27 July 2011

செக்ஸி ஷில்பா!

Posted by Gunalan Lavanyan 6:52 AM, under | No commentsமைல்கல்: 1

ஓவியர் ஸ்யாம்: 3

தொடர்ச்சி...


டென்த் படிக்கும்போது மூர்த்திங்கிற பையனுக்கும் எனக்கும் சுத்தமா ஆகாது. அவன் ரஜினி ரசிகன். ரஜினிக்கு ஒரு லெட்டர் போட்டான். அவரும் பதில் கடிதம் அனுப்பிட்டாரு. அவ்வளவுதான் அவன் ஹீரோ ஆயிட்டான்.

ஸ்கூல்லே எவனும் என்னை மதிக்கலை. இந்தமாதிரி ரஜினி கிட்டேருந்து லெட்டர் வந்தா நம்பளை யார் மதிப்பா..? அப்போ பரீட்சை வேற நடந்துட்டு இருந்தது. முடியட்டும்னு இருந்தேன். முடிஞ்சதும், கோவில்பட்டியில் இருந்து ராஜபாளையம் போகவேண்டியவன் மெட்ராஸுக்கு பஸ் ஏறிட்டேன். கையில் ஒரு முன்னூறு ரூபா. அப்புறம் ரஜினி, கமல், சத்தியராஜ் இப்படி நிறைய ஹீரோக்கள். படங்களாக இருக்கிறார்கள்; அவ்வளவுதான்.

எக்மோர் வந்து சேர்ந்தேன். அங்கிருந்து நடந்தே ஏவி.எம். ஸ்டூடியோ வந்தேன். உள்ளே போனா, 'குற்றவாளிகள்'னு ஒரு படம் ஷூட்டிங். வேடிக்கைப் பார்க்கலாம்னு அங்கிருந்த ஒரு கல்லு மேலே உட்கார்ந்தேன். கல்லு டபக்குன்னு உள்ளே போயிடுச்சு. எழுந்து ஒரு திண்ணையிலே உட்கார்ந்தேன். திண்ணை பொதக்குன்னு போயிடுச்சு. 'ஏய்... ஏய்... அங்கே உட்காராதப்பா, எல்லாம் செட்டு'ன்னு சொல்லிட்டு ஒரு அசிஸ்டென்ட் டைரக்டர் வந்தாரு, 'யாரு நீ... எல்லாத்தையும் உடைச்சிட்டு இருக்கே'ன்னார். 'இல்லைங்க டிராயிங் வரைஞ்சிருக்கேன் ரஜினிகாந்தைப் பார்க்கணும்.' 'என்னது ரஜினிகாந்தை பார்க்கணுமா.' 'அட்லீஸ்ட் கமல், சத்தியராஜையாவது பார்க்கணும்; ஆட்டோகிராஃப் வாங்கணும்'னேன். 'ஊர்லேருந்து கிளம்பி வந்திருக்கியா... எங்க படத்தைக் காட்டு'ன்னார். பார்த்துட்டு, 'எதுக்குப்பா இதெல்லாம் உனக்கு, எதிர்லேதான் 'அம்புலிமாமா' பத்திரிகை இருக்கு அங்க போனாலும் எதாச்சும் வேலை கொடுப்பாங்க'ன்னு சொன்னாரு.


அம்புலிமாமா ஆபீஸ் பக்கம் போனேன். மறுநாள் இன்டர்வியூ. அதனாலே, 'நாளைக்கு வா'ன்னாங்க. இன்டர்வியூலே ஒரு படம் போட்டு காண்பிச்சேன். இன்டர்வியூ பண்ண பிரசாத் ரெட்டிக்கு படம் புடிச்சுப்போச்சு. வேலையும் கிடைச்சிடுச்சு. வவுச்சர்லே கையெழுத்து போடச்சொல்லி, கையிலே 350 ரூபா கொடுத்து, 'தம்பி நாளைக்கு வந்து வேலையிலே சேர்ந்துக்கோ'ன்னு சொல்லி அனுப்பிவெச்சார். எனக்கு ஒரே ஆச்சர்யம். மெட்ராஸுக்கு வந்த ரெண்டாவது நாள்லேயே, 350 ரூபா முன்பணத்தோட வேலை கிடைச்சிடுச்சேன்னு ஒரே சந்தோஷம். அந்த சந்தோஷத்தோடயே போய், மறுநாள் வந்தேன். ஒரு சின்ன டேபிள் போட்டு உட்காரச் சொன்னாங்க. வேலையே இல்லாம, பதினோரு மணி வரைக்கும் 'பே... பே...'ன்னு முழிச்சிட்டு இருந்தேன். சுடச்சுட ஏலக்கா டீ வந்தது; குடிச்சேன். ஒருத்தர் வந்து, 'தம்பி, இங்கே கேண்டீன் இருக்கு. சாப்பாடு வெறும் 10 பைசாதான். இங்கேயே சாப்பிட்டுக்கோ'ன்னார்.

பத்து பைசவா... ஆச்சர்யமா இருந்தது. மத்தியம் கேண்டீன்லேயே சாப்பிட்டேன். பத்து பைசா வயிறையே நிரைச்சிடுச்சு. வெளியே வந்தா கார் டிரைவர் ஒருத்தர், 'என்னப்பா வேலைக்கு புதுசா..?' 'ஆமா, நீங்க எந்த ஊரு.' 'திருநெல்வேலி, நீ...'ன்னாரு. 'நான் ராஜபாளையம்'. 'அப்படியா நமக்கு ரொம்பப் பக்கம். நான் விளம்பரம் கொடுக்குறதுக்காக குமுதம் ஆபீஸ் போகப் போறேன். அங்க வேலை பார்த்தேன்னே நிறைய சம்பளம் கொடுப்பாங்க; பேரும் கெடைக்கும். வரீயா... கூட்டிட்டுப் போறே'ன்னாரு.

அவரோடயே கார்ல போய் குமுதம் வாசல்லே இறங்கினேன். 'நான் உள்ளே போய்ட்டு வர்றேன்... அதுக்குள்ளே யாராச்சும் வருவாங்க. அவங்ககிட்டே பேசி வாய்ப்பு கேளு'ன்னார். ரிசப்ஷன்லே உட்கார்ந்துட்டு இருந்தேன். யாரோடேயோ பேசிட்டே பாக்கியம் ராமசாமி வந்தார், 'யாருப்பா நீ...?' 'ஆர்டிஸ்ட்.' 'அப்படியா! படமெல்லாம் நல்லா போடுவியா'ன்னு, தோள் மேலே கை போட்டு கூட்டிப்போய், அவர் டேபிள் பக்கத்துலே உட்காரவெச்சாரு. டேபிள் டிராயர்லேருந்து கடலை உருண்டை, பொரி உருண்டை எல்லாம் எடுத்து கொடுத்து, 'சாப்பிடு, வந்துர்றேன்'னு போனார். கால் மேலே கால் போட்டு சாப்பிட ஆரம்பிச்சேன். 

அந்த நேரம் பார்த்து ஒருத்தர் என்னை கிராஸ் பண்ணார். திரும்பி வரும்போது, 'யாரு நீ..?' 'ஆர்டிஸ்ட்.' அவருக்கு கோவம் வந்துடுச்சு. 'என்ன தெனாவட்டா பதில் சொல்றானே'ன்னு பார்த்தாரு. அப்புறம் பாக்கியம் ராமசாமி வந்தாரு, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி போனவர் எங்கிருந்தோ குரல் கொடுத்தாரு. 'யாருப்பா அது..?' 'ஆர்டிஸ்ட்டுப்பா'ன்னார் பாக்கியம் ராமசாமி. அப்புறம், 'யாராச்சும் வந்தா நின்னுட்டுதான் பேசணும். பெரியவங்களுக்கு மரியாதை கொடுக்கணும். சின்ன பையனா இருக்கிறே... அதான் இதெல்லாம் உனக்குத் தெரியலை...'ன்னார். அப்படி சொன்னவர் ரா.கி.ரங்கராஜன்.

'அப்புறம்... என்ன வரையத் தெரியும்'னு கேட்டார். ஏற்கெனவே வரைஞ்சி வெச்சிருந்த ரஜினி, கமல் படங்களை காட்டினேன். பார்த்துட்டு, 'இதெல்லா வரைய நிறைய பேர் இருக்காங்க. அதனாலே இதைவிடு. நல்ல, அழகான பொண்ணு படம் வரைவியா...' 'சரி சார் வரையரேன்'னு சொல்லி, கடகடன்னு செக்ஸியான ஒரு பொண்ணு படம் வரைஞ்சேன்.

'பரவாயில்லையே ஸ்பீடா வரையிறையே... நல்லாவும் வரையிறையே...'ன்னு சொல்லிட்டு, ஒரு பச்சைக் கதவு திறந்து, உள்ளே போனார். அவரு பின்னாடியே ரெண்டு மூணு பேர் போனாங்க. வெளியே வந்ததும் என்னை இன்னொரு ரூமுக்கு கூட்டிப் போய், 'நான் ஒரு கதை சொல்லுவேன். அதுக்குப் படம் போடுவியா...' 'சொல்லுங்க போடுறேன்.'

'ஷில்பா... ஷில்பா...ன்னு ஒரு பொண்ணு. யாரு...?' 'ஷில்பா... ஷில்பா...ன்னு ஒரு பொண்ணு.' 'அவ படுத்திருக்கா, என்ன பண்றா...' 'படுத்திருக்கா' 'படுத்துக்கிட்டு லேம்ப் வெச்சிக்கிட்டு படிச்சிட்டு இருக்கா, இதை நீ எப்படி போடுவே...'ன்னார். 'எப்படி போடணும்...' - நான் கேட்டேன். 'நீ எப்படி போடுவியோ அப்படி போடு'ன்னார். எவ்வளோ செக்ஸியா போடணுமோ அவ்வளோ செக்ஸியா போட்டேன். நைட்டி போட்டுக்கிட்டு, அவ படிக்கிறா... படிக்கிற புக் ஃபேன்லே பறக்குது... வெச்ச கண் வாங்காமே எல்லாரும் பார்த்தாங்க. அதை கொண்டு உள்ளே போய், யார்கிட்டேயோ காட்டுறாங்க. உள்ளே இருக்கிறவர் ஓகே. சொல்லிட்டார். ஓ.கே. சொன்னவர் எஸ்.ஏ.பி.அண்ணாமலை.

அந்தப் படத்தையே இன்னும் அழகா போட்டுத் தரச் சொன்னாங்க. பாக்கியம் ராமசாமி சொன்னார், 'நீ யார் கதைக்கு படம் போட்டு இருக்கே தெரியுமா... ராஜேஷ் குமாரோட தொடர்கதைக்கு...'


அது மெட்ராஸ் வந்த மூணாவது நாள். அப்போ எனக்கு, அது பெரிய விஷயமாவே தெரியலை. படம் போட்டு முடிச்சதும், 'நீ எங்க வேலை பார்க்குறே'ன்னு பாக்கியம் சார் கேட்டார். 'சந்திரமாமா பிள்டிங்லே வேலை பார்க்குறேன்.' 'அப்படியா... தினமும் மத்தியானம் 2 மணிக்கு மேலே இங்கே வந்துடு 4 மணி வரைக்கும் இரு... மாசம் 2 ஆயிரம் ரூபா வாங்கித் தர்றேன்'னார். மறுபடியும் மறுபடியும் ஆச்சர்யமா இருந்தது. என்னடா இது மெட்ராஸ் வந்ததும் இப்படி இன்னொரு வேலையான்னு ஒரே சந்தோஷம்.

தொடரும்...- சா.இலாகுபாரதி

(2010, விகடன்.காம்)

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு