28 June 2011

எல்லாம் தருது இயற்கை விவசாயம்!

Posted by lavanyan gunalan 7:39 PM, under | No comments

இல்லத்தரசி சிவகாமி பெண்களுக்கு மட்டுமல்ல... விவசாயத்தில் என்ன லாபம் கிடைத்துவிடப் போகிறது என்று சோர்ந்து போயிருக்கும் ஆண்களுக்கும் சரியான உதாரணமாக இருக்கிறார். கோபிச்செட்டிப்பாளையம் பக்கத்தில் இருக்கிற நாதிபாளையம் கிராமத்தில் யாரைக் கேட்டாலும் சிவகாமியின் வீட்டுக்கு வழி சொல்லும் அளவுக்கு ஏரியாவில் ரொம்பப் பிரபலம். அதற்குக் காரணம், இயற்கை விவசாயம்!

ஒன்பது ஏக்கர் நிலத்தில் பயிர் செய்திருந்தார்கள். அதில் ஆறு ஏக்கர் நிலத்தில் தென்னை, வாழை இருந்தது. இரண்டுக்கும் நடுவே ஊடுபயிராக தானியப் பயிர்கள். மீதமுள்ள மூன்று ஏக்கரில் காய்கறிகள், நெல், வளர்ப்பு கால்நடைகளுக்கு வேண்டிய தீவனப் பயிர்கள் இருந்தன.



“இயற்கை விவசாயம் பண்ணணும்னு எப்படி உங்களுக்கு தோணுச்சு... நீங்க மட்டும்தான் பண்ணையை பாத்துக்குறீங்களா... ரசாயன உரம் போட்டு விவசாயம் பண்றதைவிட இதுலே லாபம் அதிகம் கிடைக்குதா... இயற்கை விவசாயத்தாலே வர்ற நன்மை என்ன... தீமை என்ன... இதில் வர்ற வருமானத்துலே குடும்பத்துக்குப் போக சேமிச்சுவைக்க முடியுதா...” என்று கடகடவென்று கேள்விகளைக் கொட்டியதும் நிதானமாகப் பேசத் தொடங்கினார் சிவகாமி.

“நான் பொறந்த வீடு - புகுந்த வீடு ரெண்டுமே விவசாயக் குடும்பம். என் கணவருக்கு இயற்கை விவசாயத்துலே பெரிய நம்பிக்கை. 1996-ல் எங்க கல்யாணம்... அதுக்கு முந்திவரைக்கும் அவங்க வீட்டுல ரசாயன உரம் போட்டுத்தான் விவசாயம் பண்ணிட்டு இருந்தாங்க. நானும் இயற்கை விவசாயத்துலே ஆர்வமா இருந்ததால் கல்யாணம் கட்டி ரெண்டு வருஷத்துக்குப் பிறகு இயற்கை விவசாயம் பண்ண ஆரம்பிச்சுட்டோம். 

விவசாயத்துலே என் கணவர் குமார்தான் எனக்கு பக்கபலமா இருக்குறார். இயற்கை விவசாயத்தைப் பத்தி எல்லா விஷயங்களும் அவருக்கு அத்துபடி” என்றவர் கால்நடை வளர்ப்புக்கும் இயற்கை விவசாயத்துக்கும் உள்ள தொடர்பைத் தன் வாழ்க்கை உதாரணத்தில் இருந்தே சொன்னார்.

சிவகாமி
“கால்நடைகளை வளர்க்குறதாலே அதுகளோட கழிவையே உரமா பயன்படுத்திக்கிறோம். பண்ணையிலே விளையற பொருட்களை நாங்களே வித்துக்கறோம். அதனாலே, எங்களுக்கு லாபமும் கிடைக்குது. வாங்குறவங்களுக்கும் குறைந்த விலையிலேயே பொருள் கிடைக்குது. ரசாயன உரம் போட்டு விவசாயம் பண்றவங்க எவ்வளவு லாபம் ஈட்டுறாங்களோ, அதே லாபத்தை மாட்டுச்சாணம், மக்குன இலை - தழை போட்டு இயற்கையான முறையிலே விவசாயம் பண்ற எங்களாலேயும் பார்க்க முடியுது.

இயற்கை விவசாயத்துக்கு வந்தபிறகு, இருந்த கடனெல்லாம் கழிஞ்சுபோச்சு, வங்கியிலே கொடுக்குற விவசாயக் கடனை வாங்காமே பயிர் செய்றோம். அதனாலே, கடன் இல்லை. குழந்தைகளை படிக்கவெக்க முடியுது; அவங்களோட எதிர்காலத்துக்கு சேமிச்சு வைக்கவும் முடியுது” என்று சிவகாமி சொன்னபோது பிரமிப்பாக இருந்தது.

சிவகாமி இன்னும் தொடர்ந்தார்...

“இயற்கை விவசாயத்திலே நன்மையே தவிர, எந்தத் தீமையும் கிடையாது. செயற்கை விவசாயத்தைப் போல இதிலே எனக்கு உரச் செலவு இல்லை; விளைச்சலுக்குப் பிறகு அந்த செடிகளை மக்கவெச்சு உரமா பயன்படுத்துறதாலே களையெடுக்குற செலவும் இல்லை. கூலி ஆட்களும் அதிகம் தேவையில்லை; உற்பத்தி அதிகம், செலவு ரொம்ப குறைவு. பூச்சித் தொல்லை இருக்காது. உரமா போடுற, மக்கிய இலை - தழைகளிலேயே நீர்ச்சத்து இருப்பதாலே பயிர்களுக்கு அதிகமா நீர் பாய்ச்சவேண்டிய அவசியம் இல்லை. வறட்சி காலத்திலேயும் விவசாயம் பண்ணமுடியுது. இயற்கை மாறாத உணவு பொருள்களை உற்பத்தி பண்ணமுடியுது. இந்தக் காய்கறிகளை வேகவைக்காமே சாப்பிடுற அளவுக்கு அவ்வளவு சுத்தம், சுவை இருக்கும். இதுதாங்க இயற்கை விவசாயம்” புன்னகைப் பொங்கச் சொல்லி முடித்தார் சிவகாமி. அந்தப் புன்னகையில் உலகையே வென்ற சந்தோஷம் தெரிந்தது.

- சா.இலாகுபாரதி

நம் தோழி, ஏப்ரல் 2011

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு