25 July 2011

கூந்தல் பராமரிப்பு

Posted by lavanyan gunalan 7:44 PM, under | No comments

பெண்ணோ, ஆணோ... முடி பிரச்னை பலருக்கும் முடியாத பிரச்னை! கூந்தல் உதிர்வது, இளநரை, பொடுகு மற்றும் பேன் தொல்லை, டை அலர்ஜி என்று ஏகப்பட்ட சிக்கல்கள். “வீட்டில் இருக்கிற பொருட்களை வைத்தே இவற்றுக்கெல்லாம் எளிய முறையில் இயற்கை வழியில் தீர்வு காணலாம்” என்கிறார் சித்த மருத்துவர் வி.கௌரிதேவி.




ஹேர் வாஷ்

கூந்தலைச் சுத்தப்படுத்த மூன்று வழிமுறைகள் இருக்கிறது. செம்பருத்தி இலையை நைசாக அரைத்து தலைக்குப் பூசி குளிக்கலாம். வெண்டைக்காய் இலையையும் அரைத்துப் பூசி குளிக்கலாம். இது இரண்டும் சாத்தியமில்லை என்றால், பாசிப் பயிரை அரைத்துக் கூந்தலில் தேய்த்துக் குளித்தால் முடி சுத்தமாவதுடன் பட்டுப்போல பளபளக்கும்.

பொடுகு-பேன் தொல்லை

இது பல பெண்களின் பெரிய பிரச்னை. இந்தத் தொல்லையிலிருந்து விடுபடுவது எளிது. கசகசாவைப் பதமாக அரைத்து, அதோடு தயிரைக் கலந்து தலையில் தடவி, அரை மணிநேரம் ஊறவைத்து பிறகு குளிக்க வேண்டும். அல்லது வெள்ளை மிளகை நைஸாக அரைத்து, அதில் பாலைக் கலந்து கூந்தலில் தடவி, அரை மணி நேரம் ஊறவைத்து பிறகு தலையை அலசினாலும் பொடுகு மற்றும் பேனை விரட்டலாம். இப்படி வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்ய வேண்டும்.

இளநரை, முடி உதிர்தல் - உடைதல்

இந்தச் சிக்கல்களில் இருந்து விடுபட வீட்டிலேயே ஒரு எண்ணெயைத் தயாரிக்கலாம்.

தேவையானவை: கறிவேப்பிலை, மருதாணி, பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி, நெல்லிக்காய், கடுக்காய் தூள், சந்தனத் தூள், தேங்காய் எண்ணெய்.

செய்முறை: இந்தக் கீரைகளையும், நெல்லிக்காய் மற்றும் செம்பருத்தியையும் அரைத்து சாறு எடுக்க வேண்டும். அதில் கடுக்காய், சந்தனப் பொடியை போட்டு கலக்க வேண்டும். தேங்காய் எண்ணெயை ஒரு பாத்திரத்தில் விட்டு சூடாக்க வேண்டும். எண்ணெய் இளஞ்சூடானதும், இந்தக் கலவையை சேர்த்து கலக்கிக்கொண்டே இருக்க வேண்டும். இது மெழுகு பதமானதும், இறக்கி ஆறவைத்து பாட்டிலில் அடைத்து வைக்கவும். இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தேய்த்து ஊறவைத்துக் குளிக்கலாம். அல்லது குளித்து முடித்த பிறகும்கூட தலைக்கு தேய்த்துக் கொள்ளலாம். தினமும் இப்படி செய்து வந்தால் முடி உதிர்வதைத் தடுக்க முடியும், முடியின் வேர்கள் கெட்டியாகும். கூந்தலும் அடர்த்தியாக கருகருவென வளரும். இளநரையும் நாளடைவில் காணாமல் போய்விடும்.

ஹேர்-டை

நாமே இயற்கை ஹேர் டையை வீட்டில் தயாரிக்கலாம். மருதாணி இலையை அரைத்து அதில் யூகலிப்டஸ் தைலத்தைக் கலந்தால் போதும், ஹேர் டை தயார். யூகலிப்டஸ் தைலம் கலப்பதால் மருதாணி குளிர்ச்சியால் சளி பிடிக்குமே என்ற கவலையும் தேவை இல்லை.

- சா.இலாகுபாரதி
நம் தோழி, பிப்ரவரி 2011

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு