் இன்று நேற்று நடந்து வருவதல்ல; திட்டமிட்டே காலம் காலமாக அரங்கேறி வருகின்றன.

ஆண்வர்க்கத்தால் நடத்தப்படும் இந்த வன்கொடுமைகளுக்கு எதிராக வன்மையான தொடர் நடவடிக்கைகள், இதுவரை எந்த மன்னராட்சியோ மக்களாட்சியோ எடுத்ததாக தெரியவில்லை. ஆனால், இப்படி மைனர் பெண்களை விபசாரத்திலும் பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபடுத்துகிறவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டாலும், காவல் துறையினர் சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்காமல், குற்றவாளிகள் ஜாமீனில் வெளியேறும் அளவுக்கு அசிரத்தையாக நடந்துகொள்கின்றனர். சில நீதிமன்றங்களும்கூட அவர்களுக்கு ஜாமீன் வழங்கி மீண்டும் அதே செயலில் ஈடுபடுவதற்கு வழி வகை செய்கின்றன.

அப்படியொரு வழக்கு அலகாபாத் நீதிமன்றத்துக்கு வந்தது. ஆனால், விசாரணையை துரிதப்படுத்தாமலும், காவல்துறையினரை எச்சரிக்காமலும், மைனர் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய வாரணாசியைச் சேர்ந்த ஷேக் முகமது என்பவரை நீதிமன்றம் ஜாமீனில் விடுவித்தது.

ஆனால், அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் எஸ்.பி.சின்கா மற்றும் சிரியக் ஜோசப் தலைமையிலான பெஞ்ச் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. விசாரணையின் முடிவில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு காவல்துறைக்கும், நீதிமன்றத்துக்கும், அரசு அதிகாரிகளுக்கும் எச்சரிக்கையாக இருந்தது.

உச்சநீதிமன்றம்
தீர்ப்பின் சாராம்சம் இதுதான்:

1. விபசாரத்தில் தள்ள, அழைத்துச் செல்லப்படும் மைனர் பெண்கள் மற்றும் அவர்களை திட்டமிட்டு கவர்ந்து சென்று விற்கும் கும்பல் என்ற இரு தனிப்பட்ட அம்சங்களை வழக்கு விசாரணை மேற்கொள்ளும் போலீஸ் அதிகாரிகள் தீவிரமாக சிந்திப்பதில்லை.
2. திட்டமிட்டு இளம் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தும் கும்பலை சரியான முறையில் கையாளததால், தொடர்ந்து அவர்கள் ஜாமீனில் வெளிவந்து இதே குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர். அப்படியே இந்த கும்பலில் இருந்து மீட்கப்படும் பெண்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நடைமுறைகளும் சரியாக நிர்வாகத்துறையால் மேற்கொள்ளப்படுவது இல்லை.
எனவே எதன் அடிப்படையில் ஜாமீன் தரப்படுகிறது?
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இந்தக் கேள்விக்கு இதுவரை சரியான பதில் எட்டப்படவில்லை.

.பல நூறு ஆண்டுகளாக பெண்கள், சிறுமிகள் இப்படி விபசாரத்தில் தள்ளப்பட்டு வந்தாலும் அதிகப்படியான சம்பவங்கள் வெளியில் தெரியாமல் மூடிமறைக்கப்பட்டே வந்திருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்கள் தப்பித்தவறி வெளியே சொன்னால், சாம்பலாகவும் மண்ணாகவும் போன கதைகள்தான் இருக்கின்றன. ஆனால், பத்திரிகை, மீடியா துறையின் வளர்ச்சிக்குப் பிறகுதான், இந்த வன்கொடுமைகள் எல்லாம் குவியல் குவியலாக வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டன.

தாயின் அளவுக்கடந்த பணத்தாசையால் சினிமாவில் நடிக்க மகளை ஏவி கடைசியில் விபச்சாரம் வரைக்கும் போய் நூற்றுக்கணக்கான ஆண் நாய்கள் வேட்டையாடிய கொச்சி சிறுமி விவகாரம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்த ஒரு சம்பவம். இதில் அரசு உயரதிகாரிகள், புரோக்கர்கள், கட்டட காண்ட்ராக்டர்கள், போலீஸ் உயரதிகாரிகள், சினிமா நடிகர்கள், இயக்குனர்கள், வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்று பலரும் ஈடுபட்டு வேட்டையாடியிருப்பது நீதிவிசாரணையில் தெரியவந்திருக்கிறது. ஆனால், இதுவரை வழக்கு முடிவுக்கு வரவில்லை; கேரள போலீஸும், தமிழகப் போலீஸும் தனித்தனியாக மோப்பம் பிடித்துக்கொண்டு இருக்கின்றன. விசாரணை நடந்துகொண்டே இருக்கிறது; தோண்டத்தோண்ட பலர் சிக்கிக்கொண்டே இருக்கிறார்கள்.

கொச்சி சிறுமி
இந்த விவகாரம் அடங்குவதற்குள்ளாகவே கடந்தவாரம் இன்னொரு சம்பவம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி பாண்டியம்மாள் 12 வயதுலேயே திருமணம் செய்து வைக்கப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வீட்டைவிட்டு ஓடிவந்து, ஜவுளி கடையொன்றில் வேலை பார்த்து வந்தார். அவரோடு வேலை பார்த்துவந்த தோழியின் தாயார் பாண்டியம்மாளை விபசாரத்தில் தள்ளிய சம்பவம் கேரள சம்பவத்தைவிட பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

விசாரணையில் கொச்சி சிறுமியைவிட பாண்டியம்மாள் அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று தெரியவருகிறது. இந்த விவகாரத்தில் இதுவரை புரோக்கர்கள், விபச்சாரத்தில் தள்ளிய தோழியின் தாய், தொண்டு நிறுவனம் நடத்துபவர் என்று சொல்லி ஏமாற்றிய நபர் உட்பட 7 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு இருக்கின்றன. ஆனால், திருமங்கலம் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களின் பட்டியல் நீண்டதாக இருக்கிறது. அரசு அதிகாரிகள், போலீஸ்காரர்கள், அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்கள் என்று 200க்கும் மேற்பட்டவர்களால் பாண்டியம்மாள் பலாத்காரம் செய்யப்பட்டதாக அறியவருகிறது. 

ஆனால், அவர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. கேரள போலீசும், அரசாங்கமும் எடுக்கும் நேர்மையான எந்த நடவடிக்கைகளும் தமிழ்நாட்டில் நடப்பது மாதிரி தெரியவில்லை என்று பெண்கள் அமைப்பினர் கருத்து தெரிவித்து இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் அரசு, எந்தவிதமான அறிக்கையும் செய்தியும் இதுவரை வெளியிடவில்லை. போலீஸ் அதிகாரிகளே சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பதால் வழக்கு நியாயமாக நடக்குமா என்பதும் கேள்விக்குறியாக இருக்கிறது.

அதேநேரத்தில், மக்களின் நண்பன் என்று சொல்லிக்கொள்ளும் காவல் துறையே மக்கள் விரோதப் போக்கிலும், சமூக விரோதச் செயல்களிலும் ஈடுபடுவதைப் பார்க்கும்போது ரவுடிகளையும், பொறுக்கிகளையும் இவர்கள் எப்படி கட்டுப்படுத்துவார்கள் என்பது இன்னொரு பெரிய கேள்விக்குறியாக எழுந்து நிற்கிறது.

முன்னதாக ஏப்ரல் மாதம் ஒரு பெண் காவலர், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு மனுவில் பெண் காவலர்களுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை; போலீஸ் உயரதிகாரிகளாலேயே பெண் காவலர்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்; இதற்கெல்லாம் அனைத்து மகளிர் காவல்நிலையங்களே துணைபோகின்றன என்று சுட்டிக்காட்டியிருந்தார். இந்தப் பிரச்னைக்கு நீதிமன்றம்தான் தீர்வு காணவேண்டும் என்றும் அந்த மனுவில் கூறியிருந்தார்.

இப்படி, சிறுமிகள் மட்டுமல்லாமல் நாட்டின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு இருக்கும் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பற்ற நிலைமை இருந்து வருவதைப் பார்க்கும்போது, பாலியல் பலாத்காரம், விபசாரம் தொடர்பான சட்டங்கள் எந்த அளவுக்கு வலுவாக இருக்கின்றன என்பதை உணரமுடிகிறது.

அதனால், சிறுமிகள் மற்றும் பெண்கள் விபசாரத்தில் தள்ளப்படுவதற்கும், பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதற்கும் எதிராக இந்திய அரசியல் சாசனம் என்ன சொல்கிறது என்பதை மற்றொரு கட்டுரையில் அளிக்கிறேன். பிற்பாடு அதனுடைய தொடர்பையும் இதே பக்கத்தில் இணைக்கிறேன்.

- சா.இலாகுபாரதி

3 comments:

அவசியமான கட்டுரை. உங்கள் உழைப்புக்கு வாழ்த்துகள்

அனைவரும் உணரவேண்டும்!

பொது மக்களே இவர்களை நடுத்தெருவில் வைத்து கல்லால் அடித்து எரித்து சாம்பலாக்க வேண்டும். ஒருவன் செய்தல் கொலை... 100 பேர் செய்தல் பொதுமக்களின் குமுறல்....
சகிக்க முடியவில்லை....

Post a Comment

கோப்பு

கோப்பு