28 July 2011

ஓவியத்துறையில் பெருகிவரும் வேலைவாய்ப்பு

Posted by lavanyan gunalan 10:30 PM, under | 3 commentsமைல்கல்: 1

ஓவியர் ஸ்யாம்: 4


தொடர்ச்சி...

ஒரு விஷயத்தைச் சொன்னா, சில நிமிஷத்திலே படம் கொடுக்கிற மாதிரி வெச்சுக்கிட்டேன். அது அவங்களுக்கு ரொம்பப் புடிச்சது. இப்பவரைக்கும் அப்படிதான் வரையிறேன். ஒருத்தர் சொன்ன, அஞ்சாவது நிமிஷத்துலே அவங்க கையில் நான் வரைஞ்ச படம் இருக்கும். குமுதம் ஆபீஸுக்கு கூட்டி வந்த டிரைவரைப் பார்த்தேன், 'பார்த்தியா நான் சொன்னபடி நல்ல சம்பளத்துலே வேலை கிடைச்சிடுச்சு, அதேமாதிரி ஆனந்த விகடன், கல்கி, வாரமலர்... எல்லாப் பத்திரிகைக்கும் போய் பாரு'ன்னார். அஞ்சுநாள் ஆச்சு. சொல்லாமலேயே வந்துட்டதாலே ஊர்லே என்னை தேடுறாங்க.

அம்புலிமாமா ஆபிஸ்லே நான். இன்டர்வியூ எடுத்தவர் என்னை கூப்பிட்டாரு. கூப்பிட்டவரு பிரசாத் ரெட்டி. உள்ளே போனா எல்லா பத்திரிகை ஆபீஸ்லேருந்தும் லெட்டர் வந்திருக்கு. ரெட்டி கேக்கறாரு... 'ஈயந்த்தா ஏமி' 'என்ன... தெரியலையே...'னு சொன்னேன். 'என்ன தெரியலையா....' பத்திரிகை பேர் எல்லாம் சொல்லி, 'இங்கிருந்தெல்லாம் உனக்கு லெட்டர் வந்திருக்கு'ன்னார். 'ஆமா சார் அங்கெல்லாம் போனேன்; டிராயிங்க்ஸ் கொடுத்துட்டு வந்தேன். லெட்டர் வந்திருக்கா'ன்னேன். 'இந்த மாதிரி எல்லாரும் பண்றாங்கன்னுதானே உனக்கு முன்பணமா 350 ரூபா கொடுத்தேன். நீங்க எல்லாருமே இப்படிதான் இருப்பீங்களா... இங்க சம்பளம் கொடுக்கிறேன் வெளியே வேலை பார்க்குறீயே... என்ன அர்த்தம்...?'ன்னு எரிச்சலா கேட்டாரு. 'உனக்கு இதைவிட வெளியே சம்பளம் ஜாஸ்தின்னா தாராளமா வெளியே போகலாம்...' 'எனக்கு குமுதத்துலே 2 ஆயிரம் ரூபா தரேன்னு இருக்காங்க. அங்கே போகப் போறேன்னேன்'. 'போ... போ...'ன்னார். வெளியே வந்துட்டேன்.

குமுதம் வந்தேன். தொடர்ந்து வேலை கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. காலையிலே மத்தப் பத்திரிகைகளுக்குப் போறதும், மத்தியானம் 2 மணி ஆச்சுன்னா குமுதம் வர்றதுமா இருந்தேன். ரெண்டு மாசத்துலே வேலை பளு கூடிடுச்சு. எல்லாரும், 'நீ ஏம்பா இங்க வர்றே வீட்லேயே இரு. நாங்க வந்து படம் வாங்கிக்கிறோம்'ன்னாங்க. நானோ ரயில்வே ஸ்டேஷன்லே... பயணிகள் விடுதியிலே தங்கியிருக்கேன். அங்கே எப்படி படம் போட முடியும். வீடு பார்த்தாகணும். அப்பதான் ஞாபகம் வந்தது.
'அம்புலிமாமா' பத்திரிகையிலே சேர்ந்த அன்னைக்கே ஒரு வயசான எல்.ஐ.சி. ஏஜென்ட் வந்தார். 'தம்பி, புதுசா வேலைக்கு சேர்ந்திருக்கியா... நீயெல்லாம் எல்.ஐ.சி. பாலிசி போட்டு வீடு வாங்கலாமே'ன்னார். எனக்கு அவரைப் பார்த்தா பரிதாபமா, பாவமா இருந்தது. 'பாலிசி போட்டா வீடு வாங்கித் தருவீங்களா...' 'கண்டிப்பா வாங்கித்தருவேன். பாலிசி போடுறீயா...?' 'எவ்வளவு கொடுக்கணும்.' 'மாசம் 300 ரூபா கொடு. முதல் மாசம் நானே கட்டுறேன். அடுத்த மாசத்துலேருந்து நீ கட்டணும்'. 'வீடு மட்டும் வாங்கித் தர்லேன்னா எனக்கு கெட்ட கோவம் வரும்.' 'சரிப்பா போடு வாங்கித்தர்றேன்'னு சொன்னார். பாலிசி போட்டு, கையிலேருந்து அடுத்த மாசத்துக்கான 300 ரூபாயும் கொடுத்துட்டேன். அதுக்கப்புறம் அவரை மறந்தே போயிட்டேன்.

'வீட்லேயே வந்து படம் வாங்கிக்கிறோம்'னு எல்லாரும் சொல்லும்போதுதான் அவர் ஞாபகத்துக்கு வந்தார். பஸ்ஸுக்காக ஒரு பஸ் ஸ்டாண்டுலே காத்திருந்தேன். அங்க எல்.ஐ.சி. ஏஜென்ட் இருந்தார். ஓடிப்போய், 'என்னங்க, 'வீடு வாங்கித் தர்றேன்'னு சொன்னீங்க. வீடு என்ன ஆச்சு'ன்னு கேட்டேன். அவரு, 'என்னப்பா இப்படி ரோட்லேயே கழுத்த பிடிச்சிக்கிட்டு கேக்குறே... நான் எப்படி உனக்கு வீடு வாங்கித்தர முடியும்' 'நீங்கதானே சொன்னீங்க... 'வீடு வாங்கித் தர்றேன்'னு, அப்போ 300 ரூபா வாங்கிட்டு என்னை ஏமாத்திட்டீங்களா...' 'நான் எதுக்குப்பா உன்னை ஏமாத்தப்போறேன். வீடு வாங்கணும்னா சேலரி சர்டிஃபிகேட் வேணும். அது இருந்தாதான் வீடு வாங்க முடியும். அதுக்கு முதல்லே நீ ஏற்பாடு பண்ணு. அதுவரைக்கும் வாடைக்கு வேணும்னா வீடு பிடிச்சி கொடுக்கிறேன்'னு சொல்லி வீடு பார்த்து கொடுத்தார்.

ஊருக்கு லெட்டர் போட்டேன். 'எனக்கு சென்னையில் வேலை கிடைத்துவிட்டது... வாடகைக்கு வீடு பார்த்துவிட்டேன். இனிமேல் எனக்கு கவலை இல்லை. இனி உங்களிடம் காசு எதிர்பார்க்க மாட்டேன். சென்னைக்கு வரவும்'னு எழுதி போஸ்ட் பண்ணிட்டேன். அம்மாவும் அப்பாவும் வந்தாங்க. ரெண்டு மாசத்துலே சம்பாதிச்சு சேர்த்து வெச்சிருந்த 20 ஆயிரம் ரூபாயை கொண்டுவந்து கொடுத்தேன்.

'ஏதுடா இவ்வளோ பணம்...' 'படம் வரைஞ்சேன். காசு கொடுத்தாங்க.' 'எவன்டா அவன், படம் வரைஞ்சா காசு கொடுக்கறது...' - பத்திரிகையிலே படம் போடுவாங்க. படம் வரைஞ்சி கொடுத்தா காசு கொடுப்பாங்க. இது எதுவும் தெரியாம கேட்டாங்க. மறுநாள் குமுதம் ஆபீஸ் போனேன். அரஸ், வாஞ்சிநாதன், பாண்டியன் எல்லாம் இருந்தாங்க. நக்கீரன் கோபாலுக்கு கல்யாணம். பத்திரிகை கொடுக்க வந்திருந்தாரு. என்னை பார்த்துட்டு, 'யாரு இந்தத் தம்பி'ன்னு கேட்டார். பாக்கியம் ராமசாமி சொன்னார், 'ஆர்டிஸ்ட். பையன் நல்லா படம் வரையறான்.' 'அப்படியா, தம்பி நாளைக்கு வந்து அலுவலகத்துலே என்னைப் பார்க்கறீங்களா...'ன்னார். 'சரி'ன்னு சொன்னேன்.

மறுநாள் காலையிலே நக்கீரன் ஆபீஸ்லே இருந்தேன். கோபால் சார் இருந்தார். 'எந்த ஊரு, என்ன பேரு...' எல்லாம் விசாரிச்சார். ஆனா, நானோ வீடு வாங்குறதுலேயே குறியா இருந்தேன். அதனால அவர்கிட்டே கேட்டேன். 'சார் ஒரு சின்ன ஹெல்ப்.' 'சொல்லு தம்பி, என்ன வேணும்.' 'மெட்ராஸ் வந்ததும் ஒருத்தர்கிட்டே எல்.ஐ.சி பாலிசி போட்டேன். அவர் வீடு வாங்கித் தர்றேன்னு சொன்னாரு. இப்ப என்னடான்னா சேலரி சர்டிஃபிகேட் இருந்தாதான் வீடு வாங்க முடியும்னு சொல்றார். அதனாலே எனக்கு சேலரி சர்டிஃபிகேட் தரமுடியுமா'ன்னு கேட்டேன்.

நக்கீரன் கோபால்
'என்ன தம்பி மெட்ராஸ் வந்து எத்தனை வருஷம் ஆச்சு' 'ரெண்டு மாசம்' 'ரெண்டு மாசத்துலேயே வீடு வாங்கணும்னு நினைக்கிறீங்களா... வீடு வாங்குறது ரொம்பப் பெரிய விஷயமாச்சே. சரி, சேலரி சர்டிஃபிகேட் கொடுத்தா வீடு வாங்கிடு வீங்களா...' 'கண்டிப்பா வாங்கிடுவேன் சார்' 'அப்போ சேலரி சர்டிஃபிகேட் கொடுக்குறேன்' 'எவ்ளோ சம்பளத்துக்கு சேலரி சர்டிஃபிகேட் கொடுக்கணும்' 'அதெல்லாம் எனக்குத் தெரியாது சார். வீடு வாங்கணும். அதுகேத்தமாதிரி சேலரி சர்டிஃபிகேட் வேணும்'னு சொன்னேன். அவரும் கொடுத்தாரு. ஒரு படமும் அவருக்கு வரைஞ்சி கொடுக்கலை. என்கிட்டே இருந்து எதையும் எதிர்பார்க்காம சேலரி சர்டிஃபிகேட் கொடுத்தாரு. இப்பவும் அந்த சர்டிஃபிகேட் வெச்சிருக்கேன். அதனாலே இன்னை வரைக்கும் அவர் மேலே எனக்கு மரியாதை உண்டு.

அந்த சர்டிஃபிகேட் எடுத்துட்டு எல்.ஐ.சி. ஆபீஸ் போனேன் தாத்தா வெளியிலே உட்கார்ந்து இருந்தாரு. சேலரி சர்டிஃபிகேட் கொடுத்து, 'இந்தாங்க வீடு வாங்கிக் கொடுங்க...' 'இருப்பா... ஏம்பா இப்படி பயமுறுத்தறே... என் கை, காலே நடுங்குதுப்பா...' 'தாத்தா நீங்கதானே சொன்னீங்க சேலரி சர்டிஃபிகேட் இருந்தா வீடு வாங்கி கொடுக்குறேன்னு இந்தாங்க சர்டிஃபிகேட்.' 'இந்தாப்பா... அடிக்கடி என்னை தாத்தா தாத்தான்னு சொல்லாதே. நான் ஒரு ஏஜென்ட். சீனியர் ஏஜென்ட்.' 'ஏஜென்டா இருந்தாலும், நீங்க தாத்தாதானே....' 'சரி விடு உனக்கு வீடு வாங்கி கொடுத்தாதான், ஒரு தொல்லை முடியும். வா...'ன்னு கூட்டிபோய் 'கீதா'ங்கிற ஆபீஸர்கிட்டே அறிமுகப்படுத்தி என்னைப் பத்தி சொன்னாரு. அவங்க புரொசீஜர் எல்லாம் சொல்லி, 'முதல்லே ஒரு பிள்டரைப் பார்த்து, வீடை ஓகே பண்ணி, வீட்டுப் பத்திரத்தை கொண்டுவாங்க அப்பதான் லோன் வாங்கமுடியும்'னு சொல்லி அனுப்பிட்டாங்க.

எங்கெங்கேயோ அலைஞ்சேன். அப்புறம் சூளைமேடு ஜக்கையா காலனியிலே ஒரு வீடு கட்டிட்டு இருந்தாங்க. அங்க அப்பா அம்மாவை கூட்டிட்டுப் போனேன். எல்லாம் பேசி முடிச்சு ரெண்டே முக்கால் லட்சத்துக்கு ஒரு வீடு ரெடியாச்சு. பத்திரம் எல்லாம் வாங்கிட்டு எல்.ஐ.சி. ஆபீஸ் போனேன். இன்டர்வியூ வெச்சாங்க. டாக்குமென்ட்ஸ் எல்லாம் கொடுத்தேன். மேனேஜர் சொன்னாரு, 'தம்பி நீ ஆர்டிஸ்டா... உனக்கு லோன் தர்றேன். என்னை அப்படியே அச்சு அசலா படம் வரைஞ்சிடு. இப்பவே உனக்கு லோன் சாங்கஷன் பண்டிட்றேன்'னார். நான் அவரை கொஞ்சம் இளமையாவே வரைஞ்சிட்டேன். அவருக்கு அந்தப் படம் ரொம்பவும் புடிச்சுப் போயிடுச்சு. மறுநாளே ரெண்டு லட்ச ரூபா லோன் சாங்கஷன் பண்ணிட்டாரு. மீதி எழுபத்தஞ்சு ஆயிரத்துக்கு என்ன பண்றதுன்னு முழிச்சிட்டு இருந்தபோது நக்கீரன் ஆபீஸுக்கு மறுபடியும் போனேன். கோபால் சார்கிட்ட விஷயத்தைச் சொன்னேன். 'தம்பி, இப்ப என்கிட்ட பதினஞ்சு ஆயிரம்தான் இருக்கு. இதைக் கொண்டு போங்க'ன்னு கொடுத்து அனுப்பினார். இன்னும் கொஞ்சம் பணத்தை அப்பா ஏற்பாடு பண்ணிட்டார்.

ஊர்லேயிருந்து மணியார்டர் வந்தது. வீடு வாங்கிட்டேன். அப்புறம், சுஜாதா சொல்லி 'ஆனந்த விகடன்'லே சான்ஸ் கிடைச்சது. அவரோட 'தூண்டில்'ங்கிற தொடருக்கு முதல்லே படம் போட ஆரம்பிச்சேன். அப்புறம் 'அவள் விகடன்'லே போடச் சொன்னாங்க, 'ஜீ.வி.'லே போடச் சொன்னாங்க. இந்தப் பக்கம் குமுதம், இந்தப் பக்கம் விகடன்னு எந்தப் பாரபட்சமும் இல்லாம போட ஆரம்பிச்சேன். இன்னைக்கு வரைக்கும் இந்தப் பயணம் தொடர்ந்துட்டே இருக்கு.

ஓவியங்கிறது எல்லாரும் நினைக்கிற மாதிரி, பயப்படுறதுக்கான கலை இல்லை. இதில் வேலை வாய்ப்புகள் இல்லைன்னு நினைக்கவும் தேவை இல்லை. நான், இந்தத் துறைக்கு வந்த காலத்தைவிட, இப்போ வேலை வாய்ப்புகள் அதிகமா கொட்டிக் கிடக்கு. பேஷன் டிசைனிங்லேயும் ஓவியம் வரையறது ஒரு பார்ட்டா இருக்கு. சில நேரங்களில் அதையும் பண்றேன். சினிமா, விளம்பரப் படங்களிலேயும் 'ஸ்டோரி போர்ட்'டுக்கான தேவையிருக்கு. அதையும் செய்யறேன். இப்படி நிறைய விஷயங்களை பரிசோதிச்சுட்டே இருக்கேன்.

ஓவியத் துறைக்கு வர்றவங்க முதல்லே தன்னை தயார்படுத்திக்கணும். கற்பனை செய்யிற அளவுக்கு அறிவும், கலையை நேசிக்கிற அளவுக்கு மனசும், எப்பவும் வித்தியாசமா யோசிக்கிற மாதிரியான எண்ணங்களையும் வளர்த்துக்கணும். இதெல்லாம் இருந்தா ஓவியத் துறையிலே நிச்சயம் ஜெயிக்க முடியும்!

- சா.இலாகுபாரதி


(2010, விகடன்.காம்)

3 comments:

வணக்கம் சகோ, உங்கள் ப்ளாக்கிற்கு பாலோவர் வைக்கவில்லையா?

வைத்திருக்கிறேன். இடதுபுறத்தில் உள்ள பேஸ்புக் Like Button கிளிக் செய்து பேஸ்புக் குழுமத்தில் இணைந்துகொள்ளமுடியும். இதில் உங்கள் கருத்துகளையும் விவாதங்களையும்கூட நீங்கள் முன்வகைக்கலாம் நண்பரே... வரவேற்கிறேன்! தளத்துக்கு தொடர்ந்து வருகை தாருங்கள்!

நல்ல பதிவு நண்பரே...
என் கவிதைகளை படித்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்....

Post a Comment

கோப்பு

கோப்பு