16 May 2011

முதல்வர் பதவியேற்பு விழாவில் அசம்பாவிதம்?!

Posted by lavanyan gunalan 7:52 PM, under | No comments


கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தில் நிலவிவந்த பல்வேறு பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும் என்று ஜெயலலிதா தெரிவித்து இருக்கிறார். சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் ஆளுனர் சுர்ஜித் சிங் பர்னாலா ஜெயலலிதா உள்ளிட்ட அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.



பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து, மாலை கோட்டைக்கு வந்த ஜெயலலிதா, தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்த இரண்டு வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக கோப்புகளில் கையெழுத்திட்டார்.

முதல் வாக்குறுதி: திருமணமாகும் ஏழைப் பெண்களுக்கு திருமணத்தின் போது அரசு சார்பில் அரை பவுன் தங்கத் தாலி வழங்கப்படும்.
இரண்டாவது: பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு முடித்த ஏழைப்பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் 25 ஆயிரம் திருமண நிதியுதவி உதவித் தொகையை 50 ஆயிரமாக உயர்த்தி உத்தரவிட்டு இருக்கிறார்.

அதன்பின்னர், பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த ஜெயலலிதா, இனி தமிழக மக்கள் அச்சப்படாமல் வாழலாம். தமிழக மக்களின் பாதுகாப்புக்கு தமிழக அரசு முழு பொறுப்பேற்கும் என்று கூறினார். டெல்லிக்கு செல்வது பற்றி பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த ஜெயலலிதா அடிக்கடி பார்க்கும் இடங்களிலெல்லாம் இப்படி கேள்வி கேட்க வேண்டாம். வாரத்துக்கு ஒருமுறை உங்களைச் சந்திப்பேன். உங்களுடைய எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளிப்பேன். இந்த அரசு உங்களோடு நட்பாக இருக்கும் என்று தெரிவித்தார்.

முன்னதாக ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவைக் காண லட்சக்கணக்கான மக்கள் மெரினா கடற்கரையில் குவிந்தனர். அப்போது பெரிய தள்ளு முள்ளு ஏற்பட்டது. அழைப்பிதழ் கொண்டுவந்திருந்த பார்வையாளர்கள் பலர் விழா நடக்கும் அரங்கினுள் அனுமதிக்கப்படவில்லை. காரணம் கேட்டால் இருக்கைகள் இல்லை என்று கூறி மைதானத்தில் அமைத்திருந்த எல்சிடியில் ஒளிபரப்பாகும் நேரடிக் காட்சிகளைப் பார்க்குமாறு போலீஸார் மக்களை தள்ளிவிட்டனர். பல பத்திரிகையாளர்களைக்கூட பதவியேற்பு விழாவைப் பதிவு செய்ய போலீஸ் அனுமதிக்கவில்லை. முன்னதாகவே வந்திருக்கவேண்டும் என்று காரணம் கூறி தட்டிக்கழித்தார்கள்.

பல கட்சியின் முக்கிய தலைவர்கள், எம்.எல்.ஏக்கள்கூட அரங்கின் பின்புற வழியாகத்தான் அனுமதிக்கப்பட்டனர். சரியான ஏற்பாடுகள் செய்யப்படாததே இத்தகைய பிரச்னைகளுக்கு காரணம் என்று பத்திரிகையாளர்கள் புகார் தெரிவித்தனர். இருக்கைகள் பற்றாக்குறை இருக்கும்போது எதற்காக அளவுக்கு அதிகமானவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பவேண்டும் என்பது பத்திரிகையாளர்களின் முதல் கேள்வி. அடுத்தது, அழைப்பிதழ் இல்லாத, அரங்கிற்குள் வராத பார்வையாளர்களை கடற்கரை சாலைக்குளேயே அனுமதிக்காமல் இருந்திருந்தால் தள்ளுமுள்ளு, பதட்டம் ஏற்படாமல் தடுத்திருக்க முடியும்.

கடந்த அதிமுக ஆட்சியில் எம்ஜிஆர் நகரில் வெள்ள நிவாரண நிதி வழங்கும்போது ஏற்பட்ட அசம்பாவிதம் மாதிரி, இன்னொரு அசம்பாவிதம் ஏற்பட்டு இருந்தால் ஜெயலலிதாவின் ஆட்சிக்கு துவக்கத்திலியே களங்கம் ஏற்பட்டு இருக்காதா? எதிர்பாராத விதமாக திடீர் அசம்பாவிதம் ஏற்பட்டு இருந்தால் காவல் துறை என்ன செய்து இருக்கும்? இப்படி திட்டமிடாத காவல் துறையின் நடவடிக்கைகள் மக்களையும், அதிமுக தொண்டர்களையும் ஏன் பத்திரிகையாளர்களையும் கூட கடுப்புக்கு உள்ளாக்கியது.

திமுக ஆட்சிக்காலத்தில் காவல்துறையினர் அலட்சியமாக செயல்பட்டதால்தான் சட்டகல்லூரி மாணவர்கள் பிரச்னை, கொலை கொள்ளை அதிகர்ப்பு, போக்குவரத்து நெருக்கடி என்று பல்வேறு பிரச்னைகள் இருந்தன. அதுபோல் அதிமுக ஆட்சியிலும் நடக்காமல் பார்த்துக்கொள்வது புதிதாக பொறுப்பேற்றிருக்கிற முதல்வர் ஜெயலலிதாவின் கையில்தான் இருக்கிறது.

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு