08 May 2011

குழந்தைகளை ஈஸியாக சாப்பிடவைப்பது எப்படி?

Posted by lavanyan gunalan 11:29 PM, under | No comments


ஓடியாடும் குழந்தைகள் இருக்கிற வீட்டில் அம்மாக்களுக்கு ஒரே ஒரு கவலைதான்... ‘குழந்தை எப்பவுமே சாப்பிட மாட்டேங்குது!’ துரத்தித் துரத்தி அடித்தாவது குழந்தையின் வாயில் திணிக்கிற அம்மாக்கள் அநேகம். ‘ ‘ஆனால், குழந்தைகளை சரியான விதத்தில் அணுகினால், அவர்களை ஈஸியாக சாப்பிடவைக்கலாம்’’ என்கிறார் அப்போலோ மருத்துவமனையின் குழந்தை நல மருத்துவர் ஜோதி எஸ்.பார்த்தசாரதி.

‘‘குழந்தைகள் சாப்பிட மறுக்க இரண்டு காரணங்கள் உண்டு. நீங்கள் சாப்பிட ஏதாவது கொடுக்கும்போது அவர்களுக்குப் பசி இருக்காது. தினமும் ஒரே மாதிரி உணவையே கொடுத்தாலும், அந்தச் சாப்பாட்டு மேல் ஒரு வெறுப்பு வந்து சாப்பிட மறுப்பார்கள். அதனால், தினமும் வெரைட்டியான உணவுகளைக் கொடுக்க வேண்டும். அதேமாதிரி, குழந்தைகளோடு குழந்தைகளாக இருக்கும்போது அவர்களே விரும்பி, நீங்கள் போதும்ங்கிற அளவுக்கு சாப்பிடுவார்கள். குழந்தைகள் சாப்பிடுறதுக்கு அட்மாஸ்ஃபியரும் முக்கியம்.



வெரைட்டியான உணவை, நல்ல சூழலில் கொடுக்கும்போது சாப்பிட மறுக்க மாட்டார்கள். அதே நேரத்துலே அவங்க பசி என்று கேட்கும்போது சாப்பாடு ஊட்டினாலே போதும். வளரும் இந்த வயதில்தான் குழந்தைகளுக்கு ஹெல்தியான ஃபுட்ஸ் தேவைப்படும். அரியில் கார்போஹைட்ரேட் நிறைந்து இருப்பதால் அரிசியை நுணுக்கி, கஞ்சியாகக் கொடுக்கலாம். அல்லது சோறுவடித்து பருப்பு, நெய் கலந்தும் கொடுக்கலாம். ஆனால், தினமும் இந்த நெய் சாதத்தையே கொடுத்தால் போரடிக்கத்தான் செய்யும். அதனால், அரிசியை நுணுக்கி, அதனுடன் பொட்டுக் கடலை பொடியை போட்டு வேகவைத்தும் கொடுக்கலாம்.

சில நேரங்களில் மில்க் பிஸ்கட், இட்லி, ராகி, ஆரஞ்சு ஜூஸ் என்று மாத்தி மாத்தி கொடுக்கும்போது சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள். புதிதாக ஒரு உணவை கொடுக்கும்போது டேஸ்ட் பார்க்கும் வரைதான் அடம்பிடிப்பார்கள். டேஸ்ட் பிடித்துவிட்டால் சாப்பிட்டு முடித்துவிடுவார்கள். அதனால், எந்த உணவைக் கொடுத்தாலும் முதலில் அதில் சுவை இருக்குதான்னு பெற்றோர்
டேஸ்ட் பண்ணிவிட்டு கொடுப்பது நல்லது. உப்பு சப்பு இல்லாத உணவை குழந்தைக்கு கொடுத்தால் அது எப்படி சாப்பிடும்?

டேஸ்ட் இல்லாமல் பெரியவர்களாலேயே சாப்பிட முடியாதபோது குழந்தைகள் மட்டும் என்ன செய்யும்? அதேமாதிரி ஒவ்வொரு வேளைக்கும்
ஒவ்வொரு உணவு என்று சாய்ஸ் வைத்துக்கொள்வது முக்கியம். காலையில் செய்த இட்லியையே மதியத்துக்கும் கொடுக்கக் கூடாது. முட்டை, பால், சிக்கன், மீன் என்று புரோட்டீன், கால்சியம் நிறைந்த உணவுகளை மாற்றி மாற்றி கொடுக்கும்போது அவர்களுடைய வளர்ச்சியும், ஆரோக்கியமும் சரிவிகிதத்தில் இருக்கும்’’ என்கிறார் டாக்டர் ஜோதி எஸ்.பார்த்தசாரதி.

குழந்தைகள் இப்படி சாப்பிட மறுக்கும் விஷயத்தில் வேறு ஏதாவது உளவியல்ரீதியான பிரச்னை இருக்குமா? சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் மனநல மருத்துவர் ஆனந்த் பாலனை அணுகினேன்.

‘ ‘இந்த விஷயத்தில் பெற்றோர்கள் ஒரு அடிப்படையான விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ‘பசியில்லாவிட்டால் எப்படி குழந்தைகள் சாப்பிடும்’ என்பதை முதலில் உணர வேண்டும். உலகத்தில் மனிதன் ‘போதும்’ என்று சொல்கிற ஒரே விஷயம் சாப்பாடுதான். அதுவும் பசி வந்தால்
மட்டும்தான் மனிதன் உணவைத் தேடிப் போவான். மற்ற நேரங்களில் உணவு பற்றிய சிந்தனையே அனுக்கு இருக்காது. இது வளர்ந்த மனிதனுக்கு  மட்டுமல்ல. வளரக்கூடிய குழந்தைகளுக்கும் பொருந்தும்.

இரண்டு அல்லது இரண்டரை வயதில் குழந்தைகள் மழலையில் பேசினாலும், அவர்களுடைய பெற்றோருக்கோ அல்லது தாத்தா பாட்டிக்கோ புரிகிற மொழியில்தான் பேசுவார்கள். அப்படி இருக்கும்போது, அவர்களுக்கு பசியெடுத்தால் கேட்கத் தெரியும். அவர்கள் கேட்கும் மொழி எல்லாருக்கும் புரியவில்லை என்றாலும், பெற்றோருக்கு நிச்சயம் புரியும். எனவே,‘பசிக்குது... சாப்பிட வேண்டும்’ என்று குழந்தை கேட்கும்போது மட்டும் உணவு கொடுத்தால் போதும். நாம் நினைக்கும்போதெல்லாம் ‘சாப்பிடு... சாப்பிடு’ என்று திணித்து ஊட்டத் தேவையில்லை. சாப்பிடாத குழந்தையை அடிக்கக் கூடாது. இது தவறான அணுகுமுறை. அப்படி அடித்தால் பசியெடுக்கும்போதுகூட சாப்பிடத் தோன்றாது.

அதேபோல பெரியவர்கள் விரும்பிச் சாப்பிடுகிற உப்பு, எண்ணெய், காரம் கலந்த உணவுகளைத்தான் குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.  பெரியவர்கள் என்னவெல்லாம் சாப்பிட விரும்புகிறோமோ அதே உணவையே குழந்தைகளுக்கும் அளிக்கலாம். அப்போதுதான் குழந்தைகளுக்கு வெரைட்டியாகவும் இருக்கும், சுவையாகவும் கிடைக்கும். ஆரோக்கியமான குழந்தை பசி வந்தால், சாப்பிட அடம்பிடிக்காது’’ என்று
அழுத்தமாகச் சொல்கிறார் டாக்டர் ஆனந்த் பாலன்.

- சா.இலாகுபாரதி
நம் தோழி, பிப்ரவரி 2011

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு