18 July 2011

வெண்ணிலா - முருகேஷ் காதல் கதை

Posted by Show Now 10:32 PM, under | 3 comments

கவிஞர் அ.வெண்ணிலாவின் கனவிருந்த கூடு புத்தகத்தைப் புரட்டியபோது ‘நன்றி இந்திய தபால்துறை’ என்று சொல்லியிருக்கிறார். உண்மைதான்... அவருக்கும் கவிஞர் மு.முருகேஷுக்குமான காதலில் முக்கிய பங்கு இந்திய தபால் துறைக்கு இருக்கிறது. அவர்களுடைய காதலுக்காக இந்திய அரசாங்கமே ஓடி ஓடித் தூது சென்றிருக்கிறது. அந்த வகையில் அவர்களுடைய காதல், கடிதங்களால் ஆனது! கல்யாணத்துக்காகக் காதலிப்பவர்களின் பெயர்களை எழுதிக்கொண்டே இருக்கலாம்! காதலிப்பதற்காகக் கல்யாணம் பண்ணிக்கொண்டவர்கள் பட்டியல் மிகச் சிறியது. அதில் முன் வரிசையில் இருப்பவர்கள் அ.வெண்ணிலா - மு.முருகேஷ். இலக்கிய நண்பர்களாகிக் காதலரானவர்கள். காதலித்துக் கொண்டிருந்தபோது நாள் தவறாமல், வெண்ணிலா முருகேஷுக்கு எழுதிய கடிதங்கள் அத்தனையும் கவிதை. முருகேஷ் எழுதிய கவிதைகள் அத்தனையும் வெண்ணிலாவுக்கான கடிதம். தங்களுடைய காதல் வாழ்க்கையை முருகேஷ் பேசுகிறார்...

வெண்ணிலா - முருகேஷ்
பூங்குயில் இலக்கியப் பத்திரிகையிலே ரெண்டு பேரும் கவிதை எழுதிட்டு இருந்தோம்... அப்பதான் எழுத்து மூலமா ரெண்டு பேருக்கும் அறிமுகம் ஏற்பட்டுச்சு. நான் புதுக்கோட்டைக்காரன். வெண்ணிலாவுக்கு அம்மையப்பட்டு. எங்களுக்குள் தூரம் அதிகம்... ஆனால், இடைவெளி இருந்தது இல்லை!

வெண்ணிலா கவிதையைப் படிச்சிட்டு நானும், என் கவிதையைப் படிச்சிட்டு வெண்ணிலாவும் மாறிமாறி கடிதம் எழுதுவோம். சில நேரங்கள்லே கடிதத்துக்கு பதிலா, நான் கவிதை அனுப்புவேன். கடிதங்களும் கவிதைகளும்தான் எங்கள் முகவரியாக இருந்த நிலையில் ஒருநாள் வெண்ணிலாவைச் சந்திக்க அவர் ஊருக்கே போனேன். முற்போக்கான அவருடைய குடும்பம் என்னை அவர்களின் நண்பனாகவும் அணைத்துக்கொண்டது. பின்னாளில் நாங்கள் காதலைச் சொன்னபோது இந்த நட்புதான் அதற்கு தலையசைக்க வைத்தது.

”நான் நட்பைக் காட்டினா, பதிலுக்கு ஆண்கள் ‘ஐ லவ் யூ வெண்ணிலா’னு காதலை காட்டுகிறார்கள், முருகேஷ்...”னு வெண்ணிலா என்னிடம் சொன்னாங்க. ஆனால், நட்பைக் காட்டும் முதல் ஆண்மகனாக நான் வெண்ணிலாவுக்கு இருந்தேன். என்னோடு பல ஊர்களுக்கு நிகழ்ச்சிகளுக்காகப் பயணித்தபோதும் வெண்ணிலா என்னோடு இயல்பாக இருக்கக் காரணமாக இருந்தது அந்த நட்புதான். இப்போ வரைக்கும் எங்களுக்குள் அந்த நட்பு உயிர்ப்போடு இருக்கு.

ஆனால், எங்கள் நட்புக்குள் இருந்த காதலை அடையாளம் கண்டுபிடித்தவர் தோழர் கமலாலயன். அவரும் பேச்சாளர் முத்துநிலவனும் ‘முருகேஷ், நீங்க ஏன் வெண்ணிலாவைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது?’ன்னு கேட்டாங்க. எனக்கு அந்தக் கேள்வியைவிட வெண்ணிலாவின் நட்பும் அவரோட பெற்றோர் என்கிட்டே காட்டிய அன்பும் முக்கியமாகப் பட்டது. அதனால், நான் மவுனமாக இருந்துட்டேன். அந்தப் பெற்றோரின் நட்புக்கு நான் அவ்வளவு மரியாதை கொடுத்தேன். அந்த நட்பின் உரிமையில் வெண்ணிலாவுக்கு மாப்பிள்ளை பாருங்க என்று என்னிடமே சொல்லியிருக்கிறார் வெண்ணிலாவின் அப்பா.


வெண்ணிலா டீச்சர்ங்கிறதாலே, நானும் வாத்தியார் மாப்பிள்ளைகளா பார்க்க ஆரம்பிச்சேன். அந்த சந்தர்ப்பத்துலே ஒருநாள், நானும் வெண்ணிலாவும் மலையிலே சந்திச்சோம். அங்கேதான் வெண்ணிலா மனம் திறந்து என் மீதுள்ள காதலைச் சொன்னார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எதிர்பார்க்காத விஷயம், எதிர்பார்க்காத நேரத்துலே நடக்கும்போது ஒருத்தரோட மனநிலை எப்படி இருக்குமோ அப்படித்தான் இருந்தது என்னோட மனசும். ’எங்க அப்பாகிட்ட வந்து பொண்ணு கேளுங்க’ன்னு சொன்னாங்க. எங்களுக்குள் இருந்த காதல் வெளியே வந்த பிறகு தோழர் கமலாலயன்தான் உதவிக்கு வந்தார். என் மீது வைத்திருந்த நட்பை மதித்து வெண்ணிலாவின் அப்பா திருமணத்துக்குச் சம்மதித்தார்.

என் வீட்டில் என் சகோதரியின் மகளை மணமுடித்து வைக்க நினைத்திருந்தனர். அவர்களைச் சமாதானம் செய்து வெண்ணிலாவை ஏற்றுக்கொள்ள வைப்பதற்குள் பெரும் பாடாக இருந்தது. அதிலும், மகளைத் தர நினைத்த அக்கா ரொம்பவே வேகமாக இருந்தார். என் திருமணத்தின்போது மண்டப வாசலில் தன்னைக் கொளுத்திக்கொள்ள போவதாகச் சொன்னார். நான் அந்த அக்கா மகளுக்கு முதலில் திருமணம் செய்துவிட்டுத்தான் என் திருமணத்துக்குத் தயாரானேன்.

என் திருமணத்தின்போது சடங்கு சம்பிரதாயங்கள் வேண்டாம் என்று இருவருமே எண்ணினோம். தாலிகூட வேண்டாம் என்பது எங்கள் முடிவு. தாலி மட்டுமாவது இருக்கட்டுமே என்பது பெற்றோர்களின் ஆசை. ஆனால், ஆசையைவிட கொள்கை முக்கியம் என்பதால், காதலைப் புரியவைத்தது போல கொள்கையையும் பேசிப் புரிய வைத்தோம். தாலி இல்லாமல் திருமணம் நடந்தது. விழாவில் ‘என் மனசை உன் தூரிகை தொட்டு’ன்னு புத்தகம் வெளியிட்டோம். எங்கள் திருமணத்தின் மதிப்பு மிக்க மொய்யாக நான் நினைப்பது எங்கள் திருமணத்தைப் பத்தியும் அந்தப் புத்தகத்தைப் பத்தியும் விகடனில் பாஸ்கர் சக்தி எழுதியதுதான்.

இப்படி தொடங்கிய எங்கள் காதல் வாழ்க்கையில் இன்று 3 பெண் குழந்தைகள். இரண்டு பேர் ரெட்டைக் குழந்தைகள். திருமணத்துக்குப் பிறகு எங்களுக்குள் சண்டை வந்தாலும் அது இலக்கியச் சண்டைகளாகத்தான் இருக்குமே தவிர, குடும்பச் சண்டையாக இருக்காது. இலக்கியம் இல்லாமல் போனால் எங்களுக்குள் சண்டை இல்லாமலே போகும். கணவன் மனைவிக்குள் பரஸ்பரம் சண்டை இல்லாமல் போனால் வாழ்க்கை எப்படி இனிக்கும்?

- சா.இலாகுபாரதி
நம் தோழி, ஏப்ரல் 2011

3 comments:

காதல் கதை - கவிதை

கவிதையாக வாழ்ந்துகொண்டிருக்கும் வெண்ணிலா - முருகேஷுக்கு வாழ்த்துகள்

vaalthukkal .made for each other

Post a Comment

கோப்பு

கோப்பு