10 July 2011

அவன் இவன் - அத்தனையும் என் வசனங்கள்தான்!

Posted by Show Now 9:38 AM, under | 1 comment


தமிழ் இலக்கிய வாசகர் வட்டத்தில் பரிச்சயமான எஸ்.ராமகிருஷ்ணன் திரைப்படங்கள் வாயிலாக வெகுஜனங்களுக்கும் பழக்கப்பட்டவர். பாபா தொடங்கி அவன் இவன் வரைக்கும் பத்து படங்கள் வரை இதுவரை வசனம் மற்றும் திரைக்கதை வசனம் எழுதியிருக்கும் ராமகிருஷ்ணன் அவன் இவன் படம் பற்றி வருகிற விமர்சனங்கள் குறித்தும் அந்தப் படத்தைப் பற்றியும் தெனாலிக்காக பகிர்ந்துகொண்டார்.

எஸ்.ராமகிருஷ்ணன்
அவன் - இவன் படம் பற்றி வைக்கப்படுகிற விமர்சனங்களுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்..?

சினிமா என் வேலை. அதில் முழுமையாக என்னை ஈடுபடுத்திக்கொண்டு உழைக்கிறேன். என்னைப்போலவே பலருடைய உழைப்பும் இந்தப் படத்தில் இருக்கிறது. வெற்றி கிடைத்துவிட்டால் அதை எல்லாரும் பங்குபோட்டுக்கொள்வது மாதிரி, தோல்வியிலும் பங்குபோட்டுக்கொள்ளவேண்டும். சினிமாவே ஒரு கூட்டுமுயற்சிதானே. வருகிற விமர்சனங்களுக்கெல்லாம் பதிலளித்துக்கொண்டு இருக்கமுடியாது.

போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிந்தபிறகு படம் தோல்வியடைந்துவிடும் என்று நினைத்தீர்களா..?

எந்த இயக்குனரும் படம் எடுக்கும்போதும் சரி, அதை முடிக்கும்போதும் சரி இது தோல்வியடைந்துவிடும் என்று நினைத்து எடுப்பதில்லையே... புதிதாக சில முயற்சிகளை செய்யும்போது, அது சரியாக வடிவம்பெறாமல் போகும்போது அது மக்களுக்கு பிடிக்காமல் போகலாம். மக்கள் பாலாவிடம் எதையோ எதிர்பார்த்துட்டே இருக்காங்க. அவர்களுடைய எதிர்பார்ப்பு என்ன என்பதை இதற்குமேல்தான் அலசி ஆராயவேண்டும். இந்தப் படம் எடுத்துகொண்டிருக்கும்போது பத்திரிகைகளுக்கு பாலா பேட்டியளித்தபோது கூட, ‘இந்தப் படம் முழுக்க நகைச்சுவை இழை ஓடும்; நிஜ வாழ்க்கையில் வருகிற மக்களும் அவர்களுடைய வாழ்க்கையையும் பேசுகிற படமாக இது இருக்கும்’ என்றுதான் கூறியிருந்தார். அதேபோலத்தான் படமும் இருந்தது.

அவன் - இவன் படத்தில்...
பாலாவின் படம் இது இல்லை என்று சொல்கிறார்களே..?

(சிரிக்கிறார்...) இது பாலாவின் படம் இல்லை என்று எப்படி சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. பாலாவுடைய எல்லாப் படங்களையும் போலத்தான் இந்தப் படத்திலும் யாருக்கும் அதிகம் தெரியாத, நாம் கவனிக்கத் தவறிய மக்களின் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார். அந்த மக்களின் அந்தரங்கம் வரை போய் பார்த்து பழகி, ரத்தமும் சதையுமான அவர்களுடைய உண்மையான வாழ்க்கையை பதிவு செய்யவேண்டும் என்பதுதான் பாலாவின் நோக்கமாக இருக்கிறது. பாலா கீழ்நிலை மக்களின் மனங்களை ஆராயவேண்டும் என்று நினைக்கிறார். அதை இந்தப் படத்தில் முழுமையாக செய்திருக்கிறார். தொழில்நுட்பத் தவறுகள் சில இடங்களில் ஏற்பட்டு இருப்பதை கவனித்து இதை பாலாவின் படம் இல்லை என்று சொல்கிறார்களோ என்னவோ...

இந்தப் படம் விஷால் - ஆர்யா கதை இல்லை; இது ஜி.எம்.குமார் கதை என்று சொல்கிறார்களே...

படம் ஆரம்பிக்கும்போதே இந்த விஷயத்தை எல்லாருக்கும் இயக்குனர் தெளிவுபடுத்திவிட்டார். ‘இது அண்ணன் - தம்பியின் வாழ்க்கையில் நடக்கிற சம்பவங்கள். அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு ஜமீன்தார் வருகிறார். அந்த ஜமீன்தாருக்கு இந்த இருவரும்தான் எல்லாமும். அவர்தான் இந்த ரெண்டு பேருக்கும் எல்லாமும்.
 பாசத்துக்குரிய இரு மகன்களோடு அப்பா எப்படி இருப்பாரோ அப்படிதான் ஜமீன்தார் இருப்பார். அவர்கள் மீது இவரால் பாசம் செலுத்தமுடியும், அவர்களிடம் உரிமையாகப் பேசமுடியும் ஆனால், கண்டிக்க முடியாது கட்டுப்படுத்தமுடியாது. திடீரென்று வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்படுகிறது. சமூக அக்கறையோடு ஜமீன்தார் எடுக்கும் சில நடவடிக்கைகள் அவருடைய உயிருக்கு ஆபத்தாகப் போய் முடிகிறது.

இயக்குனர் பாலா
இந்த மரணத்தால் அந்த அண்ணன் தம்பிகள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்’ என்பதுதான் கதை என்று அவர் தெளிவாக ஸ்கெட்ச் போட்டுதான் படப்பிடிப்பையே தொடங்கினார். ஆனால், கடைசி காட்சிகளில் ஜமீன்தார் ஜி.எம்.குமாரின் நடப்பில் ஆக்ரோஷமும் தத்ரூபமும் கலந்துவிட்டதால் அது பலரையும் பாதித்துவிட்டது. அதனால், அப்படி சொல்லலாம்.

படத்தில் வரும் வசனங்கள் எதுவும் நீங்கள் எழுதவில்லை என்று நீங்கள் கூறியதாக பேசிக்கொள்கிறார்களே...

படத்தில் வருகிற எல்லா வசனங்களும் நான் எழுதிய வசனங்கள்தான். ஆனால், சில இடங்களில் கதைக்காகவும், காட்சிக்காகவும் வசனத்தை மாற்றினோம்; சில இடங்களில் வசனத்தையே நீக்கினோம். வசனம் சேர்க்கும்போதும் நீக்கும்போதும் என்னோடு கலந்து பேசிவிட்டுத்தான் பாலா செய்தார். இது அவருடைய படம். அதில் எது இருக்கவேண்டும்; எது இருக்கக் கூடாது என்று தீர்மானிக்கிற எல்லா உரிமையும் அவருக்கு இருக்கிறது. நான் வசனம் எழுதியிருப்பதாலேயே அதை நீக்கக்கூடாது அப்படியே வைக்கவேண்டும் என்று நான் எப்படி சொல்லமுடியும். மௌனமாகவே ஒரு காட்சியைப் பதிவு செய்யவேண்டிய தேவையிருந்தால் அந்த இடத்தில் வசனத்துக்கு என்ன வேலை இருக்கிறது.

உங்களுடைய வசனத்தில் அடுத்து என்ன படம் வரப்போகிறது...

குமரவேல் இயக்கத்தில் தயாராகிவரும் யுவன் யுவதி படத்தில் வசனம் எழுதியிருக்கிறேன். அவருடைய அடுத்த படத்திலும் வசனம் எழுதுகிறேன். அதேபோல, சிக்கு புக்கு பட இயக்குனர் மணிகண்டனின் அடுத்த படத்துக்கு வசனம் எழுதப் போகிறேன். கதை விவாதத்தில் இருக்கிறோம்...

வாழ்நாள் திட்டம் என்று ஏதாவது வைத்திருக்கிறீர்களா..?

அப்படியொரு திட்டம் இருக்கிறது. தமிழ் சினிமா பற்றிய முழுமையான தகவல்கள் அடங்கிய ஒரு கலைக் களஞ்சியம் தயாரிக்கும் பணியில் இருக்கிறேன். முதலில் புத்தகத்துக்கு தேவையான தகவல்களை சேகரித்துக்கொண்டு இருக்கிறேன். உலக சினிமா புத்தகத்துக்காக ஒரு 3 வருடங்களை நான் செலவழிக்க வேண்டியிருந்தது. அதேபோல இந்தப் புத்தகத்துக்காகவும் நேரம் ஒதுக்கி வேலை செய்யவேண்டும். இதுவரைக்கும் தமிழ் சினிமா பற்றிய முழுமையான வரலாறோ, படங்கள் பற்றிய முழுமையான தகவல்களோ சேகரித்து வைக்கப்படவில்லை. புதிதாக நான் அதைச் செய்யப்போகிறேன். அதனால், தமிழ் சினிமா பற்றி A to Z அதில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். புத்தகம் வரும்போது அது எல்லாருக்கும் பயன்படும் புத்தகமாக இருக்கும்.

திரைப்படம் இயக்குகிற யோசனை உள்ளதா..?

ஆமாம் இருக்கிறது. அடுத்த ஆண்டு முதலிலோ மத்தியிலோ அதற்கான பணிகள் தொடங்கப்படலாம். எந்த வேலையையும் நான் திட்டமிட்டு செய்வதில்லை. என் மனம் எப்போது ஒரு வேலையை நோக்கி என்னை தூண்டுகிறதோ அப்போ அதைச் செய்வேன்.

- சா.இலாகுபாரதி

1 comments:

இயல்பு இயல்பு என்று அளவுக்கதிகமாக அசிங்கமான வசனங்கள் படம் முழுவதும் விரவிகிடக்கிறதே அதற்க்கு என்ன பதில் சொல்கிறார் எஸ்.ஆர் ?

Post a Comment

கோப்பு

கோப்பு