10 July 2011

பேருந்து ஓட்டுனர்களின் (புறம்)போக்குத் தனம்

Posted by lavanyan gunalan 10:27 PM, under | 4 comments

சமீபகாலமாக பேருந்துகளால் ஏற்படும் சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இத்தகைய விபத்துகளுக்கு பேருந்து ஓட்டுனர்களே மூலகாரணமாக இருப்பதுதான் வேதனையளிக்கிறது. கடந்த மாதம் மட்டும் இரண்டு முறை பெரிய அளவில் பேருந்து விபத்துகள் நடந்துள்ளன. இந்த இரண்டு விபத்துகளில் இருந்தும் பேருந்து ஓட்டுனர்கள் உயிர்தப்பி விட்டார்கள். உயிர் இழந்ததும், காயமுற்றதும் பயணிகள்தான். பாதிக்கப்பட்டதும் அவதிப்பட்டதும் பயணிகள்தான். அங்காங்கே இப்படி விபத்துகள் நடப்பதை பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் செய்திகள், காட்சிகள் வெளியிட்டாலும் ஓட்டுனர்களின் அஜாக்கிரதையும் பொறுப்பற்றத்தன்மையும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

நெடுஞ்சாலைகளில் பேருந்துகளை இயக்குபவர்கள் கனரக வாகனங்களை முந்திக்கொண்டு போவதும், ஒரே நாளில் இரண்டு மூன்று டியூட்டி பார்ப்பதும் பேருந்து விபத்துகளுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகின்றன. அதேபோல, பின்னால் வரும் வாகனங்களையும், முன்னால் போகும் வாகனங்களையும் பொருட்படுத்தாமல் முந்திச் செல்வதும் விபத்துகளுக்கு வழிவகுக்கின்றன. மலேசியா போன்ற நாடுகளில் வாகனங்களின் வேகத்தை தணிக்கை செய்வதற்காக சாலைகளில் வேகத் தணிக்கை கருவி பெருத்தியிருக்கிறார்கள்.

அதனால், அரசு பேருந்து ஓட்டுனர்கள், தனியார் வாகன ஓட்டுனர்கள் என யாராக இருந்தாலும் இந்த வேகத் தணிக்கை கருவியின் கண்காணிப்பிலிருந்து தப்ப முடியாது. அப்படியே யாராவது வேகத்தை கூட்டி ஓட்டினாலோ, விதிகளுக்குப் புறம்பாக வாகனத்தை இயக்கினாலோ அடுத்த வாகன தணிக்கைச் சாவடியில் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். அல்லது அலுவலகத்துக்குச் செல்லும்போது டிஸ்மிஸ், சஸ்பெண்ட், மெமோவோ ஏதாவது ஒன்று காத்திருக்கும். இத்தகைய கடுமையான தண்டனைகள் இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை.


அதேபோல, சென்னை மாநகர பேருந்து ஓட்டுனர்களின் (புறம்)போக்குத் தனத்தையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும். சிக்னலை மதிக்காமல், போக்குவரத்து காவலர்களை மதிக்காமல், முன், பின், அருகில் வரும் வாகனங்களை மதிக்காமல் சைடு வாங்கிப் போவது, ஓவர் டேக் செய்வது, சிகப்பு விளக்கு விழுந்த பிறகும் சிக்னலை கடப்பது, பேருந்து நிறுத்தத்தில் வாகனத்தை நிறுத்தாமல் செல்வது என்று மாநகரப் பேருந்து ஓட்டுனர்களின் அட்டூழியங்களை சொல்லி மாளாது. இதில் விதி விலக்காக சிலர் இருக்கவே செய்கிறார்கள். இருந்தாலும் விதி மீறலில் ஈடுபடுகிறவர்களே அதிகமாக இருக்கிறார்கள்.

இதற்கு போக்குவரத்து போலீஸும், போக்குவரத்து துறையும் சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேநேரத்தில், மாநகரப் பேருந்துகளின் பராமரிப்பையும் அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.


புகை கக்கும் சென்னை மாநகர பேருந்து
என்னதான் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், தொண்டு நிறுவனங்கள் மாங்கு மாங்கென்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் முகாம்களையும் நடத்தினாலும் தீபாவளியையும் பொங்கலையும் கொண்டாடுகிற மக்களைத்தான் அரசும் காவல் துறையும் கட்டுப்படுத்துகிறதே தவிர, அரசு மற்றும் தனியார் வாகனங்களில் இருந்து வெளிவரும் கரும்புகையை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுப்பதுமாதிரி தெரியவில்லை. மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, இரு சக்கர வாகனங்கள் தொடங்கி எல்லா வாகனங்களும் புகைப் பரிசோதனை செய்து சான்றிதழ் வாங்கவேண்டும் என்பதை கட்டாயமாக்கவேண்டும். குறிப்பிட்ட தேதிக்குள் இந்த பரிசோதனை செய்து சான்றிதழை புதுப்பிக்காவிட்டால், தானாகவே லைசென்ஸ் துண்டிக்கப்பட வேண்டும். இப்படியொரு நடவடிக்கை அரசு பேருந்து மற்றும் வாகனங்களுக்கும் பொருந்தவேண்டும்.

இப்படிப்பட்ட தீவிரமான நடவடிக்கைகளை காவல்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், போக்குவரத்துத் துறை மூன்றும் இணைந்து செயல்படுத்தினால் போக்குவரத்தில் உள்ள பல பிரச்னைகளுக்கு தீர்வுகாணமுடியும்.

4 comments:

பதிவு அருமை.

ஆனால்......

செவிடன் காதுலே ஊதுன சங்கு:(

வேர்டு வெரிஃபிகேஷனைத் தூக்கிட்டால்......பின்னூட்டம் இடுவது எளிது.

சரியாகச் சொன்னீர்கள். ஆனால், எந்த அரசு வந்தாலும் அதைச் செய்யாது என்பது உங்களுக்குத் தெரியாதா...

மரியாதைக்குரியவரே,வணக்கம்.தங்களது பதிவு அவசியம் கருத்தில் கொள்ள வேண்டிய பதிவுங்க!. அதே சமயம் தங்களுக்கு எனது பணிவான வேண்டுகோள். பேருந்து ஓட்டுனர்களின் புறம்போக்குத்தனம்!?! என்று வேறு பதிவிட்டுள்ளீர்கள். அவ்வளவு கேவலமான கோபத்திற்கு காரணம் என்னங்க? தாங்கள் அதுபோல செயல்படும் பேருந்து ஓட்டுனர்களை நேரில் பேட்டி காணலாமே!. அதன்பின்னர் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தலாமே!. ஏனென்றால் துறை சார்ந்த பல நெருக்கடிகள் தங்களுக்கு சிறிதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லைங்க.அரசுப்பேருந்து பொறுத்தவரை சொல்ல முடியாத அளவு நெருக்கடிகள் அதிகம்தாங்க!. தாங்கள் விருப்பப்பட்டால் எனது முகநூல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்.எனது முகநூல் முகவரி parameswarandriver சமூக நலன் கருதி தங்களது விவாதத்தினை எதிர்கொள்ளும் ஓட்டுனர் பரமேஸ

Post a Comment

கோப்பு

கோப்பு