20 June 2011

பாலா என்கிற யானை

Posted by lavanyan gunalan 11:35 PM, under | 2 comments

இயக்குனர் பாலாவின் அவன் இவன் படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. அதேநேரத்தில், அவருடைய மற்றப் படங்கள் அனைத்தையும் பார்த்திருக்கிறேன் என்ற தகுதியோடும், வலைதளங்களில் பலரும் பலவிதமாக அவன் இவன் படத்தின் கதையையும் பாலாவின் இயக்கத்தையும் விமர்சித்து எழுதிவருவதை சில நாட்களாக வாசித்து வருகிறவன் என்ற தகுதியோடும், எது நல்ல சினிமா எது போலியான சினிமா என்று பகுத்தாயும் பக்குவம் உடையவன் என்ற தகுதியோடும் அவன் இவன் படத்தின் மீது வைக்கப்படுகிற விமர்சனங்கள் பற்றி கொஞ்சம் பேசலாம் என்று நினைக்கிறேன்.



பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் இருந்து வந்த இயக்குனர்களில் பாலாவுக்கு தனி இடம் உண்டு. அதை யாரும் மறுக்கவும் முடியாது; மறைக்கவும் முடியாது. அதேபோல பாலாவின் படங்களுக்கும் தமிழ் சினிமா வரலாற்றில் முக்கிய பங்கு உண்டு. இதை யாரும் சொல்லாமல் தவிர்க்க முடியாது. அப்படி யாராவது நினைத்தால் அவர்களுடைய செய்கைக்குப் பின்னால் அரசியல் இருப்பதை உணரமுடியும்.

1999 ஆம் ஆண்டு பாலா சேது படத்தின் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே தேசிய விருதும் வாங்கினார். தமிழக அரசின் சிறந்த இயக்குனருக்கான விருதும் இந்தப் படம் பாலாவுக்கு வாங்கிக் கொடுத்தது. அதேபோல தமிழ்நாடு அரசின் சிறந்த படத்துக்கான விருதும் சேதுவுக்கு கிடைத்தது. இந்த விருதுகளுக்குப் பிறகு ஆஹா ஓஹோ என்று தமிழகமே பாலாவை கொண்டாடியது. அப்போது அவர் பெரிதாக அலட்டிக்கொள்ள வில்லை. அமைதியாகவே வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருந்தார்.



சேதுவுக்குப் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து நந்தா, அதன்பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து பிதாமகன் அதன்பிறகு நான் கடவுள் என்று வரிசையாக வித்தியாசமான கதைக்களன்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார். ஆனால், சேது மாதிரி எந்தப் படமும் வசூல் சாதனை புரியவில்லை என்று சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சு இருந்து வந்தது. அவ்வளவு பெரிய வசூல் சாதனை இல்லாவிட்டாலும் சினிமா ரசிகர்களுக்கு பாலா படங்களின் மீது நல்ல அபிமானமும், மரியாதையும் இருக்கவே செய்து வருகிறது. பாலா படம் வெளியாகும் தினங்களில் டிக்கெட் கிடைக்காமல் ப்ளாக்கில் டிக்கெட் வாங்கி படம் பார்க்கப் போகும் ரசிகர்கள் அவன் இவன் படம் வரைக்கும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அதேபோல, பாலா தமிழ் சினிமாவுக்கு வந்தபிறகு அவருடைய ஈர்ப்பினால் இயக்குனராகும் கனவோடு தமிழ் சினிமாவுக்கு வந்த பலரை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அவர்களில் சிலர் என் நண்பர்களாகவும் இருக்கிறார்கள்.



பாலாவின் படங்கள் அந்த அளவுக்கு தமிழ் மக்களையும் சினிமா ரசிகர்களையும் வசியம் செய்து வைத்திருக்கிறது. அதன் காரணமாகக்கூட அவருடைய தயாரிப்பாளர்கள், படம் வெற்றியடைகிறதோ தோல்வியடைகிறதோ என்ற எந்தக் கவலையும் இல்லாமல் பாலாவின் இயக்கத்தில் நம்முடைய பேனரில் ஒரு படம் வந்தால் பேனருக்கு கவுரவமாக இருக்கும் என்று நினைப்பவர்களாக இருக்கிறார்கள்.

அப்படி நினைந்திருந்தால் மட்டுமே இப்போது விமர்சனத்துக்கு உள்ளாகி வரும் அவன் இவன் படத்துக்கு ஏஜிஎஸ் பிலிம்ஸ் வாய்ப்பு கொடுத்திருக்க முடியும். அதேநேரத்தில் படம் வெற்றி பெற்றால் கொஞ்சம் பணத்தையும் பார்க்கமுடியும் என்ற நினைப்பும் கூடவே ஒட்டிக்கொண்டு இருக்கலாம். அந்த நினைப்போடு தயாரித்து வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் அவன் இவன் கதை குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. எல்லாம் பாலாவை வசைமாரி பொழிவதாகவும் அவருடைய ஸ்டைலை குறை கூறுவதாகவும் இருக்கின்றன.



இயக்குனர் பாலா, உப்புமா கதையைக்கூட ஒப்பேத்தி படம் எடுத்திருக்கிறார் என்றே வைத்துக்கொள்வோம். அதனால், ஏன் இந்த சினிமா விமர்சனப்புலிகள் குய்யோமுறையோ என்று கூப்பாடு போடவேண்டும் என்று தெரியவில்லை. 

பாலா என்கிற யானைக்கு இந்தமுறை அடிசருக்கியிருக்கலாம். அதற்கு என்ன செய்வது? திட்டமிட்டே இப்படியொரு படத்தை எடுத்தே தீர்வருது என்று கங்கணம் கட்டிக்கொண்டா பாலா இந்தப் படத்தை இயக்குயிருப்பார்? ஏஜிஎஸ் நிறுவனத்தை நஷ்டமாக்குவதான் தன்னுடைய ஒரே வேலை என்று முடிவு செய்துகொண்டா அவன் இவன் படத்தை பாலா துவக்கியிருப்பார்.



பாலா போட்ட கணக்கில் இந்தக் கணக்கு தப்பாகப் போயிருக்கலாம். அதற்கு பாலாவை குற்றம் சொன்னால், குறை சொன்னால் அவன் இவனுக்கு ஒரு தீர்வு கிடைத்துவிடுமா? அல்லது இந்தக் குற்றக் குறைகளுக்குப் பயந்துபோய் அவர் அடுத்தப் படத்தை இயக்காமல் சினிமாவை விட்டே ஓடிஒளிந்துகொள்வார் என்று நினைக்கிறார்களா..?

சேது படத்தை இயக்கியபோது, அந்தப் படம் வணிகரீதியாகவும் கலை ரீதியாகவும் வெற்றி பெற்றபோது, அது விருதுகளைப் பெற்றபோது அலட்டிக்கொள்ளாத பாலா, அவன் இவன் படத்தின் மீது வைக்கப்படுகிற இத்தனை விமர்சனங்களுக்குப் பிறகும் அலட்டிக்கொள்ளாமல் இருப்பதைப் பார்க்கும்போது பாலா ஒரு நிறைகுடம் என்பது தெரிகிறது. ஆனால், குறை குடங்கள் கூத்தாடிக்கொண்டு இருக்கின்றன.

விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன!

- சா.இலாகுபாரதி

2 comments:

படைப்பாளனுக்கு பணமும் தேவை என்பதை நாம் மறுக்க முடியாது , ஏனெனில் வாகனம் இருந்தால் மட்டுமே செலுத்திக் கொண்டிருக்க முடியும் .. பணம் இருந்தால் மட்டுமே படைப்பினை அளித்துக் கொண்டிருக்க ம்உடியும் .. பார்க்கலாம் அவன் இவன் எப்படினு ?


******************************'

குற்றம் செய்த பிள்ளைகளை போலிசில் கொடுத்த பெற்றோர்கள்

நண்பா. நீ கூறுவது உண்மை தான்.. பாலா ஓர் சிறந்த இயக்குனர் தான்.. ஆனால் அதே சமயத்தில் யானை சறுக்கினால் எழுவதற்கு நேரம் ஆகும்... அதனால் தான் அந்த பழமொழி ..... நீங்கள் சொல்வது போல் படம் நன்றாய் இருந்தால் எல்லோரும் கொண்டாடுவர்... சரியில்லாத பட்சத்தில் அது யாராய் இருந்தாலும் விமர்சனத்திற்கு இரையாவது வழக்கம் தானே... பாலா மட்டும் விதி விலக்கா என்ன ?

Post a Comment

கோப்பு

கோப்பு