31 May 2011

இந்தியாவை அச்சுறுத்தும் பேராபத்து: எச்சரிக்கை ரிப்போர்ட்!

Posted by lavanyan gunalan 10:01 PM, under | No comments

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கம் - சுனாமியால் பாதிக்கப்பட்ட அணுமின் நிலையங்களில் இருந்து கதிர்வீச்சு ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஆனால், அந்த நாட்டு அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பல ஊர்களில் இருந்தும் மக்கள் வெளியேற்றப்பட்டு அணுக்கதிர்வீச்சு பாதிப்பிலிருந்து தப்பவிக்கப்பட்டனர். ஆனாலும், பல கோடி ரூபாய் அளவுக்கு பொருட்சேதமும் பலருக்கு அணுக்கதிர்வீச்சு பாதிப்பும் ஏற்பட்டு ஜப்பான் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக அவதிப்பட்டு வருகிறது. இதைப் பார்த்த பல உலகநாடுகள் பெரும் கலக்கத்துக்கு ஆளாகின. இதனால், பல நாடுகளில் அணுமின் நிலையங்களை இழுத்து மூடுவது என்று முடிவு செய்யப்பட்டது. சில நாடுகளில் இனி புதிதாக அணுமின் நிலையம் அமைக்கப்போவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது.

’மக்களை விழுங்கக் காத்திருக்கும் அணுமின் உலை’

அப்படி அணுமின் நிலையங்கள் மூலம் 23 சதவீத மின்சார உற்பத்தி செய்யும் ஜெர்மன், நாட்டில் உள்ள அணுமின் நிலையங்கள் அத்தனையையும் இழுத்து மூடுவது என்று முடிவு செய்து இருக்கிறது. ஜெர்மன் அரசின் இந்த நடவடிக்கை உலக மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஜெர்மனியில் மொத்தம் 17 அணுமின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. மேலும் புதிதாக ஒரு அணுமின் நிலையம் அமைக்கவும் திட்டமிட்டு வரப்பட்டது. ஆனால், ஜப்பானில் ஏற்பட்ட பாதிப்புக்குப் பிறகு புதிதாக அணுமின் நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிட்டது மட்டும் அல்லாமல், ஏற்கெனவே செயல்பட்டு வரும் 17 அணு மின் உற்பத்தி நிலையங்களையும் படிப்படியாக மூடுவது என்று ஜெர்மன் ஆளும் கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை ஜெர்மன் பார்லிமெண்டில் முன்வைத்து எதிர்கட்சியினரின் ஒப்புதலையும் பெற்று செயல்படுத்த ஆளும் கூட்டணி அரசு திட்டமிட்டு வருகிறது.

இந்த முடிவு எடுப்பதற்கு முன்பாகவே ஜெர்மனியில் உள்ள ஒரு அணுமின் நிலையம் செயல்பாடு இல்லாமல் இருந்து வந்தது. ஜப்பான் பாதிப்புக்குப் பிறகு அனைத்து நிலையங்களையும் மூடவேண்டும் என்று ஜெர்மன் மக்கள் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவந்தனர். இது ஆளும் கூட்டணிக்கு பெரும் தலைவலியாக இருந்துவந்தது.

மக்களின் எதிர்ப்பை சமாளிக்கமுடியாமல் அதிபர் ஏஞ்சலா மெர்க்கெல்லின் ஆளும் கட்சியான கிறிஸ்தவ குடியரசுக் கட்சியும், அதன் கூட்டணிக் கட்சிகளும் அணுமின் நிலையங்களின் எதிர்காலம் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தின. அந்தக் கூட்டத்தில் 2022ம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள 17 அணுமின் நிலையங்களையும் படிப்படியாக இழுத்து மூடுவது என்று முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுற்றுச்சூழல் அமைச்சர் நார்பெர்ட் ரோயட்கென், ‘ஏற்கெனவே 7 நிலையங்கள் மூடப்பட்டு உள்ளன. செயல்படாமல் 1 நிலையம் இருக்கிறது. 6 நிலையங்கள் 2011 இறுதிக்குள் மூடப்படும். புதிதாகத் துவங்கப்பட்ட 3 நிலையங்கள் 2022ம் ஆண்டுக்குள் மூடப்படும். புதிதாக துவங்க இருந்த ஒரு அணுமின் நிலையத்தின் திட்டம் கைவிடப்படும்’ என்று தெரிவித்தார். அரசின் இந்த முடிவை ஜெர்மன் மக்கள் வரவேற்று இருக்கிறார்கள்.

ஜெர்மனியின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவிலும் அணுமின் நிலையங்களை இழுத்து மூடவேண்டும் என்ற மக்களின் எதிர்ப்புக் குரல் அதிகரித்து வருகிறது. அணுமின் நிலையங்கள் மூடுவது குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதபட்சத்தில், அரசுக்கு எதிராக மக்கள் ஒன்றுசேர்ந்து போராட்டம் நடத்தவும் தயாராக இருக்கிறார்கள்.

ஜெர்மனியோடு இந்தியாவை ஒப்பிடும்போது, அணுமின் நிலையங்கள் மூலம் இந்தியாவில் மிகக் குறைந்த அளவே மின்சாரம் பெறப்படுகிறது. ஆனால், அதிகமான அணுமின் நிலையங்கள் இயங்கிவருகின்றன. அதனால், குறைவான மின் உற்பத்தி செய்யும் அணுமின் நிலையங்கள் மூலமாக இந்தியாவின் மின் பற்றாக்குறையைப் போக்கமுடியாது. அதேநேரத்தில் காற்றலை மூலமாகவும், தண்ணீர், குப்பை, கழிவுகள் மூலமாகவும் மின்சாரம் பெறமுடியும் என்கிறபோது, சுற்றுச்சூழலுக்கும் மனித உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய இந்த அணுமின் நிலையங்கள் எதற்கு என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அதனால், மாற்று முறையில் மின் உற்பத்தியை மேற்கொள்ளலாம் என்றும், புதிதாக கட்டப்பட்டும் அடுக்குமாடி மற்றும் கான்க்ரீட் வீடுகளில் சூரியமின்சாரம் தயாரித்து அவர்களுடைய மின் தேவையை ஓரளவுக்கு பூர்த்தி செய்துகொள்கிற அளவுக்கு குடியிருப்புகளில் சூரிய மின் உற்பத்தி சாதனங்கள் அமைப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறிவருகிறார்கள். இதன் மூலம் மின் தட்டுப்பாட்டை மிக அதிக அளவு போக்க முடியும். பேராபத்து விளைவிக்கக் காத்திருக்கும் அணுக் கதிர்வீச்சிலிருந்து மக்களை காக்கவும் முடியும்.

மாறாக முதலாளிகளுக்கும், அணுமின் நிலைய உபகரணங்களை இந்தியாவின் தலையில் கட்டி காசு பார்க்கத் துடிக்கிற வல்லரசு நாடுகளின் செயல்பாடுகளுக்கும் காங்கிரஸ் அரசு துணைபோனால் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். தமிழகத்தில் நேர்ந்த ஒரு நிலை மத்தியிலும் காங்கிரஸுக்கு ஏற்படாமல் இருக்க அணுமின் நிலையங்களை நிரந்தரமாக மூடுவது குறித்து காங்கிரஸ் அரசு பரிசீலிக்க வேண்டும்.

- சா.இலாகுபாரதி

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு