21 June 2011

ஷேம் ஷேம்... பப்பி ஷேம்!

Posted by lavanyan gunalan 8:52 PM, under | No comments


ஒவ்வொரு துறையிலும் சிலர் முத்திரை பதித்து இருக்கிறார்கள். அப்படிப்பட்ட சாதனையாளர்களின் வாழ்க்கை பலருக்கு மைல்கல். அந்தச் சாதனை யாளர்களின் வாழ்க்கையை சாமானியர்களுக்கும் அறிமுகப் படுத்துவதன் நோக்கம்தான் இந்த மைல்கல்.

மைல்கல்: 1

ஓவியர் ஸ்யாம்: 1

'வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள தெரிந்தவனே
வெற்றி பெறுகிறான்;
வெற்றிப் பெற்றவர்கள் எல்லாரும்
வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டவர்களே!'

- யாரோ அறிஞன்


ஸ்யாம். முழுப்பெயர் ஸ்யாம்சங்கர். தன் வாழ்க்கையில் நடந்த எல்லா பாதக நிகழ்வுகளையும் பாஸிட்டிவாக அணுகி, வெற்றிகளாக மாற்றிக்கொண்டவர். 15 வயதில், தனியாக சென்னைக்கு வந்து, சில நாட்களிலேய பிரபல பத்திரிகைகளில் வேலை பார்க்கத் தொடங்கியவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் தவிர ஆங்கிலப் பத்திரிகை உலகிலும் இவரது ஓவியங்கள் பேசுகின்றன. இமைத் துள்ளும் இவரது ஓவியங்களுக்கு ரசிகப் பட்டாளம் ஏராளம். கவர்ச்சியையும் வசீகரத்தையும் குழைத்து யூத்ஃபுல்லாகவும் கலர்ஃபுல்லாகவும் கொடுப்பது ஸ்யாம் ஸ்பெஷல்.

இனி ஸ்யாம் மொழியில்...

ஸ்யாம்

"நான் எல்.கே.ஜி. படிக்கும்போது சண்முகம்னு ஒரு பெரியவரை வீட்டுல வேலைக்கு வெச்சிருந்தாங்க. நல்ல கருப்பா உயரமா இருப்பாரு. வேட்டியை மடிச்சிதான் கட்டுவாரு. சட்டை போடமாட்டாரு. அவருதான் என் கைப்பிடிச்சு ஸ்கூலுக்கு கூட்டிப் போவாரு. முதல் ரெண்டு நாள் அவரோடு போனேன். மூணாவது நாள் அவர் வேண்டாம்னு அடம்பிடிச்சேன்.

'எதுக்கு வேண்டாம்னு சொல்றான்'னு யாருக்குமே புரியல.

'ஏங் கண்ணு என்னை வேண்டாங்கறே...'ன்னு சண்முகம் ரொம்பப் பாவமா கேட்டாரு. 'எதுக்கு
வேண்டாங்கறே...'ன்னு எல்லாரும் கேட்டாங்க. இவரு ஷேம் ஷேம் பப்பி ஷேம்'னு சொன்னேன். எல்லாத்துக்கும் புரிஞ்சிடுச்சி. ஆனா, சண்முகத்துக்குப் புரியல.

எங்க மாமா, 'சண்முகம், நீங்க போகும்போது வேஷ்டியை எறக்கிவிட்டுப் போங்க. அதான் பையனுக்கு கோவம்'ன்னாரு. மறுநாள்லேயிருந்து வேட்டியை எறக்கிவிட்டு வந்தாரு. அப்பக்கூட வெகுளியான அவருக்கு அது தெரியல. சரி தம்பின்னு கூட்டிப்போவாரு. சாயங்காலம் வீட்டுக்கு
வந்ததும், சுவர்லே சண்முகத்தை வரைஞ்சு, நல்ல பேண்ட் சட்டையெல்லாம் மாட்டியிருந்தேன்.

'பையன் இப்படி படம் வரையறானே'ன்னு எங்க வீட்டுலே ரசிச்செல்லாம் பார்க்கமாட்டாங்க. ஒரு கட்டத்துக்குப் பிறகு சுவத்துலே வரையிற டிராயிங் அதிகமானதும் எங்க அப்பா என்னை அடிக்க ஆரம்பிச்சிட்டாரு. 'எப்பப் பார்த்தாலும் கிறுக்கிட்டு இருக்கான்; எப்பப் பார்த்தாலும் படம்
வரையறான்...'ன்னு திட்ட ஆரம்பிச்சுட்டாங்க. இதுல வேற யாரோ, 'படம் வரையறவனோட வாழ்க்கையெல்லாம் கடைசியிலே
சோகத்துலதான் முடியும்'னு சொல்லிட்டாங்க. அதனாலே எப்பப் படம் வரைஞ்சாலும், 'கைய ஒடிச்சிடுவேன்; காலை ஒடிச்சிடுவேன்னு'தான் சொல்வாங்க. இதெல்லாம் எனக்கு ரொம்ப வேதனையா இருந்தது.

நாலாவது, அஞ்சாவது படிக்கிறவரைக்கும் ஸ்கூல் புக்ஸ்லே படம் வரைஞ்சி வெச்சிருப்பேன். எங்கெல்லாம் ஒயிட் ஸ்பேஸ் இருக்கோ அங்கெல்லாம் படம் இருக்கும். இது கொஞ்சம் அதிகமானதும் எங்க தாத்தா வீட்டுலே கொண்டுபோய் விட்டுட்டாங்க.

தாத்தா கொஞ்சம் ரசனைக்காரர். அங்கேயும் சுவத்துலே படம் வரைய ஆரம்பிச்சுட்டேன். யார் என்ன சொன்னாலும் அதை படமா வரைஞ்சி, சஜஷன் சொல்லுவேன். ஸ்கூல்லே நல்லா படிக்கலைன்னு சொல்லி, இங்கிலீஷ் மீடியத்திலேருந்து தமிழ் மீடியம் மாத்துனாங்க. அங்க 'சாந்தி'னு ஒரு டீச்சர் இருந்தாங்க. அவங்களுக்கு பெரிய பல்லு. வாயிலேருந்து வெளியே துருத்திக்கிட்டு நிக்கும். சிரிச்சாலும் அழுதாலும் அதே ஸ்டைல்லதான் இருப்பாங்க.

அப்போ, எங்க வீட்டுலே நன்னாறி வேர், எலுமிச்சம் பழமெல்லாம் பிழிஞ்சி, பானையிலே தண்ணி வெச்சிருப்பாங்க. அதனாலே, எந்த டீச்சருக்கு தண்ணி வேணும்னாலும், 'ஸ்யாம் போய் வீட்டுலேருந்து செம்பு தண்ணி கொண்டுவாடா'ன்னு அனுப்பிடுவாங்க. இந்த சாந்தி டீச்சர் ஒரு நாளைக்கு மூணு முறையாவது தண்ணி கேப்பாங்க. அவங்க வகுப்பே இல்லைன்னாலும் வந்துவந்து தண்ணி கொண்டுவரச் சொல்லுவாங்க. தண்ணி குடிக்கிற வரைக்கும் கை கட்டிக்கிட்டே நிக்கணும். அவங்க தண்ணி குடிக்கும்போது பல்லுலே பட்டு அருவி மாதிரி 'தபதப'ன்னு என் மேல கொட்டும். அப்படியே சட்டையிலே தொடைச்சிட்டு நிப்பேன். இது ரெகுலரா நடக்கும்.

ஒருநாள், சாந்தி டீச்சர் தண்ணி குடிக்கிறாங்க. பல்லுலேயிருந்து தண்ணி சிதறி விழுது. நான் கீழே நிக்கிறேன். ஆனா, குடை பிடிச்சி இருக்கேன்.


- சா.இலாகுபாரதி


(2010, விகடன்.காம்)

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு