04 May 2011

ஒசாமா முடிவல்ல தொடரும்...

Posted by Show Now 9:52 PM, under | No comments

1957 மார்ச் 10 அன்று சவூதி அரேபியாவில் பிறந்தான் பின்லேடன். இவனுடைய தந்தை பெரும் கோடீஸ்வரர்; தொழிலதிபர். அவருக்கு மொத்தம் 52 பிள்ளைகள். அதில் 17வதாக 10வது மனைவிக்கு பிறந்தான் பின்லேடன். ஒசாமா பின் முகம்மது பின் அவாத் பின் லாடன் என்பதுதான் இவனுடைய முழுப்பெயர்.இளைஞனாக இருக்கும்போதே வகாபி என்ற இஸ்லாமிய இயக்கத்தில் தீவிரமாக இருந்துவந்த பின்லேடன், நாளடைவில் தீவிரவாதத்தில் ஈடுபட்டான். பள்ளிப் படிப்பை முடித்ததும், சவுதி கீங் அப்துல்லாசிஸ் பல்கலைக் கழகத்தில் பொருளியல் மற்றும் வணிக மேலாண்மையில் பட்டம் பெற்றான் என்று கூறப்படுகிறது. அதேபோல, 1979ஆம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங்கில் பட்டம் பெற்றான் என்றும் கூறுகிறார்கள். இன்னொன்றும் கூறுகிறார்கள்... ஒசாமா, 1981ஆம் ஆண்டு பப்ளிக் அட்மினிஸ்டிரேஷனில் பட்டம் பெற்றான் என்பதுதான் அது. இப்படி இருந்தாலும் அவன், மூன்றாம் ஆண்டுடன் பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகிறது.

ஒசாமாவுக்கு நான்கு மனைவிகள். முதல் திருமணம் 1974ஆம் ஆண்டு நஜ்வா கனீம் என்ற பெண்ணுடன் நடந்தது. அப்போது அவனுக்கு வயது 17. அதன்பிறகு 3 பெண்களை திருமணம் செய்துகொண்ட ஒசாமாவுக்கு 25 பிள்ளைகள். தீவிரவாதத்தில் ஈடுபட ஆரம்பித்த பின்லேடனுக்கு அமெரிக்காதான் ஆரம்ப எதிரியாக இருந்தது. இஸ்லாமிய நாடுகள் மீது அமெரிக்கா காட்டிவந்த துவேஷத்தை வெறுத்த ஒசாமா, அமெரிக்காவுக்கு எதிராக செயல்படுவர்களுக்கும், தீவிரவாத அமைப்புகளுக்கும் நிதி உதவி செய்து ஊக்கப்படுத்தினான். இதன் தொடர்ச்சியாக 1988இல் அல் கொய்தா அமைப்பை தொடங்கி தீவிரமாக செயல்பட்டுவந்தான். பின்லேடனின் இந்த நடவடிக்கை அமெரிக்க ஆதரவு நாடான சவூதி அரேபியாவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. அதனால் பின்லேடனின் குடியுரிமையைப் பறித்த சவூதி, அவனை நாட்டை விட்டே வெளியேற்றியது.

அதுவரை சவுதியின் குடிமகனாக இருந்து வந்த பின்லேடன், தனக்கும் தன் அமைப்புக்கும் ஆப்கானிஸ்தான் மட்டுமே சரியான வாசஸ்தலம் என்று முடிவெடுத்து, ஆப்கானுக்கு தன் ஜாகையை மாற்றிக்கொண்டார். முன்னதாக 1979இல் ஆப்கானில் இயங்கி வந்த முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை, நிர்மூலமாக்குவது என்ற முடிவை எடுத்தது சோவியத் ரஷ்யா. இதில் ஆத்திரமடைந்த பின்லேடன் முஜாகிதீனோடு கைகோத்துக்கொண்டான்.

நாளடைவில் ஒசாமாவின் செயல்பாடுகள் முஜாகிதீன் அமைப்பில் அவனுக்கு செல்வாக்கை ஏற்படுத்தியது. அதனால், சோவியத் யூனியனுக்கு எதிரான போரில் முஜாகிதீன் அமைப்பின் நிதி நிர்வாகத்துக்கு தலைவரானான். அதேபோல அந்த அமைப்பின் கொரில்லா படைக்கும் தலைவராகி மூளையாக செயல்பட்டான். இந்த நிலையில் சம பலம் வாய்ந்த வல்லரசு நாடுகளான ரஷ்யாவும் அமெரிக்காவும் இருவேறு துருவங்களாக இருந்தன. இந்த வாய்ப்பை ஒசாமா பயன்படுத்திக்கொண்டான்.

ஆமாம், ஆப்கான் எல்லையில் படைகளை குவித்து வைத்திருந்த ரஷ்யத் துருப்புகளை வெளியேற்றுவதற்கு அமெரிக்கா ஆயுத சப்ளை செய்தது. எதிரிகளாக இருந்த அமெரிக்காவும் ஒசாமாவும் நண்பர்களானார்கள். இந்த நிலையில் முஜாகிதீன் அமைப்புக்கும் ஒசாமாவுக்கும் இடைவெளி அதிகமானது. அதனால், முஜாகிதீன் அமைப்பிலிருந்து வெளியே வந்தவர்களை ஒன்று சேர்த்து அல்குவைதா என்ற தீவிரவாத அமைப்பைத் தொடங்கிய ஒசாமாவுக்கு முதல் வெற்றி கிடைத்தது.

ஆப்கான் எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கம்யூனிஸ படைகளான சோவியத் ரஷ்யாவின் ராணுவ குழுவும் டாங்கிகளும் 1989ஆம் ஆண்டு பின்வாங்கின. வெற்றி தந்த களிப்பில் மீண்டும் தாய்நாடு திரும்பிய ஒசாமா, தந்தையின் கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் ஈடுபட்டான்.

இந்த நிலையில் 1990ஆம் ஆண்டு குவைத்தில் ஈராக் படைகள் குவிக்கப்பட்டன. ஈராக்கை குவைத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டது. ஆனால், அது நடக்காமல் போகவே குவைத்திலிருந்து ஈராக் படைகளை விரட்டியடிக்க அமெரிக்கா திட்டமிட்டது. அதனால், சவூதியில் தன் ராணுவக் குழுவை நிறுத்திவைக்க அனுமதி அளிக்கவேண்டும் என்று கேட்டபோது சவூதி அரசும் தாராளம் காட்டியது. அதன்பிறகு அமெரிக்க ராணுவத் தளவாடங்களால் ஈராக் ராணுவம் பதம்பார்க்கப்பட்டது.

ஒசாமா இதை கொஞ்சமும் விரும்பவில்லை. 'அதுவும் புனிதத் தலங்களான மெக்கா, மதினா நகரங்களுக்குள் இருந்து அமெரிக்கா போரிடுவதா...' என்று ஆத்திரம் கொண்ட பின்லேடன், அமெரிக்காவை சவூதியை விட்டு வெளியேறுமாறு எச்சரிக்கைவிடுத்தான். சவூதி அரசுக்கு எதிராக செயல்பட்டான். அதனால், மீண்டும் சவூதியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒசாமா சூடானில் தஞ்சம் அடைந்தான். அதன்பின் ஒசாமாவின் சாம்ராஜ்யம் வளர்ந்துகொண்டே வந்தது.

அப்படி, 1992 டிசம்பர் 29 அன்று ஏமன் நாட்டில் உள்ள ஒரு ஓட்டலில் குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பின்போது இரண்டு ஆஸ்திரிய சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல்தான் பின்லேடன் நடத்திய முதல் பங்கரவாத தாக்குதல். இதை அமெரிக உளவுத் துறையும் உறுதிபடுத்தி ஆதாரம் வெளியிட்டது. அதன்பின் 1993 பிப்ரவரி 26 அன்று நியுயார்க் உலக வர்த்தக மைய கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தினான். இதில் 6 பேர் மடிந்தனர். 1000க்கும் அதிகமானவர்கள் காயத்தால் பாதிக்கப்பட்டனர். இதன்பிறகு ஒசாமா நடத்திய தாக்குதல்கள் எல்லாம் திட்டமிட்டு வியூகம் அமைத்து நடத்திய தாக்குதல்கள்தான். ஒசாமாவின் நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கு பெரும் குடைச்சலை ஏற்படுத்தியது.

அப்படி 1995ஆம் ஆண்டு கென்யா மற்றும் தான்சானியாவில் உள்ள அமெரிக்கத் தூதரங்களில் ஒரே நேரத்தில் குண்டுகள் வெடித்தன. இந்தத் தாக்குதலில் கென்யாவில் 213 பேர் செத்துப்போனார்கள். 4500 பேர் பாதிக்கப்பட்டார்கள்.  தான்சானியாவில் 11 பேர் பலியானார்கள்; 85 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். இதனால் ஆத்திரமடைந்த அமெரிக்காவும் அதன் ஆதரவு நாடான சவூதியும் சூடானை விட்டு ஒசாமாவை வெளியேற்றுமாறு கேட்டுக்கொண்டன. சூடானும் ஒசாமாவை வெளியேற்றி விசுவாசம் காட்டிக்கொண்டது.

இரண்டாவது முறையாக பின்லேடன் ஆப்கானில் குடிபுகுந்தான். அமெரிக்காவுக்கு எதிராக புனிதப்போர் நடத்தப்போவதாகவும் அறிவித்தான். இதனால், கோபம் அடைந்த அமெரிக்கா ஆப்கானிஸ்தானை எச்சரித்தது. பின்லேடனுக்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்றும், அவனை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது. ஆனால், அப்போது தீவிரவாத ஆதரவு அரசு இருந்துவந்ததால் அது நடக்கவில்லை. ஒசாமாவும் சுதந்திரமாக இருந்துவந்தான்.

2000இல் ஏமனில் கப்பல் வழியாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அக்டோபர் 29 அன்று நடந்த அந்த தாக்குதலுக்கும் அல்குவைதா பொறுப்பேற்றுக்கொள்வதாக ஒசாமா அறிவித்தான். ஒசாமாவின் நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாக அமெரிக்கா அறிவித்தது. இந்த நிலையில் 2011 செப்டம்பர் 11 அன்று எதிர்பாராத விதமாக ஆனால், திட்டமிட்டு அமெரிக்காவின் 4 விமானங்களை கடத்தி, புகழ்பெற்ற அமெரிக்க இரட்டை கோபுரங்கள் மீது அந்த விமானங்களை மோத விட்டது ஒசாமாவின் அல்கொய்தா அமைப்பு.

இந்தத் தாக்குதலில் பயிற்சிபெற்ற 19 தீவிரவாதிகள் ஈடுபட்டனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். ஆயிரத்துக்கும் மேற்போட்டோர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலால் நிலைகுலைந்துபோன அமெரிக்கா ஆப்கானை தாக்குவது என்று முடிவெடுத்தது. தன்னுடைய ராணுவத் துருப்புகளை அனுப்பி ஆப்கான் முழுவதும் சல்டையாக சலிக்குமாறு அமெரிக்க அரசு உத்தரவிட்டது. இந்தத் போராட்டத்தில் பிரிட்டனையும் அமெரிக்கா கூட்டு சேர்த்துகொண்டது. பல உலக நாடுகளும் ஆதரவு அளித்தன. ஆப்கான் முழுவதும் குண்டுகளால் துழாவியும் ஒசாமா கிடைக்கவில்லை. பாகிஸ்தானுக்கு தப்பியிருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பிய அமெரிக்கா அந்த நாட்டின் ராணுவ நடவடிக்கைகளையும் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அளித்து வந்த உதவிகளையும் கண்காணிக்கத் துவங்கியது.

முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் அரசு ஒரு முடிவுக்கு வந்து, பாரக் ஒபாமா பதவியேற்றுக்கொண்டதும் முதல் அறிவிப்பாக இதைதான் வெளியிட்டார்:

‘உலக நாடுகளை அச்சுறுத்திக்கொண்டு இருக்கும் தீவிரவாதத்தையும் பயங்கர வாதத்தையும் முற்றாக ஒழிப்பதுதான் என் முழுமுதல் பணி’ என்று முழங்கினார் ஒபாமா.

இந்த அறிவிப்புக்கு இந்தியா உட்பட பல உலக நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்த நிலையில்தான் இந்த மாதம் மே 2 அன்று சத்தம் இல்லாமல் இரவோடு இரவாக ஒபாமாவை அமெரிக்கா வேட்டையாடியது. பாகிஸ்தானே எதிர்பார்க்காத அமெரிக்காவின் இந்த திடீர் தாக்குதல் அமெரிக்கர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

உலகம் முழுவதும் இருந்து ஒபாமாவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ஒசாமாவை ஒழித்த ஒபாமா என்று உலகத் தலைவர்கள் வெள்ளை மாளிகைக்கு மின்னஞ்சல் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் ஒபாமா, பின்லேடன் ஒழிந்திருப்பது அமெரிக்காவின் மிகப்பெரும் சாதனை. அதேநேரத்தில் ஒசாமாவோடு தீவிரவாதம் ஒழிந்துவிடவில்லை. உலக மக்களை அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் தொடரும் என்று தொடர் புள்ளி வைத்திருக்கிறார் பராக் ஒபாமா.

0 comments:

Post a Comment

கோப்பு

கோப்பு