24 July 2011

சக்தி கொடு!

Posted by Show Now 8:11 AM, under | 3 comments

வியாசர்பாடி ஏரியாவில் யாரிடம் கேட்டாலும் சக்தி ஈஸ்வரி வீட்டுக்கு வழி சொல்கிறார்கள். வீடு நிறைய மெடல்களையும் கோப்பைகளையும் குவித்து வைத்திருக்கிறார் இந்த கால்பந்தாட்ட வீராங்கனை. கோப்பைகளுக்கும் மெடல்களுக்கும் இணையாக சக்தியின் வீட்டில் வறுமையும் நிறைந்திருக்கிறது.

“இந்த ஆண்டு பாரிஸில் நடக்க இருக்கும் ஹோம்லெஸ் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் நான் நிச்சயம் பங்குபெறுவேன்... போனமுறை பிரேசில் போட்டியை மிஸ் பண்ணிய மாதிரி இந்தமுறை விடமாட்டேன்” என்று தீர்க்கமாகச் சொல்லும் சக்தியிடம், “ஏன் போனமுறை கலந்துக்கலை... ஃபிட்னஸ் இல்லாமல் போயிடுச்சா” என்றால் வேதனையோடு சிரிக்கிறார்.

சக்தி ஈஸ்வரி
“கொல்கத்தாவில்தான் என்னை தேர்வு செஞ்சு பிரேஸில் போட்டிக்கு அனுப்ப இருந்தாங்க. போட்டியில் பங்கேற்கணும்னா 75 ஆயிரம் நுழைவுக்கட்டணம் கட்டணும். 5 ஆயிரம் முன்பணம் கட்டி பதிவு செஞ்சுட்டேன். மீதி கட்டவேண்டிய பணத்தை ஸ்பான்ஸர்கள்கிட்டே வாங்கி கட்டிடலாம்னு தைரியமா இருந்துட்டேன். தரேன்னு சொன்னவங்க யாரும் கடைசியில் தரலை... பாஸ்போர்ட்டும் வந்து சேரலை. என்ன பண்றதுன்னே தெரியலை. போட்டியே முடிஞ்சு போச்சு. போட்டிக்கு தேர்வாகி, விளையாடாம போனது ரொம்ப வேதனையாப் போச்சு. உலக நாடுகள் கலந்துக்கிற போட்டியிலே நாமும் கலந்துக்கிட்டு இந்தியாவுக்குப் பெருமை சேர்க்கலாம்னு நினைச்சது கனவாகவே போச்சு” என்று தன் சோகத்தை சக்தி சொல்லும்போது கண்களின் ஓரம் நீர் கட்டுகிறது. சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு தன் பின்னணியைச் சொன்னார் சக்தி.

“எங்க குடும்பத்தில் விளையாட்டுக்கெல்லாம் இடமில்லை. விடிந்தால் ஒரு வேளை சோறு கிடைக்குமாங்கிற கேள்வியோடு தூங்கப் போற எங்களுக்கு கால்பந்தைப் பற்றி யோசிக்க முடியுமா சொல்லுங்க? அதோடு, பொண்ணு இப்படி ஷார்ட்ஸ் மாட்டிக்கிட்டு திரியலாமான்னு ஏரியாவில் கேட்பாங்க. இப்படி பல தயக்கங்கள் இருந்தாலும், கால்பந்தைத் தொட்டநாள் முதல் அது என்னைப் பிடித்துக் கொண்டது. போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோதான் எனக்கு ரோல்மாடல். என் ஆர்வத்தை புரிந்துகொண்டு எங்கள் பகுதி கால்பந்து பயிற்சியாளர் தங்கராஜ் எனக்கு பயிற்சியளிக்க முன்வந்தார். ஆண்கள் அணி, பெண்கள் அணின்னு தனித் தனி அணிகளா நாங்க போட்டிகளில் பங்கேற்றாலும், பயிற்சின்னு வந்துட்டா எல்லாரும் ஒரே அணியா களத்தில் இறங்குவோம்.

போட்டிக்கு கிளம்புறதுக்கு முன்னாடி, நேரம் காலம் பார்க்காமல் காலை, மாலை ரெண்டு வேளையும் தொடர் பயிற்சிகள் எடுப்பேன். ஒரு நாளைக்கு 6 முதல் 7 மணி நேரம் பயிற்சி நீளும். பொதுவா கால்பந்து பயிற்சி எடுக்கிறவர்கள், பயிற்சிக்கு முன்னேயும், பின்னேயும் பால், முட்டை, பிரெட், ஜூஸ்னு நல்ல சத்தான, ஆரோக்கியமான உணவு எடுத்துப்பாங்க. ஆனா, வசதி இல்லாத வீரர்கள் வீட்டில் இருக்கிற கஞ்சியையோ, கூழையோ குடிச்சிட்டுத்தான் பயிற்சி எடுப்பாங்க. ஆனா, எனக்கு அதுவும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் கல்லூரிக்குப் போகும்போதுகூட வெறும் வயிறுதான். என்னுடைய கஷ்டத்தை, எங்க குடும்ப வறுமையை தெரிஞ்சிக்கிட்ட நண்பர்கள், எனக்கு உதவி செய்வாங்க. சிலர் சாப்பாடு வாங்கிக் கொடுப்பாங்க. சிலர் புக்ஸ், நோட்டு வாங்குறதுக்கு உதவுவாங்க. காசு - பணம் இல்லைன்னாலும் இப்படிப்பட்ட நண்பர்களைச் சம்பாதிச்சிருக்கும் நான் பணக்காரிதான்!” என்றார்.

பேச்சு குடும்பத்தின் பக்கம் திரும்பியது.

“போர்ட் ட்ரஸ்டில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார் அப்பா. நீண்டகாலமாக வேலைக்கு போகாமல் மட்டம் போட்டுவிட்டார். அதனால், வேலை போய்விட்டது. அம்மா ஓட்டலில் கூலி வேலை பார்த்து சம்பாதிக்கிறார். எனக்கு மூணு அக்கா. மூணு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. ரெண்டு பேரோட கணவன், அவங்களை விட்டுட்டு போயிட்டாங்க. அதனால் ஒண்டியாத்தான் கூலி வேலை செஞ்சி வாழ்ந்துட்டு வர்றாங்க. நிறைய நாட்கள் அம்மாதான் அவங்களுக்கும் உதவி செய்வாங்க. அம்மாவின் 80 ரூபா சம்பளத்தை வெச்சு எத்தனைப் பேர் சாப்பிட முடியும்? ஒரு அண்ணன் இருக்கார். அவருக்கும் கல்யாணமாகிடுச்சு. தன்னோட வேலைகளை கவனிச்சுக்கிட்டு அவர் இருக்கார். ஒரு தம்பி, நான்... எத்தனை பேருக்கு அம்மாவால் சோறு போட முடியும்?

அதனால், ஸ்கூல் படிக்கும்போதே நானும் மீன் மார்க்கெட்டுக்கு வேலைக்கு போயிட்டு இருந்தேன். மீன் சுத்தம் பண்ணி கொடுத்து, அதுல வர்ற வருமானத்தை பல நேரங்களில் குடும்ப செலவுக்கும், சில நேரங்களில் படிப்பு செலவுக்கும் வெச்சுப்போம். இந்தச் செலவுகளுக்கே பணம் பத்தும் பத்தாம போகும். அப்புறம் எங்க ஃபுட்பால் வாங்குறது, ஷூ வாங்குறது... யாராச்சும் உதவி செஞ்சாத்தான் உண்டு. எத்தனை நாளைக்குத்தான் மத்தவங்களோட உதவியை எதிர்பார்த்துட்டு இருக்க முடியும். அதனால்தான் கஷ்டப்பட்டு படிச்சுட்டு இருக்கேன். இதில் வீஸிங் தொல்லை வேற என்னைப் பாடாய்ப் படுத்தி எடுக்குது. அதுக்கு மருத்துவம் பார்க்கவும் முடியலை. என் அம்மாவுக்கோ, நான் பிஎஸ்சி முடிச்சுட்டு, பிஎல் படிக்கணுங்கிறது ஆசை. எனக்கோ கால்பந்து விளையாட்டுலே சாதிக்கணுங்கிறது நோக்கம். ஆனால், தினப்படி வாழ்க்கைக்கே போராட்டமா இருக்கு. பார்க்கலாம்... யார் ஆசை ஜெயிக்குதுன்னு!” என்றார் சக்தி ஈஸ்வரி.

கவலைப்படாதீர்கள்... உங்கள் கனவும் அம்மாவின் ஆசையும் நிறைவேறும்!

- சா.இலாகுபாரதி
நம் தோழி, 2011

3 comments:

வணக்கம் நண்பரே

உங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...

http://www.valaiyakam.com/

ஓட்டுப்பட்டை இணைக்க:
http://www.valaiyakam.com/page.php?page=about

GOOD POST
IF U HAVE TIME MEAN VISIT MY BLOG
http://manasaali.blogspot.com

Remove Word Verification

கருத்துப் பகிர்ந்துவிட்டுச் சென்றதற்கும், புதிய தளங்களை அறிமுகப் படுத்தியதற்கும் வலையகம் மற்றும் மனசாலிக்கு அன்பார்ந்த நன்றிகள்

Post a Comment

கோப்பு

கோப்பு