29 June 2011

தங்கம் சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் ரவுண்டப்

Posted by Gunalan Lavanyan 6:56 PM, under | No comments

சென்னை, மயிலாப்பூரில் இருக்கும் கலைமகள் ஹவுஸை கும்பகோணமாக்கி பரபரப்பாக சுட்டுக் கொண்டிருந்தார்கள் தங்கம் சீரியல் அணியினர்.

‘‘எப்படி சார் இருக்கு தங்கம் குடும்பம்?’’ என்ற கேள்வியோடு சீரியல் இயக்குனர் நக்கீரனைப் பிடித்தோம்.

தங்கம் ஷூட்டிங் ஸ்பாட்

‘‘மக்கள் கிட்டே நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு. ரேட்டிங்லேயும் ஒண்ணு, ரெண்டுன்னு மாறிமாறி வந்துட்டு இருக்கு’’ என்று இடைவெளி விட்டவரிடம், ‘‘ஒருபக்கம் ரம்யா கிருஷ்ணன், விஜயகுமார், சீமா, அனுராதான்னு பெரிய பெரிய நடிகர் - நடிகைகளை வெச்சி எடுக்குறீங்க. இன்னொரு பக்கம் மாடு, பாம்பு, தேள்னு போறீங்களே’’ என்று கேட்டதும் சிரித்துவிட்டு பேசினார்.

‘‘பெரிய நடிகர்களை வெச்சி டைரக்ஷன் பண்றதுலேகூட சிக்கல் இல்லீங்க. இந்த விலங்குகளை வெச்சி பண்றதுதான் ரொம்ப கஷ்டம். 10 - 15 டேக்குக்கு மேலே ஆகும். எப்ப சரியா வருமோ, அதுவரைக்கும் டேக் போயிட்டே இருக்கும். அப்பதான் யோசிப்பேன், டைரக்டர் ராமநாராயணன், தேவர் பிலிம்ஸ்லே எல்லாம் எப்படி படம் எடுத்திருப்பாங்கனு...’’ என்று சொல்லிவிட்டு அடுத்த சீனுக்கான வேலையைப் பார்க்கப் புறப்பட்டுவிட்டார்.

நடுவில் இருப்பவர் டைரக்டர் நக்கீரன்
பொள்ளாச்சி பாபுவை பிரேக்கிலும் ‘மாமா... மாமா’ என்று சுற்றி வருகிறார் காவேரி. கதையில் அவர் கார்த்தி... இவர் அவருடைய ஆசை மனைவி இளவஞ்சி.

‘‘என்னங்க அநியாயம் இது... அவரைப் போய் மாமானு கூப்பிடுறீங்க..?’’ என்று காவேரியை மடக்கினால், குறுநகை செய்கிறார். ‘‘இது வேஷங்க... புலிவேஷம் போட்டபிறகு புல்லு திங்க முடியுமா... ஸ்பாட்டுக்கு வந்துட்டா நான் இளவஞ்சி, இவர் என் மாமா’’ என்றார்.

காவேரிக்கு டாட்டா சொல்லிவிட்டு ஸ்ரீதேவிக்கு ஹாய் சொன்னால், தமிழச்சியாக வணக்கம் சொல்லி வரவேற்கிறார்.

‘‘ஷூட்டிங் இல்லாத நேரத்துலே என்ன பண்ணுவீங்க?’’ - இது நம்ம கேள்வி.

‘‘சமையல் பண்ணுவேன். நான் அண்ணா ஆதர்ஷ் காலேஜ் பொண்ணு. பிஎஸ்சி ஹோம் சயின்ஸ். ஷூட்டிங் இல்லாத நேரத்துலே சமையல் கரண்டியை பிடிச்சிடுவேன்!’’ - இது ஸ்ரீதேவி.

‘‘அப்போ சமையல்லே எக்ஸ்பர்ட்டா...’’ என்றால், பதிலுக்கு ‘குட்டி ஸ்மைல்’ செய்கிறார். ரிஸ்க்தான் போல!

அப்படியே கலைமகள் இல்லத்தைச் சுற்றிவந்தால், ஐயா ஆடும் ஊஞ்சலில் தைரியமாக உட்கார்ந்து, பாட்டு கேட்டுக்கொண்டு இருந்தார் சுந்தரவடிவாக நடிக்கும் வர்ஷா. ‘ஹலோ’ என்றால் காதிலேயே விழவில்லை. கை தட்டிக் கூப்பிட்டதும், ‘‘ஷாட் பிரேக் விட்டா, எப்பவும் பாட்டு கேக்குறதுதான் என்னோட ஹாபி..! அதான் உங்களைக் கவனிக்கலை...’’ என்று காரணம் சொன்ன வர்ஷாவுக்கு சீரியலில்தான் காவேரியுடன் சண்டையாம்.

‘‘நம்புங்க... நிஜத்தில் நாங்க பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்... ஸ்கூல் பசங்களுக் கெல்லாம் ரெண்டுபேரும் சேர்ந்துதான் ஆட்டோகிராஃப் போடுவோம். அவ்வளவு ஒத்துமை...’’ என்று சூடம் கொளுத்தாத குறையாக சத்தியம் செய்தார்.

வர்ஷா பேசிக்கொண்டு இருந்தபோது சுந்தரத் தெலுங்கில் ஒரு குரல் கடந்துபோனது. ‘ப்போன் தின்னேஸினாவா...’ - திரும்பிப் பார்த்தால் லக்ஷ்மி ராஜா.

லக்ஷ்மி ராஜாவோட பூர்விகம் ஹைதராபாத். தெலுகு சீரியல்லே லக்ஷ்மி ராஜுலு பெத்த ஆக்டரு. ஏழு சீரியலுக்கு மேல, லீடிங் ரோல் செஞ்சிருக்காரு. சீரியல் தவிர, சினிமாவிலேயும் லக்ஷ்மி ராஜா நடிச்சிருக்காரு. சேரன் சோழன் பாண்டியன், சேது படங்கள்லே சார்தான் வில்லன்.

‘‘அப்புறம் ஏன் சினிமா பக்கம் பார்க்கவே முடியலை..?’’ என்று கேட்டால், ‘‘குழந்தையை விட்டுட்டு அவுட்டோர் ஷூட்டிங் போகமுடியலை. அதுவும் இல்லாம, சேதுவுக்குப் பிறகு ரெண்டு வருஷம் கேப் விழுந்துட்டதாலே யாரும் கூப்பிடலை. நல்ல ரோல் வந்தா பண்ணலாம். ஆனா, அவுட்டோர் போக முடியாது’’ என்றார் பாசமாக!

சீரியல் அல்லாத ரியல் பாசத்துக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு தங்கம் அணிக்கு பை சொன்னோம்!

- சா.இலாகுபாரதி


நம் தோழி, ஏப்ரல் 2011

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு