28 June 2011

கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு

Posted by lavanyan gunalan 11:58 PM, under | No comments

மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் தொடர்ந்து அதிகரித்து வரும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தமுடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் மத்தியில் ஆட்சியமைத்தபிறகு தொடர்ந்து 10 முறை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதேபோல டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையும் கணிசமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதனால், அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்துவருகிறது.



காங்கிரஸின் இத்தகைய போக்கால் மாநிலத்தில் ஆட்சி நடத்தும் இதரக் கட்சிகள் மக்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாமலும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியாமலும் திணறிவருகின்றன. ஆனாலும் தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சிமாற்றத்துக்குப் பிறகு அதிமுக அரசு ஓரளவுக்கு விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவந்திருக்கிறது. அதேநேரத்தில் காங்கிரஸின் பொருளாதாரக் கொள்கைகளையும் கண்டித்து வருகிறது. அதேபோல மற்ற மாநிலங்களில் ஆட்சி நடத்தும் காங்கிரஸ் அல்லாத கட்சிகளும் காங்கிரஸுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.



ஆனால், பெருமுதலாளிகளும் உலகப் பணக்காரர்களும் எந்தவிதத்திலும் நஷ்டம் அடைந்துவிடாதபடி எல்லா சலுகைகளையும் வரி விலக்குகளையும் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது. ஏழைகளிடம் வரி வசூலிக்கும் காங்கிரஸ் அரசு பெருமுதலாளிகளிடம் மட்டும் தாராளம் காட்டுகிறது. இந்த தாராளம் ஊழலுக்கே வழி வகுக்கும் என்று பல்வேறுதரப்பட்டவர்கள் குரல்கொடுத்தும் காங்கிரஸ் கண்டுகொள்வதாகத் தெரியவில்லை.



இதனால் பாதிக்கப்பட்ட ஏழை மற்றும் நடுத்தர மக்கள் காங்கிரஸுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டத்தில் குதித்திருக்கிறார்கள். இந்நிலையில் மம்தா பானர்ஜி ஆட்சி செய்துவரும் மேற்கு வங்கத்தில் சமையல் எரிவாயு மீதான வரி குறைக்கப்பட்டு விலை ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தமிழக அரசும் 4 சதவீதம் மதிப்புக்கூட்டுவரியைக் குறைத்து இருக்கிறது. இதனால், ஆண்டுதோறும் தமிழக அரசுக்கு 120 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பால் சமையல் எரிவாயு விலை 14.73 ரூபாய் குறைந்து, சிலிண்டர் 389 ரூபாய் என்று இருக்கும். இந்த விலை ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு