01 July 2011

இதயம் டிவென்டி 20: எச்சரிக்கை - முன்னெச்சரிக்கை

Posted by Gunalan Lavanyan 12:03 AM, under | 1 comment

படுபயங்கர பிஸியாக இருக்கிறார் இந்தியாவின் முக்கியமான இதய சிகிச்சை மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் சிவகடாட்சம்.

"அதுதான் கஷ்டமாக இருக்கு... நாங்க பிஸியாக இருந்தா நோய்களெல்லாம் ஓவர் டைம் பண்ணுதுன்னுதானே அர்த்தம்... அப்படி இருந்தா நல்லது இல்லையே... நம்ம உடம்பை நாமேதான் நோய்க்கு பரிசாகக் கொடுத்துடறோம்... சில பழக்கங்களால்!” என்று ஜாலியாகப் பேசிய சிவகடாட்சத்திடம் அவருடைய நேரத்தை வீணாக்காமல் ஒரு டிவெண்டி 20 பேட்டியை முடித்தேன்.யாருக்கு வருது இதயநோய்..?

இதய நோயாளிகளின் எண்ணிக்கை உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம். மேற்கத்திய நாடுகளில் 60 வயதுக்குப் பிறகு வரும் இதயநோய் இந்தியாவில் 32லிருந்து 50 வயதுக்குள்ளாகவே வந்துவிடுகிறது. இதற்கு இந்தியர்களின் வாழ்க்கை முறையே முக்கிய காரணம். ஆக, 30 ப்ளஸ் என்றால் ஜாக்கிரதையாக இருங்கள்.

என்ன செய்தால் இதயம் பாதிக்கப்படும்?

புகை பிடித்தல், புகையிலைப் பொருட்களை உபயோகித்து அந்த உமிழ்நீரை விழுங்குவது, மூக்குப்பொடி பழக்கம் இவையெல்லாம் இதயநோய் வருவதற்கான அடிப்படைக் காரணங்கள். புகைப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் இதயநோய் வரும்... பழக்கம் உள்ளவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்.

எப்படிப்பட்டவர்களை அதிகம் பாதிக்கும்..?

ரத்தக் கொதிப்பு, அதிகமான உப்பு, அதிக எடை, ஒபிசிட்டி (உடல் பருமன்), உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான கொழுப்பு உடையவர்களாக இருப்பவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்.

அப்படியானால் கொழுப்பு கெட்டதா..?

கொழுப்பில், எச்டிஎல் வகை கொழுப்பு உடலுக்கு நன்மை தரக்கூடியது. இது ஆண்களுக்கு 40 மில்லி கிராமும், பெண்களுக்கு 50 மில்லி கிராமும் இருக்க வேண்டும். ஆனால், இந்தியர்களுக்கு 30 மில்லி கிராமுக்கும் குறைவாகத்தான் இந்தக் கொழுப்பு இருக்கிறது.


தீங்கு விளைவிக்கும் கொழுப்பு எது..?

டிரைக்ளிசரைட்ஸ் வகை கொழுப்பு உடலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியது. இது உடலில் அதிகம் சேர்வதால் இதயநோய் வருவதற்கான சாத்தியங்கள் அதிகமாக இருக்கின்றன. இந்தியாவில் டிரைக்ளிசரைட் கொழுப்பு உடையவர்கள் அதிகரித்துவருகிறார்கள்.

சிவகடாட்சம்
இந்தக் கொழுப்பு சேராமல் இருக்க... இதய நோய் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்..?

இதயநோய் வராமல் இருக்க வேண்டுமானால், சர்க்கரை நோய் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகளுக்கு இதயநோய் வரும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. அதனால், அவர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

அப்போ மத்தவங்களுக்கு..?

இப்படி எந்தப் பிரச்னையுமே இல்லாதவர்களுக்குக்கூட இதயநோய் வரும். மருத்துவத் துறையில் இதை அசோஸியேட் ரிஸ்க் ஃபேக்டர் என்று அழைக்கிறோம். காரணம் அவர்களுக்கு எதனால் இதயநோய் வருகிறது என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது.

சரி, இதய நோய் வராமல் இருக்க என்ன செய்வது..?

காய்கறி, பழங்கள் நிறைய சாப்பிடவேண்டும். ஒரு நாளைக்கு சராசரியாக 150லிருந்து 260 கிராம் வரை காய்கறியும் அதே அளவு பழமும் உட்கொள்வதால் இதயத்துக்கு போகும் ரத்தக் குழாய்களில் அடைப்பு வராமல் இருக்கும்.

அப்புறம்..?

தினமும் 45 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை உடற்பயிற்சி செய்வது அவசியம். நோய் உள்ளவர்கள் மட்டும்தான் என்று இல்லை, பொதுவாக எல்லாருமே தினமும் உடற்பயிற்சி செய்வது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.

அவ்ளோதானா..?

தியானம், யோகா, நடைபயிற்சி, சைக்கிள் பயிற்சியில் ஈடுபடுவதாலும் இதயநோய் வராமல் தடுக்கமுடியும். இயந்திரத்தனமான வாழ்க்கையால்,  யாருமே உடற்பயிற்சிக்காக இன்று நேரம் ஒதுக்குவது இல்லை.


உடலைப் பேணினால் போதுமா..?

மன அழுத்தம் இல்லாமல் இருந்தால் இதயநோய் வராது. அதற்கு அதிகமான பணிச்சுமை இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். டென்ஷன் கூடவே கூடாது!

அது தவிர... வேறென்ன செய்யணும்..?

சரியான தூக்கம்... இது ரொம்ப முக்கியம். தினமும் குறைந்தது 6 மணி நேரத் தூக்கம் ஒரு மனிதனுக்கு அவசியம்.

சரி, இதய நோய் வந்திருப்பதை எப்படி அறிவது?

சாப்பிட்டுவிட்டு நடக்கும்போதோ, கையில் பளுவுடன் நடக்கும்போதோ நெஞ்சை அழுத்துவது மாதிரி ஒரு வலி ஏற்பட்டால் அது இதய நோயாக இருக்கலாம்.

அது சாதாரண வலியாகக்கூட இருக்கலாமே..?

பலரும் இப்படித்தான் அலட்சியம் காட்டுகிறார்கள். இப்படிப்பட்ட பாதிப்புகளைக் கண்டுகொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டால், நாளடைவில் வெறும் வயிற்றில் நடந்தாலும், பளுவின்றி நடந்தாலும் நெஞ்சை அழுத்துவது மாதிரி வலி ஏற்படத் தொடங்கும். இது நோய் முற்றி வருவதற்கான அறிகுறி.

அப்படி வந்தால் அது அட்டாக்கா..?

சிலருக்கு திடீரென்று வேர்த்து விறுவிறுக்கும், சோர்வடைவார்கள். இது சைலண்ட் ஹார்ட் அட்டாக். இந்த வகை தாக்குதலையும் உடனே கவனிக்க வேண்டும்.


நோய் வந்துட்டா என்ன செய்யணும் டாக்டர்..?

இதயத்துக்கு செல்லும் மூன்று ரத்தக் குழாய்களில் ஒரு குழாயில் மட்டும் அடைப்பு ஏற்பட்டால் சுலபமாக அடைப்பை நீக்கிவிட முடியும். இரண்டு மற்றும் மூன்று குழாய்களிலும் அடைப்பு ஏற்பட்டால், பைபாஸ் அறுவைசிகிச்சை மூலம்தான் அந்த அடைப்பை நீக்க முடியும்.

ஆபரேஷன்தான் ஒரே தீர்வா..?

ஆரம்பகட்டத்தில் இருப்பவர்களுக்கு மாத்திரையின் மூலமும், அதிலும் முடியாமல் போனால், ஆன்ஜியோபிளாஸ்டி முறையிலும், அதற்கடுத்த நிலையாக அறுவைசிகிச்சை மூலமும் இதய அடைப்பை சரிசெய்ய முடியும்.

ஆபரேஷன் செய்தால் நடமாட முடியுமா..?

பலருக்கும் இருக்கும் சந்தேகம் இது. நோயோடு இருக்கும்போது நடமாடிக் கொண்டிருப்பவர்களுக்கு நோய் தீர்ந்தபிறகு ஏன் இந்த சந்தேகம் வருகிறது? உடல்நிலையைப் பொறுத்து எல்லா வேலைகளையும் முன்பு போலச் செய்ய முடியும்.

ஆபரேஷனுக்குப் பிறகு என்ன மாறுதல் தேவை..?

ஆபரேஷன் செய்துகொண்டவர்கள் அந்தக் காயம் ஆறும்வரை ஓய்வாக இருக்க வேண்டும். அதன்பிறகு டாக்டரின் ஆலோசனையின் பேரில் சகஜமாக வாழலாம். ஆனால், தேவையான உடற்பயிற்சி, உணவுப் பழக்கம் போன்றவற்றைக் கடைபிடிக்க வேண்டும். பழைய தீய பழக்கங்களைக் கைவிட வேண்டும்.

மீண்டும் வருமா இதய நோய்..?

அது உங்கள் நடவடிக்கையைப் பொறுத்த விஷயம். இதயத்துக்குத் தொல்லை கொடுக்காத வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டால் சிக்கலில்லை. முறையான மருந்து மாத்திரைகள், சீரான இடைவெளியில் மருத்துவ ஆலோசனை என்று வாழ்ந்தால் நூறு வயது வாழலாம்!

- சா.இலாகுபாரதி

நம் தோழி, ஏப்ரல் 2011

1 comments:

very gud article, thnx

Post a Comment

கோப்பு

கோப்பு