16 June 2011

தங்கம் வாங்கப் போறீங்களா... ஒன் மினிட் ப்ளீஸ்!

Posted by lavanyan gunalan 5:05 PM, under | No comments

முன்பதிவு, பழைய விலையில் புதிய தங்கம் என்று பல தூண்டில்களைப் போட்டு அட்சய திருதியை அன்று தங்கம் விற்கிறார்கள் நகைக் கடைக் காரர்கள். முதலீடு என்ற கோணத்தில் பார்த்தால் இப்படி கொஞ்சம் கொஞ்ச மாக நகை வாங்கி சேமிப்பது நல்ல பழக்கம்தான். ஆனால், அதைவிட லாபகரமான திட்டம் ஏதாவது இருக்கிறதா என்ற கேள்வியோடு பிரபல முதலீட்டு ஆலோசகரான நாகப்பனை அணுகினோம்.

ஆஹா தங்கம்!



‘‘தங்கமே வாங்கலாம்... ஆனால், தங்கமாக அல்ல... டாகுமென்டாக!’’
- என்று புருவம் உயர்த்த வைக்கும் பதிலோடு பேசத் தொடங்கினார். டாகுமென்ட் என்று அவர் சொன்னது தங்கம் சார்ந்த முதலீட்டுத் திட்டமான எக்ஸ்சேஞ் கோல்ட் டிரேடட் ஃபண்ட் (ETF Exchange Gold Traded Fund). அது என்ன என்பது அவருடைய வார்த்தைகளிலேயே!

‘‘அட்சயதிருதியைக்கு தங்கத்தில் முதலீடு செய்வது என்று நீங்கள் முடிவெடுத்துவிட்டால், அதை தங்க உலோகமாக வாங்குவதற்கு பதிலாக தங்கப் பத்திரமாக வாங்குவதுதான் பாதுகாப்பு. தங்கத்தில் ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தாலும் செய்கூலி, சேதாரம், கற்கள் என்று எல்லாவற்றுக்கும் சேர்த்துதான் விலை நிர்ணயிக்கிறார்கள். அதை விற்கும்போது வாங்கிய விலையைவிட குறைவாகத்தான் தங்கத்தை மதிப்பிடுகிறார்கள்.

அதுவே, ETF முறையில் முதலீடு செய்தால் இப்படி எந்தப் பிரச்னையும் இருக்காது. தங்கத்தின் விலை ஏறுகிற போதெல்லாம் உங்கள் முதலீடும் லாபம் பார்த்துக் கொண்டே இருக்கும். விற்கும்போது அன்றைய தங்கத்தின் மதிப்பு என்னவோ அதே விலை உங்களுக்குக் கிடைக்கும். தங்கத்தின் விலை ஏற்றத்தை சமீபகாலமாக பார்த்து இருப்பீர்கள். ஏறுவதுதான் அதிகமாக இருக்கிறதே தவிர, விலை குறைவது ரொம்ப ரொம்பக் குறைவு. அதனால், தாராளமாக ETFஇல் முதலீடு செய்யலாம். இதற்கு ஒரு டிமேட் அக்கவுண்ட் தேவை. அதைத் துவங்கிவிட்டால் ஆன்லைனிலேயே நீங்கள் தங்கத்தை வாங்கலாம், விற்கலாம். 24கேரட் தங்கத்தின் விலை என்னவோ, அதே மதிப்புதான் ETFஇன் விலையும்.

ETF மாதிரியே இன்னொரு வகையிலும் முதலீட்டு வாய்ப்பு இருக்கிறது. இது National Spot Exchange Limited திட்டம். இந்தத் திட்டத்தில் முதலீடு செய்வது எல்லாருக்கும் சுலபமாக இருக்கும். காசு இருக்கும்போதெல்லாம் தங்கம் வாங்குவது மாதிரிதான் இந்தத் திட்டமும். ஒரு கிராம் தங்கம் வாங்க நினைத்தால் அதே அளவு பணத்தை NSELஇல் முதலீடு செய்யலாம். எட்டு கிராம் அளவுக்கு மதிப்பு வந்தபிறகு 1 பவுனில் நகை வாங்க நினைத்தால் ஸ்டாக் மார்க்கெட்டில் கைமாற்றிவிட்டு நகையை வாங்கிக்கொள்ள முடியும். 100 சதவீதம் உங்கள் பணத்துக்கு கேரண்டி தரக்கூடியது. இதில் செய்கூலி, சேதாரம் என்று பணத்தை வீணாக்காமல், போட்ட பணத்தைவிட அதிகமாகவே கிடைக்கும். அதனால், தங்கம் வாங்கும்போது, அய்யோ பத்திரமாக பார்த்துக்கணுமே... தெருவில் யாராவது பறித்துக்கொண்டு போகாமல் இருக்கணுமே என்கிற பயம் எக்ஸ்சேன்ச் ட்ரேட் ஃபண்ட் (ETF), நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ் (NSEL) முதலீட்டில் இருக்காது.

தினமும் நடக்கிற கொலைகளிலும் வழிப்பறிகளிலும் மூன்றில் ஒன்றாவது தங்கத்துக்காக நடக்கிறது. அதைத் தவிர்க்க ஒரே வழி உலோகமாக வாங்கு வதற்கு பதிலாக, இப்படி பத்திரமாக வாங்கி உங்கள் முதலீட்டை பத்திரப் படுத்திக்கொள்ளுங்கள். அட்சயதிருதியை நாளில் தங்கமாக முதலீடு செய்யுங்கள். நீங்கள் கேட்காமலேயே உங்கள் பணம் உங்களுக்கு சம்பாதித்துக்கொடுக்கும்.’’என்ன... நகைக்கடைக்குப் போகும் பாதையை விட்டு முதலீட்டுப் பாதைக்குத் திரும்பிட்டீங்களா?!


- சா.இலாகுபாரதி

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு