18 June 2011

திருநங்கைகளை கொச்சைப்படுத்துகிறார்கள் இயக்குனர்கள்: கல்கி தடாலடி!

Posted by lavanyan gunalan 8:21 PM, under | No comments

ர்த்தகி படத்தின் மூலம் திருநங்கைகளுக்கும் சமூகத்துக்கும் உள்ள இடைவெளியை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார் திருநங்கை கல்கி. கலை, படைப்புகள், திருநங்கைகளுக்கான இயக்கம் என்று சுற்றிவரும் கல்கி, நர்த்தகி படத்தில் கல்கியாகவே நடித்து தன்னுடைய வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறார். அவரோடு உரையாடியதிலிருந்து...



என்ன தீடீரென்று நடிப்பு பக்கம் வந்துட்டீங்க..?

இந்தப் படத்தில் நான் நடித்ததற்கு மிகவும் பாக்கியம் செய்திருக்க வேண்டும். இயக்குனர் விஜயபத்மா, தயாரிப்பாளர் புன்னகைப்பூ கீதா இருவருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன். முதல் படத்தை இயக்கப் போகிறோம், கமர்ஷியலாக அந்தப் படத்தை வெற்றியடையச் செய்யவேண்டும் என்று நினைக்காமல், சமூக அக்கறையோடு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் விஜயபத்மா. அதேபோல, பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் கதையைக் கேட்டதும் இந்தப் படத்தை தயாரிக்க சம்மதம் தெரிவித்து வெற்றிகரமாக உலகம் முழுக்க வெளியிட்டும் காட்டியிருக்கிறார் கீதா. இருவருடைய இந்த தீவிர முயற்சியால்தான் நான் இந்தப் படத்தில் நடித்தேன். எங்களுடைய பிரச்னைகளைப் பேசுவதற்கு ஒரு வழியமைத்துக் கொடுத்தது என் வாழ்க்கையில் மறக்கமுடியாத அனுபவம்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் படக்குழுவினர், தொழில்நுட்பக் கலைஞர்கள் உங்களிடம் எப்படி நடந்துகொண்டார்கள்..?

நர்த்தகி படத்தில் வேலை பார்த்த எல்லா கலைஞர்களுக்கும் திருநங்கையோடு பணியாற்றுவது இதுதான் முதல்முறை. ஆனால், அவர்கள் என்னோடு பழகியதைப் பார்க்கும்போது அப்படித் தெரியவில்லை. நீண்டநாள் பழக்கமான ஒரு தோழியிடம் எப்படி கண்ணியமாக நடந்துகொள்வார்களோ அப்படித்தான் என்னோடும் இருந்தார்கள். அதேபோல, நடன இயக்குனர்கள் என்னை மரியாதையாக நடத்தினார்கள். பொதுவாக நடன இயக்குனர்கள் நடிகர்களை திட்டிக்கொண்டேதான் வேலைவாங்குவார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால், என் விஷயத்தில் யாரும் அப்படி நடந்துகொள்ளவில்லை. நானும் அவர்கள் என்னை திட்டாத அளவுக்கு சரியாக செய்துகொண்டே வந்தேன். கடைசி நாள் படப்பிடிப்புவரை இந்த மரியாதை எனக்குக் கிடைத்தது. இதற்கு இயக்குனர் விஜயபத்மாவும் ஒருகாரணம். இந்தப் படத்தில் நான் மட்டும் நடிக்கவில்லை. பல திருநங்கைகள் பல்வேறு பாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். அதனால், அதிகமானவர்கள் திருநங்கைகளாக இருப்பதால், அவர்களோடு எப்படி நடந்துகொள்ளவேண்டும். கதை என்ன... காட்சிகள் என்ன... என்று ஒவ்வொரு விஷயங்களையும் படக்குழுவினருடன் ஏற்கெனவே பேசி, விவாதித்துதான் படப்பிடிப்பையே தொடங்கினார். அதனால், அவர்கள் திருநங்கைகள் விஷயத்தில் எல்லோரிடமும் நடந்துகொள்வது மாதிரி இயல்பாக இருந்தார்கள்.

இந்தப் படத்துக்குப் பிறகு வேறு படங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகிறதா..?

இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பாகவே ஒரு மலையாளப் படத்தில் திருநங்கை பாத்திரத்தில் நடிக்க என்னை அழைத்து இருந்தார்கள். ஆனால், அந்தப் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே நர்த்தகி படம் தொடங்கிவிட்டது. இப்போது மீண்டும் அழைக்கிறார்கள். ஆனால், கிட்டத்தட்ட அதுவும் நர்த்தகி படம் மாதிரியே இருப்பதால் நடிப்பது பற்றி யோசித்துக்கொண்டு இருக்கிறேன். ஃபிரன்ச் மற்றும் அமெரிக்க நிறுவனங்கள் இணைந்து ஆங்கிலத்தில் ஒரு படம் தயாரிக்கிறார்கள். அந்தப் படத்தில் நடிக்க எனக்கு அழைப்பு வந்திருக்கிறது.


விஜயபத்மா, புன்னகைப்பூ கீதா, கல்கி

ஆங்கிலப் படத்தின் கதை என்ன...

அது முழுக்க முழுக்க ஃபேண்டஸி கதை. என்னோட கேரக்டரும் பேண்டஸியான கேரக்டர்தான். ஆனால், முழு கதை இன்னும் தெரியாது.

ஏற்கெனவே குறும்படம், ஆவணப்படங்களை இயக்கியிருப்பதால் அடுத்து முழு நீள திரைப்படத்தை இயக்குவீர்களா..?

நிச்சயமாக அப்படியொரு திட்டம் இருக்கிறது. ஆனால், அதற்கு முன்னதாக முக்கியமான இயக்குனர்கள் யாரிடமாவது உதவியாளராக பணியாற்ற வேண்டும் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகிறேன். அப்படி யாரிடமாவது சில ஆண்டுகள் பணியாற்றிவிட்டு படத்தை தொடங்கலாம் என்று இருக்கிறேன்.

அப்போது நீங்கள் எடுக்கும் படம் திருநங்கைகள் பற்றிய படமாகத்தான் இருக்கும் என்று சொல்லுங்கள்..!


நிச்சயமாக நான் இயக்கப் போகிற படம் திருநங்கைகளின் வாழ்க்கையை மையப்படுத்திய படமாக இருக்காது. நான் இயக்கினால் பக்கா கமர்ஷியல் படமாகத்தான் இயக்குவேன். காமெடி, ரொமான்ஸ், சண்டை எல்லாம் அந்தப் படத்தில் இருக்கும். திருநங்கைகளை வைத்து பல இயக்குனர்கள் கேலியாகத்தான் படம் எடுத்து இருக்கிறார்கள். நிறைய படங்களில் பாலியல் தொழிலாளியாகவும், கேலிக்குரிய மனிதர்களாகவும்தான் அவர்களை சித்திரித்து வருகிறார்கள். அதனாலேயே ஒரு திருநங்கை படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்று அவர்களுக்கு காட்டப் போகிறேன்.


ஆனால், இயக்குனர் பாலா, மணிரத்னம் போன்றவர்கள் திருநங்கை களை உயர்வாகத்தானே காட்டியிருக்கிறார்கள்...

’’இருக்கலாம். இயக்குனர் மணிரத்னம் பம்பாய் படத்திலும், பாலா நான் கடவுள் படத்திலும் அப்படி காட்டியிருக்கலாம். ஆனால், 99 சதவீத படங்கள் திருநங்கைகளை கொச்சைப்படுத்திதான் வந்திருக்கின்றன. பட்டியலிட்டால் ஒரு புத்தகமே போடலாம். அவ்வளவு படங்கள் அப்படி வெளிவந்திருக்கின்றன. என்னுடைய கோபம் பொதுவானதுதான் நான் தனிப்பட்ட முறையில் யாரையும் குறைசொல்லவில்லை. அதோடு, என் படத்தில் வேறு சில சமூகப் பிரச்னைகளை அலசி தீர்வு காணுவேன். எங்களுக்கும் சமூக பொறுப்பு சம அளவில் இருக்கிறதுஎன்று சூடாக முடித்தார். ஆல் தி பெஸ்ட் கல்கி!

- சா.இலாகுபாரதி

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு