05 June 2011

காசுக்கு விற்பதல்ல கலை!

Posted by lavanyan gunalan 1:02 PM, under | No comments


கலைகள் எல்லாம் காசாகிக் கொண்டிருக்கிற இந்தக் காலத்தில் பரதக் கலையை இலவசமாகக் கற்றுத் தருகிறார் இந்த நடனக் கலைஞர். காஞ்சிபுரம் மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயிலில் ‘விநாயகா நாட்டியாலயா’ பள்ளியை நடத்திவரும் மீனாட்சி ராகவன், தன்னிடம் நாட்டியம் கற்க வருகிற பிள்ளைகளிடம் ‘காசு இருக்கிறதா?’ என்று கேட்பதில்லை; ‘ஆர்வம் இருக்கிறதா?’ என்று மட்டும் கேட்கிறார்.

‘‘எந்த அறக்கட்டளையும் நடத்தவில்லை. வெளிநாட்டு, உள்நாட்டு நன்கொடைப் பரிவர்த்தனைகள் இல்லை; வசதி படைத்த மாணவர்களிடமும் ஃபீஸ் அதிகம் வசூலிப்பது இல்லை. ‘பரதம் கற்றுக்கொள்ள வேண்டும்; ஆனால், பணமில்லை’ என்று வருபவர்களுக்கு இலவசமாகவே கற்றுத்தருவார். அரங்கேற்றம் வரை போகிற ஏழை மாணவர்களுக்கு ஆகிற செலவுகள் அத்தனையையும் தானே ஏற்றுக்கொள்வார். பள்ளியில் வந்து நாட்டியம் கற்றுக்கொள்ள முடியவில்லை; ஆனால், எப்படியாவது பரதம் பயில வேண்டும் என்று துடிக்கிற பிள்ளைகளுக்கு அவர்கள் வசிக்கிற கிராமங்களுக்கே சென்று நட்டுவாங்கம் செய்வார்’’ என்று மீனாட்சி ராகவனைச் சந்திக்கச் செல்லும் முன்பே நம்மை ஆச்சரியப்படுத்துகிறார்கள் அந்தப் பகுதி மக்கள்.

‘‘அப்படியா..?’’ என்று மீனாட்சி ராகவனிடம் கேட்டால், ‘‘எங்க குழந்தைகள் யாருமே திறமையில் ஏழை இல்லை தெரியுமா..?’’ என்று குழந்தைகளைப் பற்றிப் பேசத் தொடங்கினார்.

‘‘ஏழைப் பணக்கார வித்தியாசம் இல்லாமல் எல்லாக் குழந்தைகளுக்கும் பரதத்தில் ஆர்வமும் ஆசையும் இருக்கு. அதிலும் வசதியில்லாத குழந்தைகள், இந்தக் கலை மேல பக்தியை வெச்சிருக்காங்க. குரு பக்தியைவிட கலை பக்தி முக்கியம்னு நான் நம்பறேன். ஆனா, என் குழந்தைகளிடம் ரெண்டுமே இருப்பது எனக்கு மகிழ்ச்சியா இருக்கு’’ என ஆச்சரியம் அளிக்கிறார்.

‘‘இதற்கு உங்கள் கணவரின் ஆதரவு இருக்கிறதா..?’’

‘‘அவருடைய ஆதரவு இல்லாமல் இதையெல்லாம் எப்படி முடிவெடுக்க முடியும்? நிறைய நேரங்களில் நான் டான்ஸ் கிளாஸில் இருந்து வீடு திரும்புவதற்கு தாமதமாகிடும். அப்போதெல்லாம், எனக்கு முந்தி வீடு வந்து சேர்ந்திருப்பார். நான் உள்ளே நுழைஞ்சதும், ‘ஏன் லேட்’ன்னுகூட விசாரிக்கமாட்டார். பதிலா, ‘குழந்தைங்க இன்னைக்கு எப்படி ஆடுனாங்க... புதுசா யாராச்சும் சேர்ந்து இருக்காங்களா... க்ளாஸ்லே இன்னைக்கு என்ன விசேஷம்’ - இப்படித்தான் கேட்பார். என்னைவிட அவருக்கு இந்தக் கலை மீது இருக்கிற மரியாதை, குழந்தைகள் மீது இருக்கிற அன்பு எல்லாம் என்னை இன்னும் நிறைய மெனக்கெடச் சொல்லுது. அதுக்கு எப்பவும் நான் தயாராவே இருக்கேன்.

திடீர்னு வெளியூர்லேருந்து ஏதாவது புரோக்ராமுக்கு அழைச்சாலும் போறதுக்கு தயங்கமாட்டோம். காரணம், என் குழந்தைகள் குறைஞ்சது ஐம்பது சப்ஜக்ட்லேயாவது ட்ரெய்ன்டா இருப்பாங்க. பேரன்ட்ஸும் குழந்தைகளை ஊக்கப்படுத்துறதிலே குறை வைக்கிறதில்லே. அதிலும், வசதி வாய்ப்பு இல்லாத பெற்றோர் பரதத்தை ரொம்ப மதிக்கிறாங்க. தன்னோட குழந்தை பெரிய டான்ஸரா வரணுங்கிறதுலே உறுதியா இருக்காங்க. புரோக்ராமுக்கு வெளியூர் போனோம்னு சொன்னா, உடனே சம்மதிக்கிற அளவுக்கு பக்குவமும் அவங்ககிட்ட இருக்கிறதாலே, ஏழைப் பிள்ளைகளுக்கு முழுமையா பரதம் போய்ச் சேரணுங்கிறதுலே நான் உறுதியா இருக்கேன்’’ என்கிறவரிடம் 400 பேருக்கும் மேல் பரதம் பயில்கிறார்கள். இது மட்டுமில்லாமல், செங்கல்பட்டு வித்யாமந்திர் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வித்யாசாகர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் இவர் நடன ஆசிரியராக இருக்கிறார்.

இவருடைய இந்தக் கலைப் பணிக்கு முக்கியமான காரணகர்த்தா மறைந்த பரதக் கலைஞர் பத்மஸ்ரீ கே.என்.தண்டாயுதபாணி பிள்ளை. ஜெயலலிதா, மஞ்சுளா, ஸ்ரீவித்யா, சச்சு, ராதா என்று தமிழ் சினிமாவின் முக்கியமான நாயகிகளுக்கு பரதம் பயிற்றுவித்தவரும் இவர்தான். இவர் மனைவி சந்திரா தண்டாயுதபாணியும் சிறந்த கலைஞர். இவர்களுடைய பட்டறையிலிருந்து வந்தவர்தான் மீனாட்சி ராகவன்.

பள்ளி, கல்லூரிகளில் பரதத்துக்கு உள்ள வரவேற்பு பற்றிக் கேட்டதும் உற்சாகமாக பதில் சொன்னார்.

‘‘நான் பயிற்சி தர்ற இடங்கள்லே நல்ல வரவேற்பு இருக்கு. மாணவர்கள், பெற்றோர்கள், கல்வி நிர்வாகம் அனைவருமே நல்ல மதிப்பு அளிக்கிறாங்க. இங்கு காசு கொடுத்து கத்துக்க முடியாத சில பிள்ளைகளை என் பள்ளிக்கு அழைச்சு பயிற்சி தர்றேன். 

ஆனா, நிறைய பள்ளி, கல்லூரிகளில் நம்முடைய பாரம்பரியக் கலைகள் எதுக்குமே மதிப்பளிக்கிறது இல்லை. குத்துப்பாட்டு ஓடவிட்டு, பிள்ளைகளை ஆடவிட்டு வேடிக்கைப் பாக்கறாங்க. நர்சரி பள்ளிகளில் இருந்தே இதை ஆரம்பிச்சிடுறாங்க. சில பெற்றோரே இதை ஊக்குவிக்குறாங்க என்பது வேதனைக்குரிய செய்தி. இதையெல்லாம் மாத்தணும்னு நினைக்கிறேன். ஆனா, நான் ஒருத்தி மட்டும் இதை செய்யமுடியாது. நிறையபேர் வரணும். அதுக்குத்தான் தவறான வழிமுறைகள் அறியாத, சொல்லிக் கொடுக்கப்படாத ஏழைக் குழந்தைகளுக்கு பயிற்சி தர்றேன். இது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்னு நம்பறேன்’’என்ற மீனாட்சி,  ‘‘டான்ஸ் க்ளாஸுக்கு நேரமாச்சு!’’ என்று புறப்பட்டார்.

- சா.இலாகுபாரதி
நம் தோழி, மார்ச் 2011

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு