12 June 2011

சமச்சீர் கல்வியில் தமிழக அரசுக்கு குட்டு!

Posted by lavanyan gunalan 6:49 PM, under | No comments

சமச்சீர் கல்வி திட்டத்தை தள்ளிவைக்கக் கூடாது. இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அதேநேரத்தில் அரசு சமச்சீர் கல்வியை ஒத்திவைப்பதற்கும் உயர்நீதிமன்றம் இடைகால தடைவிதித்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது.




உயர்நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு தடைகோரும் தமிழக அரசின் மனு நாளை உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. ஆனால், இதற்கு வேலையே இல்லாமல், சமச்சீர் கல்வி திட்டத்தில் இருக்கிற ஓட்டை ஒடிசல்களையெல்லாம் அடைத்து சரிபடுத்திவிட்டு சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தலாம். அதற்கான எல்லா அதிகாரங்களும் உரிமைகளும் தமிழக அரசுக்கு இருக்கிறது என்று உயர்நீதிமன்றம் ஏற்கெனவே தனது தீர்ப்பில் கூறியிருக்கிறது.

பிரின்ஸ்
முன்னதாக முன்னாள் முதல்வர் கருணாநிதியும் செம்மொழிப் பாடல்களையும் தன்னைப் பற்றிய பாடங்களையும் நீக்கிவிட்டு சமச்சீர்கல்வியை அமல்படுத்தலாமே என்று ஆலோசனை கூறியிருந்தார். அதேபோல, ஒரு புதிய கல்வி முறையை அமல்படுத்தும்போது அதில் சில குறைபாடுகளும் குளறுபடிகளும் இருப்பதை தவிர்க்கமுடியாது. ஆனால், போகப் போக அவற்றையெல்லாம் சீர்செய்து சரிபடுத்திவிட முடியும் என்று கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்டவர்கள் பலமுறை தெரிவித்து வந்திருக்கிறார்கள். ஆனால், கடந்த அரசு மீது இருக்கிற கோபமும், திமுக மீது அதிமுகவுக்கு இருக்கிற வெறுப்பும் இதே கல்வி ஆண்டில் சமச்சீர் கல்வியை செயல்படுத்தாமல் இருப்பதற்கு எல்லா வேலைகளையும் செய்து வருகிறது. எதிர்காலத்திலும் சமச்சீர் கல்விமுறை செயல்படுத்தப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

அரசுப் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு இடையில் பாடத்திட்டத்தில் இருக்கிற ஏற்றத்தாழ்வுகளை சமன்செய்யும் விதமாகவே பல்வேறு கல்வியாளர்களாலும், குழுக்களாலும் பரிந்துரைக்கப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு கடந்த ஆட்சிக்காலத்தில் சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்துவது என்று முடிவு எடுக்கப்பட்டது. ஆகவே, இதை திமுக அரசின் திட்டமாக அதிமுக தலைமை பார்க்கக் கூடாது. இதே கருத்தை பலரும் பல்வேறு சூழ்நிலைகளில் வற்புறுத்தி வந்திருக்கின்றன. ஆனால், உயர்நீதிமன்றயும் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல் முறையீடு செய்திருப்பது சமச்சீர்கல்விக்கு வேகத்தடை போடுவதுமாதிரியே தெரிகிறது.

அதேநேரத்தில், மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் உரிமையாளர்கள் சமச்சீர்கல்விக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் தமிழக அரசின் இந்த நடவடிக்கைகள் மெட்ரிக் பள்ளி உரிமையாளர்களுக்கு சாதகமாக அமைந்துவிடுவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த நிலை இப்படியே தொடர்ந்தால், பள்ளிக்கட்டணங்களை அமல்படுத்துவதிலும் அதை சரிபடுத்துவதிலும்கூட மெட்ரிக் பள்ளிகளின் கொள்கைகளுக்கே மாலை போடும் நிலைமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.


என்னதான் பள்ளிக் கட்டணங்களை முறைபடுத்தினாலும் தனியார்ப் பள்ளிகள் வசூல் வேட்டை நடத்துவதிலேயே குறியாக இருக்கின்றன என்பதை கடந்த ஆண்டுவரை பார்த்தோம்.

மருத்துவமும் கல்வியும் எந்த நாட்டில் இலவசமாகக் கிடைக்கிறதோ அந்த நாட்டில் வறுமையும் பட்டினியும் இல்லாமல் போகும். ஆனால், இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அப்படியொரு நிலை எப்போது ஏற்படும் என்று தெரியவில்லை. ஆனால், இந்த சமச்சீர்கல்வியை அமல்படுத்துவதின் மூலமாகக்கூட அதற்கான ஒரு ஊற்றுக்கண்ணை திறந்துவிடமுடியும். தமிழக அரசு இந்த விஷயத்தில் பிடிவாதம் பிடிக்காமல் சமச்சீர்கல்வியை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்தினால் எதிர்கால இளைஞர்கள் அதிமுகவை அசைக்கமுடியாத கட்சியாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

அதேநேரத்தில் நாளை தாக்கல் செய்யப்படும் மனுமீதான விசாரணையை விரைந்து முடித்து உச்சநீதிமன்றமும் தமிழக அரசின் தலையில் செல்லமாக ஒரு குட்டுவைத்து கண்டிக்க வேண்டும் என்பதே நடுநிலையாளர்களின் கருத்தாக இருக்கிறது. இது தமிழக பெற்றோர்களின் கோரிக்கையும்கூட!

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு