30 May 2011

ரொமான்ஸ் கொஞ்சம் கஷ்டம்: நந்தனா

Posted by Show Now 9:48 PM, under | No comments


மை பூசிய கண்களில் சுஜாதா தெரிகிறார்... பல் வரிசையின் பளிச் சிநேகாவை நினைவுபடுத்துகிறது. கன்னங்களின் கதுப்பு மீனாவைப் போலிருக்கிறது. மொத்தமாகப் பார்த்தால் பக்கத்து வீட்டுப் பெண் போல பரிச்சயமானவராக இருக்கிறார் ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’ பட நாயகி நந்தனா.

எண்பதுகளின் காலகட்டத்தில் உடுமலைப்பேட்டை பஞ்சாலை பெண் தொழிலாளர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை மையமாகக் கொண்ட திரைப்படம் ‘கிருஷ்ணவேணி பஞ்சாலை’. அதற்கு ஏற்ற முகமும் அழகும் கொண்டவராகத் தேடியபோது சிக்கியவர்தான் நந்தனா. இந்தக் கதைக்கு இவரைவிட பொருத்தம் யாரும் இருக்கமுடியாது என்பது போல இருக்கிறது அவருடைய நடிப்பு என்று பாராட்டினார் இயக்குனர் தனபால் பத்மநாபன். நந்தனாவின் கழுத்தில் தொங்கும் கருகமணி பாசியும் சாயம் போன சீட்டி பாவாடை தாவணியும் அவர் கருத்து சரிதான் என்று கட்டியம் கூறுகின்றன. தமிழ் சினிமாவுக்கு நாயகிகளை உருவாக்கித் தரும் கேரளாதான் நந்தனாவையும் தந்திருக்கிறது. ஆனால், பேசும்போது தமிழுக்காகவே வார்க்கப்பட்டவர் என்பதை உணரமுடிகிறது.உங்கள் குடும்பத்தைப் பத்திச் சொல்லுங்க...

அப்பா கவர்ன்மென்ட் எம்ப்ளாயீ. அம்மா ஹவுஸ் வொய்ஃப். சிஸ்டர் பிஎஸ்சி படிக்கிறா. பாட்டி, நான். இதான் எங்க ஃபேமலி.

எப்படி இந்த சினிமா வாய்ப்பு வந்தது?

எங்கக் குடும்ப நண்பர் மூலமாக இயக்குனர் தனபால் சாருக்கு அறிமுகமானேன். எனக்கு முன்னாடி நிறைய பேர் செலக்ஷன் லிஸ்ட்லே இருந்தாங்க. ஆனா, கதைக்கு என்னோட முகம் சரியாக இருக்கும்னு டைரக்டர் முடிவு செய்ததால் என்னை செலக்ட் பண்ணிட்டாங்க.

படத்தின் கதை என்ன?

கோவையில் உள்ள ஒரு மில்லில் வேலை செய்யுற பெண் தொழிலாளர்களைப் பத்தின கதை. இந்த ஒன் லைன் தவிர, டைரக்டரோட அனுமதி இல்லாமே கதை பத்தி பேச முடியாது.

இந்தப் படத்துலே நடிச்ச அனுபவம் எப்படி இருந்தது..?

யூனிட்லே எல்லாரும் ஃபிரெண்ட்ஸா பழகினாங்க. எனக்கு ஜோடியா நடிச்ச ஹேமச்சந்திரன், டைரக்டர், கேமராமேன் எல்லாருமே நல்ல தமிழ் தெரிஞ்சவங்க. அதனாலே மொழி தெரியாம நான் தடுமாறினாகூட உங்களாலே நல்லா பண்ணமுடியும்னு என்கரேஜ் பண்ணுவாங்க. நான் ஷூட்டிங் வந்தது ஒரு வேலையாவே எனக்குத் தெரியலை. காலேஜ் டூர், பிக்னிக் போன மாதிரிதான் இருந்தது. அவ்வளவு ஜாலி.

படத்துலே டான்ஸ், ரொமான்ஸ் பண்ணியிருக்கீங்களா..?

ஒரே பாட்டுக்கு டான்ஸ் பண்ணியிருக்கேன். நான் அடிப்படையில் கிளாஸிகல் டான்ஸர். கூடவே குச்சுப்புடி, மோகினி ஆட்டம், கேரள நடனம், மோனோ ஆக்ட் எல்லாம் தெரிஞ்சதாலே என்னாலே ஈஸியா டான்ஸ் பண்ண முடிஞ்சது. ஆனா, ரொமான்ஸ்தான் கொஞ்சம் கஷ்டமா இருந்தது. (சிரிக்கிறார்.)

எந்தக் கேரக்டர்லே நடிக்கணுங்கிறது உங்களோட ஆசை?

அப்படியெல்லாம் இல்லை. ஆனா, பேர் வாங்கிக் கொடுக்கிற மாதிரி நல்ல கேரக்டர் கிடைச்சா எந்தப் படத்துலேயும் நடிப்பேன்.

உங்களோட பொழுதுபோக்கு என்ன?

டி.வி. பார்க்குறது. புத்தகங்கள் படிக்கிறது. அப்புறம் டான்ஸ்.

யாரோட புத்தகங்கள் பிடிக்கும்..?

மலையாள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீரோட எல்லா நாவல்களும் எனக்குப் பிடிக்கும். அவரோட எழுத்திலே ஒரு உயிர் இருக்கும்.

எப்படி இவ்ளோ அழகா இருக்கீங்க..?

உங்க பாராட்டுக்கு நன்றி... தினமும் காலையிலே அரை மணி நேரம் எக்ஸர்சைஸ் பண்ணுவேன். டான்ஸ் பிராக்டீஸ் பண்ணுவேன். டான்ஸ் ஆடுவதே ஒரு வகையிலே எக்ஸர்சைஸ்தானே! ஷூட்டிங்லே இருக்கும்போது டயட் ஃபாலோ பண்ணுவேன். வீட்டுக்கு வந்துட்டா அம்மா என்ன செய்து கொடுத்தாலும் விரும்பிச் சாப்பிடுவேன். டயட் கன்ட்ரோலெல்லாம் அப்ப கிடையாது.

- சா.இலாகுபாரதி
நம் தோழி, மார்ச் 2011
படங்கள்: கிருஷ்ணவேணி பஞ்சாலை

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு